Blog Archive

Tuesday, October 10, 2017

நேற்றும் இன்றும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
#கடிதங்களும்நினைவுகளும்

கடிதங்களைப் படிக்கும் போது அந்தக் காலத்துக்கே
போய் வந்த உணர்வு.
எத்தனையோ ரகசியங்கள். அந்த வயதிற்கான ஏமாற்றங்கள் ஏக்கங்கள்.
அத்தனையும் பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு கடிதத்துக்குப் பதில் போட நாட்கள் எடுத்தால்
பத்துப் பதில் கடிதங்கள் வந்துவிடும்.
சென்னையிலிருந்து  பத்து தோழிகள் போடும் கடிதங்களுக்கு
ஒன்றொன்றாகத்தானே பதில் போடமுடியும். அதுவும்
நாலைந்து முழுத்தாளில் வரும் செய்திகள்
 அதற்கு சரியாகப் பதில் எழுத வேண்டும்.,
சோகமாக எழுதிய ஜானுவுக்கு ,அதே கரிசனத்தோடு எழுத வேண்டும்.
எங்க அக்காவுக்குக் கல்யாணம் என்று எழுதின
ஜயந்திக்கு , விவரங்கள் சொல்லச் சொல்லி கேட்கவேண்டும்.
தீபாவளிக்கு என்ன வண்ண தாவணி என்று கேட்கும்
சந்திரா,அவள் தங்கைகளுக்கு .கடைக்குப் போன விவரம் சொல்ல வேண்டும்.

பாடங்கள் புரியவில்லை, நீ ரொம்ப லக்கி. உனக்குக் கல்லூரி
போகவேண்டாம் என்று புலம்பும் ராஜேஸ்வரிக்கு, நான் படும்
அவஸ்தைகளைச் சொல்ல வேண்டும்.
பெரம்பூரிலிருந்து  கவி மழை பொழியும் சீதாவுக்குப் பதில் கவிதை.
 இத்தனை அன்புகளையும் மீண்டும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.

12 comments:

ராமலக்ஷ்மி said...

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Avargal Unmaigal said...

அந்த காலங்களில் நான் கடிதம் எழுதும் போது அன்பும் பாசமும் நேசமும் பிரியமும் உள்ள ----- அவர்களுக்கு என்று எழுத துவங்குவேன் அது ஒரு கனாக்காலம்...ஹும்ம்

ஸ்ரீராம். said...

​உணர்வுகளால் மீண்டும் அந்த நாளுக்கே சென்றுவிட முடிகிறது. இப்போதெல்லாம் எங்கே கடிதம் எழுதுகிறோம்? பழைய பல கடிதப் பொக்கிஷங்களை சேமிக்காமல் போனேன்.

ராஜி said...

எல்லாரோட கடிதமும், கரண்ட் பில், கல்யாண, காது குத்து பத்திரிகைலாம் ஒரு கம்பில குத்தி வீட்டுக்குள் மாட்டி வச்சிருப்பாங்க. எதாவது கிளாரிபிகேஷன்னா அதுல பார்ப்பாங்க.. இப்ப யாருக்கும் எதும் நினைவில்ல

நெல்லைத் தமிழன் said...

கடிதம் எழுதின காலங்களில் உள்ள உணர்வு இப்போது ஈமெயில் காலங்களைவிட உணர்வு மிகுந்தது. சென்ற காலங்கள் மீண்டும் திரும்புவதில்லையே

ஏகாந்தன் ! said...

உறவினர்களோ, நண்பர்களோ யார் யாருக்கு என்ன பிடிக்கும், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என மனதில் நிறுத்தி, ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி வார்த்தைகளைப்போட்டு, க்ஷேமலாபங்களைக்கேட்டு, விபரங்கள் சொல்லி, விபரங்கள் கேட்டு விலாவாரியாக மணிக்கணக்கில் கையும் பேனாவுமாக உட்கார்ந்து யோசித்துக் கடிதம் எழுதுவது ஒரு கலை. எல்லோருக்கும் கைவருவதில்லை இது.

இப்போதைய தலைமுறை சிறிசுகளிடம் அந்தக்காலக் கடிதங்களின் சிறப்பைப் பேச ஆரம்பித்தால், நம்மை ஒருமாதிரி பார்த்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவார்கள். அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை.

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறை அன்புகள் ராமலக்ஷ்மி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துரை. ஏதோ நேரே அவர்களைப் பார்ப்பது போல ஒரு நினைவு.
தபால் அலுவலகமும் வீடும் அருகருகே. போஸ்ட்மாஸ்டர் அப்பா, கடிதம் வந்ததும் பத்து மணிக்குக் கொண்டுவந்து கொடுத்துவிடுவார்.. ஏயப்பா என்ன கனம் அம்மா இந்தக் கடிதம்
என்று கேலி செய்வார். இனிமையான காலங்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் நெல்லைத்தமிழன். சென்னைத் தோழிகளில் இருவரை மட்டும் சந்தித்தேன்.
அவர்கள் கண்களில் பழைய நேசம் இல்லை.
இடையில் கடந்த வருடங்கள் எல்லார் வாழ்க்கையையும் பதம் பார்த்துவிட்டது.

நிஜமாகவே கடந்த காலமாகி இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறை நன்றி ராமலக்ஷ்மி. தாமதத்துக்கு மன்னிக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மை ராஜி,
காட்ரேஜ் பீரோ மேலே எப்பவும் அந்தக் கம்பி இருக்கோம். படித்தவுடன் பாட்டி,
கடிதத்தை அதில் செருகி வைக்கச் சொல்வார்.
மின்சார பில், மற்றும் பல கணக்குகளை எழுதி வைப்பதும் அங்கே தான். செட்டியார் கடை பில் உட்பட. நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏகாந்தன், அந்த ஒரு வருடம், என் தோழிகள் பட்டப் படிப்புக்குச் சென்று விட்டனர். நான் பியுசி மட்டும் முடித்துவிட்டு மதுரைக்கு வந்துவிட்டேன்.
மனம் முழுவதும் ஏக்கம். ஒருவரையும் விட்டுவிட மாட்டேன். அத்தனை தோழிகளுக்கும் கடிதம் என்றதும், பதிலும் வந்த வண்ணம் இருக்கும்.
பிறகு பத்து வருடங்கள் கழித்து, தொலைபேசிப் பேச்சுகள்,
95 ஆம் வருடம் கணினி இமெயில், விஎஸெனெல் எல்லாம்.
எழுதிய எழுத்துக்கள் நிலையாக மனதில் நின்று விட்டன. நன்றி மா.