Blog Archive

Monday, December 16, 2019

நாளை பிறக்கும் மார்கழி. 2019

வல்லிசிம்ஹன் 

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

எத்தனையோ  மார்கழிகளைக் கடந்து வந்தும்,
இன்னும் ஒரு மார்கழி   போது  மனம் 
காத்திருக்கிறது  அந்த காலைப்  பொழுதுக்கு.
Bildergebnis für margazhi kolangal images

ஒரு மாதம் முன்பிருந்தே  ஒரு மாதத்துக்கு வேண்டும் என்கிற 
வடிவங்களை  தீர்மானித்துக் கொள்வோம்.

அதுவும்  ஒருவர் போடும்  கோலம் மற்றவர் 
போடக்கூடாது. 
ஒருவருக்கும் தெரியாமல்  அம்மாவிடம் புதிதாகக் 
கற்றுக்கொண்ட கோலங்கள் தனி,.

காலையில் எம் எல்  வி  அம்மா  பாட ஆரம்பிக்கும் முன்பே 
விழிப்பு  வந்துவிடும்.

தேர்வுகள் முடிந்து  பள்ளி விடுமுறையும் ஆரம்பித்திருக்கும் ,சின்ன வகுப்புகள் தானே 

நான் சொல்வது  ஆறாம் ,ஏழாம்,எட்டாம் வகுப்புகள் பற்றி.

அப்பொழுது எல்லாம்  உண்மையாகவே காலையில் நல்ல குளிர் இருக்கும்.
கைகளில்  ஹரிக்கேன் விளக்கு.

துணைக்கு அம்மா. மாற்றாக கோலங்களை எட்டிப் பார்த்து வராத தம்பி.
பஸ்  ஓடும் சாலையாக இருந்ததால்,

வீட்டின்  ஆரம்பமும் ரோட்டின் ஆரம்பத்துக்கும் இடையில் 
7 அடிகள்  கிடைக்கும். 
பக்கவாட்டில் பத்து அடிகள்.
நடுவில் கோலம். அதைச்  சுற்றி  பார்டர்  எனப்படும் 
எல்லைக் கோடு.

ஏழு புள்ளியில் முடிந்து 15 புள்ளிகளில் 
ஆரம்பிக்கும்  பல கோலங்கள்.

ஒவ்வொரு நாளும்  அந்தக் கோலத்தைச் சுற்றி, குட்டி மூன்று புள்ளிக் கோலங்கள் நான்கு.

அப்பொழுதெல்லாம் வண்ணக் கோலங்கள் 
கிடையாது. 
போட்டு முடிக்க முக்கால்  மணி நேரமாவது ஆகும். நடுவில் 
கீர்த்தனங்கள் 
பாடிச் செல்லும்  பஜனை கோஷ்டியின் மீது கவனம் சிதறும். அதுவும் ஒரு இனிமை.

பூசணிப்பூக்கள்   கொண்டு வந்து   வைத்து விட்டுப் போவார் 
நாகம்மா.
சாணியில் அவைகளைப்  பொருத்தி 
கோல  நடுவே  வைக்கும் போது  கிடைக்கும் 
மகிழ்ச்சி யே  தனி  தான்.

அடுத்தது  கோவில் நோக்கி ஓடுவது.
தம்பிகளும் ,நானும் தோழிகளும், வாங்கிக்  கொண்டு,
அம்மாவுக்கும் கொண்டு வருவேன்.

அதற்குள் பொழுதும்  விடிந்து திருவெம்பாவை,திருப்பள்ளி எழுச்சியும் 
பூர்த்தியாகி விடும்.
பி.லீலா அவர்கள் குரலில் கேட்ட  நினைவு.

அனைவருக்கும் இறைவன் அருள்  எல்லோருக்கும் கிடைத்து மார்கழியைக் கொண்டாடுவோம்.







8 comments:

Geetha Sambasivam said...

மார்கழி மாதம் எனக்கும் மதுரை நினைவுகள் வந்துடும். ராஜம்மாள் சுந்தரராஜனின் திருப்பாவை வகுப்பு. சுமார் ஏழு வயதிலிருந்து தொடர்ந்து போயிருக்கேன். கடைசியில் ஓரிரு வருடங்கள் போகலை. சென்னைக்கும், மதுரைக்கும் காவடி! அவங்க மார்கழி மாதத்தில் ஓர் நாள் நடத்தும் பஜனைக்குக் கட்டாயமாய்ப் போவேன். கூடத் துணைக்குத் தம்பி வருவான். கண்ணாஸ்பத்திரி எனப்படும் மங்கள நிவாஸில் பஜனை ஆரம்பிச்சு மதனகோபாலசுவாமி கோயிலில் முடியும். அங்கே தான் பிரசாதங்கள் கொடுப்பார்கள். தொன்னையில் வாங்கிக் கொண்டு, அவங்களிடம் வீட்டுக்கும் கேட்டு வாங்கிக் கொண்டு ஓட்டமாய் ஓடி வருவேன். அதன் பின்னர் வடக்குக் கிருஷ்ணன் கோயில் கோஷ்டி! அங்கேயும் பிரசாதம். தயிர்சாதம் அந்த ருசியில் வேறே எங்கேயும் இன்று வரை சாப்பிட்டதில்லை.

ஸ்ரீராம். said...

இனிமையான நினைவுகள்.  நினைவுகள் எப்போதுமே சுகமானவை. அந்தக் காலத்தை மனதில் மறுபடி வாழலாம்.

நெல்லைத்தமிழன் said...

மார்கழி நினைவுகள் இனிமை... நம்மை அந்த வயதுக்கு இட்டுச் செல்பவை. அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா, இதையே தான் என் சித்தி பெண்ணுக்கும் எழுதி இருந்தேன்.
மீண்டும் அந்தக் காலத்துக்கே போய் விடலாமா என்று நினைக்க வைக்கிறது.
ஆனால் ஊரே மாறி விட்டதே.

இப்பொழ்தும் அங்கே வகுப்புகள் நடக்கிறதா என்று தெரியவில்லை.
நீங்கள் நான் கோமதி அரசு மதுரையை மறக்க மாட்டோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், மண்வாசனை நம்முடன் என்றும் பசுமையான
நினைவுகளோடு நிலைக்கும்

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் முரளிமா.
அந்தக் குளிரும் பொங்கலின் சூடும் ,இதமான வெய்யிலும், கோவில் மணி நாதங்களும்
,இசையும் நம்மை வேறு ஒரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும்.

கோமதி அரசு said...

மார்கழி நினைவுகள் அருமை அக்கா.
எனக்கும் மதுரையில் சிறுவயது மார்கழி நினைவுகள் இருக்கிறது.
சிவகாசி, தேனி, தூத்துகுடி , கோவை, மதுரை என்று மார்கழி நினைவுகள் ஊருக்கு ஊர் மாறுதல் அனுபவங்கள்.
கோலம், கோவில், பஜனை, அம்மா என்று நீங்கா நினைவுகள் இருக்கிறது.
திருப்பாவை , திருவெம்பாவை ஒப்பிவித்தல், என்று போகும் இனிமையான நாட்கள்.

மாதேவி said...

அன்றைய மார்கழி இனிமை. நன்றாக சொல்லியுள்ளீர்கள்.
பழைய நினைவுகளை கிளறின நாங்கள் அம்மம்மாவுடன் கோவில் சென்று வருவோம்.