Blog Archive

Sunday, September 03, 2017

Madras mom and Billy Walker.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இது ஒரு மலரும் நினைவு(!).ரஸ வாசனையொடு வருகிறது
எங்கள் மகளின் முதல் பிரசவத்துக்குப் போன்போது விமான நிலயத்தில் இறங்க்கினதிலிருந்தே உதவிக்கு வந்த மாமியாரைப் பார்த்துக்கொள்வது எங்க மாப்பிள்ளைக்கு (பெரிய) கவனித்து செய்ய வேண்டிய விஷயமாகி விட்டது.
பெட்டியை இறக்கி,ஆவக்காஇ வாசனையை சமாளித்து,
ஜெட் லாகினால் தூங்கி வழியும் என்னை இன்னுமொரு கனெக்டிங்க் விமானத்தில் ஏற்றியதும் தான் அவருக்கு நிம்மதி.
அப்பவே அவருக்கு தோன்றி இருக்கணும் ,இது உதவிக்கு வந்து இருக்கா உபத்திரவத்துக்கு வந்து இருக்கா என்று.
பாவம் ஜெண்டில்மேன். ஒண்ணும் கண்டுக்கவில்லை.
அடுத்த தளத்தில் இறங்கி வீடு வந்து பெண்ணைப்பார்த்து
களித்து, விசாரப்பட்டு(எல்லா அம்மாக்களும் செய்வது தானெ)
சூட்கேசைப் பிரித்தால்... ஆவக்காய் ஏன் அவ்வளவு சுகந்தம் பரப்பியது என்று தெரிந்தது.
மூடி நெகிழ்ந்து சாறு சிந்தி ஒரே மணம் தான். இரண்டரக்கலந்து விட்டது ஆவக்காய் நான் சீமந்ததுக்காக வாங்கி வந்த பொருட்களோடு.
எங்கள் மகளும் மகா பொறுமை சாலி. போனா போறதும்மா. இங்கெ கூட வாங்கிக்கலாம் என்று சொல்லி விட்டாள்.
வீட்டை சுத்தி பாரும்மா ,இதுதான் உன் ரூம் என்று காண்பித்து அவள் வெளியெ போவத்ற்கு முன்னாலேயெ நான் தூங்கியாச்சு.
அவர்கள் இருவரும் என்னை எழுப்பி சாப்பிட வைக்க செய்த முயற்சி வீண்.
சென்னை கஸ்டம், போர்டிங், ஜெர்மன் நிலய வெய்ட்டிங்க்
எல்லாம் படுக்கையில் விழுந்ததும் தூக்கமாக என்னை கும்பகர்ணியாக்கி விட்டன.
அதே போல் அவர்களுடைய இரவு 1 மணிக்கு என் இடும்பை கூர் வயிறும் விழித்துக்கொண்டது. இருக்கும் இடம் ஏவல், பொருள் புரிய கொஞச நேரம் பிடித்தது.
கூடவே அமெரிக்கா வந்தோமே. அட, ஒரு இடம் பார்க்காமல் தூஙகி விட்டேனே என்று ஒரு சிறு எண்ணம், அத்தோடு பயங்கரப் பசி.
சரி, முதலில் கிச்சன் கண்டுபிடிக்கலாம், பிறகு கவலைப் படலாம் என்று தட்டு தடுமாறி வ ழி தேடி சமையல் அறை அடைந்தேன். ச்விட்ச் தேடும் படலம்,ஃப்ரிஜ் தேடும் படலம் எல்லாம் தனி அத்தியாயம்.:-)

அதிர்ஷ்டவசமாக என் பெண் சொன்னது நினைவில் இருந்தது. ரசம் சுட வைத்தால் வாசனை போய் அவர்களை எழுப்பி விடும் என்று சில் ரசம் சில் சாதம் சில் கூட்டு எல்லாம் ஒரு கதம்பம் செய்து, பசிக்கு சமைத்து வைத்த மகளை வாழ்த்தி, சாப்பிட்டுவிட்டு, சின்க்கில் எல்லாவற்றையும் சேர்த்து குழாயைத் திறந்தேன்.......
இங்குதான் கதை ஆரம்பம்.
நான் நிரம்ப அமைதியாக வேலை செய்ததாக நினைக்க,அது எப்படி யானையும் வெங்கலமும் சத்தம் செய்யாமல் இருக்கும் என்பதை நிரூபிக்க என் மகளும் மாப்பிள்ளையும் அம்மா என்று கூப்பிட , நான் என்னவோ ஏதோ என்று அவர்கள் உறங்கும் அறைக்கு போக,
அவர்கள் ' அம்மா நீங்கள் படுத்துக்கொள்ளலாம்.
நாளை மத்த விஷயம் பார்க்கலாம்னு சொல்ல,"
நான் சாதுவாக மீண்டும் படுக்கப் போக,காலை
5 மணிக்கு " maintenance, please open the door' என்று ஒரு அதிகாரக் குரல்.
நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தயங்கித் தயங்கி மாப்பிள்ளை பெண்ணை எழுப்ப,
என்னவோ ஆகிவிட்டது என்று அவர்கள் கீழெ இற்ங்க,
எனக்கு மூச்சே நின்றது ஒரு நிமிடத்துக்கு.
தமிழ் சினிமா அம்மாக்கள் மாதிரி 'ஆ ஆ தந்தியா அய்யொ படிடா யாருக்கு என்ன ஆச்சோ, 'என்று சக தெய்வஙகளைக் கூப்பிடா விட்டாலும் பதைப்பாகத்தான் இருந்தது.
அவர்கள் கீழே இறங்கினதும், என் காதுகள் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்டு ஹேய் ராம் {அப்போது கமல் படம் வரவில்லை] என்று சமயலறைக்குப் போனால்....
அந்தக் கோலாகலத்தை என்ன சொல்ல.
நான் மூட மறந்த சின்க் குழாய் வெள்ளம் பெருக்கெடுத்து
ரசம், ஏற்கனவே அதிலெ இருந்த சாம்பார்,கூட்டு,சட்னி எல்லாம் ஒன்று சேர்ந்து சமயல் அறை பூராவும் தளும்பிக் கொண்டு இருந்தது.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு(அதை எப்படி உயிரைக் கையில் பிடிக்க முடியும்? கேட்காதீர்கள். எனக்குத் தெரியாது) மெள்ள நீந்திக் குழாயை அடைத்து விட்டு நிமிர்ந்தேன்.
பார்த்தால் (நாண்டுக்கிட்டு என்ற வார்த்தை நினைவில் வருகிரதா?) கீழெ குடியிருக்கும் பில் என்பவர், அந்த ஃபார்மிங்டன் ஹில் ஹௌஸ் மெயிந்டினன்ஸ்
ஆளு எல்லாரும் ஒரு 6,7 அடி உயரத்தில் இருந்து என்னை ஒரு எலியைப் பார்ப்பது போல் பார்க்கிரார்கள். இங்கே உங்களுக்கு பிடித்த பிடிக்காத எந்த இன்ஸெக்ட் டும் போடலாம்.
என்ன ஆகீயிருக்கிறது தெரியுமா?
குழாய்த் தண்ணீர் நிரம்பி வழிந்து தரையை ஊடுருவி(அப்படிக்கூட போகுமா) கீழ் வீட்டுக்கு சீலிங்கில் ஐக்கியமாகி , ஊறி, சொட்டு சொட்டு சொட்டுது பாரு இங்கே!! என்று மஞ்சள் கலரில் அவர்களை எழுப்பி, அழைக்க
அவர்கள் மஞசள் மகிமை அறியாதவர்கள் அல்லவா?
பயந்து விட்டார்கள்.
நல்ல வேளை .... என்னோட முன்னோர்கள் செய்த புண்ணியம் ,,911 கூப்பிடலை. நான் பிழைத்தேன்.
என் முகம் இந்த astrix comic character மாதிரி கலர் மாறிக் கொண்டே இருந்திருக்கனும்.
I was mortified!!
அவஙக என்ன சொன்னாஙக தெரியுமா/ OH?! Momm? அப்படின்னு சிரிச்சுட்டு போனார்கள்.

அதிலெருந்து கீழெ எங்க வண்டியை எடுக்கும்போது அவர் பார்க்க நேர்ந்தால் கொஞசம் தள்ளியெ நின்று புன்னகை செய்து விட்டு போய் விடுவார்.
இது தான் இந்த மசாலா மாமின் கதை.






20 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹாஹாஹா வல்லிம்மா செமையா அப்படியே காட்சியாக நினைத்துப் பார்த்து ஒரே சிரிப்பு! ஆம் முதன் முதலில் (முதல் ட்ரிப்போ?!!) அமெரிக்கா போகும் போது பல விஷயங்கள் அப்படித்தான். அங்கெல்லாம் பல வீடுகளில் வினைல்??! ஃப்ளொரிங்க் அதனால் தண்ணீர் கீழே போய் சொட்டும்..

அதுபோல பாத்ரூம் கூட கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்..முதலில்...தண்ணீர் கீழே சொட்டாமல் என்று...எண்ணை அடுப்பில் வைத்தால் புகை வந்துவிட்டால் அலார்ம் அடிக்கும் இப்படிப் பல..ஸ்வாரஸ்யமாய்..

ஊறுகாய் போன்றவைகளைக் கொண்டு செல்வது என்பது ரொம்பவே தொல்லையாகிவிடுவதுண்டு நன்றாகச் சீல் செய்ய வில்லை என்றால்... இப்போதெல்லாம் சீல் செய்ய, பேக் செய்ய என்று கடைகள் வந்துவிட்டன...

சிரித்தது நீங்கள் எழுதிய விதத்தை நினைத்துதான். உங்கள் தர்மசங்கட நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது...வல்லிம்மா...

கீதா

வல்லிசிம்ஹன் said...

வாங்க கீதா,
2006 இல் எழுதிய பதிவு. வேறு ஒரு வலைப்பதிவில் இருந்ததை இங்கு மாற்றினேன். அந்த வலைப் பதிவில் எழுதுவதில்லை.
படிப்பவர்களுக்கு அலுத்துப் போயிருக்கும்.
ஆமாம் 98 இல் முதல் பயணம்.. எல்லாக் கோமாளித்தனமும்
செய்திருக்கிறேன்.
எங்க வீட்டுக்காரர் ஒரு தப்பும் செய்யமாட்டார். நான் மாட்டிப்பேன்.
இப்போது சொந்த வீட்டில் இருக்கிறார்கள்.
அப்போது அபார்ட்மெண்டில் இருந்ததால் கீழ் வீட்டுக்குப் போய் விட்டது மஞ்சத்தண்ணீர்.ஹாஹா.
அனுபவித்து ரசித்ததற்கு நன்றி மா.

Geetha Sambasivam said...

ஹூஸ்டனில் மெம்பிஸில் முதல்முறை போனப்போ எனக்கும் இப்படியான சில நிகழ்வுகள் நடந்தன. ஆனாலும் கீழ் வீடு வரை போகலை நல்லவேளையா! எங்கள் வரைக்கும் நடந்ததால் சில விஷயங்கள், பையர், பெண் வரை போகவிடாமல் சமாளித்தோம்! :) இது ஏற்கெனவே படிச்சிருக்கேனே என்று பார்த்தப்போத் தான் உங்கள் பின்னூட்டத்திலிருந்து புரிந்தது. :)

ஸ்ரீராம். said...

படித்த நினைவு இருக்கிறது. புன்னகை. ரஸமான அனுபவம்தான்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனுபவத்தை ரசித்தேன்.

Avargal Unmaigal said...

உங்களுடைய அன்றைய தர்மசங்கடங்கள் இப்போது சிரிக்கும் சம்பவங்களாகிவிட்டன

ராஜி said...

சேட்டையை செஞ்சுட்டு அதை பதிவாவும் ஆக்கி இருக்கீங்களேம்மா. செம்ம நைஸ். ரசித்தேன்.

Bhanumathy Venkateswaran said...

அமெரிக்கா செல்லும் எல்லோரும் பெரும்பாலும் கிச்சன் சிங்கில் தன ஏதோ தவறு செய்கிறார்கள்...ரசித்தேன்.

msuzhi said...

இதெல்லாம் தான் வாழ்க்கையின் இனிமைகள்..
நல்ல தமாஷ்..

வல்லிசிம்ஹன் said...

இப்போது தேறிட்டோம்னு நினைக்கிறேன் கீதா மா.
ஹாஹா. இதை நாலாவது மீள் பதிவாக இருக்கக் கூடும்.
சிரிப்புதான்

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். மீண்டும் அலுத்துக் கொள்ளாமல் படித்ததுக்கு மிக நன்றி..

வல்லிசிம்ஹன் said...

எப்போதும் இப்படி ஆகிறது மா. துரை.
19 வருடங்கள் கழித்து சிரிப்பதற்கே இது நடந்ததோ என்னவோ. ஹாஹா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜி மா. 1998 இல் நடந்ததை 2006 இல் காமெடியாக்கினேன் கண்ணா.
சிரிப்புதான் வருதையா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் பானு மா. அங்கே தான் நம் சங்கடங்கள் அதிகம்.
அதைவிடப் பிறந்த குழந்தையைப் பார்த்துக் கொள்வது மிகச் சுலபம்.
அன்புடன் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துரை. அசடு என்றால் என் முதல் விஜயத்தைத் தான் சொல்லணும்.

ராமலக்ஷ்மி said...

அருமையான நடையில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஒவ்வொரு வரியாக ரசித்தேன்:).

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, மிக நன்றி. இப்போதான் உங்க பாவாடை, ப்ளாக் அண்ட் ஒயிட்
படம் பார்த்துட்டு வந்தேன். இங்கே நீங்களே வந்திருக்கிறீர்கள்.

'பரிவை' சே.குமார் said...

ரசிக்க வைக்கும் எழுத்து.
அனுபவத்தை ரசித்தேன் அக்கா...

வல்லிசிம்ஹன் said...

நன்றி, குமார் தம்பி. நலமுடன் இருக்கணும்.

மாதேவி said...

முன்பும் படித்திருக்கிறேன். மிகுந்த ரசனை.