Blog Archive

Thursday, May 09, 2019

அன்னை. 1956

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
அன்னை. 1956

அம்மாவுக்குத் தாரக் நாத் என்கிற பெயர் மிகப் பிடிக்கும்.
திருமங்கலத்தில் இருக்கும் போது பக்கத்து வீட்டு வைகுந்தம்
மாமாவீட்டுக்கு வந்திருந்த இளம் தம்பதிகளுக்கு
ஒரு சின்னப் பாப்பா, ஒரு மூன்று மாதம் இருக்கலாம்.
அதன் பெயர் தாரக நாத்.

அம்மாவுக்கு அந்தக் குழந்தையிடம் அத்தனை பிரேமை.
நானும் சின்னத்தம்பி ரங்கனும் அம்மாவுடன் போவோம்.

ரங்கன்  அம்மாவுடன் எப்பவும் ஈஷிக் கொண்டே இருப்பான்.
எங்கள் இருவருக்கும் அம்மா அந்தக் குழந்தையை மடியில் வைத்துக்
கொண்டு கொஞ்சுவது பார்த்துக் கொஞ்சம்
பொறாமையாகக் கூட இருக்கும்.

அப்பா மற்றவர்கள் வீட்டுக்கு அவ்வளவாகப் போக மாட்டார்.
அம்மா அந்தக் குழந்தையைப் பற்றி அடிக்கடி
பேசுவதை வேடிக்கையாகப் பார்ப்பார்.

அந்த வார சனிஞாயிறுகளில் ராமு மாமா வந்திருந்தார்.
அவர்களுக்கெல்லாம் அக்காவிடம் பேசுவது, ஒரு கவுன்சிலிங்க் போய் வந்த
தெம்பு கொடுத்தது என்று இப்போது புரிகிறது.

ராமசாமி ,பக்கத்து அகத்தில் ஒரு  அழகான பாப்பா வந்திருக்கிறது.
அவர்கள் இன்று ஊருக்குக் கிளம்புகிறார்கள்.
வாயேன் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்ற
அக்காவை வினோதமாகப் பார்த்தார் மாமா.
//பாப்பா நீ வெளியில் வந்தே நான் பார்த்ததில்லையே.
நீ கூட படி தாண்டுவியா என்று புன்னகையோடு
கேட்டார். சரிதான் வா என்னுடன் என்று அழைத்துப் போனார்.

அவர்கள் போய் அரைமணி நேரம் கழித்து அப்பாவும்
ஆபீஸிலிருந்து வந்து விட்டார்.
காப்பியை எதிர்பார்த்து வந்தவருக்கு  அம்மா இல்லாததே
ஒரு அதிசயம். பக்கத்து வீட்டுக்குப் போயிருக்கார்ப்பா என்றதும்,
கழற்றின சட்டையைப் போட்டுக்கொண்டு மீண்டும் படியிறங்கி பக்கத்து வீட்டுக்குப்
போனார்.
நான் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த நாகம்மாவிடம்
அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.
வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்டு ஓடினேன்.
எனக்கு மாமாவுடன் சினிமா போக ஆசை.
மின்னல் வீரன் என்ற படம் வந்திருந்தது. ZORRO வின் தமிழ்ப்
பதிப்பு.

மூவர் முகத்தையும் பார்த்தால் எனக்கு அதைக் கேட்கத் தோன்றவில்லை.
மாமா எங்கள் மூவரையும் வெளியே அழைத்துப் போய் மீனாக்ஷி பவனில்
மசாலா தோசை, வாங்கிக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.
கூடவே கை நிறையக் காராசேவ் எல்லோருக்கும் வாங்கிக் கொண்டார்.

ஏன் மாமா அம்மாவும் அப்பாவும் என்னவோ மாதிரி இருந்தார்கள்
அந்தப் பாப்பா ஊருக்குப் போறது எனக்குக் கூட வருத்தம்தான் என்று நானும் சொல்லிக் கொண்டேன்.
அது இல்லமா. அம்மாவுக்கு நீ பிறப்பத்ற்கு முன்னால்
ரங்கராஜன் என்று ஒரு குழந்தை, தங்கக் கட்டி மாதிரி பிறந்து பத்து மாதம் இருந்து
பெருமாளிடம் போய்விட்டது.
அம்மா வெளிலே சொல்லிக்க மாட்டா.
இந்தத் தாரக் நாத் கிட்டத்தட்ட அதே போல இருக்கு மா.
நீண்ட ஆயுசுடன் நன்றாக இருக்கணும். என்று பெருமூச்சுடன் சொன்னார்.

அன்று நாங்கள் அனைவருமே மௌனமாக இருந்தோம்.
சாப்பிட்ட பிறகு அம்மா வழக்கமான கலகலப்புடன்
விசாகப்பட்டணம் பயணம் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
அப்பாவும் சேர்ந்து கொள்ள

கேட்டபடியே அம்மாவின் மடியில் ரங்கன் தூங்கி விட்டான்.
பொறுமையின்  மறு உருவம் என் அன்பு அம்மா.

10 comments:

நெல்லைத்தமிழன் said...

தாயின் மனதை யாரே அறிவர்.....

குழந்தை மறைந்தாலும் மற்ற குழந்தைகளுக்காக எப்போதும் புன்சிரிப்புடன் வளையவரணும்.

பக்கத்துவீட்டுப் பையன், தன் மறைந்த மகனை நினைவுபடுத்தியது - இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக இருந்தது.

ஸ்ரீராம். said...

என்னென்ன நினைவுகள் அம்மாக்களிடம்... அதைக் குழந்தைகளிடம் காட்டிக்கொள்வதில்லை. எனக்கு கயா நினைவு வருகிறது.

கோமதி அரசு said...

அன்னையர் தின பதிவா அக்கா? வரும் ஞாயிறு அன்னையர் தினம்.
நாம் மறப்பதே இல்லை அன்னையை என்றும் நினைவுகளில் இருப்பார் .

அம்மாவுக்கு வணக்கங்கள்.
என் அம்மாவுக்கும் முதலில் ஆண் குழந்தைதான் அப்புறம் தான் என் அக்கா. (10 மாதம் தான் அண்ணன் இருந்தான்)

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
அம்மா சோகம் அதிகம் பாராட்ட மாட்டார். ரொம்ப பாசிடிவ் மனுஷி.

அப்பா மறைந்த போது அடுத்த 13 நாட்களில் எங்க பொண்ணு திருமணம்.
ஓய்ந்து படுத்துவிட்ட என்னை அழாமல் தடுத்தது அம்மா தான்.
மூன்று நாட்களில் எங்க வீட்டுக்கு அனுப்பிவிட்டர்.
பத்தாம் நாள் மட்டும் வந்துட்டுப் போ.
அதற்குப் பின்னால் மாப்பிள்ளை பெண்ணை திருமணமாகி
இரண்டு நாட்கள் கழித்து அழைத்து வா போதும்னு சொல்லிவிட்டார்.

பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டேன். நன்றி ராஜா.



திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான நினைவுகள் அம்மா... அருமை...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், அம்மா என்பவள் தயா சாகரம்.
எங்களை நல் வார்த்தை சொல்லியே வளர்த்தாள்.

ஒரு வேளை கூட முகம் சுணங்க விட மாட்டாள்.
உனக்குப் பசி வந்தால் கோபம் வரும்.
முதல்லியே சாப்பிட்டுவிடு என்று ஒரு குழம்பு சாதம் நல்லெண்ணெய் மணக்க
மணக்கப் பிசைந்து கொடுத்துவிட்டுப்
பிறகு சாயந்திரத்துக்கான ட்ஃபன் செய்வாள்.
இதோ மே 20 அவளது மறைவு நாள்.
நீங்கள் கயாவுக்குப் போனது மஹா உத்தமம்.
அம்மாவின் ஆசி காக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி , உங்கள் வீட்டிலும் இது நடந்திருக்கிறதா.
நம் அம்மாக்கள் தைரிய சாலிகள்.
எதற்கும் தளரவில்லை. நாமும் வாழ்வின் சரிவுகளை எண்ணாமல்
முயன்று முன்னேற வேண்டும் என்கிற பாடம் தான் கற்கிறோம் அவர்களிடம் இருந்து.
அன்னையர் தினத்துக்கு இன்றே வாழ்த்துகள் அம்மா. என்றும் வளமுடன் வாழ்க.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு தனபாலன். நல்லனவற்றையே நினைப்போம்.
அல்லாதவற்றை மறப்போம்.

Thulasidharan V Thillaiakathu said...

பாவம் பாட்டி இல்லையா? மகன் மறைந்தது எவ்வளவு வேதனைப் படுத்தியிருக்கும் பாட்டிக்கு! என் பாட்டிக்கும் இப்படித்தான் இடையிடையே நிறைய குழந்தைகள் இறைவனடி சேர்ந்துவிட்டது. தங்கியது என் அப்பா அவர் இரு தங்கைகள். என் அத்தைகளும் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு மிகச் சிறு வயதிலேயே போய்விட தாத்தாவும் மறைய, அத்தைகளின் கணவன்மார்களும் மறைய, என் அம்மாவும் 50 வயதில் போய்விட இத்தனையும் தாங்கிக் கொண்டு 92 வயது வரை இருந்துவிட்டு இறைவனடி சேர்ந்தார்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, அன்னையர் தின வாழ்த்துகள் மா.
வேலைகளுக்கு நடுவில் இங்கும் வந்து பின்னூட்டம்
இட்டு இருப்பது மனசுக்கு நெகிழ்வு.
ஆமாம், அம்மா தன் சின்ன மகனையும் இழந்து அந்த வருத்ததில்
ஒரே வருடத்தில் இறைவனடி சேர்ந்தார். நீங்கள் எல்லோரும் அமோக ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் அம்மா,.