Monday, January 20, 2020

தவம் ..1

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்

தவம் ..1

  எழும்பூர் ரயில் நிலையம் இளம் மாணவக்கூட்டத்தில்
மூச்சு விடமுடியாமல் திணறிக் கொண்டிருந்தது.
தென் மாவட்டங்களுக்குப் பள்ளி விடுமுறை
முடிந்து போகிறவர்கள், கல்லூரி மேற்படிப்புக்குப் போகிறவர்கள் என்று பலவித
வகைகளில்
பெரியவர்கள் ,சிறியவர்கள்,அனுப்ப வந்த பெற்றோர்கள்
என்று பலவிதம்.

மாலதி, தன் ஒரே மகன் ஸ்காலர்ஷிப் கிடைத்து
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேரக் கிளம்பிக் கொண்டிருந்ததை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
நன்றாகப் படித்தவனுக்கு ,பள்ளி முதல் மாணவனுக்கு மரியாதை செய்தது
ஒரு அறக்கட்டளை. முழு செலவையும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்து
பத்திரிகைகளிலும் வந்திருந்தது.

மாலதியின் கணவர் விவாகரத்து செய்து 5 வருடங்கள்
ஆன நிலையில் ,தன் ஒரு சம்பாத்தியத்தில்
குடும்பத்தை கௌரவமாக நடத்த சற்றே சிரமப்பட வேண்டி இருந்தது.
பொறுப்பு மிகுந்த மகனாக இருந்த வசந்த்,
எல்லா வருடங்களிலும் முதல் மாணவனாக வந்து
பள்ளியின் பண முடிப்பும் பெற்றிருந்தான்.

அந்தப் பணத்தையும், தன் சேமிப்புப் பணத்தில்
கொஞ்சமும் போட்டு, அவனுக்கு மூன்று
செட் ,நல்ல பாண்ட்,சட்டை வாங்கி வைத்தாள்.

ஒரு சின்ன பெட்டியில் அடங்கி விட்டது அவனது
முழு உடமைகளும்.

அவனுக்கு இரவு உணவாக இட்லி, தயிர் சாதம் தனியே
கட்டிக் கொடுத்திருந்தாள்.
முதன் முறையாக மகனைப் பிரிவது,அவளுக்குச் சற்றே கலக்கமாக இருந்தது.
 அவனுடன் படிக்கப் போகும் ஆதித்தனின் பெற்றொர் அருகில் நின்ற வண்ணம்
அவனுக்காக வைத்திருக்கும்
உணவுப் பொட்டலங்களையும், முறுக்கு,தட்டை வகையறாக்களையும்
ஒரு பெட்டியில் வைத்து அவனுக்குக் கொடுத்துத்தார்கள்.
மாலதிக்குச் சட்டென்று கண்ணில் நீர் திரண்டது.

தன் தந்தை தன்னைப் படிப்புக்கு அனுப்பும்போது
செய்த உபசாரங்கள்,பார்த்துப் பார்த்துக் கட்டிக் கொடுத்த
மருந்துகள்,இன்லாண்ட் கவர்கள், எழுதத் தாள்கள்
என்று ஒரு சிறு பெட்டியே இருந்தது.

இப்போதோ கைபேசி வந்துவிட்டது.
அதையும் உபயோகம் செய்ய நேரம் தான் வேண்டும்.
அவள் அண்ணா மருத்துவம் படிக்கும் போது மாதத்துக்கு ஒரு கடிதம்
வந்தாலே அப்பா சந்தோஷப்பட்டுக் கொள்வார்.

இங்கோ அம்மாவுக்கு ஒரு சிரமமும் கொடுக்கக் கூடாது என்பதில் வசந்த்
மிகக் கவனமாக இருந்தான்.
முதன் முதலில் இருவரும் தஞ்சை சென்று பார்த்த
போதே அங்கிருக்கிற உணவுக் கூடங்கள் எல்லாம் பார்த்து விட்டுத்தான் வந்தார்கள்.
ஏற்கனவே அங்கே சென்றிருந்த நண்பர்கள்
நல்லவிதமாகவே அந்தக் கல்லூரியைப் பற்றிச் சொல்லி இருந்தார்கள்.

உணவுக்குடத்துக்கு மட்டுமான செலவை
மாணவர் பொறுப்பில் விட்டுவிட்டது அந்த அறக்கட்டளை.
படிப்பு பூர்த்தியாகும் போது ஒரு பெருந்தொகையாகக்
கொடுப்பார்கள் என்று தெரிந்தது.
அதுவரை மாலதி அந்த செலவை சமாளிக்க வேண்டும்.
மகிழ்ச்சியுடனே ஏற்றுக் கொண்டாள் அவள்.
அம்மா நேரம் ஆகிவிட்டது. இதோ விசில் ஊதி விட்டார்கள்.
நீ கிளம்புமா.
காலையில் உனக்கு செய்தி அனுப்புகிறேன்.
பத்திரம் அம்மா ஷேர் ஆட்டொவில் புரசவாக்கம் போய்விடு.
போய் எனக்கு செய்தி அனுப்பு.
நான் கவனமாக இருக்கிறேன் மா.
நீ பத்திரம் என்று சொல்ல வந்தவன் குரல் தழுதழுத்தது.
மகனின் கைகளை இறுகப் பற்றி,அவனுக்கு விடை கொடுத்தாள்
மாலதி.
ரயிலின் கடைசி விளக்கு மறையும் வரை
பார்த்துக் கொண்டிருந்தவள், கூட்டத்துடன் கலந்து வெளியே வந்து
புரசவாக்கம் பக்கம் போகும் ஷேர் ஆட்டோ,பார்த்துக்
கவனமாக ஏறிக் கொண்டாள். மீண்டும் நாளை பார்க்கலாம்.

14 comments:

கோமதி அரசு said...

தவம் கதை அருமை.
தாயின் அரவணைப்பில் வளரும் மகன் பொறுப்புடன் வளர்வது மகிழ்ச்சி.

KILLERGEE Devakottai said...

பாசப்பிணைப்பு அழகிய தொடக்கம் தொடர்கிறேன் அம்மா...

Geetha Sambasivam said...

நல்ல தாயின் வளர்ப்பில் மகன் பொறுப்பும், கருணையும் மிகுந்ததொரு மருத்துவராக வெளியே வருவார் என நம்புவோம். இப்போவே வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே 33 வயதில் தனியானவள், மகனிடம் தன்
முழுக் கவனத்தையும் செலுத்தி 18 வயது வரை
கொண்டு வந்து விட்டாள்.
கசப்பில்லாமல் மகனை வளர்த்தாள்.
நல்லவனாகவே இருப்பான். நன்றி கோமதி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
நல்ல அன்னை,நல்ல மகன்.
நல்ல வாழ்க்கை தொடரட்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா. உண்மையே. வாழ்வில் நன்மை பெருகக் கடவுளின் ஆசிகள்
அவர்களைத் தொடரட்டும்.

மாலதியின் மனம் மலரட்டும். நன்றி மா.

துரை செல்வராஜூ said...

தவமாய்த் தவமிருந்து....

நெஞ்சம் தவிக்கின்றது... நெகிழ்கின்றது...

மாதேவி said...

மகனின் எதிர் காலம் சிறப்புறட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
மகனை வளர்த்த விதத்தில் யாரும் தவறு சொல்லாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை அவளுக்கு. கணவன் துணை இல்லாமல்
அவனுக்குக் பயம் தெரியாமல் வளர்த்துவிட்டாள் இனி இறைவன் கையில்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி நலமாப்பா. உங்கள் ஆர்வம் மகிழ்ச்சி தருகிறது. நன்றி மா.

ஸ்ரீராம். said...

நெகிழ்வான முதல் பகுதி.  பொறுப்பு உணர்ந்த மகன்.மருத்துவப் படிப்புக்கு என்னதான் சொன்னாலும் செலவு அதிகம் - எந்தக்காலத்திலும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு ஸ்ரீராம்.
கொஞ்சம் எதிர்மறை எழுத்தாக எழுத வேண்டுமா என்று நினைத்தேன். பிறகுதான் வாழ்வில் இதுவும் ஒரு பங்குதானே என்று
எழுத முனைந்தேன்.நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு தொடக்கம்.

பதிவுலகம் பக்கம் வர இயலா சூழல். அடுத்த பகுதிகளும் வந்திருக்கும் எனத் தெரிகிறது. தொடர்ந்து படித்து விடுவேன்.

தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
மிகப் பொறுமை நலன் வாய்ந்த
நல்ல பெண்மணி வெற்றி பெற்ற
சம்பவம் இது. நன்றி மா.
நலமுடன் இருங்கள் மா.