Blog Archive

Monday, July 30, 2018

உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2

Vallisimhan

+++++++++++++++++++++++++++++++++++++++
அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள்.
அம்மா தயார் செய்து வைத்திருந்த முறுமுறு

பூரிகளையும் ,மசாலா உ.கிழங்கு கூட்டையும்
சாப்பிட்டு, ரேடியோவில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரத்தில் படுத்துக்கப் போறேன் மா. நீ கவலைப் படாதே
என்றான். குரலில் குறும்பு.
நெடு நாட்களாகத் தானே சமைக்க ஆசை அவனுக்கு.
அம்மாவிடம் சொன்னால் பிரளயமே வந்தது போல
மருகுவாள்.

விட்டுக் கொடுத்துவிடுவான். இன்று நண்பனை அழைத்து அவனுக்கும்
சேர்த்து  பாஸ்தாவும் சீசும் சேர்த்து சமைத்திருந்தான்.
அவனையும் சாப்பிட வைத்து அப்போதுதான் முடித்தான்..

அம்மாவைக் காபரா படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை.
நண்பன் சிவராமன், எப்படி இதைக் கண்டுபிடித்தாய்
என்று வியப்புடன் கேட்டான். ப்ரௌன் அண்ட் பால்சன்
 பாக்கெட்டில் எழுதி இருந்ததுடா. டிலைட் பேக்கரி முபாரக்கிடம் சொல்லி

வரவழைத்தேன் என்றான். பயங்கர கில்லாடிடா நீ.
என்றபடி அவன் விடை பெற்றுக் கொண்டான்.

அங்கே மதுரையில் நிம்மதி யாகப் பேசி முடித்துப் படுத்துக் கொண்டார்கள்
எல்லோரும்.
நல்லபடியாக சாஸ்திரிகள் சொல்லணுமே என்ற கவலை எட்டிப் பார்த்தது.
மீனாக்ஷி பார்த்துப்பா என்று தனக்குத் தானே சமாதானமும் செய்து கொண்டார்கள்.
அடுத்த நாள் வசந்தனகர்ப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, சூறைத்தேங்காய்
உடைத்துவிட்டுச் சாப்பாடையும் முடித்துக் கொண்டனர்.
சாஸ்திரிகளுக்குப் ஃபோன் செய்து நல்ல நேரம் கேட்டுக்கொண்டு
மதியம் இரண்டு மணிவாக்கில் வரச்சொன்னதும்
 ஆட்டோ பிடித்துக் கொண்டு டவுன் ஹால் ரோட்டில் இருந்த
அவரது வீட்டை அடைந்தனர்.
அவர் வரவேற்று அமரவைத்தார்.
நினைத்தேன் நீங்கள் வருவீர்கள் என்று, என்றபடி
அவர்களைக் கைகால் அலம்பி விட்டு வரச் சொன்னார்.
ஜோதிடம் பார்க்கும் அறையில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்
படம் மாட்டி, மல்லிகை மணத்துக் கொண்டிருந்தது, தாங்கள் கொண்டு
சென்ற மலை வாழைப்பழத்தை அவரிடம் கொடுத்து அமைதியாக
அமர்ந்தனர் ராமனாதன் தம்பதியினர்.
 சபரிக்குத் திருமணக்காலம் இப்பதான் வருகிறது.
நானே உங்களை அழைத்திருப்பேன்.
உங்கள் முன்னோர்களில் ஒருவருக்குத் திதி கொடுக்காமல்
வருடங்கள்  கழிந்திருக்கிறது.
அவர் பசி தாகத்தோடு காத்துக் கொண்டிருக்கிறார்.
உங்களிடம் அவருக்கு அபரிமிதமான பிரியம்.
யார் என்று சொல்ல முடிகிறதா என்று சுருக்கமாகக்
கேட்டார்.
ராம்னாதன் இதை எதிர்பார்க்கவில்லை.
தன் தந்தைக்கு ஸ்ராத்தம் செய்வதில் அவரோ அவர் தம்பியோ
தவறியதில்லை.
சட்டென்று சிறுவயதில் இறந்துவிட்ட சித்தப்பா நினைவுக்கு வந்தார்.
அவருக்கு வாரிசாக மகன் இல்லை. ஒரு பெண் உண்டு.
அதனால்
சித்தப்பாவின் மனைவி ஏதோ தன்னால் இயன்றவரை
அன்னதானம் செய்து வந்தாள்.
 இது நினைவுக்கு வரவும் ,சாஸ்திரிகளிடம் சொன்னார்.
உங்கள் குடும்பத்தில் சித்தப்பாவுக்கு எல்லாம்  சேர்த்து செய்யும் வழக்கம் இல்லையா
என்று வினவினார் ஜோதிடர்.
நீங்களும் அவருக்கு மகன் தானே. யாராவது சொல்லி இருக்கலாமே.
எனக்குத் தெரிந்து உங்கள் நண்பர் கஸ்தூரி ரங்கன், வருஷத்துக்கு 4 ஸ்ராத்தம் செய்கிறார்.

நான் இதை யோசிக்கவில்லையே. பாவம் சித்தப்பா என்று கண் கலங்கினார்.
ஒன்றும் குறைவில்லை. நான் சொல்வதைக் கேளுங்கள்.
சபரியையும் அழைத்துக் கொண்டு ராமேஸ்வரம் செல்லுங்கள்.
நான் ஒரு சாஸ்திரிகளின் விலாசம் தரேன்.

அங்கே நீங்களும் உங்கள் மகனும் சேர்ந்து சமுத்திர ஸ்னானம்
செய்து, வஸ்திர தானம் கொடுத்து, தேவிப்பட்டினம் நவபாஷாணத்தையும்
 வழிபட்டு வாருங்கள்.

மகன் தர்ப்பணம் செய்யலாமா என்று யோசிக்க வேண்டாம். அவன் கை நீரும் எள்ளும் சின்ன தாத்தாவைப் போய்ச்சேரும்.
செய்துவிட்டு எனக்குச் சொல்லுங்கள்.
வழிபிறக்கும் .நல்ல பெண்ணும் பொருந்திவருவாள்.
இது நான் கண்கூடாகப் பார்த்த சத்தியம் என்று நிதானமாகச் சொன்னார்.
என்னால் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முடியவில்லை
ஆதலினால் மீண்டும் ராமேஸ்வரத்தில் பார்க்கலாம் நண்பர்களே.

அதுவரை  இந்தப் பாட்டைக் கேட்டு  மகிழவும் 💕💕💕💕💕💕💕💕💕💕💕
பாம்பன் பாலம் 

No comments: