அழைத்தாலே வருபவனாம் கண்ணன். கூவி அழைத்தால் கட்டாயம் வருவான்.
கதறியே அழைத்தாலும் வராத கண்ணன் தெரியுமா உங்களுக்கு.
ஒரு கஜேந்திரனுக்கு உயிர் பிழைக்கக் கருடன் மேலேறி
பறந்து வரும்போது
கருடனின் வேகமும் அவருக்குப் போதவில்லையாம்.
பக்தனின் வேதனை போக்க,
பறந்து கொண்டிருந்த கருடனின் மேலேயிருந்து குதித்து வந்து கஜேந்திரனைக் காப்பாற்றினான் அந்த ஆதி மூலம்..
ஒரு பீஷ்மரின் சபதத்தை நிறைவேற்ற தேர்ச்சக்கரத்தையே சுழற்றிக் கொண்டு
அவரை நோக்கிப் பாய்கிறான்
பாண்டவர்களின் வனவாசத்தில் துர்வாச கோபத்திலிருந்து
அவர்களைத் தப்பிவிக்கத் தன் பசி போக்குவது போல ஒரு பருக்கை அக்ஷய பாத்திரத்தில்
இருந்து எடுத்து, உண்ண,
புயலாக வந்த முனிவர், தென்றலாக அவர்களை வாழ்த்தி செல்லுகிறார்.
இவ்வளவு காத்து இருக்கும் கண்ணன்,
த்ரௌபதி அழைக்கும் போது நேரில் வந்து அவளைக் காப்பாற்றாமல்
ஆடையை மட்டும் அனுப்பி அவள் மானம் காத்தது ஏன்
என்ற விசாரம் எழுந்ததாம் பாகவதர்களுக்குள்.
எங்கள் வீட்டிற்கு ஒரு பெரியவர் (இதுவும் இருபது வருடங்களுக்கு முன்னால் தான்)வந்து பல புராண இதிகாசக் கதைகளின் அர்த்தங்களும், அந்த செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் தாத்பர்யங்களையும் விளக்கி உதவுவார்.
அவர் எடுக்கப் போகும் வகுப்புகளுக்காகவே காத்து இருப்போம் நானும் எங்க கமலம்மாவும். (மாமியார்)
குழந்தைகளும். அந்த ஒரு மணி நேரம் போவதே தெரியாது.
பகவானைப் பற்றீய பல விஷயங்களில் இருந்த சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தெளிந்து கொள்வோம்.
அப்போது கேட்ட கேள்விதான் '' கண்ணன் ஆடைகளை அனுப்பித் தான் வராதிருந்த'' காரணத்தைப் பற்றியது.
அதுவும் த்ரௌபதி 'கிருஷ்ணை' என்றே அழைக்கப் படுபவள், அவ்வளவு அதீதப் பாசமும் மதிப்பும் கண்ணனிடம் அவளுக்கு.
இன்னது என்று விளக்கமுடியாத பந்தம்.
அவள் அந்த பாஞ்சாலி, துரியோதனனின் சபையில்
கௌரவகுலப் பெரியோர் மத்தியில் அவள் ஆடை அபகரிக்கப் படும்போது,
அவளின் ஐந்து கணவர்களும் அவளைக் கைவிட்ட நிலையில்,
கண்ணா சரணம் என்று ஓலமிடுகிறாள்.
அதுவும் எப்படி!!ஹே கிருஷ்ணா த்வாரகா வாசி!!
நான் உன்னிடமிருந்து மிகத் தொலைவில் இருக்கிறேன்.
என்னைக் காப்பாற்று. உன்தாள் பரிபூரண சரணம்''
என்று மனம் கொதித்து அழுகிறாள்.
கண்ணனின் காதில் அபயக் குரல் விழுந்ததுமே எழுந்துவிடுகிறான் விரைந்து உதவ.
அடுத்த வார்த்தை காதில் விழுகிறது. ''நீ துவாரகையில் இருக்கிறாய். நான் உன்னிடமிருந்து வெகுதொலைவில்
இருக்கிறேன்''
இதுதான் பஞ்சாலியின் கதறல்.
இப்போது அவனுக்கு அவள் வார்த்தையை மெய்ப்பிக்க வேண்டிய அவசியம் வந்து விடுகிறது.அடியவர்களின் வாக்கு மீறாதவன் அவன் இல்லையா.
பீஷ்மர் சபதம் கண்ணனை ஆயுதம் எடுக்க வைப்பது.
பிரஹ்லாதனின் வவர்த்தை ஹரி எங்கும் உளன் என்பது.
அதுபோல இப்போது துரௌபதியின் வாக்கு. அவள் சொன்ன வார்த்தைக்குக் கட்டுப்பட்டு,கண்ணன் துவாரகையிலிருந்தே தன் கருணை பிரவாகத்தை அனுப்புகிறான்.
இன்னும் ஒரு காரணம் உண்டு. அவன் நேரில் வந்திருந்தால் பாண்டவர்கள் வதைக்கு அவனே காரணம் ஆகி இருப்பான்..
சிஷ்ட பரிபாலனம் என்றால் துஷ்ட நிக்கிரகம் அல்லவா.
த்ரௌபதியின் இந்த நிலைக்குக் காரணம் அவளைப் பாதுகாக்க வேண்டிய அவள் கணவர்களே அவளுடைய இந்தத் தீனமான கட்டத்தில் அவளை நிறுத்தி
விட்டார்கள்.இப்போது அவளைக் காக்க நேரில் வந்தால்,
கணவர்களான பாண்டவர்களையும் தண்டிக்க வேண்டிய இக்கட்டான முடிவைக் கண்ணன் எடுக்க நேரிடும்.
அந்த ஒரு காரணத்திற்காகவும் இருந்த இடத்திலிருந்த நகரவில்லை கண்ணன்.
இதெல்லாம் இப்போது எழுத,
கீழே உள்ள செய்தி காரணம்.
தினமலரில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னால் படித்தது
ஐ ஐ எம் முதலான மேலாண்மை முதுகலைப் பட்டம் அளிக்கும் கல்லூரிகளில் மஹா பாரதமும்,
இராமாயணமும் மனித வள மேம்பாட்டு வகுப்புகளில்
பயன்படுத்தப் படுகின்றன.
முக்கியமாகக் கண்ணன் முக்கிய மேனேஜ்மெண்ட் குரு,பிரதிநிதியாக எடுத்துக்காட்டுகள், உதாரணங்கள் சொல்லப் படுகின்றனவாம்.:)))
23 comments:
ரெண்டுவருசத்துக்கு முந்தி (விகடன்?) ஒரு வாரப்பத்திரிக்கையில் ராமாயணத்தில் மேனேஜ்மெண்ட் எப்படி இருந்ததுன்னு எழுதியிருந்ததைப் படிச்ச ஞாபகம் வருது.
நல்ல ஒரு தகவலை தெரிந்துக் கொண்டேன் :)
திரவுபதைக்கு உதவ துணி பார்சல் அனுப்பிய விளக்கம் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது வல்லியம்மா. நல்ல விளக்கம். அதுவுமில்லாம ஒரு பொண்ணு துணியில்லாம இருக்கும் போது அண்ணன் ஆனாலும் யோசிச்சுதான வரனும். அதுனாலயும் இருக்கலாம்.
என்னது மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்ல இந்தக் கதையெல்லாம் சொல்றாங்களா!!!!!
அப்பவே வந்துடுத்தா.
துளசி,
ராமாயணத்தில ராமர் வனவாசம் கிளம்பும்போது அறிவுரை வழங்குவதக ஒரு அத்தியாயம் முழுவதும் வரும்.
அரசு அப்படின்னா இப்படியில்ல இருக்கணும்னு நினைத்துக் கொண்டேன்.
வருகைக்கு நன்றி சிவா.
உண்மைதான் ராகவன்.
இந்தக் கதைன்னா இங்க கீதையும், ராமாயணத்தில் ராஜ்யம் எப்படி நடத்த வேண்டும்னு சொல்கிற மாதிரி சொல்லப் பட்டிருக்கும் வரிகளும்,
எம்பிஏக்களுக்கு உபயோகமா இருக்குமோ என்னவோ.
T S Raghavan என்று ஒருவர் இந்தியன் வங்கியில் M D யாக இருந்தார். அவர் குமுதம் பத்திரிக்கையில் இராமாயணத்தில் மேனேஜ்மெண்ட் ஆளுமை என்பதை பற்றி 10 வாரங்கள் எழுதியுள்ளார்
பாரதியாரின் பாஞ்சாலி சபதம் படித்தால் நாடி நரம்பெல்லாம் முறுக்கேரும்
ஆமாம் வல்லியம்மா...நானும் அந்த நீயூஸை படித்தேன்....திராச சொல்லிய அந்த தொடர் நினைவில் இருக்கு, ஆனா எழுதியவர் பெயரெல்லாம் இப்போத்தான் தெரிகிறது.
பின்னால் ஒரு சமயம் கண்ணனே சொன்னானாம் " திரவுபதி, என்னை துவாரகா புரி வாசி! என அழைத்தாய்! ஒரு முறையேனும் ஹே! ஹிருதயகமல வாசா!னு கூப்பிட்டு இருந்தால் இன்னும் சீக்ரம் வந்து இருப்பேனே! உன் இதய கமலத்தில் நான் இருக்கிறேன் எனபதை நீ மறந்து விட்டாயா?"
விஜய் டிவியில் சில வருஷங்களுக்கு முன்னால் திருச்சி ஜானகிராமன் தினமும் காலை பக்தி இலக்கியம் சொல்வார். அப்ப கேட்டது, இப்ப பின்னூட்டம் இட வசதியா இருக்கு. :)))
வரணூம் தி.ரா.ச.
நானும் அதே குமுதம் விகடன் வாங்கறேன்.
படிக்காமல் விட்டு விட்டேன் போலிருக்கு.
பாஞ்சாலி சபதம் படித்து நாளாச்சு.அதை ஞாபகப் படுத்தினதற்கு நன்றி.
ஆமாம் அம்பி. நிஜம்தான். அவனை நாமே சில சமயம் தள்ளி வச்சிடறோம்.
நாகை முகுந்தன் ஞபகம் இருக்கு.
ஜானகிராமன் மறந்து போச்சு.
சீதா நாயகனூக்கு நினைவு ஜாஸ்தி:)))0
மௌலி. இரூக்கிறதிலேயே பெரிய பாட்டி நான்னு நிருபணம் ஆகிறது.
ஆளுக்கு ஆள் நல்ல ஞாபகப் படுத்திச் சொல்கிறீர்கள்:))
@அம்பி கீதா மேடத்தை கலாட்டா செய்து உனக்குத்தான் வயசாச்சு. அவர் பெயர் திருச்சி ஜானகிராமன் இல்லை. திருச்சி. கல்யாணராமன்.
கண்ணன் உடனே வராததற்கு காரணம் அவள் முழு சரணகதி அடையவில்லை. ஒருகையால் தன்னை காத்துக்கொள்ள முடியும் என்று இருந்தாள். கண்ணன் சொன்னது
மாம் ஏகம் சரணம் வ்ரஜ. என்னை மட்டும் சரணடை நான் உன்னை காப்பாற்றுகிறேன். இருகைகளை மேலே தூக்கி கண்ணனை கூப்பிட்டவுடன் மலை மலையாக சேலைகள் குவிந்தன.
//கீதா மேடத்தை கலாட்டா செய்து உனக்குத்தான் வயசாச்சு. அவர் பெயர் திருச்சி ஜானகிராமன் இல்லை. திருச்சி. கல்யாணராமன்.
//
@TRC sir, சரி, எப்படியோ ராமன். பாட்டேழுதி பெயர் வாங்கும் புலவர்கள் உள்ளனர். குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் உள்ளனர். :)))
தி.ரா.ச சசர்,
நான் எழுதினது துரௌபதியின் சரணாகதியைப் பற்றி இல்லை. கண்ணன் உடனே நேரில் வராதது ஏன் என்று , நான் கேட்டுக்கொண்ட கதையைத் தான் எழுதினேன்:)))
@அம்பி,
பெரியவர்கள் எல்லாருக்கும் நம்மை விட நிறைய விஷயம் தெரியும்.
நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆகா. சொல்ல வந்த செய்தி இது தானா? :-) கீதை மேலாண்மைப் பாடமாகப் பயன்படுகிறது என்று தெரியும். இராமாயண மகாபாரதங்களும் பயன்படுவது செய்தி.
கிருஷ்ணையை காக்க நேரில் வராமல் ஏன் துணியை மட்டும் கொடுத்தான் என்பதற்கு இந்த இரண்டு விளக்கங்களையும் இப்போது தான் கேள்விப்படுகிறேன். முதலில் 'துவாரகைக்கிறைவா' என்று அழைத்ததால் வரத் தாமதம் ஆனது என்றும் 'ஹ்ருதயகமலவாசா' என்று அழைத்ததும் இதயத்தில் இருந்து உடனே உதவி செய்தான் என்றும் படித்திருக்கிறேன். அதே போல் பீமன் 'பாஞ்சாலியின் மானம் காத்த நீ அண்ணன் சூதாடுவதற்கு முன்னர் வந்து தடுத்திருக்கலாமே?' என்று கேட்டதற்கு 'இவள் அழைத்தாள்; வந்து உதவினேன். அழைக்காமலேயே கூட பக்தர்களைக் காக்க வருவேன் தான். ஆனால் உன் அண்ணனோ சூதாட அழைப்பு கிடைத்ததும் - அடடா இந்த நேரத்தில் கண்ணன் வந்துவிடக்கூடாதே; வந்தால் தடுத்துவிடுவானே - என்று நினைத்தான். அதனால் அவன் வேண்டியதற்கு ஏற்ப வராமல் இருந்தேன். உங்கள் நால்வரில் யாராவது என்னை அழைப்பீர்களோ என்று மண்டபத்தின் வாசலிலேயே காத்திருந்தேன். ஆனால் ஒருவரும் அழைக்கவில்லை. இப்போது என்னை நீ குறை சொல்கிறாய்' என்று கண்ணன் விடை சொன்னானாம்.
அன்பு குமரன்,
என்ன ஒரு அருமையான விளக்கம்.யுதிஷ்டிரருக்கு எண்ணம் வந்திருக்கும்,ஆசைதானே காரணம்.
கண்ணன் எங்கும் இருப்பவன். கருணை செய்யக் காத்து இருப்பவன்.
சொல்லாமலே ஆதரவு தந்து விடுவான்.
நாம்தான் அவனை நினைப்பதில்லை என்று அழகாகச் சொல்கிறானே.
நன்றி குமரன்.மிக மிக நன்றி.
தினமலரில் வந்தது இந்த ஐஐஎம் பற்றிய வந்தது. சந்தேகமே இல்லாமல் இராமனைப் போல ஒரு அரசன் செய்வதைப் பற்றினால் குடிமக்கள் ஆனந்தமாகத் தானே இருப்பார்கள்.:)
கிருஷ்ணனைப் போல ராஜ தூதன் கிடைத்தால் நமக்கு வேறு யார் வேண்டும்.
வல்லி!!
சிவாநந்த விஜயலஷ்மியின் கதாகாலஷேபம் கேட்ட சுவாரஸ்யம், உங்கள் தகவலிலும் உள்ளது.அவர்தான் இடையிடையே இப்படியாப்பட்ட சுவாரஸ்யமான அர்த்தங்கள் சொல்வார்.
நல்லாருக்குப்பா!!
அம்மாடி, நானானி,
சிவானந்த விஜயலக்ஷ்மியின்
தீர்க்க அறிவு எங்கே.
சும்ம ரெண்டு வரி எழுதும் நான் எங்கே.
அவர்கல் சொல்வதைக் கேட்க ச்சுவாமி நமக்குக் ககதுகள் கொடுத்து இருக்கிறானே அதுவே போதும்.
இப்ப நான் என்ன சொல்லிட்டேன்?
அவர்கள் மாதிரி அர்த்தம் சொல்கிறீர்கள் என்றுதான் சொன்னேன்.
காலஷேபமே செய்கிறீர்கள் என்றா சொன்னேன். சரிதானேப்பா?
சர்தாம்ப்பா:))0
நானானி!!!!
மாதிரினு சொன்னா சரிதான்:)))
திரு திராச அவர்கள் சொன்ன கட்டுரையை நானும் படிச்சிருக்கேன், இந்தக் குறிப்பிட்டச் செய்தியையும் பார்த்தேன். நல்ல விஷயம் தான் இது, இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான விஷயமும் கூட.
நான் கேள்விபட்டிருக்கும் இன்னொரு விளக்கம்
திரௌபதியின் சேலை இழுக்கப்பட்ட போது அவள் கண்ணா என்று அழைத்து தன்னுடைய இரு கைகளாலும் தன்னை மறைத்துக் கொண்டாள். அப்போது கண்ணன் வரவில்லை... பின்னர் கதறி அழுதாள். அப்போதும் வரவில்லை. பின்னர் நீயே சரணம் என இரு கைகளையும் தூக்கி கண்ணனிடம் சரணம் அடைந்தாள். கண்ணன் உடனே வந்து காப்பற்றினான்! சரண் அடையும் போது மனிதன் தன்னை நம்பாமல் முழுமையாக கடவுளிடம் சரணம் அடைய வேண்டும் என்ற கருத்துப்படி சொல்லப்பட்ட விளக்கம் இது.
Post a Comment