Blog Archive

Thursday, February 13, 2020

எங்கள் வீட்டு ராணியின் சமையலில் அவியல்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

எங்கள் வீட்டு ராணியின்  சமையலில் அவியல் 

Image result for GRANDMA SAMAYAL AVIAL

ராணி எங்க வீட்டு மெய்க்காப்பாளர், உதவி வேலை செய்பவர், அவரும் ,அவர் வீட்டுக்காரர்  திரு அருணாச்சலமும்  எங்கள் வீட்டைப் பொன் போலக்  காத்து வருகிறார்கள்.
கடந்த ஐப்பசி மாதப் பதினைந்து நாட்களில் ஒரு மத்திய நேரம் என்னுடன் உட்கார்ந்து  பேசிக்கொண்டிருந்தாள்.

அம்மா வீட்டில சமைக்கவே இல்லையே, வெளி சாப்பாடு அலுக்கவில்லையா என்றாள் .
தண்ணிர்ப் பற்றாக்குறை, உடல் நலம் கெடுவது 
எல்லாவற்றையும்  அவளிடம் சொன்னேன்.

எப்படியோ இங்க உங்களால்  தங்க முடியவில்லம்மா  என்று வருந்தினாள் .
என் வருத்தமே  எனக்கு  இருந்ததால் 
பேச்சை மாற்றினேன்.

அன்னிக்கு ஒரு தடவை நீ சொன்னியே 
நான் செய்த அவியலில் காரமே  இல்லைன்னு ,
இப்பதான் உங்கள் செய்முறையைச் சொல்லேன்.
என்றேன்.

உங்களோடது உப்பு சப்பு குறைவாக இருந்தது  அம்மா.. நாங்க சிகப்பு ,மிளகாய், பச்சை மிளகாய் ,சின்ன வெங்காயம் 

மிளகு எல்லாம்   கூடுதலாகச் சேர்ப்போம் என்கிறாள் :)

அவியலில் வெங்காயமா  என்று சிரிப்பு வந்தது.
ஆமாம் மா, பொடி சாம்பாரும், அவியல்  கூட நல்லா இருக்கும்.

நம்ம வீட்டில கூடப் பொடி 
 போட்ட  சாம்பார் தான் செய்வேன் 
என்றதும் இந்த முறை அவள் சிரித்தாள் .
அது எங்க குழம்பு மாதிரி வராதுமா...நாங்க தினம் அம்மியில் அரைச்சு 
செய்வோம் அம்மா.
பொடி சாம்பார்னால் உரல்ல இடிச்சு செய்வது .

அமாவாசை,நல்ல நாள்ள  செய்வோம்.
உனக்கு எங்கே  நேரம் கிடைக்கும் . இவ்வளவு வீட்டில 
வேலைப்பாக்கறே." என்றேன் நான்.

மருமக செய்தால் அவருக்குப் பிடிக்கவில்லைமா.
அதனால  நானே செய்து  கொண்டுவந்து  விடுவேன்.
உணக்கியா சாப்பிடணும்  என்றாள் .

கொஞ்சம் வரமிளகா, வர கொத்தமல்லி,வெந்தயம், மஞ்சாப் பொடி 
எல்லாம்  சின்ன உரல்ல  போட்டுபொடிச்சுப்பேன்.
புளியில தக்காளியைப்  போட்டு நல்ல  தண்ணீர் விட்டுப் 
பிசைந்து   வைத்துக் கொள்வேன்.

அதை மசாலா செலவு  என்று சொன்னாள் .
அப்புறம்  என்ன  செய்வ என்றேன்.

நல்லெண்ண  இருப்புச் சட்டில விட்டுக் கடுகு ,
பெரிய வெங்காயம் ,ஆறு பச்சைமிளகா,பூண்டு,
போட்டு,முருங்கைக்காய்  ,கத்திரிக்காய்  வெடிப்பு போட்டு,
புளிக்கரைசலை விட்டு  நல்லாக கொதிக்க  விட்டு விடுவேன்.
அப்புறமா பொடிய போட்டு  ,கொத்தமல்லி,கட்டிபெருங்காயம்,கருவேப்பிலை எல்லாம் சேர்த்து இறக்கி விடுவேன்  என்றதும் 
அதிசயமாக அவளை பார்த்தேன்.
தினமுமே  இப்படிச் செய்யறியா?  என்றதும் 
ஆமாம்மா,  இதையே  இரண்டு வேளை க்கும் வச்சிப்போம்.

என்று  சொன்னாள் .எனக்கும் 60 வயசாகிறது. அவருக்கும் 70 வயசுப்பக்கம்.
நல்லா சாப்பிட்டாத்தானே 
மிச்ச  வாழ்க்கையும்   நல்லாப்  போகும்.
என்றவள்  கண்ணில் திடீர்க் கண்ணீர்,.

அவள்  குடும்பக் கதை  எனக்கும் தெரியும்.

ரொம்ப  மானஸ்தி .
பெரியவனி டம் சொல்லி    அவர்கள்  சம்பளத்தை  உயர்த்துவது அவளின்  சிரமங்களைக் குறைக்கலாம்.

என்று நினைத்த போதே,
என்  மனம்  லேசானது.
Image result for PODIK KUZHAMBU


















21 comments:

பாரணை முடிச்ச:) அதிரா said...

மீதான் 1ஸ்ட்டூஊஊ [அப்படித்தான் நினைக்கிறேன்]..

முதல் படத்தை விட கடசி டிஷ் என் கண்ணைக் கொள்ளை அடிக்கிறதே வல்லிம்மா..

ராணி அவர்களுடனான சம்பாசனை அருமை.... சாப்பாடு நல்லாயில்லாட்டிலும், ஊரில்.. நம் மொழியாட்களோடு பேசிச்சிரித்திருப்பதில் ஒரு தனி சுகம் உண்டு.

KILLERGEE Devakottai said...

அவர்கள் நிலையறிந்து சம்பளம் உயர்த்த நினைத்த தங்களது மனதுக்கு ஒரு சல்யூட் அம்மா.

Angel said...

ராணிம்மா ரெசிப்பி முருங்கை கத்திரி காரக்குழம்பு நல்லா இருக்கு அம்மிதான் இடிக்க இல்லை , மிக்சியில் செய்யணும் புது சட்டி வாங்கி .எனக்கும் அவியல் .பிடிக்கும் வெங்காயம் சேர்த்ததில்லை நானும் .ரசனையான ருசிநிறைந்த பதிவு வல்லிம்மா 

Geetha Sambasivam said...

நல்ல சமையல் குறிப்பு. அருமையா இருக்கு. பூண்டு இல்லாமல் சாப்பிட்டுக்கலாம்.

ஸ்ரீராம். said...

இதே போல எங்கள்  மதுரை வீட்டில் அப்பாவுக்கு உதவியாயிருந்த ஒரு அம்மாவிடம் கேட்டு நான் அப்படிஒரு குழம்பு வைத்து, ஒரு திங்கக்கிழமையில் பகிர்ந்திருந்தேன்.  இவ்வளவு வயதான காலத்தில் அவர்களின் உழைப்பு...   ஆனால் அதுதான் அவர்கள் பலம்.

சிகரம் பாரதி said...

சிறப்பு. வாழ்த்துக்கள்...

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

priyasaki said...

இந்தமாதிரி நல்ல மெய்காப்பாளர்கள் கீடைப்பதரிது வல்லிம்மா. அவர்களின் வாழ்க்கை நிலை உயர சம்பளம் கூட்ட நினைத்த உங்கள் மனதுக்கு வாழ்த்துக்கள். இப்படிபட்டவர்கள் பாவங்கள். ஊரில் எங்கள் வீட்டில் வேலை செய்ய வருபவர்களுடன் உரையாடுவது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களின் உணவு முறைகளும் வித்தியாசம்.
அவியலுக்கு நான் வெங்காயம் சேர்த்ததில்லை. வித்தியாசமா இருக்கு ராணியம்மாவின் ரெசிப்பி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் அருந்ததி அதிரா, காதலர் தின நல்வாழ்த்துகள்.
பார்க்கும் இடமில்லாம் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்குமே மலர்கள்.!

ராணியை அவளது எட்டு வயதிலிருந்தே தெரியும்.
அவள் மணம் முடித்தது சற்றே வயது கூடிய அருணாச்சலத்தை.
மூன்று ஆண் பிள்ளைகளும், ஒரு மகளும். பேத்திகளுக்குத் திருமண வயது வந்துவிட்டது.

அனைவரும் நன்றாகப் படிக்கிறார்கள்.
நல்ல உழைப்பாளி. மகள் உதவி செய்வாள்.
மகன்கள் வழியில் அவளுக்கு செலவே தவிர ஆதரவு இல்லை.

அத்தனை சுத்தமாக இருப்பாள். எங்கள் தெருவே அவளுக்கு உதவி செய்யும்.
அவ்வப்போது இது போலப் பேசிக்கொள்ள எங்களுக்கு நேரம் கிடைக்கும்.
அப்போது இந்த சமையல் முறைகளைச் சொல்வாள்.
நன்றாக இருக்கட்டும்.
கடைசிப் படம் கூகிள் உதவி மா. நன்றி மகளே.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் அருந்ததி அதிரா, காதலர் தின நல்வாழ்த்துகள்.
பார்க்கும் இடமில்லாம் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்குமே மலர்கள்.!

ராணியை அவளது எட்டு வயதிலிருந்தே தெரியும்.
அவள் மணம் முடித்தது சற்றே வயது கூடிய அருணாச்சலத்தை.
மூன்று ஆண் பிள்ளைகளும், ஒரு மகளும். பேத்திகளுக்குத் திருமண வயது வந்துவிட்டது.

அனைவரும் நன்றாகப் படிக்கிறார்கள்.
நல்ல உழைப்பாளி. மகள் உதவி செய்வாள்.
மகன்கள் வழியில் அவளுக்கு செலவே தவிர ஆதரவு இல்லை.

அத்தனை சுத்தமாக இருப்பாள். எங்கள் தெருவே அவளுக்கு உதவி செய்யும்.
அவ்வப்போது இது போலப் பேசிக்கொள்ள எங்களுக்கு நேரம் கிடைக்கும்.
அப்போது இந்த சமையல் முறைகளைச் சொல்வாள்.
நன்றாக இருக்கட்டும்.
கடைசிப் படம் கூகிள் உதவி மா. நன்றி மகளே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்.
அவள் நம் வீட்டுப் பின்புறம் ஸ்டவ் வைத்திருக்கிறாள்.
மிக அழகாக சமைப்பாள்.
நல்ல பெண் .நன்றாக இருக்கணும்.
என்னிடமும் நல்ல பிரியம்.
கிராமத்து வழக்கப்படி இந்த வெங்காயம் பூண்டு ,இஞ்சி இல்லாமல்
சமைக்க மாட்டாள்.
உடல் நலத்துக்கு இவையே உதவும் என்று பூரண நம்பிக்கை.
நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, இவர்கள் ரசம் செய்யும் முறை நல்ல
வாசனையாக இருக்கும்.
முன்பே பதிந்திருக்கிறேனோ என்னவோ.
ரசனை உள்ளவர்கள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்.
அன்பர் தின வாழ்த்துகள்.
ராணி நல்ல பெண். அவர் கணவர் அருணாச்சலம் இன்னும் நல்லவர்.

அவர்கள் குடியிருப்பு ராணி வாங்கியதுதான்.
ஆனால் அவர்களுக்கே இடம் இல்லாமல் மகன் அங்கே குடித்தனம் செய்கிறான்.
அடுத்த தடவை புதுக் கட்டிலும், மின்விசிறியும் வாங்கிக் கொடுக்கணும்.
மெத்தைகளை எல்லாம் அவர்களுக்குக் கொடுத்துவிட்டேன். நன்றாக இருக்கட்டும்.
இவர்களுடன் வாழ்வதே ஒரு பாதுகாப்புதான் எனக்கு.
உங்கள் பதிவு எப்போது வந்ததுன்னு தெரியவில்லையே.
நன்றாகத்தான் இருந்திருக்கும். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சிகரம் பாரதி. வாழ்க நலம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் அம்மு, இனிய அன்பர்தின வாழ்த்துகள்.
ராணியின் குடும்பம் பெரியது. தன் அம்மாவை வேறு கவனித்துக் கொள்கிறாள்.

முனியம்மா என் திருமண காலத்திருந்து வேலை செய்பவர்.
அவருக்குப் பிறகு ராணி வந்தார்.
உழைப்பாளிகளுக்கு ஓய்வே கிடையாது. நல்ல படியாகவே இருக்கிறார்கள்.
பிள்ளைகள் சரியில்லாததால்
நிறைய பணம் தேவைப் படுகிறது.
கூடிய வரை அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து விடுவேன்.
நன்றி மா.

துரை செல்வராஜூ said...

நீங்கள் சொல்வது போல உழைப்பாளிகளுக்கு ஓய்வு தான் ஏது..

உண்மையில் அவர்களில் பெரும்பாலானோர் தகவல் களஞ்சியங்கள்...

வாழ்க நலம்...

வெங்கட் நாகராஜ் said...

சுவையான சமையல் குறிப்புகள் மா...

ரொம்பவே ஒட்டுதலான பணியாட்கள் கிடைப்பது அரிது - அப்படிக் கிடைக்கும் பணியாட்களுக்கு உங்களைப் போல நல்ல மனம் கொண்டவர்கள் கிடைப்பதும் அரிது!

தொடரட்டும் சுவையான பதிவுகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
அவளுக்கும் ஓய்வு தேவை என்று சொல்வேன்.
உட்கார்ந்தா காசு வராது மா என்பாள்.
அவர் நம் வீட்டில் சாப்பிட்டு, தூங்கி
மிச்ச நேரம் காவலில் இருப்பார்.
நம் வீட்டுக்கு வருபவர்களிடம் எங்களைப் பற்றி தகவல் சொல்வார்.
இணைய நண்பர்கள் எனக்காக அங்கே சென்று பார்த்து வந்து சொல்வார்கள்.'
நானும் சிசி காமிரா வழியாகப்
பார்த்துக் கொள்வேன்.
அவரால் சம்பாதிக்க முடியும் என்பதே அவளுக்குப் பெருமை.
அவரும் இப்போது தெளிவாக இருக்கிறார்.
நன்றாக இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், வரணும் பா.
எனக்கு மிகவும் சின்ன வயதிலிருந்து உதவிக்கு வருபவர்கள் நல்லவர்களாகவே இருந்திருக்கிறார்கள். மிகக் கொடுத்து வைத்தவள் நான்.

என் மேல் பிரியம் வைத்தவர்களாக
இருக்கும்போது அவர்களிடம் தோழமை கொள்வது சுலபம் அல்லவா.
Its a two way give and take.
மிக நேர்மையானவர்கள். விவசாயம் செய்து வந்து, பிழைக்க சென்னை வந்தவர்கள். வந்தவாசி அவர்கள் ஊர்.

Thanks ma.

கோமதி அரசு said...

ராணியின் அவையல் அருமை.
அவருக்கு சம்பள உயர்வு செய்வது மகிழ்ச்சி.
அவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

பழைய கதைகள் பேசி மகிழ்ந்து இருந்து இருப்பீர்கள்.

கோமதி அரசு said...

அவியல் அருமை

மாதேவி said...

நல்ல பணியாளர்கள்.அவர்களை உயர்த்தும் உங்கள் நல்மனம்.