Blog Archive

Sunday, August 13, 2017

வேப்பமரமும் மகிழம்பூ மரமும்.

மகிழம்பூ 
வேப்ப மரம்.
மகிழ மரம் ,வகுளம் 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

  முன்னொரு காலத்தில் எங்கள் வீட்டில்  சுற்றுச்சுவரை ஒட்டி  வேப்ப மரம் ஒன்றிருந்தது.
அதன் அடிப்பாகம் ஒருவர்  சுற்றி வளைக்க முடியாத அளவு பெரியதாக இருந்த நினைவு.
  எங்கள் சிங்கம், தண்ணீர்ப் பஞ்ச நாட்கள் 1983 இல் வந்த பொது பழைய  கார்ப்பரேஷன் குழாய்களை அகற்றி புது குழாய்கள் போட முடிவு செய்தார். நாம் தான் ஒரு ப்ளம்பரை கூப்பிட்டு  அதை செய்ய மாட்டோமே .
 தானே நிலத்தில் பள்ளம் தோண்டி,  பழைய  குழாய்களை அகற்ற ஆரம்பித்தார்.

ஒரு மூன்றடி ஆழத்தில் இருந்த குழாய்கள்  இற்றுபோயிருந்தது தெரிய வந்தது.
குழாய் முடியும் இடத்தில் வேப்ப மரத்தின் வேர்கள்
தடுத்துக் கொண்டிருந்தன.

புதுக் குழாய்  போட வேண்டுமானால்  வேர்களை அகற்ற வேண்டும். அதுகூடப் பெரிதில்லை.
 மரத்தின்  ஆணி வேர் மிகப் பெரிய அளவில் தட்டுப்பட்டது. அது நீண்டு கொண்டே போய் வீட்டின் அடித்தளத்துக்குப் போவதைக் கண்டு பிடித்தோம். அடுத்த வீட்டிற்கும் போய் விட்டது இந்த வேர். மிகப் பெரிய பிரச்சினை எங்களை எதிர்நோக்கியது.
  ஒருபக்கம் 70 ஆண்டு பழைய மரம். இன்னொரு பக்கம் ...
வீட்டின் பாதுகாப்பு. மாமியார் இவர் எல்லோரும் கலந்து ,மிகுந்த மன வருத்தத்துடன் மரத்தை வெட்டும் முடிவுக்கு வந்தார்கள்.
 மரவெட்டியை அழைத்து போது , ரொம்பப் பெரிய மரம் சார்,இரண்டு நாட்கள் தேவைப்படும். அதுவும் வேரை  எடுக்க மாட்டோம் என்று அட்வான்ஸ் பணம் வாங்கி கொண்டு போய்விட்டார்.
அன்று பூராவும் அந்த மரத்துடனேயே  எல்லோரும் இருந்தோம். அதில் ஊஞ்சல் காட்டியது. பழைய வீட்டில் இருக்கையில் மர  வீடு கட்டினதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார், குழந்தைகளும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
மறு  நாள்,வெட்டும் சத்தமும், ரம்பம் கொண்டு அறுக்கும் சத்தமும் எங்கள் மனதைக்  காயப்படுத்தின .
ஒரு லாரி நிறைய வேப்பமரத் துண்டுகள்.
 அதற்கு மேல் எடுக்க முடியாதவற்றை சென்னை கார்ப்பரேஷனுக்குப் பணம் கொடுத்து அப்புறப் படுத்தினோம்.
பிறகு இவர் அந்தப் பள்ளத்தில் இறங்கி மூன்று நாள் உழைத்து,மரத்தின் வேரை  எடுத்தார்.
 இரண்டடி அகலமும்  நான்கு  அடிகள் நீளமும் கொண்ட இரு துண்டுகள் கிடைத்தன. ஒன்று இன்னும் வீட்டின் பின்புறம் இருக்கிறது.
இன்னொன்றை  நன்கு  பாலிஷ் செய்து பத்திர படுத்தி
வீட்டிற்குள் அலங்காரமாகக் கொலு பொம்மை போல் நெடு நாட்கள் இருந்தது படம் கிடைத்தால் போடுகிறேன்.

நெடுநாள் வேறு பல செடிகளுக்கு இடமாக இருந்த அந்த நிலத்தில் 2013 செப்டம்பர் மாதம் நான் ஆசைப்பட்டேன் என்று மகிழ மரக்கன்றை வைத்தார்,
இப்போது அது அன்றாடம் பூச் சொரிகிறது.
குனிந்து எடுக்கத்தான் தெம்பில்லை. ராணி கொண்டு வந்து கொடுத்தால்  இறைவனுக்கு அர்ச்சனைப் பூக்களாக  உபயோகித்தேன். வீடெங்கும் நல்மணம் .
ஒரத்தில்  இருப்பது தான் வேர்.

20 comments:

கோமதி அரசு said...

நினைவுகள் அருமை.
பல காலம் நம்மிடம் உறவாய் இருந்த மரம் வெட்டி சாய்க்கப்படுவது வேதனை தரும்.
வேரின் படம் முன்பு பார்த்த நினைவு இருக்கிறது.

எங்கள் வீட்டு தென்னைமரம், வாசல் முன் இருந்த அசோகமரம் வெட்டிய போது வருத்தமாய் இருந்தது.

தென்னைமரத்தின் வேர், நீர்த்தொட்டியை விரிசல் செய்கிறது என்றும், உங்கள் மரத்தின் மட்டை, தேங்காய் எங்கள் வீட்டின் ஓட்டின் மேல் விழுகிறது என்றும் பக்கத்து வீட்டினர் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதனால் காய்த்துக் கொண்டு இருந்த தென்னை மரத்தை வெட்டினோம். மிகவும் வருத்தப் பட்டோம். இளநீர் விற்பவரிடம் பணம் கொடுத்து தென்னைகன்று வாங்கி அவரை நட சொன்னோம், கொஞ்சம் ஆறுதலானது மனம்.

ஸ்ரீராம். said...

பலவருடம் கூட இருந்த மரம் அழிக்கப்படுவது மிகுந்த வேதனையான விஷயம். இப்போதுதான் ராமலக்ஷ்மி பதிவில் நாய் மட்டுமல்ல செடிகொடிகளும் மனிதர்களுடன் பேசும் என்று பின்னூட்டம் இட்டேன். இங்கு வந்தால் கண்கலங்க வைக்கும் மர அனுபவம். சிங்கத்தின் அந்தக் கைவேலையை நான் பார்த்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

மாதேவி said...

மகிழ மரம் இருப்பதில் மகிழ்ச்சி.
பூ நல்ல வாசனை பழமும் சாப்பிடலாம். சிறுவயதில் அருகே உள்ள கோவிலில் சாப்பிட்டு இருக்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

மரத்தை வெட்டுவது என்பது வருத்தத்துக்குரியதுதான். பரவாயில்லை, மரம் இருந்த இடத்தில் இன்னொரு மரத்தை வைத்துவிட்டீர்களே. Just to imagine, that the tree would have seen many a generations, is amazing. ஒரு வருடத்துக்கு முன்பு, அடையாரில் எங்கு பார்த்தாலும் மரங்கள் விழுந்துகிடந்தன (புயல்). வளர்வதற்கு எத்தனை காலம் எடுத்திருக்கும்..

ராஜி said...

மகிழம்பூ எனக்கு ரொம்ப பிடிக்கும்மா. பக்கத்து கோவில்ல இருந்து அப்பா பறிச்சுக்கிட்டு வருவார்.

துளசி கோபால் said...

மனசுக்கு பேஜாரா இருக்கு. :-(

ராமலக்ஷ்மி said...

மரங்களை அகற்ற வேண்டி வருவது மனதுக்கு கஷ்டமான ஒன்றே. இன்று மகிழ மரம் பூச்சொரிவது ஆறுதல்.

@ ஸ்ரீராம், பதிவை வாசிக்கும் போதே உங்களது பின்னூட்டமும் நினைவுக்கு வந்தது. அங்கு தர நினைத்த இணைப்பை இங்கும் பதிந்து வைக்கிறேன். மரங்களின் மீதான பாசத்தை, மரங்கள் நம் மீது வைக்கும் பாசத்தைப் பேசும் எனது “இதுவும் கடந்த போகும்” கதை: http://tamilamudam.blogspot.com/2013/01/blog-post_17.html நீங்கள் அனைவரும் வாசித்த ஒன்றே.

Anuprem said...

கூடவே வளர்ந்த மரத்தை இழப்பது கடினமே...

வல்லிசிம்ஹன் said...

இதே போல பிரச்சினைகள் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்ததால் தென்னை மரங்கள் இரண்டை இழந்தோம். வாழை இலை கண்ணை உறுத்துகிறது என்பார். ஏன் தெரியுமா. எங்கள் வீட்டுச் சுற்றுச் சுவர்மீதே வீட்டைக் கட்டி இருந்தார் அந்த நல்லவர். மரங்கள் உயிர் நாடிகள் என்பதை மனிதர்கள் உணரும் நாள் வரவேண்டும்.Gomathy ma.

வல்லிசிம்ஹன் said...

இன்னும் அந்த மரத்தின் நிழலும், வீசும் காற்றும், உதிரும் வேப்பம்பழங்களும் மறக்கவில்லை ஸ்ரீராம்.

வாசல் அறையில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.
உண்மை ராமலக்ஷ்மி சொல்லி இருப்பது போல ,இவர் செடிகளுடன் பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.
வீட்டைக் கிளம்பும்போது நானும் கலங்கி விடுவேன். எல்லாம் என்னை,
ஏன் கிளம்புகிறாய் என்று கேட்பது போல உணர்வேன்.என்ன செய்யலாம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, நன்றாக உறுதியாக வளர்ந்திருக்கிறது. மாமரங்களும்
பசுமை போர்த்தி அழகாக இருந்தன. தேக்கு மரங்களும் தான். இந்த மனிதர்தான்
எத்தனை உழைத்திருக்கிறார். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, உங்கள் கதை மனசைப் பொங்க வைத்துவிட்டது. அந்த அம்மாவைப் போய் அணைத்துக் கொள்ள ஆசையாக வருகிறது. மிக நன்றி மா. உங்களுக்கு மனமும் கைகளும்
அன்புக்காகவே இருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அனுராதாமா. சொல்லி முடியாத வருத்தம். அது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நெல்லைத்தமிழன்,
அந்த ஒரு மரத்துக்குப் பதிலாகப் பல மரங்கள் நட்டிருக்கிறார்.
மொத்தம் எட்டு.
அந்தப் புயல் சமயம் நம் வீட்டுக்கு நல்ல வேளையாக நஷ்டம் இல்லை.
மரங்கள் தப்பித்தன. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜி,
மகிழம் பூ அத்தனை இஷ்டம். தலையணையின் அருகில் வைத்துக் கொள்வேன்.
மருதாணியிடமும்,இந்தப் பூவின் மேல் அவ்வளவு மோகம். அம்மா.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,என்ன செய்யலாம். எதுவுமே நிலையில்லை என்று தான் புரிந்துவிட்டதே.

Geetha Sambasivam said...

ஹூம், இந்தப் பதிவு எப்படியோ கண்களில் படவில்லை! எங்க வீட்டுச் சுற்றுச்சுவரை ஒட்டிப் பக்கத்துக் குடியிருப்பு இருப்பதால் எங்களுக்கும் அம்பத்தூர் வீட்டில் இதே பிரச்னை தான் தினமும். தென்னை மரத்திலிருந்து அவங்க கைகளாலெயே காய், இளநீர் பறிப்பாங்க! ஒண்ணும் சொல்ல முடியாது! அங்கே விழும் குப்பையை நானோ அல்லது ரங்க்ஸோ போய்ப் பெருக்கிச் சுத்தம் செய்து கொடுப்போம். அப்படி இருந்தும் சண்டை போடுவாங்க. வாசல் வேப்பமரம் இப்போதைக்குப் பிரச்னை இல்லை! பின்னால் எப்படி ஆகப் போகிறதோ! :(

வல்லிசிம்ஹன் said...

இந்தக் கொடுமைக்கு என்ன செய்யலாம் கீதா. நீங்களும் சாரும் போய்ச் சுத்தம் செய்வீர்களா. அனியாயமாய் இருக்கிறதே.

உலக முச்சூடும் நம்மைப் போல சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மரங்கள் வாழட்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

மரம் வெட்டுதல் என்றால் மிகவும் வேதனைதான்! அதுவும் நம்முடன் கூடவே வாழ்ந்த மரம்...வேப்ப மரம்! ஆனால் சில சமயங்களில் இது போன்ற தர்ம சங்கடங்கள் வேதனைகள் வரத்தான் செய்கிறது. மகிழம்பூ மரம் வந்தது ஆறுதல். உங்கள் அனுபவம் பல கதைகளைச் சொல்லுகிறது...

துளசிதரன், கீதா

கீதா: வல்லிம்மா வீட்டில் வெட்டுவது ஒரு மன வருத்தம் என்றால் இங்கு சென்னையில் ஏதோ பெரிதாக போக்குவரத்தைச் சரி செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு சாலையை அகலப்படுத்த பல மரங்களை வெட்டினார்கள்...போக்குவரத்து சரியானதோ? இல்லை இன்னும் மோசமாகத்தான் ஆகியிருக்கிறது...என்ன செய்வது?

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன். இப்ப கூட அந்த மூலையைப் பார்க்கும் போது மிக வருத்தமாக இருக்கும்.
அசோக மரங்கள் நிறைய நட்டு இருக்கிறார். எங்க வீட்டுக்காரர்.
ஈச்ச மரம் ஒன்று கிணற்றடியில் இருக்கிறது.
கீதா மா,
சாலை மரங்களை வெட்டியவர்கள் எங்கள் வீட்டு மரக்கிளைகளையும் வெட்டி விடுகிறார்கள்.
கேபிள் போக வேண்டுமாம். இன்னும் நிறைய பேர்,
சீரியல் பார்க்கத் தோதாக இருக்கும்.