Blog Archive

Thursday, March 26, 2020

திருமங்கல பொழுதுகள் 2009.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழவேண்டும்.

திருமங்கல  பொழுதுகள்   2009.

Image result for old matchbox labels INDIA 

Image result for old matchbox labels INDIA  

Image result for old matchbox labels INDIA
Add caption
Image result for old matchbox labels INDIA
ஐந்து தம்படி  தீப்பெட்டி 
Image result for old matchbox labels INDIA
Image result for old matchbox labels INDIA
பிடித்த லேபல்
Image result for old matchbox labels INDIA




 ஐந்து தம்படி தீப்பெட்டி .
சிறிய வயது பழக்கங்கள்,ஆசைகள் அவ்வளவு சீக்கிரம் மனதை விட்டுப் போவதில்லை.
திருமங்கலத்தில் நங்கள் இருந்தபோது ,சிவகாசித் தீப்பெட்டித் தொழிற்சாலையின் ஆதிக்கம் எங்கள் ஊர் வரை நீண்டிருந்தது.

எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தாண்டியிருந்த ஒரு சின்ன போர்ஷனில்,திண்ணையில் வைத்து
இந்தத் தீப்பெட்டிக் குச்சிகளை அடுக்கும் சட்டங்களும் தீக்குச்சிகளும்
ஒரு பெரிய லாரியில் வந்து இறங்கும். அந்த வீட்டிலிருந்த அனைவரும்

உடனே முனைப்பாக வேலையில் இறங்கி விடுவார்கள்.
நான் ,விடுமுறை நாட்களில் ,
பெற்றோர் மத்தியான தூக்கத்தில் ,ஆழ்ந்ததும் உச்சிவெயில் சுட்டெரிக்கும் 1 மணிக்கு,நான் வாயில் கதவைச் சத்தம் போடமல் திறந்து ,ஓடி விடுவேன் அந்த வீட்டிற்கு.

அம்மாவும் ,பெண்பிள்ளைகளும்,ஒரு அண்ணனுமாக கட்டைகளில் உள்ள பள்ளங்களில் ,
மருந்து இடப்படாத குச்சிகளை அவர்கள் அடுக்கும் வேகம் என்னை அதிசயிக்க வைக்கும்.
மிகவும் கெஞ்சிய பிறகு எனக்கு ஒரு சிறிய வேலை கொடுப்பார்கள். நான் ஒவ்வொரு குச்சியாக அத இடத்தில் வைத்து முப்பது குச்சிகள் கொண்ட

மரத்தகடை கொடுப்பதற்குள், அவர்கள் இருபது முடித்திருப்பார்கள்.
சரியாக நான்கு மணிக்கு,
அந்தத் தீப்பெட்டித் தொழிற்சாலையின் வண்டி வரும்.
ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட ஒரு ஐம்பது மரப் போர்டுகளைக் கொடுத்தால் அவர்களுக்குஒரு சிறிய தொகை கிடைக்கும்.
அதை எடுத்துக் கொண்டு அன்றைக்கான மளி''சாமான்களை வாங்கப் பறக்கும் சிறுமிசெல்வியோடு நானும் போவேன்.

கொஞ்சம் வெங்காயம்,கொஞ்சம் பயறு, கொஞ்சம் கடலைப் பருப்பு, பொறுக்கி எடுத்த சின்னக் கத்திரிக்காய்,தக்காளி,மிளகாய்த்தூள்.மல்லித்தூள்,பூண்டு ரெண்டு பல்லு.,கொஞ்சம் மஞ்சள்தூள் என்று சிறிய பொட்டலங்களாகவே பையில் போட்டு வாங்கி வருவாள்.

என்ன செய்யப் போறீங்க செல்வின்னு நான் கேட்டால் ''குளம்பும் ,சோறும்தான்'' என்று பதில் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் மறைவாள்.
சற்று நேரத்தில் விறகு வாசனை, புழுங்கல் அரிசி கொதிக்கும் அருமையான மணம், அதற்கு மேல் கத்திரிக்காயும், குழம்பு மசால அரைத்துவிட்ட கலவையின் மணம் மூக்கைத் தாக்கும்.

அப்போது வருவான் சின்னத்தம்பி,
'அப்பா...... ஆண்டாள் இங்க இருக்கான்னு ''கத்திக் கொண்டே வீட்டுக்கு விரைவான்.
நேரமாகிவிட்டதையும்,
அப்பா போட்டு வைத்த கணக்குப் பாடங்களையும் முடிக்காததை அப்போதுதான் உணர்வேன்.
பிறகென்ன ஒரே ஓட்டம்தான் வீட்டுக்கு.

இது போல நாலைந்து ஞாயிறுகள் ஓடியபின், ஒரு நாள் செல்வி என்னிடம் சில தீப்பெட்டிப் படங்களைக் கொடுத்தாள்.
முன் பின் அது போலப் பார்த்ததில்லையா.'என்னப்பா இது?" என்று கேட்டால் தீபாவளி சமயத்தில் அந்தத் தீக்குச்சிகள் வைத்து வரும் அட்டைப் பெட்டியில் இந்தப் படங்கள் ஒட்டிவரும் என்று சொன்னாள்.
அதில் கிடைத்த படங்களின் அளவு,மூன்று அங்குலம் இண்டு இரண்டு அங்குலம் அளவில் இருக்கும். மறக்கமுடியாத தத்ரூபம்
ஒரு புலித்தலை, ஒரு சிறுத்தையும் மரவெட்டியும், இரண்டு அணில்கள், இப்படி வித விதமான படங்களை அவைகளின் புது கந்தக வாசத்துடன் கொடுத்ததை இன்று வரை மறக்க முடியவில்லை.

என்னுடைய பெரிய ரஃப் நோட்டில் ஸ்டாம்ப்,மயிலிறகுகள், ,பெரிய ஆலமரத்து இலைகள் பாடம் செய்து சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷங்களோடு
இவற்றையும் சேர்த்து நெடு நாட்கள் கவனமாகப் பாதுகாத்தேன்.

பிறகு என்ன ஆச்சோ தெரியவில்லை.
இப்பொழுது பேரன் அனுப்பிய
அவனுடைய கலெக்ஷன் போட்டோக்களைப் பார்த்ததும் பழைய படங்கள் நினைவு வந்தது.:)

20 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான நினைவுகள் வல்லிம்மா...    இந்த படங்களை எல்லாம் பார்த்தால் அப்பாதுரையின் பழைய பதிவொன்று ஞாபகத்துக்கு வருகிறது!

நெல்லைத் தமிழன் said...

படிக்க சுவாரசியமாக இருந்தது.

7ம் வகுப்பு படிக்கும்போது தீப்பெட்டிப் படங்கள் சேகரித்தது நினைவுக்கு வருகிறது. நீங்கள் குறிப்பிட விட்டுப்போன ஃபேமஸ் படங்கள், வெட்டும்புலி, லகான் கோழி, கோமாளி, சாவி போன்றவை.

அப்புறம் தீப்பெட்டி லேபிள் சேகரிக்கும் மக்கள் ஆசையைத் தெரிந்துகொண்ட வியாபாரிகள், நேரடியாக பிரிண்ட் செய்து 20 லேபிள் 5 ரூபாய் என்பது போல விற்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்போதும் லகான் தீப்பெட்டி படம் நான் பார்த்தால், உடனே மனது 7ம் வகுப்புக்குச் சென்றுவிடும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
அவரும் தீப்பெட்டி லேபல் பற்றி எழுதி இருந்தாரா.
எனக்கு நினைவில்லையே.
நன்றி மா.

ஸ்ரீராம். said...

ஆமாம்மா..    ரொம்ப பழசு...   அவர் தளத்தில் தேடினால் கிடைக்கும்.  நிறைய அரட்டை அடித்த நினைவு.

கோமதி அரசு said...

அக்கா நீங்கள் இந்த பதிவை முன்பு போட்ட போது நானும் என் சிவகாசி அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன்.

தீப்பெட்டி குச்சி வேக வேகமாக அடுக்கப்படும் அழகே அழகு, நானும் அடுக்கி பார்ப்பேன், முடியாது.

அந்த இருப்பு கட்டைகளை கந்தகம் முக்கும் தீபெட்டி ஆபீஸ்க்கு அப்பாவுடன் , அப்புறம் பள்ளியிலும் அழைத்துச் சென்ற போது போய் இருக்கிறேன்.


குச்சிகளை போடும் பெட்டிகள் செய்வதும் பார்த்து இருக்கிறேன் ஒருவர் மேல் பெட்டி, அடி பெட்டி ஒருவர் வேக வேகமாய் பக்கத்தில் டிரான்ஸ்சிஸ்டரை வைத்து பாட்டுக் கேட்டுக் கொண்டே ஒட்டுவார்கள்.

தீப்பெட்டி கம்பெனி படங்களை சேகரித்து ஆலபம் செய்து இருக்கிறேன் சிறு வயதில்.

ஜீவி said...

KAKA பளிச் நினைவில்.

விம்கோவின் 'வெட்டும் புலி' என்னாச்சு?..

ஜீவி said...

எனது 13 வய்சுப் பருவத்தில் திண்டுக்கல்லில் சட்டப் பலகையில் தீக்குச்சிகளை வரிசை வரிசையாக அடுக்கியிருக்கிறேன். தீப்பெட்டி கம்பெனி தான் பலகைச் சட்டங்களும், மர குச்சிகளும் கொடுக்கும். அடுக்கிய பிறகு சட்டங்களைக் கொண்டு போய் கொடுத்தால் அடுக்கியதற்கு கூலி (சினிமா பாஷையில் சம்பளம்) மட்டும் கொடுத்து விட்டு மறுபடியும் சட்டங்களும், கோணிப் பையில் குச்சிகளும் கொடுப்பார்கள். அதை அடுக்கி, கொண்டு போய் கொடுத்து... பள்ளிப்படிப்பும், இந்த மாதிரி வேலைகளும் கலந்து போன வாழ்க்கைக் கல்வி கற்ற காலம் அது.

KILLERGEE Devakottai said...

நான் சிறு வயதில் பேருந்து சீட்டுகளை சேகரித்து வைக்கும் பழக்கம் நினைவில் வந்தது அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

எனது சிறுவயது நினைவுகள் ஞாபகம் வந்தது அம்மா...

வெங்கட் நாகராஜ் said...

எனக்கும் இப்படி சில பழக்கங்கள் இருந்தது அம்மா... கல்லூரியில் படிக்கும்போது நண்பர் ஒருவர் பல ஊர்களிலிருந்து இப்படி தீப்பெட்டிகளைச் சேர்த்து வந்தார் - இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கிறார்! :)

Thulasidharan V Thillaiakathu said...

அழகான ஸ்வாரஸ்யமான நினைவுகள்.-டைகர், காக்கா நினைவிருக்கு. நாங்கள் தீப்பெட்டிப் படங்கள் எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டு யார் அதிகம் ப்ரான்ட் லேபில் சேர்த்திருக்கிறார்கள் இதில் யாருக்கேனும் இரண்டு கிடைத்தால் கிடைகாதவர்க்குக் கொடுத்து (நட்பைப் பொருத்து ஹா ஹா ஹா ஹா ஹா) என்று விளையாடியிருக்கிறோம்.

//என்னுடைய பெரிய ரஃப் நோட்டில் ஸ்டாம்ப்,மயிலிறகுகள், ,பெரிய ஆலமரத்து இலைகள் பாடம் செய்து சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷங்களோடு//

அம்மா மீ டூ...இப்படிச் செய்து வைத்தது அப்புறம் வீடு பல மாறியதில் போய்விட்டது.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
விட்டுப் போனவை சிலவற்றைத் தேடி பதிந்திருக்கிறேன்.
எங்கள் சின்னவன், எல்லார் கிட்டேயிருந்து பைசா சேர்த்து
தன் அலமாரியில் வைத்துக் கொள்ளுவான். திருச்சியில்
ஜோசஃப் காப்பி பொட்டணங்களைச் சேர்த்தவைத்துப் பிறகு தூக்கிப் போட்டேன்:)
இப்ப வன் பிள்ளை ஃப்ரங்க்ஸ் களைச் சேர்க்கிறான். ஃபுட்பால் லபல் சேர்க்கிறான்.
இங்கே பெரிய பேரன் ஸ்டாம்ப் சேர்த்து வைத்திருக்கிறான்.
சின்னவனுக்குப் புத்தகங்கள் தான் வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. எப்படியோ தொடர்பை நாம் விடவில்லை.

உங்கள் சிவகாசி அனுபவம் போல எங்களையும் பள்ளியில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
ஆனந்தமாகக் கற்ற நாட்கள்.

நம் தந்தையரும் ஒரே போலத்தான்.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார் ,நீங்கள் திண்டுக்கல்லில் படித்தீர்களா.
எங்கே இருந்தீர்கள்.
நாங்க்ள் 1960 லிருந்து 1964 வரை அங்கே இருந்தோம்.

நீங்களும் தீப்பெட்டி குச்சிகள் அடுக்கி இருப்பது
மகிழ்ச்சி.
அப்பாவுக்கு ராட்டை இயைக்குவது மிகவும் பிடிக்கும்.
அதில் நாங்களும் நூற்று அந்த நூலை
சர்வோதயாவில் கொடுத்து பணம் வாங்க்கிக் கொள்வோம்.
ஆக்க பூர்வமான நாட்கள்.
போரடிக்கிறது என்ற வார்த்தையே கிடையாது.
உங்கள் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொண்டது இனிமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
அனைவருக்கும் நல்ல நினைவுகளைக் கொண்டுவந்திருப்பது நன்மையே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், எங்கள், உங்கள் இளமை நன்றாகவே சென்றது.
நலம் தான் ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், ஏதாவது ஹாபி, சிறுவயதில் வேண்டும் அம்மா.

அந்த வாழ்க்கையை இப்போது நினைப்பது இனிமை.நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நமக்கு நல்ல ஒத்துமை. கயிற்றினால் கட்டிய லேபல்கள் பையில் பள்ளிக்கும் வரும். இல்லாதவர்கள் இருப்பவர்களிடம் வாங்கிக் கொள்வோம்.
கொடுப்போம்.
அந்த பெரிய புலித்தலை இன்னும் என் நினைவில். சீட்டாஃபைட்டும் தான்.
பாசிங்க் ஷோ என்ற காலி சிகரெட்ட் ,பாக்கெட்டை
கடைக்காரரைக் கேட்டு வாங்கி அதன் பின்னால் பலராமா,பலகிருஷ்ணான்னு பெயர்
எழுதி விளையாடிய நினைவு வருகிறது.

ஜீவி said...

திண்டுக்கல் செயிண்ட் மேரிஸ் ஹைஸ்கூலில் ஏழாம், எட்டாம் வகுப்பு படித்தேன். வீடு மேட்டுராஜப்பட்டி என்ற இடத்திலும், பின்னர் ரயில் நிலையத்திற்கு எதிர்புறமிருந்த ஸ்டோட் போன்ற வரிசை வீடு ஒன்றிலும். மேட்டுராஜ பட்டி கிராமம் போன்ற அமைப்பில் இருக்கும். அங்கு தான் தீப்பெட்டி குச்சி அடுக்கல் எல்லாம்.

எட்டாம் வகுப்பு முடிந்ததும் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி சார்ந்த ஹைஸ்கூல். எட்டாம் வகுப்பு அரை ஆண்டு தேர்வுக்குப் பிறகு சேலம் பாரதி வித்தியாலயாவில் எஸ்.எஸ்.எல்.ஸி. வரை.

வல்லிசிம்ஹன் said...

நான் செயிண்ட் ஜோசஃப் பள்ளியிலும், பெரிய தம்பி செயிண்ட் மேரி
பள்ளியிலும் சேர்ந்தோம்.
பள்ளி அருகிலில் தான் இந்த மேட்டு ராஜப் பட்டி இருந்தது என்று நினைக்கிறேன்.
தற்காலிகமாக அங்கே தங்கிவிட்டு, பள்ளிக்குப் பின்புறம் இருந்த கிருஷ்ணாராவ் தெருவுக்கு
ஒரு வரிசை வீடுகளுக்குக் குடிபோனோம்.
பின் மலைக்கோட்டை அருகில் உள்ள தபால் அலுவலகத்துக்கு
அப்பாவுக்கு போஸ்ட்மாஸ்டர் பதவி கிடைத்தது.

அங்கு சுற்றி இங்கு சுற்றி, சென்னை வந்தாச்சு.:)
66 செப்டம்பரிலிருந்து 70 வரை சேலம் பெரமனூர்.:)இரண்டாவது,மூன்றாவது குழந்தை
பிறந்தது அங்குதான்.
மிக நன்றி ஜீவி சார்.