Blog Archive

Friday, July 19, 2019

ஒப்பந்தம் ...3

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .
ஒப்பந்தம் ...3
++++++++++++++++++
  2008 மே மாதம்  ஒரு புதன் கிழமை 
ஜானு, ராகவன் இருவராலும் மறக்க முடியாத நாளானது.
ஏதோ ஒரு திருமணத்துக்குச் சென்று வந்த இரவே
வலி மிகுந்த இரவாக ஆனது.
உட்கார முடியாமல், நடக்க முடியாமல் அவதிப்பட்டார்.
அடுத்த நாள் காலை, டாக்டர் ராமச்சந்திரனிடம் காண்பித்த போது,
வயிற்றில் ஏதோ தடை இருக்கிறது என்று ஆரம்பித்த
நோய், எக்ஸ்ரே,ஸ்கான் என்றும் ,கடைசியில் அறுவை சிகித்சை என்று
சென்னையில் வந்து நின்றது.

நடுங்கிவிட்டாள் ஜானகி. ஆஜானுபாகுவாக ஆரோக்கியத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தவருக்கு வாயால் சொல்லவே பயப்படும் நோய் வந்துவிட்டதோ என்று.

நல்லவேளை வெறும் வயிற்றுப் புண்தான். என்று பயாப்சி
வழியாகத் தெரிய வந்ததும்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

அறுவை சிகித்சை முடிந்தும், இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை  // கொஞ்ச நஞ்சம் இருந்த 
சந்தேகம் தீரவேண்டும்//  என்பதற்காக சென்னை வந்து போனார்கள்.சிகித்சை முடிந்து புதுக்கோட்டை திரும்பும் வரை
தன் பெற்றோருக்குச் சொந்தமான வீட்டில் தங்கித்தான் ஜானகி
கணவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டாள்.
இடைக்காலத்தில் பெற்றோரும் மறைந்தது,
தம்பிகளிடம் ஒட்டுதல் அதிகரித்தது.
பெரியவன் ஸ்ரீனிவாசன்  தான் அவர்களைக் காரில் அழைத்துச் சென்று  கொண்டுவிட்டுக் கூட்டி வந்து உதவினான்.

 சாப்பாடு கட்டுப்பாட்டுக்கு வந்ததால் ராகவன் இளைக்க,
அதைப் பார்த்து ஜானகி வருந்த ,இரண்டு வருடங்கள் 
இப்படியே கடந்தது.

அதற்குள்  மூன்றாவது மகன் வந்து போவதும்,மகள்கள்  வந்து தங்குவதும் வீட்டில் கொஞ்சம்
 மனத்தாங்கல் ஏற்படக் காரணம் ஆனது.
மிகக் கோப்பியமான குடும்பத்தில் சலனம் உண்டானது.

ராகவனுடைய மேற்பார்வையில் இயங்கி வந்த
 வாகனுங்களுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி சாலை
முழுவதையும் கவனிக்க வேண்டிய நிலை கடைசி மகன்
கோவிந்தனுக்கு வந்தது.
+++++++++++++++++++++


ஜானுவின்.. சிந்தனை தேங்கி நிற்கும் முகத்தைக் 
கண்டு ராகவன் மனம் வாடியது.
என்னம்மா  உனக்கு குடும்பத்தை விட்டு வருவதில்
சம்மதம் இல்லையா. என்ன யோசிக்கிறாய். இதோ எழும்பூர்
வந்து விட்டது.
யோசித்தே முடிவெடுக்கலாம் என்ற கணவரின் முகத்தைப்
பார்த்து , எனக்கு ஆக்ஷேபணை ஒன்றும் இல்லை.
ரொம்பத் தொலைவில் போகிறோமே...என்ற யோசனைதான்
என்றாள்.

ஜானுமா,இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.
குழந்தைகளிடம் சொல்வோம். அவர்கள் சம்மதத்துடனே
தீர்மானம் செய்வோம் என்றதும்  அவள் முகம் சாந்தமானது.

என்ன இருந்தாலும் குழந்தைகளுக்குப் பிறகுதான் நானா
என்று சற்றே யோசித்த ராகவன்,பாவம் ஜானு,,
அவள் போக்குப்படி நான் செய்கிறேன். என்று நினைத்தபடி
ஜன்னல் அருகே வந்து நின்ற மச்சினனைப் பார்த்துக் கையசைத்தார்.

சென்ட்ரலுக்குச் செல்ல இன்னும் நேரம் வரவில்லை நண்பர்களே..
ஜானுவைச் சிந்திக்க விடலாம்.   தொடரும்.

19 comments:

KILLERGEE Devakottai said...

இனி நல்லநேரம்தான் அம்மா.

நானும் தொடர்ந்து வருகிறேன் அம்மா

ஜீவி said...

//சென்ட்ரலுக்குச் செல்ல இன்னும் நேரம் வரவில்லை..//

அர்த்த புஷ்டியான வார்த்தைகள்..
சென்ட்ரல் இந்த இடத்தில் ஒரு குறியீடாகவே போய்விட்டது.

துரை செல்வராஜூ said...

எழுத்துக்களால் மனதைக் கலங்க அடித்து விட்டீர்கள்..

ஆலம் விழுதுகள் போல் உறவு
ஆயிரம் வந்தும் என்ன..
வேரென நீயிருந்தாய்..அதில்
நான் வீழ்ந்து விடாமலி இருந்தேன்!...

கவியரசரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன...

ஜீவி said...

//என்ன இருந்தாலும் குழந்தைகளுக்குப் பிறகுதான் நானா
என்று சற்றே யோசித்த ராகவன்,//

ஹஹ்ஹஹா...

புருஷன்--மனைவி-- குழந்தைகள்... ஒரு முக்கோணம் தான். இந்த மூன்றில் ஏதாவது இரண்டு மட்டும் நெருங்கும் பொழுது ஒன்று மட்டும் தனித்து விடப்பட்டதான உணர்வு -- ஒரு உன்னிப்பான பார்வை.

தந்தை - தாய் - குழந்தைகள் என்று -- என்று இந்த முக்கோணத்தை இன்னும் சுருக்கிப் பார்த்தால் இந்த முக்கோண உணர்வு இன்னும் தெளிவாகப் புரியும்.

குழந்தைகள் பிறந்த பிறகு கணவனைத் தாண்டியதான அன்பு தாய்க்கு குழந்தைகள் மீது ஏற்படுகிறது. எது நேர்ந்தாலும் தன்னைக் காப்பாற்றக்கூடியவர் இவரே என்ற நெருக்கம். ஆண் மகன் என்றால் அது தான் மருமகள் உடனான துவந்த யுத்தத்திற்கு ஆரம்பம்.

தன்னைப் போலவான இன்னொரு பெண் என்று தன் பெண்ணை தாய் பார்க்கும் பார்வை வேறொரு விசேஷம்.

தொடர் தொடர்ந்ததில் மிகவும் சந்தோஷம், வல்லிம்மா.
தேங்க்ஸ்.

திண்டுக்கல் தனபாலன் said...

எங்களையும் சிந்திக்க வைத்து விட்டீர்கள் அம்மா...

அருமையான பாடல்...

Geetha Sambasivam said...

நல்லதொரு முடிவை எடுக்கட்டும். இவர்கள் பாசமும் நேசமும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.

ஸ்ரீராம். said...

//என்ன இருந்தாலும் குழந்தைகளுக்குப் பிறகுதான் நானா என்று சற்றே யோசித்த ராகவன்,/

சற்றே வலி தரும் சிந்தனைதான். ஒரு படத்தில் விசு சொல்வார்... "தொப்புள்கொடிக்கு தரும் முக்கியத்துவத்தை தாலிக்கொடிக்கு தரவில்லையே ..."

ஸ்ரீராம். said...

"கல்யாண ராமனுக்கும்" எனக்குப் பிடித்த எஸ் பி பி பாடல்களில் ஒன்று. "கல்யாணராமன் கோலம் கண்டான்" என்றொரு எஸ் பி பி பாடல் இருக்கும் அதுவும் நன்றாய் இருக்கும்.

கோமதி அரசு said...

//என்ன இருந்தாலும் குழந்தைகளுக்குப் பிறகுதான் நானா
என்று சற்றே யோசித்த ராகவன்,//

கணவனே உலகம் என்று இருந்தவர்கள் குழந்தைகள் வந்தவுடன் குழந்தைகள் மேல் அனபைவிட பாசம் அதிகமாகி விடுகிறது.

கணவன் அன்பு, குழந்தைகள் பாசம்.

பாசம் சில நேரங்களில் இடற வைக்கிறது.
நல்ல முடிவாக எடுக்கட்டும். அன்பான நேசமான உறவுகள் நிலைக்கட்டும்.




வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு தேவகோட்டை ஜி.
இருவரும் நன்றாகப் புரிந்தவர்கள். தாய் மனம்

மக்களை நினைப்பது தொடரும் பந்தம் தானே.

வல்லிசிம்ஹன் said...

ஜீவி சார், எனக்கும் ரயில் நிலையங்கள் மிகப்
பிடிக்கும். எழுத்தாளர் பி.வி.ஆர் அவர்களின் சென்ட்ரல்

அக்காலத்தில் என்னை வெகுவாக ஈர்த்தது.
நம் வாழ்வின் பல நிகழ்வுகளுக்கு ரயில் ஒரு பாலமாக அமைந்திருக்கிறது.

இவர்கள் வாழ்விலும் நன்மை உண்டாகட்டும். நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

மிகப் பெரிய உண்மை இது அன்பு துரை செல்வராஜு மா.
கணவனுக்கு அதுவும் வயதான கணவனுக்கு முன் எப்போதையும் விட
மனைவியின் அருகாமை வேண்டும்.

இதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஒரு பாவம் என்றே கருதுவேன். என் முன்னோடிகள் அனைவருமே கணவனிடம் மாறாத காதல் கொண்டவர்கள் தான். ஓரிரு தம்பதிகளைத்தவிர.

உங்களுடைய பின்னூட்டம் என்னை நெகிழ வைத்து விட்டது.
நன்றி. மங்கலம் நிறைந்த வாழ்வு கூடட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார்,
பெண் என்பவள் பாசத்துக்குக் கொடுக்கும்
நேரம் அதிகம் தான்.
கணவனுடைய நேசத்துக்கும் குறைவில்லை என்றால்
அங்கே சஞ்சலம் வராது.

பெண்ணுக்குப் பெற்றோருடனான பந்தம் பின்னுக்குப்
போவது திருமணம் ஆனதும்.
கணவனின் நேசம் மாறாவிட்டாலும் தான் பெற்ற குழந்தைகளிடம்
அஞ்ஞானம் நிறையவே ஆகிறது.

அத்ற்காக இதற்கெல்லாம் காரணகர்த்தாவான கணவனை
மறப்பாளா.
முடியவே முடியாது.
பிரயாண அலுப்பு, இத்தனை வருடங்கள் கணவன் உடல் நலத்துக்காகப் பட்ட கவலை
ஜானகியைத் தளரவைக்கிறது.
தனியே ஒரு புதிய ஒரு குடித்தனம் என்றால் அசத்துகிறது
மனம்.
பார்க்கலாம்,ஜானு எந்தப் பக்கம் சாய்கிறாள் என்று.உங்கள் ஊக்கமே இந்தத் தொடர் நீளக் காரணம். இன்னொன்று சரியாகச் சொல்லாமல்
எந்தக் கதையையும் என்னால் முடிக்க முடியாது.
என் மனத்திருப்திக்காக்த்தானே எழுதுகிறேன். உங்கள் கருத்து நிறைய பலம். நன்றி மா.உங்கள் ஊக்கமே இந்தத் தொடர் நீளக் காரணம். இன்னொன்று சரியாகச் சொல்லாமல்
எந்தக் கதையையும் என்னால் முடிக்க முடியாது.
என் மனத்திருப்திக்காக்த்தானே எழுதுகிறேன். உங்கள் கருத்து நிறைய பலம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
உங்களைப் போல நல்ல பிள்ளைகள் இருப்பதால்
பெற்றோர் வாழ்வு வளம் பெறுகிறது. ஆமாம்,
இந்தப் பாடல் என் கணவருக்கும் மிகப் பிடித்த பாடல்.
அதனால் பதிந்தேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, இருவருக்கும் தேவையான நல்ல
தீர்மானம் எடுப்பார்கள். நன்மை விளையும்.
நலமுடன் இருங்கள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
விசுவின் படம் மனதை உருக்கும்.

குழந்தைகள் மீது வைக்கும் பாசம் ,கணவனிடம் இருக்கும் நேசத்தை
விட உயர்ந்ததில்லை.
வித்தியாசம், கணவனிடம் கொண்ட காதலை வெளிப்படையாக
காண்பிக்க எங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுக்க வில்லை.
குழந்தைகள் அப்படி இல்லை.
தட்டிக் கொடுக்கலாம். தலையோடு அணைத்துக் கொள்ளலாம்.
பேரன் பேட்டிகளுடன் இன்னும் அதிகம்.

இந்த வழியில் சென்ற ஆற்றின் மனதை மீண்டும் வழி மாற்றுவது சற்றேகடினம்.
மனம் இருந்தால் மார்க்க பந்து தான்.ஹாஹா.
கல்யாண ராமனுக்கும், பார்ப்பதை விடக் கேட்பது
மிகப் பிடிக்கும். விறு விறுப்பான பாடல் நன்றி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

//பாசம் சில நேரங்களில் இடற வைக்கிறது.
நல்ல முடிவாக எடுக்கட்டும். அன்பான நேசமான உறவுகள் நிலைக்கட்டும்.//
இது மிக மிக உண்மை அன்பு கோமதி.

எங்கள் குழந்தைகள் அவரவர் குடும்பத்துடன் இருக்கும் போது
இவர் என் மீது காட்டிய அரவணைப்பு சொல்லி முடியாதது.
ஆனால் ஒரு மூலையில் மக்களைக் கண்டு வரவேண்டும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
அதன் விளைவாக வருடம் ஒரு பயணமாவது இருக்கும்.

அவருக்கு 70 வயது நெருங்கும்போது எனக்கு உரைத்தது.
இவரை அலைக்கழிக்கக் கூடாது என்று.

நமக்கு முக்கியம் இவரது உடல் நலம் என்று உணர்ந்து
சமனிலைக்கு வந்தேன். எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

குழந்தைகளுக்குப் பிறகு தான் கணவர்! ஹாஹா... பல வீடுகளில் இப்படித்தானே....

தொடர்கிறேன் மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் என்ன செய்யலாம். நதிக்கு இரு கரைகள். பெண்ணுக்கு கணவர் ஒரு புறம். குழந்தைகள் ஒரு புறம்.எல்லாம் பட்டுத்தான் வாழ்வு தொடர்கிறது மா.