Blog Archive

Tuesday, January 21, 2020

காய்கறி+ தட்டை

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.



படம் கூகிள் உதவி
  காய்கறி தட்டை
+++++++++++++++
கடந்த  ஞாயிறு மாலை, 
குழந்தைகள் பனி சறுக்கல் விளையாட்டுக்குச் சென்று 
மிகுந்த பசியோடு வந்த போது 
நானும் மருமகளுமாக இதை செய்தொம்.
பேத்திக்கு சமையலில் ஆர்வம் அதிகம்.
அவளும் உருளைக்கிழங்கு உரித்துக் கொடுத்து,
எல்லா  உதவிகளையும் செய்ய அரை மணி நேரத்தில் உருவான 
PATTIES
எனப்படும்  இந்த சிற்றுண்டி செய்வது மிகச் சுலபம்.
ஒரு மாறுதலுக்கு இதை பதிவிடுகிறேன். 
எவ்வளவு ரசிகர்களைச்  சென்றடைகிறது என்று பார்க்கலாம்.

நடுவில் ஒரு பக்கம்.
300,400 என்று பக்க  விசிட்டர்களைக் காட்டுகிறது 
ப்ளாக்கின்  ஸ்டாட்டிக்ஸ்.
பின்னூட்டங்களோ மொத்தமே நாலு.
இது என்ன மாயம் என்று தெரியவில்லை.

அன்பும் உணர்ச்சிகளும்  கிராம நாள் வாசமும் வீசும் அன்பு துறை செல்வராஜூ மாதிரி எழுத வரவில்லை.
திட்ட வட்டமாகப் பிழை இல்லாமல் 
எண்ணங்களை பதியும்  அன்பு  கீதா சாம்பசிவம் 
மாதிரியும் நான் எழுதவில்லை.
நேர்மை ரௌத்திரம் பழகும் கில்லர்ஜி தேவகோட்டை ஜி மாதிரியும் எழுத்து வீச்சு இல்லை.

திருக்குறள் பேசும்  அன்பு திண்டுக்கல் தனபாலனின் தரமும் எனக்கு வாய்க்கவில்லை.
அன்பு தங்கச்சி கோமதி அரசுவின் விசால ,எழுத்தறிவு,தமிழ்ப் புலமையும் 
இல்லை.
எங்கள் ப்ளாக் ,ஸ்ரீகௌதமன் ஜி, ஸ்ரீராம் அவர்களின் 
அன்பு வளையம்  அடையும் பெருமையும் இல்லை.

இத்தனை இல்லை களுக்கும்   நடுவில் 
வந்து கருத்துக்கள் பதியும் அனைவருக்கும் என் நன்றி.
எழுத வேண்டும் என்ற  தாகம் என்னை விட்டுப் போகாமல் இருக்க இறைவனே துணை.

மீண்டும் சமையலறைக்குள் போகலாம்.:)

தேவை உ.கிழங்கு  6
கொத்தமல்லி, வெங்காயம், கருவேப்பிலை,
ப.மிளகாய், 
4 மேஜைக்கரண்டி சோள  மாவு.
பட்டாணி, காரட் ,காலிப்ளவர்  துண்டுகள்,சிறிதே  குடைமிளகாய்த் துண்டுகள் 
உப்பு காரம் அவரவர் இஷ்டம்.

நாங்கள் செய்த முறை ...

உருளைக்கிழங்கை வெழுமூன  வேக வைத்துக் கொண்டு அதில் சொன்ன சோளமாவைக் கலந்து உப்பு,மஞ்சள் பொடி 
சேர்த்துப் பிசைந்து  வைத்துக் கொள்ள வேண்டும்.

மற்ற பச்சைக் காய்கறிகளை சிறிது எண்ணெயில் ஒரு துளி  உப்பு  போட்டு 
சிறிது வெண்ணெய்  சேர்த்து 
வதக்கி மாவுடன்  கலந்து கொண்டால் நம் 
PATTIES தயார்.
தோசைக்கு கல்லை அடுப்பில் சூடு பண்ணி ஒவ்வொரு  உருண்டையையும் கவனமாகத் தட்டி சுற்றி வர வெண்ணெய் 
இட்டு அடை போல்  தட்டி எடுத்தால் மொறு மொறு 
சுவை தட்டை  தயார்.

செய்யும்போது படம் எடுக்கத்  தடா.

இதையே  பேத்தி அவனில் இன்னும்  கரகர வென்று வைத்து எடுத்தாள் அவள் கேக்,பிரௌனிஸ்  கில்லாடி.
நமக்கும் அவனுக்கும்  அவ்வளவாக தோழமை கிடையாது.

நன்றி மீண்டும் பார்க்கலாம் .








19 comments:

மாதேவி said...

சுவை.

ஸ்ரீராம். said...

மிகவும் சுலபமாகவும் இருக்கிறது.  எளிமையாகவும் இருக்கிறது.   ஒருமுறை செய்து பாத்து விடலாம்.  அவனில் வைபபதாய் இருந்தால் எப்படி, எதிலெவ்வளவு நேரம் வைக்கலாம் என்று சொல்லியிருக்கலாமோ...   எனக்கும் அவன் அவ்வளவு பழக்கமில்லை.   அதுபாட்டுக்கு ஓரமாக இருக்கும்.

KILLERGEE Devakottai said...

செய்முறை வெகு சுலபமாக இருக்கிறதே

என்னையும் பதிவராக அங்கீகரித்து எழுதியமைக்கு நன்றி அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையாக செய்து உள்ளீர்கள் அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி. நல்வரவு.
நீங்கள் எழுதி,
படிக்க ஆசை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்,

பதுப்பயணம் இனிதாக நேற்றுத் தொடங்கி இருக்கும் வாழ்ததுகள் மா.
Oven விஷயத்தில் நான் சுட்டுக் கொண்டதே அதிகம். அதனால் பேத்தியைக் கவனிக்க வில்லை.
அவள் விரல்கள் அந்தப்பக்கம் இந்தப் பக்கம் என்று திருகுவது கண்கட்டி வித்தையாகப் படும்.
நமக்கு தோசைக்கல்லே போதும் என்று சும்மா இருந்து விட்டேன்.
நன்றி மா. செய்து பாருங்கள்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி, என்ன இப்படிச் சொல்கறீர்கள்!

உங்கள் பதிவில் எத்தனை உயிரோட்டம்! நல்ல பதிவர்தாம்்நீங்கள். நிறையப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
படிக்க நாங்கள் இருக்கிறோம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,

நன்றி ராஜா. உருளைக் கிழங்கு எல்லோருக்கும் பிடிக்கும். காய்கறிகளும் சேர்வதால் நன்மை கூடுகிறது மாஆ.

Anitha Vijay said...

Dear Revathi ma,
You are one of the sweetest bloggers. What I could see in posts and comments, just love and nothing else. Never hurting anyone or discouraging or showing off. Pure positive thoughts. Keep writting ma.

Geetha Sambasivam said...

நல்லா இருக்கு. இதே செய்முறைதான். என்ன கொஞ்சம் காரத்துக்கு மி.பொடி, கரம் மசாலாக் கொஞ்சம் போல் சேர்ப்பேன். அடிக்கடி பண்ணிக் கொண்டிருந்த ஒன்று. அதிலும் வட மாநில உருளைக்கிழங்குகள் மாவாக வெந்துவிடும் என்பதோடு கையால் பிசைந்தாலே மைதா போல் ஆகி விடும். உருளைக்கிழங்கு மாவைச் சொப்பு மாதிரி செய்து கொண்டு காய்கறிப் பூரணமாக வைத்தும் செய்து பார்த்தது உண்டு. இப்போல்லாம் பண்ணுவது இல்லை. குழந்தைகள் இருந்தால் தான் எதுவும் செய்ய ஆவல் வருகிறது. நம்மவர் இதுக்கெல்லாம் ரசிப்பவர் இல்லை. :))))) போண்டா, பஜ்ஜி, வடை, வெள்ளையப்பம் தான்.

Geetha Sambasivam said...

நம்ம அப்புவுக்கும் பேகரியில் ஆர்வம் அதிகம். கப் கேக், ஆப்பிள் பை எனப் பழகி வருகிறாள்.

Geetha Sambasivam said...

எனக்கும் புள்ளி விபரங்கள் காட்டுவதையும் வரும் கருத்க்டுக்களையும் பார்த்தால் ஆச்சரியமாகத் தான் இருக்கும். அப்புறமாப் புள்ளி விபரங்கள் எல்லாம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ஜுஜுபினு விட்டுட்டேன்.

கோமதி அரசு said...

காய்கறி தட்டை மிக அருமை.

என்னை என்ன இப்படி புகழ்ந்து விட்டீர்கள்?
உங்கள் அன்புக்கு நன்றி.

உங்கள் எழுத்து போல வருமா? கதை வந்து கொண்டே இருக்கிறது.

பார்ப்பது, கேட்பது எல்லாம் மிக அழகான கதையாக்கி விடுகிறீர்கள்.


ஸ்ரீராம். said...

அனிதா விஜய் சொல்வதை ஆமோதிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனிதா விஜய்,
பக்கத்தில் தான் இருக்கிறீர்கள் போலிருக்கிறது.
எனக்குக் கிடத்த அன்பை மீண்டும்
எழுத்தில் இழைக்கிறேன் மா.
உங்கள் நல்ல உள்ளத்துக்கும்,நல்ல வார்த்தைகளுக்கும் மிக நன்றி.
நீங்களும் சமையல் குறிப்புகளைக்
கொடுப்பதாக உங்கள் வலைப்பதிவிலிருந்து
அறிகிறேன். எனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்கிறேன்.
உங்கள் அறிமுகத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நீங்கள் சொல்லி இருப்பது அத்தனையும் உண்மை.
ஸ்டாட்டிஸ்டிக்ஸ் எப்படி வரைகிறார்கள் என்பது
கொஞ்சம் நம்பமுடியாததாக இருக்கிறது.

குழந்தைகளின் ஆர்வம் நமக்கு உத்சாகம் கொடுக்கிறது.
மீண்டும் சமையல் செய்ய ஒரு தூண்டுகோல்.
இது நம் சாதாரண உ.கி போண்டா வைத் தட்டையாக்கினால்
செய்வது போலத் தோன்றும்.

பெண்குழந்தைகள் ,பையன் கள் எல்லோருக்கும் சமையலில் ஆர்வம் இருப்பது
மனசுக்கு மிக சந்தோஷம்.
கைகளில் வேலை இருந்தால் தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் தைரியம் வரும்.
நன்றி கீதாமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
உண்மையைத்தான் சொன்னேன்.அம்மா.
தமிழ் உங்கள் சாரிடமும் உங்களிடமும்
பண்பாகக் குடி இருக்கிறது.
அதுவே உங்களை நல்லபடியாக வைக்கும்.
எனக்கு எழுதுபவதே நிம்மதி கொடுக்கிறது.
அதுவும் இது போல நிகழ்வுகள்
மனதை விட்டுச் செல்வதில்லை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் மிக மிக நன்றி. சூழவும் அன்பு இருக்கும் போது
நாமும் அன்புடன் இருப்பது சுலபமேப்பா.

வெங்கட் நாகராஜ் said...

புள்ளி விவரங்கள் பற்றிய கவலை எதற்கும்மா? பல சமயங்களில் அவை உண்மை சொல்வதில்லை!

நமக்குப் பிடித்தவரை எழுதுவோம்.

சுவையான பாட்டீஸ்! இங்கே முக்கோண வடிவத்தில் கிடைக்கும் - ஆனால் மேலே சமோசா போல ஒரு தடிமனான மைதா பூச்சு உண்டு!