எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இந்தப் படம் பார்க்கும் போது பள்ளி நாட்களில் சனிக்கிழமை அனேகமாகக் கட்டு சாதம் எடுத்துக் கொண்டு
கண்மாய்க்கரை போவோம். தண்ணீர் இந்தக் கண்மாயில் இருந்து நாங்கள் பார்த்ததில்லை.
ஆனால் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கும்.
அதில் தொங்கும் விழுதுகளில் ஆடினதுண்டு.
அம்மா கொடுக்கும் டிபன் தூக்கில் தயிர்சாதமும் வறுத்த மோர்மிளகாயும் தான் இருக்கும்.
இங்கயும் அதே கரியடுப்பும், விறகடுப்பும் தான்.
காலை வேளையில் பழையசாதம் மோர். நார்த்தங்காய், இல்லாவிட்டால் கத்திரிக்காய், கொத்தவரங்காய் வற்றல்:))
ஆஹா, அந்த வாசனையை என்ன சொல்வது. அம்மா கையில் பாகற்காயும், கருணைக்கிழங்கும் கூட பிரமாதமாக இருக்கும்.
நாம் இப்போது 1954ஆம் வருட ஜூன் மாத, ஒரு திங்கட்கிழமை மதியத்துக்கு இல்லையா போகணும்!!
அந்த 12 மணி வெய்யிலில் தம்பியிடமும் சொல்லாமல் அவனைத் தனியே விட்டு விட்டு(அவனுக்கு 5 வயது)
தனியாக வரப் பயமாக இருந்தாலும்,
அநியாயம் நிகழ்ந்தது போல ஒரே கோபம்,அழுகை.
கதவைத் திறந்த அம்மா, தம்பி எங்கே என்று கேட்டாலும் ,சாப்பிடலையா என்று விசாரித்தாலும் பதில் சொல்லாமல், பள்ளியில் நடந்ததை மட்டும் சொல்லி நான் இனிமேல் ஸ்கூலுக்குப் போக மாட்டேன் என்று தீர்மானம் சொல்லியாச்சு.
அம்மாவுக்கு ஒரு பக்கம் கோபம், ஒரு பக்கம் சிரிப்பு.
சரி அப்பா வரட்டும், விசாரிக்கலாம் என்று தட்டெடுத்து சாப்பாடையும் எடுத்து வைத்தார்.
சாப்பாடு உள்ளே போனதும் தம்பியைத் தனியே விட்டது
கவலை கொடுத்ததால் மீண்டும் பள்ளிக்கு ஓடி அவனைக் கைப்பிடித்து அழைத்து வந்தேன்.
அப்பா சாப்பிட்டதும் ப்ரச்சினையை அம்மா சொன்னார்.
உனக்கு அவன் உன்னொட படிப்பதால் என்ன கஷ்டம் என்று அப்பா கேட்டார்,.
அதெப்படி அக்காவும் தம்பியும் ஒரே வகுப்பில் இருக்க முடியும் என்பது என் வாதம்.
அப்பா தன் சைக்கிளில் எங்களை ஏற்றிக் கொண்டு
பள்ளி வந்து பெரிய டீச்சரைச் சந்தித்தார்.
அவர் எனக்காக வந்தார் என்று நான் நினைத்தாலும், உண்மை அது இல்லை.
அவர்களிடம் தம்பியின் வயதுக்கு ஏற்றது இரண்டாம் வகுப்பு என்றும் அதற்கு உண்டான பாடங்களைப் படித்தால் சரியாக இருக்கும் என்றும் சொன்னதும்,தலைமை ஆசிரிய்ரும் ஏற்றுக் கொண்டார்,. நானும் தம்பியும் எதிர் எதிர் வகுப்பில் அமர்ந்தோம்.
அப்படியிருந்தும் அவன் 15 வயதிலேயே பள்ளிப்படிப்பை முடித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்து விட்டான்:))
திருமங்கலத்தில் அப்போது இரண்டு ஹைஸ்கூல்கள் இருந்தன. ஒன்று பெண்களுக்கான போர்ட் ஹைஸ்கூல்,
மற்றது பி.கே.என். நாடார் பள்ளி ஆண்பிள்ளைகளுக்காக.
ஒரே ஒரு நீளமான மெயின் ரோட்.
பஸ் நிலயத்திலாரம்பித்து ஆனந்தா திரை அரங்கத்தைக் கடந்து,மீனாட்சி பவன் ஹோட்டல்,தபாலாபீஸ்,அங்குவிலாஸ் வீடு,
சின்னக்கடைத்தெரு,சன்னதித் தெரு, மீனாட்சி அம்மன் கோவில் வழியாக,வாடிப்பட்டி,
உசிலம்பட்டி,கல்லுப்பட்டி,சோழவந்தான் என்று பஸ்கள் நம் வீட்டு வாயிலாகப் போகும்.
நாங்கள் இருந்த வீட்டுக்குப் பின்னால் ஒரு முனீஸ்வரர் கோவிலும் உண்டு.
அங்கே கேட்கும் உடுக்கைச் சத்தம் கேட்டு ஜுரம் வந்ததும் உண்டு.
பக்கத்து வீட்டில் நாலைந்து குடித்தனங்கள் இருந்தார்கள். ஒரு வீட்டில் கிளி வளர்த்ததால் அங்கேயெ இருந்து,அவர்களது இட்லிமெஸ்ஸுக்கு சட்டினி அரைத்துக் கொடுத்த அனுபவமூம் உண்டு:))
வாரமொருமுறையாவது அங்கிருந்து நான்கு அணாவுக்கு இருபது இட்லி நிறைந்த பாத்திரம் எடுத்து வந்ததும்,
ஒரு அரசு மருத்துவமனையில் அடிபட்டுக் கொள்ளும்போதெல்லாம் டின்க்சருக்கு அலறிக் கட்டுப் போட்டுக் கொண்ட நினைவும் உண்டு.
ஒரு தடவை திருமங்கலம் வழியாக ஒரு சுதந்திரக் கொடியேற்றத்துக்கு வந்த திருமதி இந்திரா காந்திக்கு மாலை போட எங்கள் பெரிய டீச்சர் அழைத்துப்போனதும்
முதல் முதலாக ஒரு வெள்ளைக் கதர்ப் புடவை கட்டி தலையில்
முக்காடு போல அணிந்திருந்த ஒரு அபூர்வ பெண்ணைப் பார்த்ததும், சொல்ல வந்த ஜய்ஹிந்த் மறந்ததும் இப்போது சிரிப்பு வருகிறது.
அவர்களுடன் திருC.R.பட்டாபிராமன் என்பவரும் வந்திருந்தார்.
எங்கள் மூவரின் பல இனிய நாட்கள் இங்கேதான் கழிந்தன.
பெரிய தம்பி வீட்டுக்குள் நிறைய விளையாடுவான். சின்னத்தம்பிக்கு வெளியே வந்து விளையாட வயது பத்தாது.
ஆகக் கூடி ஊர் சுற்றியது நான் ஒருவளே:))