Blog Archive

Tuesday, February 23, 2010

502,எண்ணங்கள் நல்லதனால்























எத்தனையோ கொடுத்து வைத்திருந்தால் தாம் இப்படி ஒரு கணவர் அமைவார்.
நீங்க அதை நினைச்சு சந்தோஷப்படணும்.
என்னை மாதிரியா பாருங்கோ. இவர் இப்படி விபத்தில காலைக் கொடுத்துட்டு நிக்கிறாரெ.
மருமகள் சரியில்லை. மகன் சம்பாதிக்கிறது போறது என்று மருமகள் வேற இருபதாயிரம் சம்பாதிக்கிறாள்.
இருந்தாலும் என் நிலைமையைப் பார்த்தீர்களா.
இந்த மாதிரிப் பட்சணம் பலகாரம் செய்து
வாழ்க்கையை ஓட்டுகிறேன்.

''என்ன மூணரை க்ரௌண்ட் நிலம் திருவள்ளூர்ல மாமா செயலா இருக்கும் போது வாங்கிப் போட்டது.
இப்போ ....லட்சங்களுக்குப் போகுமாம்.
எதுக்குச் சொல்ல வரேன்னா ,பர்சைத் திறந்து இந்த வார்டு பாய்,நர்ஸ் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
எப்பவுமே பணம் கைல இருக்கும்னு நினைக்கக் கூடாது வரும் போகும் அதுதான் செல்வ. சுகிசிவம் நேத்திக்கூட கதைல சொன்னாரே''

சாமி என்று ஆகிவிட்டது எனக்கு.ஒரு அரை மணி நேர அறுவை சிகித்சை.
கண்புரை அகற்ற.

காலையிலியே நானும் இவரும் நர்சிங் ஹோமுக்கு வந்தாச்சு.
அப்போது எனக்கு முன்னாலேயெ ஒரு அம்மா அங்கே உர்ட்கார்ந்திருந்தார். அவரது கணவருக்கும் அன்று இதே அறுவை சிகிச்சை.

நான் ஏற்கனவே கொஞ்சம் பயத்தோடு இருந்தேன்.
கண்புரை சிகித்சை எவ்வளவோ முன்னேறி விட்டது .இப்போது ஒரு லேசர் முறைப்படி இருபது நிமிடங்களில் லென்ஸைப் பொறுத்திவிடுகிறார்கள்.
இதில் பயத்துக்கு என்ன இடம் என்று தோன்றுகிறதல்லவ.

நாங்கள் அணுகிய கண்வைத்தியர் சற்று இளவயதினர்.

இவரைப் பரிசோதனை செய்யும்போதே, ''மூணு வருஷத்துக்கு முன்னாடியே செய்திருக்க வேண்டியது போல இருக்கே. ஏன் சார் இவ்வளவு முற்றிய பிறகு வந்திருக்கிறீர்கள்'' என்று சொல்லி ,சிங்கத்தோட கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டார்.
''எனக்குக் கண்ணெல்லாம் சரியாகத் தெரிகிறது.
இரவு வாகனம் ஓட்டும்பொழுது பிரச்சினையாக இருப்பதால்தான் வந்தேன்'' என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.
பிறகு நாள் குறித்து நேரம் குறித்து ஹாஸ்பிடலுக்கும் வந்தாகி விட்டது. இவருக்கு முதல்
சிகித்சை என்பதால் ,இவரை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
நடுவில் காப்பியும்,காலை உணவும் கொண்டு வந்து வைத்த பையனுக்கு நன்றி சொல்லி அவன் கையில் ஐந்து ரூபாய் கொடுத்தேன்.
அப்போது ஆரம்பித்தது இந்த அம்மாவின் அறிவுரை.
எனக்கோ சிகித்சை முடிந்து அரைமணியில் வெளியில் வெளியே வரவேண்டியவர் ஒரு மணியாகியும் காணோமே
என்று அவதியாக இருந்தது.


அப்புறம் வந்தார். மதியம் வரை இருந்துவிட்டு வேண்டிய மருந்துகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டோம்.
அது கதையில்லை.
இந்த அம்மா கொட்டிய சொற்கள் என் காதில் விழுந்து உள்ள போய் கடமுடா செய்யும்போதுதான் எனக்கு உரைத்தது.
நல்லதே சொன்னதாக வைத்துக் கொண்டாலும்,சொல்லும் முறை இடம் என்றெல்லாம் இருக்கிறதல்லவா.

நான் வெளியே வரும்போது, அந்த அம்மாவின் கணவருக்கும் ஆப்பரேஷன் முடிந்து அவரது அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்த அம்மாவுக்கு இன்னோரு கவலை முக மனைவி கிடைத்துவிட்டார். (பொழுதுதான் போகவேண்டுமே)
இது கொஞ்சம் சீரியஸ். இந்தப் புது அம்மாவின் கணவருக்கு ஆஞ்சியோகிராம் செய்து கொண்டிருந்தார்கள்.

கணவருக்கு நாற்பது வயது. இங்கெ உட்கார்ந்திரிந்த பெண்ணுக்கு 35 இருக்கும்.

பணம் சம்பாதிப்பதற்காக ஆண்கள் மேற்கொள்ளவேண்டி இருக்கும் கடினமாக வாழ்க்கை முறைகளே இந்த நோய்க்குக் காரணம் என்று தான் படித்த விவரங்க ளையெல்லாம் அவர் பேசப் பேச அந்தப் பெண் பதில் சொல்லாமல் ஏதோ பிரார்த்திக் கொண்டு இருந்தாள்.

மற்ற எல்லோருடைய நன்மைக்காகவும் அந்த அம்மா சீக்கிரம் வீட்டிற்குக் கிளம்பிவிட்டால் நல்லது என்று எனக்குத் தோன்றியது







எல்லோரும் வாழ வேண்டும்.

Sunday, February 21, 2010

501,எண்ணி எண்ணிப் பார்த்து மனம்


இப்படித்தான் ஆரம்பித்தது நாச்சியாரின் எண்ணுதல்.









ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.முட்டை பொரிக்கும் முன் கோழிக்குஞ்சை எண்ணாதே என்று.
நான் செய்த தப்பும் அதுதான். முட்டைகளை எண்ணி ஐன்னூறு பதிவு என்று போட்டுவிட்டேன்.
ஐன்னூறு முட்டைகளில் ஒன்று பொரிக்காத, வெளிவராத ட்ராஃப்டாக இருந்த பதிவு.

டாஷ்போர்டில் 500 என்று காண்பித்ததும்,(அதுக்குத் தெரியாது இல்லையா. எண்ணிக்கைதானே முக்கியம், பாதி எழுத்த பப்ளிஷ் பண்ண எழுத்தான்னு இனம் கண்டு கொள்ள ப்ளாகுக்குத் தெரியாது. அதோட சாஃப்ட்வேர் அந்த மாதிரி.:)
ஆகையினாலே இந்த மொக்கைப் பதிவைப் படித்து விட்டு நீங்க எல்லாரும் அப்ப சொன்ன வார்த்தைக்கு மாப்பு கொடுத்துடுங்க.
இப்ப நிசமாலுமே நான் 501 பதிவுக்கு வந்துட்டேன்!!
இது உண்மை உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறில்லை.

இதனால் எனக்கு வயதாகிவிட்டது , கண்ணு சரியாகத் தெரியவில்லை,
வீட்டுக்காரருக்குக் கண் ஆபரேஷன் செய்த மாதிரி
வல்லிம்மாவுக்கும் கொஞ்சம் கவனிச்சா நல்லா
இருக்கும்னெல்லாம் நினைக்க வேண்டாம்.)

என் இதயம், நரம்பு மண்டலம், கொலெஸ்ட்ரால், சர்க்கரை,ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு எல்லாம் சரியாக இருப்பதாக
எம்.வி. டயபெடிக்ஸ்ல சொல்லிட்டாங்க.
மேலும் மேலும் உங்கள் ஆதரவைத் தந்து பதிவையும் என்னையும் வளர்க்குமாறு
பணிவோடு கேட்டுக்கறேன்:)











எல்லோரும் வாழ வேண்டும்.

Tuesday, February 16, 2010

500, அ பாட்ச் ஆப் ப்ளு(சினிமா)

selina,gordan



கோர்டன்
************************
சமீபத்தில் டர்னர் க்ளாசிக் மூவீஸ் தொலைக்காட்சியில் இந்தப் படத்தைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது.
ஒரு கண் பார்வை இழந்த பெண்ணின் வாழ்க்கையின் சோகமும் சந்தோஷமும் மிக அழகான சந்தர்ப்பங்களின் நிகழ்ச்சிகளின் கோர்வையாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள்.
பதினாறு வயது செலினா வும் அவள் அம்மாவும்,தாத்தாவும் ஒரு அபார்ட்மெண்டில் வசித்துவருகிறார்கள் . வறுமைக்கோட்டின் எல்லை.
பல வழிகளில் பணம் சம்பாதிக்கும் அம்மாவாக ஷெல்லி விண்டர்ஸ்








செலினாவாக எலிசபெத் ஹார்ட்மேன் என்ற நடிகை கண்ணில்லாத பெண்ணாக வெகு அருமையாக நடித்திருக்கிறார்.
கோர்டன் என்னும் கறுப்பினத்தவராக சிட்னி பாட்டியெ(Sidney Poitier) ஓல் பா என்று அழைக்கப்படும் தாத்தா. இவர்களைச் சுற்றி வரும் கதை. ஐந்து வயதில் அம்மாவுக்கும் அவருடைய சினேகிதனுக்கும் சண்டையில் கண்கள் குருடாகின்றன செலினாவுக்கு.

அந்த நாட்களில் கறுப்பு வெள்ளை இனத்தவரிடையே மிகுந்த கசப்புணர்ச்சி கொந்தளித்துக் கொண்டிருந்த நேரம்.

வீட்டு வேலைகளைச் செய்வதற்கு மட்டுமேஅவளைப் பயன்படுத்திக் கொள்கிறாள் அம்மா.
செலினாவுக்கு ஒரே ஒரு மகிழ்ச்சி,பாசி மணி மாலைகளைக் கோர்த்து அதை இன்னொரு அன்புள்ளம் கொண்டவர் மூலம் விற்று அந்தப் பணத்தை அம்மாவிடம் கொடுப்பதுதான்.

அந்தச் சினேகிதரே சிலசமயங்கள் அருகில் இருக்கும் பார்க்கில் அழைத்துக் கொண்டு போய் விடுவார்,..அங்கு ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அன்று மாலை வரைச் சந்தோஷமாகப் பலவித பறவைகளின் சப்தங்களைக் கேட்டுக் கொண்டே மாலைகளைக் கோர்த்து முடிப்பாள்.
இரவு நேரம் நெருங்கும்போது அவளது தாத்தா குடி போதையோடு அங்கு வந்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.
இதைக் கண்டுபிடிக்கும் அம்மா அவளைப் பார்க்குக்குப் போகத்தடை விதிக்கிறாள்.
அதையும் மீறி தாத்தாவுடன் வெளியே வரும்போதுதான்,அந்தப் பார்க்கில் மேற்பார்வையாளராக இருக்கும் கோர்டனைச் சந்திக்கிறாள்.
இருவருக்கும் அழகான நேசம் மலர்கிறது. கோர்டன், செலினாவின் வெகுளித்தனத்தையும், பொறுமையையும் கண்டு வியக்கிறான். அவளுக்குக் கண்பார்வையின் குறைப்பாடுகளை நீக மிகவும் முயற்சிக்கிறான். சாலையைக் கடப்பதற்கும்,,ப்ரெயில் முறையில் கல்வி அனுபவம் பெறுவதற்கும் பாடு படுகிறான்.
கண்பார்வையில்லாத அந்தச் சிறுமிக்கு உலகின் வெளிச்சமான பகுதியைக் காண்பிக்கிறான். இவர்களின் நட்பை அறியவரும், ரோசலின்(செலினாவின் அம்மா) கோர்டன் ஒரு கறுப்பு இனத்தவர் என்று சொல்லி செலினாவை மிரட்டி அடிக்கிறாள் .


இரண்டு நாட்களுக்கு மேல் செலினாவால் வீட்டில் இருக்க முடியவில்லை. தட்டுத் தடுமாறி வெளியே வந்து பார்க்குக்குச் செல்ல முயற்சிக்கிறாள். தோல்வியே ஏற்படுகிறது. ஒரு மழை இரவில் கோர்டனின் தொலைபேசி எண்ணை வாங்கிக் . கொள்கிறாள் .
கோர்டனுக்கு அவள் மீது காதல் இருந்தாலும் ,அவள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறான்.
அவளோ அவனை விட்டுப் போவதில் சம்மதம் இல்லாவிட்டாலும் அவன் ஏற்பாடு செய்யும் கண்தெரியாதவர்கள் பள்ளிக்குப் போகச் சம்மதிக்கிறாள்.

கடைசிக் காட்சியில் அவளுக்குக் கொடுக்க ஆசைப்பட்ட மியூசிக் பாக்ஸை எடுத்துக் கொண்டு படியிறங்குகிறான் கோர்டான்.
அவன் வாயிலுக்கு வருவதற்குள் அழைத்துச் செல்ல வந்த பள்ளி வண்டி கிளம்பிவிடுகிறது. கண்களில் இன்னதென்று தெரியாத உணர்ச்சியோடு பார்த்தவண்ணம் நிற்கிறான் கோர்டன்.

அருமையான முடிவு. மற்ற காதல் படங்களைப் போல், உன்னை நான் திருமணம் செய்து வாழ்நாள் பூராவும் காப்பாற்றுவேன் என்ற உறுதி மொழியெல்லாம் தராமல் அவள் உண்மையாகவே வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும் கோர்டன்….சிட்னி பாட்டரின். நடிப்பு மனதில் நிற்கிறது . ஆஸ்கார் வாங்கின படமென்று திரையில் காண்பித்தார்கள்.

இந்தப் படத்தில் , அந்த நாளைய வெள்ளை கறுப்பர்களின் இன பேதத்தை ஒட்டி எடுக்கப்பட்ட காட்சிகளும் , வார்த்தைகளும் மனதில் பதிகின்றன,.
இவர்களது நேசம் நிறைவேறாமல் போவதற்கும் இந்த பேதமே காரணமாகிறது.:(
வெகு இயற்கையாக அவர்களது மெல்லிய உணர்வுகள் காண்பிக்கப் படுகின்றன.
வெகுநாளைக்கப்புறம் மிக நல்ல படமொன்றைப் பார்த்த நிறைவு எனக்குக் கிடைத்தது.









எல்லோரும் வாழ வேண்டும்.

Sunday, February 14, 2010

கத்திரிக்காய் ஊறுகாய்

சிநேகிதியின் வீட்டில் போட்ட கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



இது இன்னொரு விதம் .நம்ம ஊறுகாய் இது இல்ல.
பி டி கத்திரிக்காய் எல்லாவிதத்திலும் பயமுறுத்திக் கொண்டு இருக்கும் போது ஊறுகாய் போடும் யோசனை வந்தது.

கத்திரிக்காய் ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள்:0)
*********************************************************************

கத்திரிக்காய் ....இது ரொம்ப அவசியம்.
ஊறுகாய்னு
போடறதுனால உப்பு ,மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி, மெந்தியப் பொடி,மஞ்சள் பொடி

எல்லாம் அளவோடு இருக்கணும். எண்ணெயும் நிறைய வேண்டும்.
இல்லாவிட்டால் ரொம்ப நாள் தாக்குப் பிடிக்காது.
இப்ப எங்க வழிக் கத்திரிக்காய் ஊறுகாய் பார்க்கலாமா.

பரிசோதனையாச் செய்யறவங்களுக்குக் குறைந்த அளவு ஊறுகாய்ப் போடும் அளவுகளைச் சொல்கிறேன்.
கத்திரிக்காய். அதுவும் இந்த
பச்சைக் கலரில்
***************
இருக்குமே அந்த கத்திரிக்காய்.

தேவையான அளவுகள்
***************

1, 6 எண்ணம் பெரிய இளம் பச்சை வண்ண நீளக் கத்திரிக்காய், பிஞ்சா இருக்கிறதாப் பொறுக்கி எடுத்துக்கணும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளணும்.
2,இந்த அளவுக்குத் தேவையான
உப்பு...................அரைக் கப்,
புளிக்கரைசல்.........அரைக்கப் (கெட்டியாக இருக்கணும்)
மிளகாய்ப்பொடி......அரைக் கப்
மஞ்சள் பொடி.........இரண்டு டீ ஸ்பூன்
வெல்லமும் பொடித்துப் போட்டுக் கொள்ளலாம்...சிறிதளவு.
நல்லெண்ணெய்..........400 கிராம்
கட்டிப் பெருங்காயத்தை வறுத்துப் பொடித்த தூள் மூன்று தேக்கரண்டி,
வறுத்துப் பொடித்த வெந்தயம்.............ஒரு தேக்கரண்டி பொடி.
வெள்ளைப்பூண்டு நறுக்கினது ஒரு கப்.
சின்ன வெங்காயம் நறுக்கினது இரண்டு கப்.(நிறைய இருக்கேன்னு தோணினால் ,கொஞ்சம்
குறைத்துக் கொள்ளலாம்) .ஆனால் இந்த வெங்காயம் அவசியம்.
இப்ப செய்முறைக்குப் போகலாமா.
கொஞ்சம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்க.:)

நல்ல சுத்தம் செய்த
இரும்பு வாணலில செய்தால் சுவை கூடும். இல்லைன்னால் கனமான வேற வாணலிலயும் செய்யலாம்.
அடுப்பில் வாணலியை ஏற்றிக் காய்ந்ததும் கொஞ்சமாக நல்லெண்ணெயை விட்டுக் கொண்டு,
அது காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தையும், பூண்டுத் துண்டுகளையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
வதங்கி முடியும் நேரம் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்,பெருங்காயத்தூள்
மூன்றையும் சேர்த்து நன்றாகப்பிரட்டி எடுக்க வேண்டும்.
இந்தக் கலவை ஒரு அரைகுறையாக அரைத்த சட்டினி ஸ்வரூபத்தில் வந்துவிடும்.
அப்பொழுது நாம் நறுக்கி வைத்த கத்திரிக்காயை இந்தக் கலைவையில் சேர்க்கணும். அடுப்பை அணைத்து விட்டு,
இன்னோரு வாணலியில் மிச்சமிருக்கும் எண்ணெயை விட்டுக் காய்கிற வரை பொறுமை காத்துக் கொஞ்சம் கடுகு போட வேண்டும். வெடித்ததும்(கடுகு)
அடுத்த வேலை புளிக்கரைசலயும்,உப்பையும் சிறிதளவு வெல்லத்தையும்
சேர்த்து, (அடுப்பை சிம்மரில் வைத்துக் கொண்டு பிறகுதான் புளிக்கரைசலை விடணும்)
கொதிக்க வைக்கணும்.
இது புளி வாசனை போகக் கொதித்ததும் இந்த
அடுப்பை அணைத்து , கத்திரிக்காய் இருக்கும் அடுப்பை ஏற்றணும்.கத்திரிக்காயும் மற்ற எல்லா உட்பொருள்களும் கலந்து ஒரே கலவையாகத் தெரியும் வரைக் கிளற வேண்டும்.
முக்கால் பதம் வந்ததும் புளிக் கலவையை ஊற்ற வேண்டும்.
அடுப்பு சிறிய அளவில் எரியட்டும்.
எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது,நன்றாக ஊறுகாயின் மேல் மிதக்கும் அளவில் அடுப்பை அணைத்துவிடலாம்.
ஆறிய பிறகு நல்ல ஜாடியோ, இல்லை கண்ணாடி பாட்டிலிலோ முக்கால் அளவுக்கு நிரப்பி வைக்க வேண்டும்.
ஒரு சிறிய சுத்தமான வெள்ளைத்துணியினால் வேடு கட்டி ,நல்ல இறுக்கமான மூடி போட்டு மூடிவைக்கலாம்.

இது எங்க வீட்டில் மிகப் பிடித்த ஊறுகாய்.
இதைப் பிடிச்சு சாப்பிடறவங்களுக்கு இன்னிக்கு மண நாள். எங்கயோ அமெரிக்காவில் இருந்தால் எப்படி அனுப்பறது. காக்காய் காலில் தான் கட்டி அனுப்பணும்:)






எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, February 11, 2010

பதினாறு வயது பறந்தது ...





அன்பு அமைதிச்சாரல் விடுத்த அழைப்பு தித்திக்கிறது.
நன்றிப்பா.

இணையத்தில் இருக்கும் நட்புகளை எப்பவும் வியந்து கொண்டே இருப்பேன். நான் அதிகமாகப் பின்னூட்டமிட நிறைய பதிவுகளுக்குப் போவதில்லை.
இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நான் இடும் பதிவுகளுக்கு விடாமல் வந்து
ஆதரவுப் பின்னூட்டங்களும் இடுவதுதான் என்னை இன்னும் உற்சாகப் படுத்துகிறது.
இப்போது இந்தப் பதின்ம வயது கொண்டாட்டங்களை எழுதச் சொல்ல அழைப்பு, அதுவும்
இவ்வளவு வயது தாண்டிய பிறகு!:)

ஆனாலும் அந்த யூனிஃபார்ம், ப்ரேயர் பாட்டு, மார்ச் பாஸ்ட், திறந்தவெளி அரங்கு , மேடை நாட்டியம்( :-) )
இதோட, போனசா ஒரு வருட கல்லூரி வாழ்க்கை.
இதில வாலுத்தனம் காட்ட அனுமதி கிடையாது. ஸோ அது அவுட்.

2,ஹீரோயின் வொர்ஷிப்னா அதுக்கு எங்களுக்கு வைஜயந்திமாலாவும் ,சரோஜா தேவியும் தான் ரோல் மாடல்.
நீண்ட பின்னலை மடித்துக் கட்டி இரண்டு பக்கமும் தெரிகிற மாதிரி அம்மாவைப் பின்னிவிடச் சொல்லி
பள்ளிக்குச் சென்ற நினைவு இருக்கிறது. தலை நிறைய மல்லிகைப்பூ அம்மா வைத்து விட்டாலும் எடுத்து விட்டு
ஒரே ஒரு ரோஜாப்பூ வைத்துக் கொண்ட நிழலும் கண்ணில் ஆடுகிறது.

3,அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரியாமல்,''கட்டான கட்டழகுக் கண்ணா ' பாட்டு ரேடியோ சிலோனில் கேட்கும் போது இருவரில் ஒருவர் வந்து விட்டால் , மதராஸ் ஏ வுக்கோ, திருச்சி வானொலிக்கொ டயலைத் திருப்பும் புத்தி இருந்தது.
4, ஒரு நாளாவது எங்கயாவது போக வேண்டும் என்ற நினைப்பில்
பள்ளிவிட்ட கையோடு கூடப் படித்த கமருன்னிசா வீட்டுக்குப் போய்த் தேனீர் அருந்தும் நேரம் ,
நான்கு மணிக்கு வீட்டில் இருக்க வேண்டிய மகள்,வராத காரணத்தால்,பள்ளி வாட்ச் மேனிடம் விசாரித்துக் கொண்டு
கமருன்னிசா வீட்டு வாசலுக்கே வந்து விட்ட அப்பாவைப் பார்த்ததும் ஏற்பட்டது பயமா, இல்லை நிம்மதியா என்று தெரியவில்லை. ஏனெனில் திரும்பி வரும் வழியை நான் பார்த்து வைத்துக் கொள்ளவில்லை.

அம்மாவாவது நாலு திட்டுப் போடுவார். அப்பா அதுவும் செய்ய மாட்டார்.:)

5,தோழிகளோடு புதிய பறவை படம் பார்த்துவிட்டு சிவாஜிக்காக வருத்தப் பட்ட நாளும் உண்டு.
பரீட்சை நாட்களில் திண்டுக்கல் வெள்ளைப் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம்,
பள்ளிக்குள் இருக்கும் சின்ன சாப்பலில் மேரியம்மாவோடு வேண்டிக்கொண்டதும் உண்டு.
மற்றபடி ரொம்ப சாதுவான வருடங்கள் தான் அவை. ரிப்பன், ஜார்ஜெட் தாவணி,வளையல்கள்,
சென்னை வந்தால் வாங்கும் மணி மாலைகள் இவையே அலங்காரம்.
பரிசாகக் கிடைத்த ருபாய் 100க்கு வாட்ச் வாங்கினதும் அப்பாதான். அதைக் கட்டிக் கொண்டு பரீட்சை
எழுதினது மற்றதொரு மறக்க முடியாத அனுபவம்.

அமைதிச் சாரல்,

என் பதின்ம வயது 17 வயதோடு முடிந்தது.
18 +அரை வயதில் எனக்குப் பையன் பிறந்தாச்சு:)

அதற்குப் பிறகு நான் செய்த குறும்புகள் குழந்தைகளோடுதான்!!

எல்லோரும் வாழ வேண்டும்.

Tuesday, February 09, 2010

ஆத்தா உன் சேலை ..

வலது பக்கம் இருப்பது என் அம்மா.




ஆத்தா உன் சேலை'' பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா.
அண்மையில் கேட்க நேர்ந்தது. அதுவும் எங்கள் அம்மாவின் பிறந்த நாள் அன்று கேட்டதுதான் அதிசயம்.

கைநிறையக் காசிருக்கு
கடைக்குப் போகலாம் எல்லாமும் வாங்கலாம் அம்மாவை வாங்கமுடியுமா!
ஆத்தா உன் சேலை, பாடலில் அம்மாவின் புடவை எடுக்கும் அவதாரங்கள் அநேகமாகிறது.

பிள்ளைக்குத் தூளி,
பையனுக்குத் தலை துவட்ட,
பெண்ணுக்குத் தாவணீயாக,
கிணத்துத் தண்ணியை வடிகட்டித் தண்ணீரை இனிமையாக்குமாம்.
ஆற்றில மீன் பிடிக்கும் வலையாகுமாம்,
காயத்துக்குக் கட்டுப் போடுமாம்.
வெறுந்தரையில் படுக்காமல் ஆத்தா சேலையில் படுத்தால்
தூக்கமும் தாலாட்டோட வருமாம்.
கடைசியில் இந்தக் கவிஞர் தன் இறுதிப் பயணத்துக்கும் ஆத்தா சேலைதான்
வேணும் என்கிறார்.
எழுதியவரின் பெயரைக் கவனிக்காமல் விட்டது என் தவறில்லை.
அது பாடலின் அருமையால் விளைந்த கவனப் பிசகு.

அம்மாவின் கூறைப் புடைவையை இன்னும் என் புடவைகளுக்குப் புதைத்து வைத்திருக்கிறேன்.
அதுவும் குட்டிக்கரா பவுடரின் வாசமும் இன்னும் மெலிதாக மணம் வீசிக் கொண்டு
மனத்தை நிறைக்கிறது.
அம்மாவின் கையால் பிசைந்த குழம்புச் சாதமும்,
கடைசியா நீ எனக்குக் கொடுத்த அரை டம்ப்ளர் பாலும்
இன்னும் என் மனதை நிறைக்கிறது அம்மா.
நீ என்றும் என் மனதில் நிறைவாய்க் கலந்தாய்.
ஆசிகளை வேண்டுகிறேன்.



எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, February 04, 2010

துளசியின் செல்லங்களும் பேத்தியின் தோழர்களும்

ஜோஜோ புத்தா


க(ரூ)ப்பு புத்தா


கப்பு புத்தா



கோகி புத்தா




தூது புத்தா





பவ் வாவ் Pஉத்தா






பூ புத்தா







AJJU PUTHTHA

எல்லாச் செல்வங்களுடனும் எங்கள் மணநாளை நாங்களும்,
துளசியின் பிறந்த நாளான பிப்ரவரி ஐந்தையும் கொண்டாடுகிறோம்.
அனைவருக்கும் எங்கள் ஆசிகள்.






















எல்லோரும் வாழ வேண்டும்.

Wednesday, February 03, 2010

மீண்டும் ஒரு வெள்ளிப் பதிவு

மீண்டும் எழுத வேண்டிய அவசியம். இந்தப் பதிவை அப்பவே எழுதி அப்படியே பப்ளிஷ் செய்ய வேண்டுமென்று நினைத்தேன்.
ஏதோ டெம்ப்லேட் தகறாரா என்ன வென்று தெரியவில்லை.
இருந்தாலும் எங்கள் பேத்திக்காகப் பிரத்தியேகப் பதிவு
என்பதால் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.

அநேகமாக எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் பெரிய மகன் ,குழந்தையை வெப் காமுக்கு அழைத்து வந்துவிடுவான். முதலில்
பேத்திக்குப் புரியவில்லை. ஏன் இவர்களைத் தொட முடியவில்லை என்று. பேச்சு வந்ததும் தாத்தி,தாத்தா என்று அவளே அழைக்க ஆரம்பித்தாள்.
புதுப் பட்டம் எனக்குப் பிடித்தே இருக்கிறது.
அவள் அம்மாவின் அம்மாவை அம்மம்மா என்று அழைப்பதால் எனக்குத் தனிப் பட்டம் சூட்டி இருக்கிறாள்.

வெள்ளிக்கிழமை தன் அப்பா வீட்டில் இருப்பதை எப்படிக் கண்டு பிடிக்கிறாள்.
இது ஒரு பெரிய துப்பறியும் வேலை இல்லை.
தினம் அப்பா ஹாஃபீஸ்(!) கிளம்புபோது ஷூவை மறைத்து வைப்பாள். கைபேசியை எடுத்துக் கொண்டு தர மாட்டாள். பேனா,ஐடி கார்ட் எல்லாவற்றையும்
தன் குட்டிப் பைக்குள் போட்டுக் கொண்டுவிடுவாள்.

வெள்ளிக்கிழமையன்று அப்பா ஒன்றும் செய்யாமல் வெறும் வீட்டுச் செருப்போடு உலாத்துவதையும் ,
அம்மா தூங்குவதையும் கண்டு பிடித்து வைத்திருக்கிறாள்.
உடனே தான் ஒளித்துவைத்திருக்கும் அத்தனை பொருட்களையும் ஒழுங்காக மேஜையில்,கணினி முன்னால் வைத்துவிடுவாளாம்.

தன் பத்துப் பூனை பொம்மைகளையும் வரிசையாக அடுக்கி வைத்துவிட்டுத்
தாத்தி, தாத்தா என்று கம்ப்யூட்டரைக் காண்பிப்பாளாம்.
ஒவ்வொரு பொம்மைக்கும் ஒவ்வொரு பெயர்.

கைக்குள்ள ஒண்ணூ . அது ஜோஜோ. கண்ணை மூடித்திறப்பதால் அந்தப் பெயர்.
இன்னோண்ணு பால் போல வெள்ளையா இருக்குமாம்,
அதற்கு தூதுப் புத்தா என்று பெயர்.(அம்மாவுக்கு இந்திப் பழக்கம் ஜாஸ்தி:))

ரொம்பச் சின்னதாக இருக்கும் பூனைக்கு அச்சுப் புத்தா.
இவ்வளவையும் அப்பா மடியில் உட்கார்ந்த படி அறிமுகம் செய்வாள்.
அப்பா கேட்கிற கேள்வியும் அவளுடைய பதில்களும்.

''தந்த பொம்மை யாரும்மா''
மய்யா.(தன்னைக் குறிக்கும் பெயர்)

ஹாப்பி பர்த்டே எப்போமா?
தத்தியத்(30ஆம் தேதி)

புத்தா என்ன சொல்லும்.
கீய்ங்க்னு தத்தும்

டாக்கி(நாய்க்குட்டி) என்ன சொல்லும்
பவ் பவ்.

டான்கீ என்ன சொல்லும் ?
தொச்சு தொச்சு.

ம்ஹூம், என்னால் சிரித்து முடியாது. அத்தனை மழலை.
கொஞ்ச நேரத்தில் எங்கள் வெள்ளிக்கிழமை விளையாட்டு முடிந்துவிடும்.

அவளுக்கு அப்பாவோடு க்ரீக் பார்க் போக வேண்டுமே:)




எல்லோரும் வாழ வேண்டும்.