நந்தகோபன் மாளிகை |
நென்னலே வாய் நேர்ந்தான் |
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய்
********************************************************
ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவையில் 16ஆவது பாசுரம் மிகவும் முக்கியமானது. கோவிலுக்குச் செல்லும் வழி முறைகளை விளக்கி பக்தியின் பாதையைக் காட்டுகிறாள் நம் பூங்கோதை. பத்து தோழிகளையும் எழுப்பியாகிவிட்டது. இனிப் பரமனைத் தொழவேண்டும். அவன் கோவிலை அடைய வேண்டும். உள்ளிருக்கும் மன்னவனான கண்ணனை, மணிவண்ணனை முன்னிட்டே போகிறார்கள். ஆனால் அதற்கு முன்னால் வாயிலில் நின்று அவனைக் காப்பவர்களையும் வணங்க வேண்டும் அல்லவா. கண்ணனுக்கு எதற்குக் காவல். பிறந்த அன்றிலிருந்து அவனுக்கு வந்த எதிரிகள் தான் எத்தனை பேர். இன்றோ அவனுக்குத் திருமணம் கூட நடந்துவிட்டது.
அப்படியும் நந்தகோபனுக்குப் பயம் விடவில்லை.
ஏதாவது உருவம் எடுத்து இன்னும் யாராவது வருவார்களோ,கம்சன் போனாலும் வேறு யாரும் வருவரோ என்ற கலக்கம் எப்போதும் இருக்குமாம்.
அதற்காகவே கண்ணன் திருமாளிகைக்கு வாயில் காப்போர்கள்
ஏற்பாடு செய்யப் பட்டார்கள்.
துவாரகை மன்னன் ஆயர்பாடிக்கண்ணன் இன்னும் குழந்தையாகவே
நந்தகோபனுக்குத் தெரிகிறான்.
நம் கோதைக்கும் இது தெரியும். அதன் காரணமாகவே கொடிகள் பறக்கும்
தோரணங்கள் ஆடும் நந்தகோபன் மாளிகையை மெல்ல அணுகும்போதே
மனதில் பொங்கும் மகிழ்ச்சி மேலீட்டால் பக்தியை மறக்காமல்
வாயிலில் காவல் இருப்பவர்களையும் வணங்கித் தயவாகக் கேட்டுக் கொள்கிறாள்.
அவர்களோ வழிவிடத் தயங்குகிறார்கள். இவளோ பணிவாகச் சொல்கிறாள். மணிவண்ணன் எங்கள் கண்ணன் நேற்றே எங்களுக்கு வருவதற்கு அனுமதி
கொடுத்துவிட்டான். நாங்கள் உள் சென்று அவனைத் துதி பாடி,புகழ் பாடி அவனை நல் துயிலெழுப்ப வேண்டும்.
நாங்களோ ஆயர் சிறுமியர் . அவனையே நினைத்து நோன்பு
நோற்றுத் தூய்மையாக வந்திருக்கிறோம்.
நீங்கள் எங்களை வேறாக நினைக்கவேண்டாம்.
மறுத்து ஏதும் சொல்ல வேண்டாம்.
எப்படி எல்லோருக்கும் வழிகாட்ட ஒரு குரு வேண்டுமோ அது
போல இந்தவாயில் கதவுகளைக் காப்பவர்களும் ஒருவகையில்
ஆச்சார்யர்கள்தான். அவர்கள் காட்டிய வழியில் போகவேண்டிய ஜீவன்கள்
இந்தப் பாவையர்.
அது அவர்களுக்கும்நன்றாகத் தெரியும்.
அதனாலயே அவர்களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
நேய நிலைக் கதவம் நீக்கு''
அன்பும் மகிழ்ச்சியும் திகழும் மாளிகையின் அழகுக் கதவுகளைத்
தாழ்ப்பாள்களைத் திறந்துவிடு அம்மா என்று அவர்களை பிரார்த்திக்
கொள்கிறாள்.
புனிதமும் பக்தியும் மேலிட கோதை பாடிய இந்தப் பாடல் நம்
மனக் கசடுகளையும் நீக்கி இறைவனிடம் சேர்க்கட்டும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்