Blog Archive

Wednesday, March 07, 2012

பூக்களின் மொழி

வெள்ளை மனம் அதனுள் இன்பத்தேன்
அழகும்  அடக்கமும்
பட்டாம்பூச்சிப்  பூ

என்ன வேண்டும் எனக்கு
அன்பெனும் ஒளி

இந்த  வண்ணப் பூந்தோட்டத்துக்குப் போய் வந்து ஐந்து வருடங்கள்
ஓடிவிட்டன.
எப்பொழுதும் பற்றிக் கொள்ளும் அவசரம்.
காணச் சென்றவர்கள் நானும் பெண்ணும் கணவரும் குட்டிப்பாப்பாவும்.
அதுவும் மலர்களோடு மலராக   தள்ளுவண்டியில் வந்தது.
சிங்கத்துக்கு அங்கிருக்கும் எல்லா வண்ணங்களையும் அள்ள ஆசை.
எனக்கு எல்லாவற்றையும் காமிராவில் அடைக்க அவசரம்.
பெண்ணுக்குப் பிள்ளையின் பசி  பற்றிய அவசரம்.

கண்ணுக்கு விருந்தும் மனதுக்கு அமைதியும்
கொடுத்த மலர்களை மீண்டும்
புரட்டிப் பார்க்கிறேன்.

வாழ்க்கையையும் இப்படித்தான் கடந்து வைத்திருக்கிறேன்.

சோகங்களை   நினைத்த அளவு
சுகங்களை நினைக்கவில்லையோ
அழகான அன்புகளை அள்ளித்தர
அனைவரும் தயார்.
போர்வைக்குள்  ஓளிந்து சோர்வோடு இருப்பதால் சுகமென்ன கிடைத்தது.
வெய்யில் சுரீர்  என்று   உறைத்தால்
புலன்கள் விழிப்பது போல
இரு கோடுகளில் ஒன்று உயர்ந்த போது
மற்றவர்களின்    வாழ்விலும் துன்பம் வரும்போது

கூட்டிலிருந்து  வெளிவருகிறது  அழுக்கு நீங்கிய  பட்டாம்பூச்சி..
அனைவருக்கும் ஆரோக்கியம் கொடு தேவா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

26 comments:

பால கணேஷ் said...

கூண்டிலிருந்து வெளி வருகிறது அழுக்கு நீங்கிய பட்டாம் பூச்சி. கவிதாயினிதான் நீங்க! என்ன அழகாச் சொல்லியிருக்கீங்க. எல்லோருக்கும் நல்ல ஆரோக்கியம் குடு இறைவான்னு முடிச்சிருக்கற உங்க நல்ல மனசை வியந்து, அந்த வரிகளை முழுமையா ஆமோதிக்கிறேன் நான்! எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்!

ராமலக்ஷ்மி said...

கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றிப் பேசும் ”பூக்களின் மொழி” அழகான கவிதையாகவே மலர்ந்திருக்கிறது:

/சோகங்களை நினைத்த அளவு
சுகங்களை நினைக்கவில்லையோ
அழகான அன்புகளை அள்ளித்தர
அனைவரும் தயார்.
போர்வைக்குள் ஓளிந்து சோர்வோடு இருப்பதால் சுகமென்ன கிடைத்தது.
வெய்யில் சுரீர் என்று உறைத்தால்
புலன்கள் விழிப்பது போல
இரு கோடுகளில் ஒன்று உயர்ந்த போது
மற்றவர்களின் வாழ்விலும் துன்பம் வரும்போது

கூட்டிலிருந்து வெளிவருகிறது அழுக்கு நீங்கிய பட்டாம்பூச்சி../

அருமை.

கௌதமன் said...

சோகத்தையும் சுகத்தையும் மட்டுமா? நம்பிக்கையையும் இழைத்துக் கொடுத்துவிட்டீர்கள். சுகமான சுவையான கவிதை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கணேஷ். உறவினரின் திடீர் உடல்நலக் குறைவு ,நாங்கள் அந்த ஒரு நாள் பட்டபாடுகள் என்னைக்
கொஞ்சம் நிதானிக்க வைத்திருக்கின்றன.
வார்த்தைகளை ரசித்ததற்கு மிகவும் நன்றி.

அப்பாதுரை said...

பட்டாம்பூச்சிப் பூ முகத்திலடிக்கிறது. brilliant. சோகங்களை நினைத்த அளவு.. ரசித்தேன்

வல்லிசிம்ஹன் said...

உண்மையாகவே, சிந்தின கண்ணிரினால் யாரும் திரும்பவில்லை. இனியாவது தற்காலத்தில் வாழ வேண்டும் என்று உணர வைத்தது ஒரு நிகழ்வு. நோய்வாய்ப்பட்டவரும் சுகம் பெற்று வருகிறார்.
நன்றி ராமலக்ஷ்மி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கௌதமன்.மனைதர்களின் சுயரூபம் நல்ல விதமாக வெளிப்படுவது
இது போல சுகவீனங்களின் போதுதான்.
பாதிக்கப் பட்ட மனிதர் வெளியிலிருந்து சென்னைக்கு வந்த இடத்தில் பாதிக்கப் பட்டார்.
இரண்டே நாட்களில் அவரைச் சுற்றிக் காக்காய் கூட்டமாக உறவினர்கள்
கரM கோத்து அவரை மீட்டு விட்டார்கள்.
விழிப்பு கொடுக்கும் நிகழ்ச்சி.

கோமதி அரசு said...

சோகங்களை நினைத்த அளவு
சுகங்களை நினைக்கவில்லையோ
அழகான அன்புகளை அள்ளித்தர
அனைவரும் தயார்.போர்வைக்குள் ஓளிந்து சோர்வோடு இருப்பதால் சுகமென்ன கிடைத்தது.வெய்யில் சுரீர் என்று உறைத்தால் விழிப்பது போல
இரு கோடுகளில் ஒன்று உயர்ந்த போதுமற்றவர்களின் வாழ்விலும் துன்பம் வரும்போது

கூட்டிலிருந்து வெளிவருகிறது அழுக்கு நீங்கிய பட்டாம்பூச்சி..
அனைவருக்கும் ஆரோக்கியம் கொடு தேவா.//

அனைவருக்கும் ஆரோக்கியம் கொடுக்க வேண்டும அன்பு உள்ளத்தின் பிராத்தனையை நிச்சியம் இறைவன் கேட்பார்.

உறவினர் நலம் பெறுவார். உறவினர்களின் பிராத்தனை வீண் போகாது.

கடந்து வந்த பாதையை பூக்களின் மொழியில் கவிதை படைத்து இருக்கிறீகள் அக்கா, வாழ்த்துக்கள்.

பாச மலர் / Paasa Malar said...

பூக்களின் மொழியும் உங்கள் மொழியும் கவிதை...

உண்மைதான்..பல சமயங்களில் சோகங்களை நினைக்கும் அளவு சுகங்களை ரசிக்கத் தவறத்தான் செய்கிறோம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி அழகாச்சொன்னீங்க.. இருகோடுகளும்..புலன்விழிப்பும் கலக்கிட்டீங்க போங்க..

ADHI VENKAT said...

நல்லதொரு கவிதை. உறவினர் உடல் நலம் பெறட்டும்.
நான் தினமும் கடவுளிடம் வேண்டுவதே எல்லோருக்கும் மன நிம்மதியையும், உடல் ஆரோக்கியத்தையும் குடு என்று தான்....

Geetha Sambasivam said...

ஆழ்ந்த சிந்தனையுடன் கூடியதொரு பதிவு. கவிதையிலே கலக்க ஆரம்பிச்சுட்டீங்க. வாழ்த்துகள்.

அனைவரும் ஆரோக்கியமாக இருக்கப் பிரார்த்திப்பதோடு, உங்கள் உறவினரும் பூரண ஆரோக்கியம் பெறவும் பிரார்த்திப்போம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை .அந்தப் பட்டம்பூச்சி
ஒரு அழகான ஆர்க்கிட் இறைவனின் அற்புதப் படைப்பு.

உண்மைதான்.சோகங்கள் என்னை அளவுக்கு அதிகமாக ஆட்டி வைத்தன.

நமக்குக் கிடைக்கும் நன்மைகளையும் நினைக்க நேரம் எடுப்பதில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்புகோமதி,
நலமா.எழுபதைக் கடந்த உறவினர்.மனைவியின் கண்சிகித்சைக்காக இங்கெ வந்தார்கள். நாளை திரும்பி மும்பை சென்றிருக்கவேண்டும்.திடீர்ன்று ,முன்பு இருந்த அல்சர் கசிய ஆரம்பித்துவிட்டது.அண்ணா,அக்காகள் என்று எல்லோரும் கூடி மருத்துவமனையில் சேர்த்து சரிசெய்துவிட்டார்கள்.இறைவனின் கருணை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கயல்,
அந்தத் துன்பத்தையும் படபடப்பையும் ஒரு நாள் முழுவதும் அனுபவித்தது என்னை ஒரு மாதிரி கலக்கிவிட்டது. ''இருப்பது சிலநாள் அனுபவிப்போமே, எதுதான் குறைந்துவிடும்''பாட்டுதான் நினைவுக்கு வந்தது.

உண்மையாகவே கவிதைன்னு நினைக்கிறீங்களா:) நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆதி.உண்மைதான். மனம் நிறைந்த உண்மையன பிரார்த்தனைகள் நன்மைகளைத் தரட்டும். நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மலர்.கொஞ்சம் செந்தமிழ் நடையில் சிந்தனை.கவிதையாகத் தெரிகிறது.

சட்டென்று வெளியே வரவேண்டிய விஷயத்தை எல்லாம் மனத்தில் பூட்டிப் பாதுகாத்து நாமும் துன்பப் படுகிறோம்,மற்றவர்களையும் அது பாதிக்கிறது என்று புரியவே நாட்களாகிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.

எப்ப ஊருக்கு வரப் போறீங்க.வெய்யில் வீணாப் போகிறதே:)
உறவினர் ஆபத்துச் சமயங்களைக் கடந்துவிட்டார்.இமை கொட்டும் பொழுதில் இறைவன் நம்மைச் சட்டென்று உணர வைக்கிறான்.
அவரின் மனைவியை நினைத்துதான் நான் பயந்தேன்.அவரும் இதய பாதிப்பு உடையவர்.அவர்காட்டிய தைரியம் என்னை அசர வைத்துவிட்டது.

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. பின்றீங்க கவிதாயினி வல்லிம்மா :-))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல்.

~~~~~~~~ இப்படி நெளிகிறது என் மனம். உங்கள் பாராட்டுகளைக் கேட்டு:)நன்றி மா.

ஸ்ரீராம். said...

எல்லோரும் ரசித்திருக்கும் வரிகளை நானும் ரொம்பவே ரசித்தேன். சுகணங்களை மறந்து சோகணங்களை மட்டுமே ஏன் மனம் நினைவில் அதிகம் வைத்திருக்கிறது என்பது ஆச்சர்யம்தான். மனித பலவீனம்? எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் என்ற வழக்கமான உங்கள் வரிகளோடு எக்ஸ்ட்ரா வரி ' எல்லோருக்கும் நல்ல ஆரோக்கியம் குடு இறைவா' ...சூப்பர்.

இருகண்களால் நம்மைப் பார்த்து விழிப்பது போல தென்படும் பட்டாம்பூச்சிப்பூ படம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.நேற்று அவரை ஆசுபத்திரியிலிருந்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.நானும் இவரும் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம்.இனி உணவு விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவரை மிகச் சீக்கிரத்தில் குணப்படுத்திய சுந்தரம் மெடிகல்ஸ் வைத்தியர்களுக்கு நன்றி.ஆரோக்கியம் இல்லாவிட்டால் என்ன இருந்து என்ன பிரயோசனம் இல்லையா மா.

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் ! எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்! நன்றி !

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸாதிகா. உங்கள் மேலான நட்புக்கு மீண்டும் நன்றி.

மாதேவி said...

ஆகா...பூக்களின் மொழி மனத்துக்கு இனியது.

உங்கள் பிரார்த்தனைபோல எல்லா உயிர்களும் நலமுடன் வாழட்டும்.