Blog Archive

Sunday, September 29, 2019

இனி எல்லாம் சுகமே 12

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  இனிமையாக வாழவேண்டும்.

இனி எல்லாம் சுகமே 12
++++++++++++++++++++++++++++
அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள். தேவிகளின் கருணையால் நம் வாழ்வில் மங்கலங்கள் பெருகட்டும்.

மாதவன் எடுத்த முடிவு பெற்றோரை மீறி எடுத்ததாக நினைக்கவில்லை.
மாலாவின் இனிய அமைதி. சிறு வயதில்ரிந்தே அவனைக் கவர்ந்திருந்தது.
வளர்ந்த பிறகு அவளது ஒத்துப் போகும் சுபாவமும், கலகலப்பாகப் பேசும் திறமையும்
வடிவான அழகும் அவனை ஈர்த்ததில் வியப்பில்லை.

இந்த நட்சத்திரப் பிரச்சினையை சரியான முறையில் அணுக
வேண்டும்.
யாரையும் வருந்த வைக்கக் கூடாது.
அம்மாவையோ அத்தையையோ கலங்க வைக்கக் கூடாது.
முதலில் அவன் எடுத்த அடி காவிசேரி மாமாவீட்டுக்குத்தான்.

படிப்பை விட்டு வந்திருக்கிறோம் என்ற நினைவு
அவனுக்கு இருந்தது. அடுத்த நாள் அவனுக்குப் பயணம். 
மாலாவும் கிளம்ப வேண்டும்.

காவிசேரி அவனை எதிர்பார்த்தது போலக் காத்திருந்தார்.
தீர்மானம் செய்தாச்சா என்றார். ஆமாம் மாமா.
நீங்கள் தான் இந்த முடிச்சை அவிழ்க்க வேண்டும்.

சரி இதோ பார் உன் அப்பா ஜாதகம் ,வைதேகி அவனுக்கு ஏற்றவள் என்று சொன்னதே 
நாந்தான். அவள் ஜாதகத்திலும் பலமில்லாத கிரகங்கள் இருந்தாலும்
கோவிந்தனின் பலம் இருவரையும் சேர்ந்து வாழவைக்கும் என்றே, கோவில்களுக்கு செல்ல வைத்து
அவர்கள் நம்பிக்கையை வளர்த்தேன்.

விஞ்ஞானப்படி நட்சத்திரங்கள் அவைகளின் குணங்களையே கொண்டிருக்கும்.
யாரையும் அழிக்காது.
பிறந்த போது என்ன விதி எழுதப் பட்டதோ அதன் படி நடக்கும்.
அந்தவிதத்தில் உங்க அப்பாவுக்கு நீண்ட ஆயுள்பாவம் உண்டு.
வைதேகிக்கு சஞ்சலம் ஏற்படுவது சகஜமே. அதை நீயும் உன் அப்பாவும் சரிப்படுத்தணும்.

இதோ உன் ஜாதகம். நீ அவர்களுக்கு ஒரே மகன்.
உன் ஜாதகத்தைப் பார். மகனுக்கு ஓரிடத்தில்  தந்தைக்கான
சடங்குகள் செய்ய வேண்டிய காலம் வரும்.
உனக்கு உன் வாழ்க்கையை வரைந்து காட்டுகிறேன்.
படித்து முடித்து,வேலையில் அமர்ந்து இதே மாலாவை மணமுடிப்பாய். உன்னுடைய
பீமரதி ஷாந்தி வரை அப்பாவின் ஆயுள் நீடிக்கிறது.அதற்கப்புறமும் இருப்பார்.

இதோ மாலாவின் சுத்த ஜாதகம். அப்பழுக்கில்லாத பலன்.
கள்.
அவளால் ஈ,எறும்புக்குக் கூடத் தீங்கு விளையாது.
உன் குணத்திற்கேற்ற குணவதி. 
இதோ சோழி உருட்டுகிறேன் பார் என்றார்.
ஒன்றும் புரியாவிட்டாலும் அவை மலர்ந்து அவனைப் பார்த்து சிரிப்பது போல 
இருந்தது.
சர்வமும் மங்களம். இதை எழுதிக் கொடுக்கிறேன்.
அப்படியே எடுத்துக் கொண்டு போய் சபையில் பொதுவாக வை.
உன் தீர்மானத்தையும் சொல்லிவிடு.
பாட்டி மீண்டு வந்துவிடுவாள். 60 வயது ஒன்றும் பெரிய வயதில்லை.
அவளை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்.

அவர்களுக்குக் கொஞ்சம் யோசிக்க நேரம் கொடு.
நீ சந்தோஷமாகக் கிளம்பு. கண்ணன் உன்னுடன்."

 என்று சாய்ந்து உட்கார்ந்தார்................

அவரை நமஸ்கரித்து வீட்டுக்கு விரைந்தான்.
மாலா பாட்டியுடன் இருந்தாள்.

அத்தை,அத்திம்பேர்,அம்மா,அப்பா இருவரையும்
ஒன்றாக உட்காரவைத்து அவர்களிடம் தான் மாமாவைச் சந்தித்த
விவரத்தையும்
அவர் எழுதித் தந்ததையும் கொடுத்தான்.
நீங்கள் அவசரமில்லாமல் முடிவெடுங்கள் .ஆனால் என்னைப் 
பொறுத்தவரை மாலா தான் என் துணைவி.



சில வருடங்கள் அதாவது மூன்று வருடங்கள்
பொறுப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
இந்த இடத்தில் பொன்னா தலை நிமிர்த்தினாள். 
மாலாவுக்கும் இது தெரியுமா என்று கேட்டாள்.
அவள் சம்மதித்த பிறகே இந்த வேலையில்
பிரவேசித்தேன்.
இனி உங்கள் கையில். 
இன்னோரு திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய ,பிரசாத் வீட்டுக்குப் போக வேண்டும்
என்று கிளம்பினான்.

பெரியவர்கள் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள நாட்கள் எடுத்தன.
பாட்டிம்மா வீட்டுக்கு வந்து விட்டார்.
டாக்டர் அனுமதித்த பிறகு மதுரைக்குக்
கிளம்பினாள்.

ஆறு மாதங்களில் அவள் உடல் தேறியது. மனமும் தான்.
வாரத்துக்கு ஒரு முறை பேரனும் பேத்தியும் பேசும்போது இவளுக்கும் இரண்டு வரிகள் சொல்ல அனுமதி உண்டு.:)

தை மாதம் மூன்று நாட்கள் விடுமுறையில் வந்த மாதவன், பிரசாதுக்கும், மாலா,கோகிலாவுக்கும் நிச்சயதார்த்தம் நிறைவேறியது.

அதுவே வெகு கலகலப்பாகப் பாதி கல்யாணம் போல்
நடந்தது.

மாலா,கோகிலாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தினம் தினம் ,மாமாவின் உடல் நலத்துக்காக்த் தனியே தீபம்
ஏற்றினாள்.
அந்த வருடக் கோடை விடுமுறைக்கு இரண்டு குடும்பமும்
 கொடைக்கானலுக்குச் சென்றனர். பிரசாதின் பெற்றோரும் மகிழ்ச்சியுடன்
கலந்து  கொண்டனர்.

1967 ஆம் வருடம் ஜனவரி 18 முதல் 27 வரை  மெட்ராஸே 
கலகலப்பானது. ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில்  ஒரு
திருமணமும், ஆபட்ஸ்பரியில் ஒரு திருமணமும்
நடந்தது.
பாலகிருஷ்ண சாஸ்திரிகள் இரு திருமணங்களுக்கும் வந்து சீதாராம திருமண
காலாட்சேபம் நடத்தினார்.
 பாட்டிம்மாவும், காவிசேரி மாமாவும் சுறுப்பாக இயங்கி அனைத்து வேலைகளையும் மேற்பார்வை பார்த்தார்கள்.   பிறகென்ன  காதல் வைபோகம் கல்யாணத்தில்
சுபமாகப் பூர்த்தியானது.

கூடவந்து நல்வார்த்தைகளைப் பின்னூட்டமாகச் சொல்லி உற்சாகப் படுத்தியவர்களுக்கு மனம் நிறை நன்றி. அனைவரும் வாழ்க வளமுடன்.






22 comments:

நெல்லைத்தமிழன் said...

திருமணமானதில் மிகுந்த மனநிறைவு, தொடரைப் படித்த எனக்கு.

அது சரி...அதற்கப்புறம் திருமண வாழ்க்கை நன்றாக இருந்ததா, உறவினர்கள் ஜோதிடர் சொன்னபடி நிறைவாக வாழ்ந்தார்களா?

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா.
நன்றாகவே இருந்தார்கள்.கிச்சம்மா பாட்டி கூட 84 வயது வரை இருந்தார்.

என்னைவிட இரண்டு வயது பெரியவள் மாலா.அவளுக்கும் மாதவனுக்கும் இரு பிள்ளைகள்.
நன்றாகப் படித்து மதுரையில் ஒருவனும், காலிஃபொர்னியாவில்
ஒருவனுமாக இருக்கிறார்கள்.(குடும்பத்துடன் தான்)

தில்லியில் நல்ல வேலையில் இருந்து விட்டு மதுரையோடு வந்துவிட்டார்கள் மாலா மாதவன்.

வைதேஹியும் கோவிந்தனும் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்து இருந்து
2007 இல் இறைவனடி சேர்ந்தனர். கிட்டத்தட்ட 89 வயதிருக்கும்.

வரதன் தான் கொஞ்சம் முன்னாலியே சென்றுவிட்டார்.
பொன்னா இருக்கிறார்.
பிரசாதும் கோகிலாவும் சென்னையில் இருக்கிறார்கள்.
சந்திரிகா,மாளவிகா என்று இரு பெண்கள்.
அவர்களுக்கும் மக்கள் பிறந்து செழிப்பாக இருக்கின்றார்கள்.
ராமாயணம் சொல்லிப் பின்னாடி ஒரு ஸ்லோகம் சொல்வார்களே அது
போல இது சர்வே ஜனா சுகினோ பவந்து கதை.நன்றி மா.

ஸ்ரீராம். said...

இனிமையான கதையை...   இல்லை இல்லை...  நிகழ்வைம், இனிமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.  சுபமுடிவு சந்தோஷம்.

Geetha Sambasivam said...

என்னமோ அவசரம் அவசரமாக முடித்தாற்போல் இருக்கிறது. ஆனாலும் எல்லாம் சுபமாக முடிந்ததில் சந்தோஷம்.

வல்லிசிம்ஹன் said...

ஓ. அவசரமாக முடித்த மாதிரி இருக்கா.கீதாமா. எனக்குத் தெரிந்த நடந்த கதையை எழுதினேன்.

இன்னும் புடவை,நகை விவரம், கோகிலா,பிரசாத் ரொமான்ஸ் எழுதி இருக்கலாம். ஏனெனில் அப்போது நாங்கள் பசுமலையில் இருந்தோம்.
ஏற்கனவே 12 பாகம் ஆகிவிட்டது. எனக்கோ
உள்ளே புகுந்தால் வெளியே வரத்தெரியாத புத்தி:)

அதனால் சுருக்கமாக எழுதிவிட்டேன். இந்த ரயிலெல்லாம் எக்மோரோ
சென்ட்ரலோ வருவதற்குமுன் ஒரூ வேகம் எடுக்குமே அது போல.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். தவறாமல் வந்து படித்து பொறுமையாகப் பின்னூட்டம்
கொடுத்திருக்கிறீர்கள்.

எல்லோருக்கும் சுபமாகத் திருமணம் நடக்க வேண்டும். மூலம் ஒரு வேர் போலத்தாங்கும் என்று சொல்வார்கள்.
நல்லது நடக்கட்டும்.

கோமதி அரசு said...

கல்யாண காணொளி தேர்வு அருமை.
பாசமலர் பாட்டும் அருமை.

கொடைக்கானல் என்றால் ஜெமினி, சாவித்திரி நினைவுக்கு வராமல் இருக்கமாட்டார்கள்.

திருமணம் இனிதே நடந்து விட்டது. அவர்களும் நலமாக பேரன், பேத்திகளை பெற்று நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

கதை சொல்லிய விதம் மிக அருமை.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அக்கா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நிறைவான நிறைவு மனதில். மகிழ்ச்சி.

மாதேவி said...

இனிய பாடல்களுடன் எல்லாம் சுகமே.

ஜீவி said...

ஜெய மங்களம் சுப மங்களம்...

தெரிந்த விஷயத்தைக் கதை போல எழுதறதுங்கறது ரொம்ப கஷ்டம்.. எனக்கெல்லாம் கண்ணு மூக்கு காது வைக்காம சுத்தமா எழுதவே முடியாது.. உங்களுக்கு முடிந்திருப்பது எனக்கு பிரமிப்பா இருக்கு!..

Thulasidharan V Thillaiakathu said...

முழு தொடரையும் வாசித்துவிட்டேன் அம்மா. பாதி அதாவது கொடைக்கானல் வரை வாசித்திருந்தேன். இன்று அதன் பின்னானவற்றையும் வாசித்துவிட்டேன். பாட்டெல்லாம் சூப்பர்!

ஸ்ரீராம் டூயட் எல்லாம் கூடக் கேட்டிருந்தாரே!!!! ஹா ஹா ஹா

உண்மை நிகழ்வு அந்தக் கேரக்டர்ஸ் எல்லாம் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று எல்லாம் தெரிந்து கொன்டேன்...

சூப்பர்...மா. இனிமையான சுபமான கதை...

கீதா

KILLERGEE Devakottai said...

அருமையான சுபமுடிவு மனநிறைவை தந்தது அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
மனதுக்குப் பிடித்த கதை என்பதில் எனக்கும்
சந்தோஷம் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
ஒரு பதிவையும் விடாமல் படித்து,கருத்து சொன்னதற்கு மனம் நிறை நன்றிமா. நான் தேடின ப்பாடல் வேர ..கல்யாணம் நம் கல்யாணம் பாடல் கிடைக்கவில்லை. இதுவும் நன்றாக இருந்தது.
அதுதான் பதிவிட்டேன். எனக்கு ஜெமினி சாவித்ரி ஜோடி மிகவும் பிடிக்கும்.

இந்தத் திருமணம் இரண்டு வருடங்கள் போராட்டத்தில்
இருந்தது. பல கெஞ்சல்கள் ,கண்ணீர், எல்லாம் தாண்டி வந்தது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா,

தங்கள் அன்பான பின்னூட்டத்துக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, நன்றி மா. ஒரு வழியாக சொல்ல வந்ததை எழுதி விட்டேன்.
தொடர்ந்து கருத்திட்டதற்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் அன்பு ஜீவி சார்.
பாட்டிகள் சித்திகள் மாமாக்கள் ,அப்பா,அப்பா எல்லோரும்
கதைகள் சொல்லியே நான் வளர்ந்தேன்.
இப்போது பேரன் மட்டும் தான் கேட்க இருக்கிறான். அதனால் நீங்கள் எல்லாரும் வகையாக அகப்பட்டுக் கொண்டீர்கள்.
இது குடும்பத்தில் நடந்த சம்பவங்களைப் பதிவு செய்யும் போது கொஞ்சம் காது மட்டும் வைக்கிறேன்.

உங்களது உயர்ந்த வார்த்தைகள் கேட்க மகிழ்ச்சி.
நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா, கைவலி சரியாகணும் பா.
உங்கள் உத்சாகம் ஒரு தொத்தும் பரவசம். அழகான அன்பு வார்த்தைகளால்
இதமாகப் பாராட்டினால் எழுதியதற்கு ஒரு அர்த்தம் கிடைக்கிறது.
நன்றி மா.

துரை செல்வராஜூ said...

>>> பிறகென்ன காதல் வைபோகம் கல்யாணத்தில்
சுபமாகப் பூர்த்தியானது... <<<

அப்பா... ரொம்பவும் சந்தோஷம்...
கல்யாணத்தில் முடிந்ததே நிம்மதியாக இருக்கிறது..

வாழ்க மங்கலம்...

வல்லிசிம்ஹன் said...

நன்றி துரை,
நலமே நினைப்போம் நலமே வாழ்வோம்.
மிக மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

அவ்வப்போது பிரச்சனைகள் தலைதூக்கினாலும் முடிவில் சுபம்.

நாங்களும் அதே சமயத்தில் அங்கே இருந்தது போன்ற உணர்வுடன் படிக்க முடிந்தது வல்லிம்மா...

நிகழ்வுகளைச் சுவையாக சொல்லும் உங்கள் பாங்கு, படிக்கப் படிக்கச் சுகம்..

தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
ஒரே மூச்சில் எல்லாம் படித்து விட்டீர்களா.
மிக மிக நன்றி மா.