Blog Archive

Tuesday, January 21, 2020

தவம் 2

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

தவம் 2

 புதிதாகக் கட்டப்பட்ட அந்த குடியிருப்பு 
ஐந்து வருடங்களுக்கு முன் மாலதியும் வசந்தும் குடியேறிய
இடம். 
அங்கிருந்து வசந்த் படித்த எம் சி டி எம் பள்ளி
ஒரு தெரு கடந்ததும் இருந்தது. 
அவனது எட்டாம் வகுப்பின் போது அவர்கள் வாழ்க்கையில்
பெரிய மாற்றம் நடந்தது. 
மாலதியின் கணவனுக்கு இருந்த இன்னோரு உறவு
 வெளிச்சத்திற்கு வந்தது.
திருமணம் ஆன போதே குமரன் அரபு நாடுகளில்,துபாயில்
இருந்தான்.மணமான  இரு மாதங்களில்
அவன் துபாய் திரும்பிய போது அடுத்த வருடம் தனக்கு
வேலையில் உயர்வு கிடைக்கும் ,வீடும் கிடைக்கும்
அப்போது மாலதியை அழைத்துக் கொள்வதாகச் சொல்லிச் சென்றான்.
இரண்டு வருடங்கள் கழித்து அவன் வந்தபோது
வசந்த், ஒரு வயதுக் குழந்தையாக இருந்தான்.
 மாலதியின் பெற்றோர்களுக்கு இன்னும் வயதான தோற்றம் வந்தது.
எல்லா மனைவிகளும் போலக் கணவனின் தோற்றத்திலும்,அவன் வாங்கி வந்த புதுப்
புது பொருட்களிலும் ஆசை இருந்தாலும்,
அவன் தெளிவில்லாமல் இருப்பதாகத் தோன்றியது.
அந்த வருடமும் அவன் அழைத்துச் செல்லவில்லை.
இப்படியே பத்து வருடங்கள் கழிந்தன,
மாலதி தன் படிப்புக்கு ஏற்ற விதத்தில் ஒரு 
வளமான தனியார் நிறுவனத்தில் சேர்ந்து
படிப்படியாக முன்னேறி, இப்போது இருக்கும் மனையை வாங்கினாள்.
வங்கிக் கடன் உதவி செய்தது.
கணவன் பணம் அனுப்புவது குறைந்ததும்
அவளுக்குத் தோன்றிய கேள்வி ,அவனுக்கு
வேலை இல்லையோ என்ற கவலைதான்.
 பனிரண்டு மாதங்களுக்கு ஒரு முறை விசா புதுப்பிக்க 
அவன் ஏதாவது ஒரு வேலையில் இருந்தே
ஆகவேண்டும் என்பது தெரியும். அவனுக்கு அனுப்பிய
மெயிலுக்குப் பதில் இரு வாரங்கள் கழித்தே
கிடைத்தது.
குமரனின் பெற்றோருக்கும் புரியவில்லை.

குமரனின் தோழன் ஒருவன் வந்து இருப்பதாகக்
கேள்விப்பட்டு மாலதியின் தந்தையும் , குமரனின் தந்தையும் சென்று
பார்த்தார்கள்.
திடீரென்று போனதால் அவனைப் பார்க்க முடிந்தது.
அவன் அவர்களைக் கண்டு ,வெளியே போக இருந்தான்.
மெல்ல விஷயம் வந்தது.
அவனுக்கு உடல் நிலை சரியில்லாத போது
சந்தித்த ஒரு மருத்துவமனை தாதி, அவளும் நம் நாட்டைச் சேர்ந்த
பெண் தான்.
இப்பொழுது இருவரும் திருமணம் செய்யாத தம்பதிகளாக
வாழ்ந்து வருகிறார்கள்.
அவன் அடுத்த தடவை வரும் பொழுது அனேகமாக 
விவாகரத்து கேட்பதாக இருக்கிறான்.
மாலதி இதைக் கேட்டு அதிர்ச்சி அடையவில்லை.
எதிர்பார்த்தே இருந்தது போல இருந்தாள்.

மகன் படிக்கக் கிளம்பி

இப்போது தனியாக விடப்பட்ட நிலையில் 
அத்தனை நினைவுகளும் வந்து  அவள் மனதில் அலைமோத
முதல் முறையாகக் கண்ணீர்  வெடித்து வந்தது.

இனி என்ன...பார்க்கலாம்.

14 comments:

KILLERGEE Devakottai said...

பலரது வாழ்வில் இப்படி துரோகங்கள் இருப்பது உண்மையே...

Geetha Sambasivam said...

பாவம் தான் மாலதி. ஆனாலும் தைரியமாகப் பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கிறாள். காலம் அவள் மனப்புண்ணை ஆற்றி நல்ல மகனுடன் நல்லதொரு அமைதியான எதிர்காலத்துக்குப் போய் சந்தோஷமாக வாழட்டும்.

ஸ்ரீராம். said...

பல வருடங்களாக பழகி வந்திருக்கும் கணவனின் நெருக்கமின்மை அவளுக்கு உள்ளணர்வில் உறுத்தி, உண்மை மானம் அறிந்திருக்கும்.  தயாராகவே இருந்திருப்பாள்.  இனி என்ன, பார்ப்போம்.

கோமதி அரசு said...

மாலதி பொறுமைசாலி பத்து வருடங்கள் எந்த கேள்வியும் கேட்காமல் இருந்து இருக்கிறாரே!

தனிமையில் பழசை நினைத்து வருந்தும் போது மனது கனத்து போனது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டைஜி,
மகன் துபாயில் ஒரு 14 வருடங்கள் இருந்தபோது நிறைய சென்று வருவோம்.
மருமகள் பலப் பல செய்திகள் சொல்வாள். அதில் இதுவும் ஒன்று,.

மனிதர்களை நிலை மாறச் செய்ய ஏதோ ஒன்று காரணமாகிறது.
பாதிக்கப் பட்டவர்களின் பாடே வருத்தம் தரும்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு கீதாமா. மகனுக்காக
அவள் மேற்கொண்ட வாழ்வு
நல்ல விதமாகப் போகும்போது
இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வாள். அது நிச்சயம்.

நலமே வாழ்வு தொடரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் அதுதான் நிஜம். கணவன் போக்கு மாறுவது அவளுக்குப்
புரிந்தே இருந்தது.
யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.
அவளுக்கு ஏமாற்றப்பட்ட துன்பம் அதிகரித்து,
இந்த உறவு முறியும் என்பதை அறிந்தே இருந்தாள்.

மகனுக்காகப் பொறுத்துக் கொண்டாள்.
தன் நிறைவு அடைந்ததும்
இனி எதிர்காலத்தில் பொறுமை ஒன்றே அவளுக்குத் துணை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, உண்மையில் மிக அடக்கமான பெண்.
சென்னையில் நான் பழகிய பெண்தான்.
யாருடனும் நின்றாள் பேசினாள் என்ற
வார்த்தைக்கே இடம் கொடுக்க மாட்டாள். கோவிலில்
பார்க்கும் போது ஒரு புன்னகை மட்டும்.
மயிலையிலிருந்து இடம் மாறி வெளியே சென்ற பிறகு
புரசையில் பார்த்தேன்.
நன்றி மா.

மாதேவி said...

குமரன் போன்றும் ஏமாற்றும் சிலர் .
மாலதி மகனுடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
நன்றி ராஜா. இன்னும் வளமுடன் நன்றாக இருக்கிறார்கள்.

ஸ்ரீராம். said...

முன்பகுதி படிக்காமலேயே கருத்திட்டிருக்கிறேன்.   இப்போது பின்னணி புரிகிறது.

வல்லிசிம்ஹன் said...

அச்சோ பரவாயில்லை மா. தொடர்ந்து படிக்கலாம். நன்றி ஸ்ரீராம்.

வெங்கட் நாகராஜ் said...

இப்படியும் சிலர்... பாவம் தான் அந்தப் பெண்மணி...

தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே வெங்கட். ஆனால் அவள் தைரியசாலி.
சமாளித்தாள். அவள் பொறுக்காதது குழந்தைக்கு இழைக்கப்பட்ட
அநீதியைத் தான் தாங்க முடியவில்லை.