இரண்டாம் பாகம்..
அன்றிரவு, விருந்தினர் உபசாரம் முடிய 1 மணியானது. கொஞ்சம் தடுமாறிய தம்பதிகளையும் அவர்களது இரு பெண் குழந்தைகளயும் வண்டியில் ஏற்றிக் கொண்டு போய் விட்டு விட்டு வந்தான் தினேஷ்.
அவன் வரும் வரை விழித்திருந்த கனகா வண்டி சத்தம் கேட்டதும்,
குழந்தை படுத்திருந்த அறையில் போய்ப் படுத்துக் கொண்டுவிட்டாள்..
கனகா என்று உரத்த குரலில் அழைத்தபடி வந்த தினேஷை அடக்கியபடி, மெல்லப் பேசுங்கள் என்று கையமர்த்தினாள்.
அவர்களுக்கு இருக்கிற தாராளமனசு உனக்கில்லையே. ஏன் இப்படி பாப்பா பின்னால் போகிறாய். எங்களுடன், சந்தோஷமாக இருந்திருக்கலாமே என்றான்.
எனக்கு கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை பிடிக்காது என்று உங்களுக்கும் தெரியும்.
நேரமும் இளமையும் கை நழுவினால் பின்னால் வருந்திப் பயனில்லை.
இந்தப் பெண் சரியாக வளர வேண்டும் என்றால் வீட்டில் இந்த மாதிரி நடக்கக் கூடாது. உங்களை நிதானமாக இருக்கச் சொல்லித்தான் கேட்கிறேன் என்றாள்.
பத்து நாட்கள் அமைதியாகக் கழிந்தன.
தினேஷின் தம்பி கதிர் விடுமுறைக்கு வந்தான். கல்லூரி முடித்து வேலை தேடும் நேரம். புத்திசாலிப் பையன். அண்ணன் அண்ணி யிடையே ஏதோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது.
குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துக் சென்று கூட்டி வந்து அண்ணிக்கு வேண்டும் போது வங்கி வேலைகளைக் கவனித்துக் கொண்டு கலகலப்பாக அவன் இருந்தது கனகாவுக்கும் ஆறுதலாக இருந்தது.
அண்ணனின் புதுப் பழக்கத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்று நினைக்கும் போதே
சனி ஞாயீறு வந்துவிட்டது.
தம்பி இருப்பதால் தினேஷ் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுவான் என்று நினைத்த கனகாவின் நினைவு பொய்த்தது.
இந்தத் தடவை நண்பன்,மனைவி,குழந்தைகள் எல்லோரும் பெரிய வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு காலை பத்து மணிக்கே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
என்ன கனகா கிளம்பலை,??மஹாப்ஸ் போகணுமே, அங்க காட்டேஜ் புக் செய்தாச்சு.
நாளை இரவு வந்தால் போதும் என்றதும், நிலாவை அதிர்ச்சியுடன் பார்த்தாள் கனகா.
இவர் ஒன்றும் சொல்லவில்லையே. அவர் தம்பி வேற வந்திருக்கார்' என்று அவள் இழுப்பதைப் பார்த்துச் சிரித்து விட்டாள் நிலா. அவனுக்கும் சேர்த்துதான் மூன்று இடங்கள் பதிவு செய்திருக்கிறோம்,
சீக்கிரம் கிளம்பு என்றவளை விட்டுக் கணவனை நாடினாள்.
என்னிடம் சொல்லவில்லையே. என்று அவனிடம் கேட்க ''நீ தான குழந்தை வெளியில் கூட்டிப் போகணும்னு சொன்ன,, நிலாதான் ஏற்பாடு செய்தாள். உனக்கென்ன கஷ்டம். பேசாமல் கிளம்பு என்றான்.
சாப்பாடு ? என்று கேட்டவளுக்கு எல்லாம் ஏற்பாடாகி விட்டது. ரிதுவும்,தம்பியும் ரெடியானால் கிளம்ப வேண்டியதுதான் என்றபடி கூடத்துக்குப் போய்விட்டான்.
அடுத்த நிமிடம், சிரிப்பும் ,பாட்டும் ஆரம்பித்து விட்டது.
தன்னையே நொந்தபடி கனகா குழந்தைக்குத் தேவையானவைகளையும் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
அங்கே, தம்பி கதிருக்கு அவர்கள் பியர் குடிக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அண்ணியைப் பாற்த்து முகம் சிவந்த கதிர், வேணாம்னு சொன்னேன் அண்ணி.
தமாஷ் செய்யறாங்க்க, என்று கோரிக்கை வைத்தான்.
அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுப்பா. நிறுத்திக்கோ'' என்று மட்டும் சொல்லிவிட்டு வண்டியை நோக்கி நடந்து விட்டாள்.
மஹாபலிபுரம் பயணம் ஆரம்பம் எப்படியோ அப்படியே தொடர்ந்தது.
முதல் இரண்டு வரிசையில் நிலா,சந்திரன்,கதிர்,தினீஷ் என்று உட்காரவும், கடைsi இருக்கைகளில் குழந்தைகளோடு பேசி விளையாட்டுக்
காட்டிய வண்ணம் கனகா வந்தாள்.
மஹாபலிபுரம் சேர்ந்த நேரம் நல்ல வெய்யில்.
சரி சாப்பிட்டு ,ஓய்வெடுக்கலாம், கடற்கரைக்குப் பிறகு செல்லலாம் என்று முடிவாகியது.
கனகா மீண்டும் குழந்தைகளோடு ஒரு காட்டேஜுக்குள் சென்று விட்டாள்.
அவர்கள் நால்வரும் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளட்டும் என்ற நினைப்புதான்...
ஒரு நான்கு மணி அளவில் அடுத்த அறைக்குப் போய் அவர்களை எழுப்பலாம் என்றால், சுகமான குறட்டை ஒலிதான் கேட்டது.
அலைகள் தொடரும்.........
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.