Blog Archive

Monday, July 23, 2018

தனிக் குடித்தனம் வந்தாச்சு.

Vallisimhan

    குழந்தைகள்  அவரவர் வீட்டுப்பாடங்களைப் படிக்க ஆரம்பித்தனர் இரண்டாம் வகுப்பு
பாடங்கள் அவ்வளவாக இல்லாததால் சின்னவன் தாத்தாவுடன் இழைந்தான். இவனை என்னுடன் அனுப்பிடுமா. நான் சங்கரா ஸ்கூலில் சேர்த்துப் பார்த்துக் கொள்கிறேன் என்று சிரித்தார்
தாத்தா.

 அப்பா உங்க பிரச்சினையை முதலில் பார்க்கலாம். அப்புறம்
அவன் வருவான். என்று சிரித்தபடி, முகுந்த்  வருகிறீர்களா.
அப்பா ஏதோ பேசணுமாம் என்று கணவரை விளித்தாள்.

இதோ வரேன் மா. என்றபடி பளிச்சென்று விபூதி நெற்றியில்
துலங்க கீழே வந்தான் முகுந்த்.

என்ன விஷயம்மா. மாமா மாமிக்கு சாப்பிட ஏதாவது கொடுத்தியா
என்றபடி தன் காப்பியை ரசித்தான்.

மாதவன் வேலையைவிட்டு விட்டுத் தனியாக பிசினஸ் செய்யப் போவதையும்,
\அம்மா அப்பாவுக்கு  இடம் போதாமல் வெளியே தனியாக இருக்க விரும்புவதையும் கேட்டு
ஆச்சர்யப் பட்டுப் போனான்,.
மாதவன் அப்படி எல்லாம் சட்டென்று முடிவெடுக்க மாட்டானே.
அதுவும் உங்களைப் பாதிக்கும் வழியில் செய்ய மாட்டானே மாமா
என்று அதிசயித்தான்.
அவன் மேல் குற்றமில்லை முகுந்த்.எங்களுக்கு  சுதந்திரமாக
இருக்க வேண்டும். 40 வருடக் குடித்தனம்.அதில் சேர்த்த அளவான
பொருட்கள் எல்லாம் எங்களுக்கு முக்கியம்.
அவன் எல்லாரும் சேர்ந்து அங்கே இருக்கலாம்.

கொஞ்ச நாட்கள் கஷ்டமாக இருக்கும். பிறகு பெரிய வீடு
பார்த்துக் கொண்டு போகலாம் என்கிறான்.
எனக்கு  ஒட்டவில்லை. மாடி வெராண்டா, பின்னால் கொஞ்சம்
தோட்டம் சின்னச் செடிகள்,துளசி மாடம், பூஜை அறை, அம்மாவோட
கைவேலைகள் நிரம்பின கூடம் என்று சொல்லும் போதெ
 அவர் நிறுத்திக் கொண்டார்.
விமலாவின் அம்மா விசாலம் ,உங்கள் ப்ரஷர் ஏறி இருக்கும். நிதானமா இருங்கோ.
மாப்பிள்ளை சரியாகச் சொல்லுவார். அவருடையைக் கைகளை
இதமாகப் பிடித்துக் கொண்டாள்.
மாமா இது உங்கள் தீர்மானம் என்றால் நம்மாத்தில் இருக்கலாம்.
கெஸ்ட் ரூமில் இருக்கலாம். சமைக்க வேண்டாம் விமலா பார்த்துக்
கொள்வாள். மல்லிகான்னு அவளுக்கு ஒரு உதவியாள் கிடைத்திருக்கிறாள்
எங்களுக்கு உங்களால் பிரச்சினை வராது.

அடையார் பத்மனாபன் கோவில் இருக்கு . விமலாவோடு காரில் எங்க வேணுமானாலும்
போகலாம்.எனக்கு  ஆபீஸ் வண்டி இருக்கு. கவலையே படாதீர்கள். என்று
 தீர்மானமாகச் சொன்னான்.

நீங்க தப்பா எடுத்துக் கொள்ள வேண்டாம் முகுந்த். மாதவனை
விட்டுக் கொடுக்கவீல்லை.

அவனுக்கு ஆபீஸீல் நிம்மதி இல்லை.
வீட்டைவிட்டுப் போக வேண்டி இருக்கிறது.
வருமானமும்  அவன் தகுதிக்கு ஏற்ற அளவில் இல்லை.
இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள்
நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத் தான் தெரியும்.
அங்கே இருந்து கிளம்பிவிட்டால் வேறு இடம்தான் போக வேண்டும்.
இங்கே இருப்பது அவனுக்கு அவமானம்.

அதற்குப் பிறகு வேலைகள் சட்டென்று நடந்தன.
விமலாவின் நாத்தனார் காந்தி நகரில் பெரிய வீடு கட்டி இருந்தார்.
அவர் வருடங்களில் ஆறுமாதங்கள் லண்டன் போய்விடுவார் பெண்ணோடு
இருக்க.
அவர்கள் வீட்டு மாடி லிஃப்ட் வசதியோடு பெரியதாகவே இருந்தது.
 பேரனின் கல்லூரி பட்டவிழாவுக்காக லண்டன் கிளம்பிக் கொண்டிருந்த
சரோஜாவிடம் விஷயத்தைச் சொன்னதும்,
எனக்கு வீட்டைப் பூட்டிப் போவதில் எப்பவும் கவலை.
இப்போது இவர்கள் வந்துவிட்டால் எனக்குக் கவலை இல்லை.
 தோட்டக்காரரும் குடும்பமும்  இங்கேயே இருக்கிறார்கள்.
சமையல் மாமியும் இருக்கிறார். அவருக்கும் போக வேற இடம் கிடையாது.
காரும் ,ட்ரைவரும் உங்கள் உபயோகத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
  பிரமிப்பாக இருந்தது  சுந்தரம் மாமாவுக்கு.
அம்மா. ரொம்ப தாராளமான இடம்.
நான் வாடகை கொடுக்கணும். அதை மாப்பிள்ளையிடம் அதைப் பேசிக் கொள்கிறேன்.
அவசியமே இல்லை மாமா. நீங்கள் எனக்கும் மாமாதான்.
உங்கள் இஷ்டப்படி  செய்யுங்கள். நீங்களும் மாமியும்
இங்கே வருவது எனக்கு மஹா பெரிய நிம்மதி.
ஒருவார காலத்தில்  விசாலம் சுந்தரம் தம்பதிகள், மாதவனின்
சம்மதத்தோடு  மாம்பலத்திலிருந்து அவர்கள் முழு உடைமைகளுடன்
கிளம்பினார்கள்.
இன்னும் இரண்டு வருடங்களில் நாம் புது வீட்டுக்குப் போகும்
விதத்தில் என் வருமானம் இருக்கும் அப்பா.
நாங்களும் உங்களை வந்து பார்த்துக் கொள்கிறோம்.

அன்று இரவு அடையார் பார்க் ஷெரட்டனில் முழுக்குடும்பத்துக்கும் சுந்தரம்
விருந்து கொடுத்தார்.
விமலா, தன்னையே நம்ப முடியாமல் கணவனைப்
பார்த்துப் புன்னகைத்தபடி இருந்தாள்.
சரோஜாவும் அவள் கணவரும்  அடுத்த இரண்டு நாட்களில் கிளம்பினார்கள்.
ஒரு நாள் முழுவதும் சுந்தரம் விசாலம் தம்பதியர்
செட்டில் ஆக உதவியாக இருந்தாள்.


அடையார் வந்தாலும், சுந்தரம் சிவாவிஷ்ணு கோவிலையோ,சத்ய நாராயணர் கோவிலையோ விட்டுக் கொடுக்கவில்லை.
 திடீரென்று வந்து நிம்மதியைக் கெடுக்க வந்த தொந்தரவு
 இறைவன் அருளில்  காணாமல் போனது.

சுபம்.
Maple Tree.

No comments: