Blog Archive

Saturday, May 26, 2007

பாட்டி சுட்ட தோசை

தோசை என்றால் பிடிக்காத மனிதர்கள் உண்டா.?

அதுவும் ஒரு அம்மாவோ பாட்டியோ
ஒரு கரி அடுப்பு,
இல்லாட்டா ஒரு கெரசின் வாசனை அடிக்காத ஒரு ஸ்டவ் அடுப்பில் செங்கோட்டைக்கல்லைப் போட்டு
முதல்நாள் ஊறப்போட்டு அரைச்சு வைத்துப் புளித்த மாவில் ..அதாவது நாலு பங்கு புழுங்கலரிசி ஒரு பங்கு கறுப்பு உளுந்து போட்டு ,நல்லாக்
களைந்து பிறகு ,உரல்ல போட்டு ஊர்க்கதையெல்லாம் நான் கேட்க
நிதானமாக அரைத்து வழித்து
பெரிய கல்சட்டி ,அதுஇல்லைன்னா ஒரு பீங்கான் ஜாடியில் வைத்துப்
புளித்த மாவு.

சீனிம்மா , மாவு அரைக்கிற பாங்கும்,அடுப்பை நிதானமாக எரிய விட்டு வேலை செய்யும் அழகும்,
இலையில் ,கையால் தைத்த தையல் இலையில் சிறிது அளவு
சாப்பாடே போட்டுக் கொண்டு,கருவேப்பிலை கூட மிச்சம் வைக்காமல்
உண்ணும் விதமும் என்னைக் கண் கொட்டாமல் பார்க்க வைக்கும்.

அந்தத் தோசையின் ருசி ,வேறு இடத்தில் நான் கண்டதில்லை.
எங்க அம்மா வார்க்கும் தோசையிலும் வட்டம்,அளவு எல்லாம் வேறு விதமாக இருக்கும்.

சீனிம்மா வீட்டு சமையலறை ஓடு மேய்ந்தது.
கூரையில் வெளிச்ச வர ஒரு சின்னக் கண்ணாடி.
ஒரு மேடை கட்டி அதில் தினம் சாணி போட்டு மெழுகுவதுபோல
மண்ணால் ஆன அடுப்பு.
கொடி அடுப்புனு கூட ஒன்று இருக்கும்.
பெரிய அடுப்பில் நாலு விறகு என்றால் அதில் வரும் சூட்டில் சாதம் கொதிக்கும் போதே, கொடியடுப்பில் பருப்பு ஒரு குண்டானில் வேகும்.

கீழே தரையில் மாமாக்கள் உட்கார்ந்து அன்று வேண்டிய
காய்கறிகளை அரிந்து கொடுக்க
ஒரு பத்து நபர்களுக்கான சாப்பாட்டை இரண்டு மணி நேரத்தில் சமைத்து விடுவார்.
இப்போது அந்தத் தோசை நாட்களை நினைத்து
உச்சுக் கொட்டுவதற்குக் காரணம்,இங்கே ஸ்விஸில்
அரிசி,பருப்பு எல்லாம் சேர்ந்து நல்ல தோசை கிடைக்கவில்லை,
அதான் காரணம்.
உயர்ந்த வகை க்ரைண்டர்தான். அளவும் அதேதான்.
வார்ப்பதும் நானே.

அந்த மாவு அரைக்கும்போதெ அந்தப் பாட்டி அன்பும் பொறுமையும் கலந்து அரைத்தாளோ.
லீவுக்கு வந்திருக்கும் பேரன் பேத்திகள் வயிறு வாட விட்டு
ஊருக்கு அனுப்பக் கூடாது என்று
பொன்னிறத்தில் கொஞ்சம் கூடக் கருகாமல் உணவு தயாரித்தாளோ.

அவள் மனம் பூரிக்க நான்கு வார்த்தையாவது சொல்லி இருப்பேனா.
இல்லை நாங்கள் சாப்பிட்டு விளையாடுவதையே
பாராட்டாக எடுத்துக் கொண்டாளோ...
எதையும் யாரிடத்திலும் எதிர்பாராமல் கடமையும் நேர்மையுமே
எங்கள் எல்லோருக்கும் சொத்தாகக் கொடுத்தாள்.
அதனால்தான் எதிர்காலம் எதிர்கொள்வது சுலபமாக இருந்தது எங்களுக்கு.

19 comments:

Geetha Sambasivam said...

ரொம்பவே உண்மையான வார்த்தைகள். ஆனால் அங்கே குளிரின் காரணமாய்ப் புளிப்புத் தாமதமாய் ஏற்படலாம். நீங்கள் எதுக்கும் கேக் செய்யும் அவனின் உள்ளே மாவை அரைத்துவிட்டு 2 நாள் வைத்துப் பின் செய்து பார்க்கவும். அல்லது கம்பளியோ (கனமாக) உல்லன் ஸ்வெட்டரோ போட்டு விடவும். ஊட்டியில் 0 டிகிரி குளிரில் மாவுக்கு இந்த உபசாரம் செய்யவேண்டும். மேலும் ராஜஸ்தான்,குஜராத்திலும் இப்படித்தான் செய்வோம். அதைவிட இங்கே குளிரின் தன்மை வேறுபடும் அல்லவா? ஆகவே அவனில் வைத்துப் பாருங்கள். கட்டாயம் பலன் கிடைக்கும். நாளைக்குத் தோசை சாப்பிட வேண்டுமானால் 2 நாள் முன்னாடியே அரைத்துவிடுங்கள்.

G.Ragavan said...

தோசையைப் பற்றிச் சொல்லிப் பசியைக் கிளப்பீட்டீங்களே..... :) எனக்கு தோசைன்னா அவ்ளோ பிடிக்கும். நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான்.

நம்முடைய குழந்தைகள் நாளைக்கு என்ன சொல்வார்கள் தெரியுமா? எங்க அம்மா, அப்பா, மாமா, சித்தி..பாட்டி..இவங்கள்ளாம் அப்ப சாக்லேட் ஐஸ்கிரீம் வாங்கித் தருவாங்க. அவ்ளோ நல்லாயிருக்கும். இப்பல்லாம் இவ்ளோ ஐஸ்கிரீம் சாக்லேட் இருக்கு. எவ்ளோ வேணும்னாலும் வாங்கலாம். திங்கலாம். ஆனா அந்த சுவை வர மாட்டேங்குதே. அவங்க வாங்கித்தரும் போதே அன்பையும் கலந்து கொடுத்தாங்களோ! :)

இலவசக்கொத்தனார் said...

எந்த பிரச்சனையானாலும் அவன் மேல் பாரத்தைப் போட வேண்டியதுதான். கீதாம்மா சொன்ன மாதிரி மாவு புளிக்கலையா? அதையும் அவனில் போடுங்கள். சரியாகும். :))

வல்லிசிம்ஹன் said...

கீதா, இந்தப் பருப்பு அவனுக்கும் இவனுக்கும் மசியலை.
சிகாகோல இல்லாத குளிரா.அங்கே ப்ரீஹீட் செய்து லைட் அலங்காரம் போட்டு ராத்திரி வச்சா மாவு பொங்கித்தான் வந்தது.
இங்கே கடை உளுந்து அவ்வளாவா நல்லா இல்லை.
அரிசியும் உனக்கும் பெப்பே என்கிறது.
இவங்க சினேகிதங்க ஊரிலிருந்தே வாங்கி வருவாங்களாம்.
பார்க்கலாம் பெர்முடேஷன் காம்பினேஷன் எல்லாம் நமக்காகத்தானே.
எனக்காச்சு மாவுக்காச்சு.:-))))

வல்லிசிம்ஹன் said...

ராகவன் உங்க ஊரு பக்கம்தானே. இங்கே ஒரு நடை வரலாமே.

நல்ல சாப்பாடு சாப்பிட்டாப்பிலேயும் இருக்கும்.
எங்களையும் பார்த்துட்டுப் போகலாம். இங்கே நல்ல கோவில் கூட இருக்கு.
அமெரிக்காப்
பேரன் சொல்லுவான் பாட்டி செய்யற மாதிரி உ.கிழங்கு உனக்கு செய்ய வரலைனு.(avan ammaa kitta)

வல்லிசிம்ஹன் said...

அவன் மேல ரெண்டு பாத்திர பாரத்தைப் போட்டுப் பார்த்தாச்சு.
கொத்ஸ்,
இங்கே மேடை மேலதான் தப்பு.
வார்க்கிறவங்க மேல இல்லை.:))))

வல்லிசிம்ஹன் said...

டெல்ஃபின்,
நம்ம ஒல்டன் டேஸ் நல்லதா இருந்ததுக்கு,
நம்ம பெரியவங்கள்ளோட பொறுமையும் விடா முயற்சியும் அயரா
உழைப்பும்தான்.
அதுல கொஞ்சம் நமக்கும் இருந்தா பிழைச்சுக்கலாம்.
இது எனக்கு நான் அடிக்கடி சொல்லிக் கொள்வது.:-)))

வல்லிசிம்ஹன் said...

கீதா,அம்பி இல்லையேனு
கவலைப்படப் போறோமேனு
நினச்சு,
உங்களை
சொல்றாமாதிரி ,
கொத்ஸ் கமெண்ட் இல்ல???????:-))

G.Ragavan said...

// வல்லிசிம்ஹன் said...
ராகவன் உங்க ஊரு பக்கம்தானே. இங்கே ஒரு நடை வரலாமே.

நல்ல சாப்பாடு சாப்பிட்டாப்பிலேயும் இருக்கும்.
எங்களையும் பார்த்துட்டுப் போகலாம். இங்கே நல்ல கோவில் கூட இருக்கு.//

ஆகா. கண்டிப்பா வந்துருவோம். ஒங்கூருக்கும் வரனும்னு திட்டம் இருக்கு. ஒரு மாசம் போகட்டும். திட்டம் போட்டுட்டே வந்துருவோம். gragavan@gmail.comக்கு ஒரு மெயில் தட்டி விடுங்களேன்.

// அமெரிக்காப்
பேரன் சொல்லுவான் பாட்டி செய்யற மாதிரி உ.கிழங்கு உனக்கு செய்ய வரலைனு.(avan ammaa kitta) //

பாத்தீங்களா...அதே மாதிரி ஒங்க பசங்க ஒங்க கிட்ட சொல்லீருப்பாங்க. :)

Tulsi said...

எனக்கும் ஒரு தோசைச் சுடச்சுட அனுப்புங்கப்பா.

இங்கெ ப்ரிஸ்பேன் ஏர்போர்ட்லெ

லவுஞ்சுலே உக்காந்துருக்கேன்.

நிறைய சாப்பாடு இருக்கு.ஆனாலும் எனக்கு ஒண்ணும் இல்லை(-:

பாலராஜன்கீதா said...

//அந்த மாவு அரைக்கும்போதெ அந்தப் பாட்டி அன்பும் பொறுமையும் கலந்து அரைத்தாளோ//

வலைப்பதிவு நண்பர் செல்வராஜ் அவர்களின் பதிவில் http://selvaraj.weblogs.us/archives/216 வாசித்தது :-
= = = = = = = = = = = = = = = = =
நல்ல நண்பர்களாய்ச் சகோதரிகள் இருப்பதும் ஒரு நெகிழ்வனுபவம். (அடித்துக் கொண்டு சண்டை போடுகிற நேரத்தை இப்போதைக்கு மறந்து விடலாம் ). ஏனோ காரணமிருந்தோ இல்லாமலோ சில மகிழ்தருணங்கள் நிறைந்திருக்குமொரு வாழ்க்கை முறை அமைந்திருப்பதில் ஒரு நிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகிறது.

பெரிதாய் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. சேர்த்துக் கொள்வதற்குச் சிறு நினைவுகள் போதும்.

சிலசமயம் ஏதாவது தீனி ஏற்பாடு செய்யும்படியோ தேநீருக்கு உதவும்படியோ நான் கேட்கும்போது ஆர்வம்/விருப்பம் இருப்பின் உதவி செய்பவர்களைப் பார்த்து, “வாவ்… இன்னிக்கு ரொம்ப நல்லாருக்கே! என்னடா பண்ணீங்க?” என்றால்,

“ரெண்டு ஸ்பூன் அதிக அன்பு (extra love) போட்டுக் கலந்தோமப்பா” என்பார்கள்.

அவ்வளவு தான் தேவை.

இரண்டு ஸ்பூன் அன்பு.
= = = = = = = = = = =

தருமி said...

yesterdays (years?) are always sweeter - அப்டின்னு சொல்லுவாங்க ..இல்ல ?

கண்மணி/kanmani said...

நீங்க சொன்னது மாதிரி சாணம் மெழுகிய கொடி அடுப்பும் பாட்டி சிம்னி விளக்கு வெளிச்சத்தில் சுட்டுப் போட்ட கல்தோசை,ரோஜாப்பூ தோசையும் [அத்துனை மிருதுவாக பூ போலவே இருக்கும்.பக்குவம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பக்குவம் அப்போது இல்லை] கிராமத்தில் கழித்த விடுமுறைகளும் மீண்டும் வராதா என ஏங்க வைக்கிறது உங்கள் பதிவு.

வல்லிசிம்ஹன் said...

துளசி அதுக்குத்தான் சிட்னி போங்கனு சொன்னேன். அங்கேன்னா வடை,பஜ்ஜி நல்லாக் கிடைச்சு இருக்கும் இல்ல.
பரவாயில்லை ஊர்ல வந்து ஒரு வெட்டு வெட்டலாம்.

வல்லிசிம்ஹன் said...

பாலராஜன் கீதா,
ஔவைப் பாட்டி சொன்னதுதான் நமக்கும். ஒப்புடன் முகமலர்ந்து...னு வருமே.

என்னதான் சண்டைபோட்டாலும் உடன்பிறப்புகள் கதை வேறதான்.

அன்புடன் செய்த பண்டம் அமிர்தம்.வேண்டா வெறுப்பாக செய்தால் வேறயாகிவிடும்.
ரொம்ப நன்றி,அருமையான லின்க் கொடுத்ததற்கு.

வல்லிசிம்ஹன் said...

தருமி, வாங்க சார்.

ஆமாம் ,நீங்க சொல்வதுபோல நாட்கள் ஆனதும் கெட்டதெல்லாம் மறந்து நல்லது மட்டும் நினைவில் தங்கும் என்று நினைக்கிறேன்:-))

வல்லிசிம்ஹன் said...

ராகவன் கட்டாயம் வரணும். மெயில் போடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கண்மணி,

இன்னோண்ணு போட்டுக்கறியா அப்படீனு கேட்க பாட்டிகளுக்கும் அம்மாக்களுக்கும் தான் தெரியும்.
நான் என் பெண்ணிடம் வற்புறுத்தவே மாட்டேன். வேண்டும் அளவு அவர்களே சாப்பிடுவார்கள் என்ற எண்ணமோ என்னவோ.
இதுவெ இவங்களுக்கெல்லாம் திருமணம் ஆனபிறகு ஸ்பெஷலாக் கவனிக்கிறேன்.

இந்த மனசு இருக்கே....

கண்மணி/kanmani said...

நீங்க சொல்றது ரொம்பச் சரி வல்லியம்மா.பாட்டிக்கு மிஞ்சிய அன்பு இருக்க முடியாது.தாயைக் காட்டிலும் அன்பானவள் என்றால் மிகையில்லை.என் அனுபவம் மட்டுமல்லாது நான் பார்த்தவரையிலும் சொல்கிறேன்.அது போல அவளின் எளிய கைப்பக்குவமும் ஆனால் அளவிடமுடியாத சுவையும் அஜினோ மோட்டோவும் தராது அவன் அடுப்பும் தராது.