Blog Archive

Tuesday, October 31, 2006

நாங்க அப்பவே வந்துட்டோமே!





எல்லா ஊரிலயும் யாராவது முதல்ல வந்துதானே
ஆகணும்.?
அதுபோல வரும்போது மனித நாகரீகம் வளர்கிறது.

வேறு உடை,நடை,பாவனை எல்லாம் இடத்துக்கு ஏத்த மாதிரி மாறும்.
கிளம்பி வந்த இடத்திலிருந்து கொண்டு வந்த எல்லாவற்றையும் மூட்டை கட்டிப் பரணில்(ஆட்டிக்கில்)
வைத்துவிட்டு
வந்த இடத்தோடு ஒன்றிப் போகிறவர்களும் உண்டு.

நல்ல நாள்.,அல்லாத நாள் எல்லாம் வரும்போது
அந்தப் பழைய வேஷங்களைப் போட்டுக்
கொள்ளுவதும் வழக்கம்.

இது நம்ம நாட்டுக்கு மட்டும்னு இல்லை. எல்லா (ஏழு) க் கண்டங்களுக்கும் பொருந்தும்.

ஆனால் எனக்கு ரொம்ப ஆச்சரியத்தைத் தந்தது

நான் எட்டு வருடங்களுக்கு முன்னால்
போன ஒரு இடம்தான்.
அங்கே 1960 களில் குடியேறிய இந்தியர்கள்,
அப்புறம் பத்து பத்து வருடங்களாக
அப்புறம் வந்தவர்கள் என்று ஒரு

வகைகளாகப் பிரிக்கப் பட்ட குழுக்களைப் பார்த்தேன்.
நமக்கோ ஊரை விட்டு வந்துத் திருப்பிப் போற
வரைக்கும் பேச ஆள் தேடிய காலம்.

அங்கே கோவிலில் இருந்த குருக்கள் ஒருத்தர்தான்
தமிழ்ச்சங்கம் என்று ஒன்று இருப்பதையும்,
சினிமா,டிராமா,இசைக் கச்சேரிகள்


தெலுகு சமாஜம்,வடஇந்திய சங்கங்கள்
எல்லாம் இருப்பதைச் சொன்னார்.

சரினு, தமிழ்ச்சங்க அறிவுப்பு ஒன்றை எடுத்துப் படித்தேன்.

அதில் ஒரு பெயர் மிகப் பழக்கப் பட்டதாக இருக்கவே

அந்த குருக்களிடம் அவர்களைப் பற்றி

விசாரித்தேன்.அமாம் வர்கள் சேலத்திலிருந்து வந்தவர்கள்தான்.

உங்களுக்குத் தெரியுமா என்றார். தெரியுமாவா, எனக்குத் தெரிந்து அந்தப் பெண் கல்லூரி முடித்து,

கல்யாணம் ஆகிறவரை அவர்கள் பக்கத்து வீட்டில் இருந்தோமே, அவர்கள்ஃபோன் நம்பர் கிடைக்குமா

என்று விசாரித்து, என் பெண்ணின்

தடைகளையும் மீறி:-)0

போன் செய்தேன். முதலில் ஆச்சரியப் பட்டுப் போன அந்தப் பெண்

ஒரே ஆங்கில மழையில் என்னை நனைத்தாள்.

1975 வந்தபோது (கல்யாணமாகி)

தினம் எனக்குத் தமிழில் கடிதம் எழுதிய பெண் இது இல்லை.

மாறிவிட்டாள் என்று அறியக் கொஞ்சம்

கஷ்டமாகத்தான் இருந்தது.

அதற்காக 22 வயதுப் பெண்ணும் நாற்பத்து ஐந்து

வயது அம்மாவும் ஒன்றாக இருக்கமுடியுமா என்று கேட்காதீர்கள். அவளூக்குப் பெண் ஒன்று பையன் ஒன்று பிறந்து அந்தக் கலாச்சாரத்திலேயே வளர்ந்து

விட்டதாகப் பெருமையுடன் சொன்னாள்.

இந்தியாவுக்கு ஐந்து வருடங்களுக்கு

ஒரு தடவை வருவதாகச் சொன்னாள்.

சேலத்தில் பக்கத்து யேற்காடு மலைக்குக்

காரில் போக பயந்து " அங்கே ஏதாவது பாறை உருண்டு

விழுமோ'' என்ற பெண்.'அறியாப் பொண்ணு'னு சொல்ல மாட்டொமா அந்த வகை:-0))

அது இப்ப உங்களை எப்பவாவது மீட்

செய்ய முயற்சிக்கிறேன் என்றதும்

முதல் அதிர்ச்சி.

எப்பவாவதா. !!!

நம்ம வீடே, ரேடியோகிராமே கதினு

இருந்த பொண்ணா? அப்படினு என் பெண்ணைக்கேட்கத் திரும்பிய போது

இதைத்தான் முதலில் நான் சொல்ல வந்தேன்.

எனக்கு ரெண்டு வருஷமாத் தெரியும்.

கோவிலில் பார்த்தேன்.'அவர்கள் வீடு, ரெண்டு கார்

என்றெல்லாம் டோட்டல் அமெரிகன் ஆயாச்சு.

நீ ஏம்மானு ' இழுத்ததும்

அடடா என்று யோசிக்க ஆரம்பித்தேன்,.

இது இருக்கட்டும், நாம இப்போ

கிழக்குக் கடற்கரை(அமெரிக்காவின்)க்கு போவோமா.

அங்கே போக வேண்டிய

உறவுப் பொண்ணு தங்களோட பிள்ளைக்கு

ஃப்ரென்ச் பொண்ணைக் கல்யாணம் கட்ட அழைப்பு விடுத்தாங்க. அட இவங்கதான் லவ் மெரேஜ். பிள்ளையுமானு அதிசயம்.

கல்யாணப் பொண்ணு அழகோ அழகு.

இவங்களும் இந்தியா வந்து திருமணப்பாயிலிருந்து சகலமும் வாங்கி வச்சு இருந்தாங்க. எங்க முறைப்படி கூறைப்புடவை,பஞ்சகச்சம் திருமணம்.

சாயந்திரம் கோட்,சூட்டுடன் சர்ச்சில் கல்யாணம்.

நாங்க சுத்தி உக்கார்ந்து பார்த்தோம். நமக்கு டான்ஸ் ஆட வரலை. எப்பவோ 'காதலிக்க நேரமில்லை' படத்தில சச்சு

ஆடின ட்விஸ்ட் மட்டும் தெரியும்.

அது இங்கே ஓடுமா.இல்லை ஆடுமா.?

அப்போ பக்கத்தில் புளூஜாகர் (காது, கழுத்து,கை)பளபளக்க

இரண்டு மூன்று இந்திய மாதர்கள் இருந்தார்கள்

நாமதானே ரொம்பப் புதிசு.

பக்கம் போய் ஹலோ

சொல்லலாம்னு போனேன்.கீழே டயலாக்:-)

'ஹை!

ஹை!

யூ ஆர் ரிலேடெட்?

நான் 'ஆமாம்.'

மதராஸ்/?

ஆமாம்.'

ரொம்ப சிம்பிளா வந்துட்டீங்களே. இது கூட

நல்லத்தான் இருக்கு..ஸ்மைல்:-0)

""ஆமாம்'

பிளேன் கடல்ல விழும்னு பயம்.அதனாலெ

தோடு தங்கம் எல்லாம் லாக்க்ரில் வச்சுட்டுவந்துட்டேன்''

ஏன் இவர்களுக்கு தோடு பத்தி இத்தனைஆர்வம்னு யோசிச்சு

என் கசினைக் கேட்டேன்.

யாரு என்று, நோட் செய்து கொண்டு,

எனக்கு ஒரு ஐய்யோ பாவமே ஸ்மைல் கொடுத்தாள்.

முதல்ல நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய. கேளுனு ஆரம்பித்தாள்.

எல்லா இந்தியர்களும் இங்கே ஓர் குலம் இல்லை.

2,மேஃப்லவர் குருப்புனு இங்கிலாந்தில் முதல் போட்டில்

வந்தவர்கள் ஒரு ஜாதி. அவர்கள் முதல் அமெரிகர்கள்.

இந்த ஈஸ்ட் கோஸ்ட் அவர்களால் நிறைந்தது. ஒரு பார்பேரிக் நாட்டுக்கு (?)நாகரீகம் கொண்டுவந்தவர்கள்.

அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து தானும் முன்னேறியது.

அப்புறம் வந்த(இந்தியர்கள்)வர்கள் நாம்.

நம்மில்(இந்தியர்களில்) முதலில் குடிவந்தவர்கள் கிட்டத்தட்ட 50வருடங்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

நல்ல செழிப்பாகவே இருக்கிறார்கள்.

என்ன வைரங்களுக்கு நிறைய மதிப்புக் கொடுப்பார்கள்.

இஃப் யூ ஹேவ் தெம்,

யூ ஆர் அக்சப்டட்.

2,செகண்ட் லெவல் என்னைப்போல வேலைக்குப்

போய் வீடுகட்டி இருக்கும் ரகம் நாங்க மிடில் க்ளாஸ்..

'அண்ட் வி டூ நாட் கெட் இன்வைடட் தர்'' என்றாள்.

ஆகையினால் என் அருமை நண்பர்களுக்கு

நான் சொல்ல வந்தது, ஒரு சின்ன ஹிண்ட்.

ஒருவரை நாட்டிலிருந்து பிரிக்கலாம்.

நாட்டை அவரிடமிருந்து பிரிக்க முடியாது.

சென்னையும் பொகீப்சியும் ஒன்றே.

தப்பா சொல்லலைப்பா.

மாற்றம் வராத நிலையான ஒன்று பொருளாதாரப் பிரிவு .

என்கிறேன்.

இது 10 வருடத்துக்கு முன்னாலே நிலமை.

இப்போ எப்படினு தெரியாது.

Sunday, October 29, 2006

வேண்டாத பொய்கள்

இப்பொ ஒருத்தர்கிட்ட நீங்க எங்க வீட்டுக்கு
வரீங்களா என்று கேட்டால், சரி, முடியாது
இதுதானெ எதிர்பார்ப்போம்?

1, ஓ அதுக்கென்ன வரோமே . எப்போனு சொல்லு.

இது ஒரு பதில்.

2,ஒரு இரண்டு வாரமா ஒரே வேலை,அலைச்சல்
உடம்பு வேற படுத்தறது
முடிஞ்சா பாக்கலாம்
.நீ தப்பா நினைச்சுக்காதே என்ன,.

இதில் என்ன தப்பு.அவங்களுக்கு உண்மையாவே
நிறைய வேலை இருக்கலாம் என்று கேட்கலாம் நீங்கள்.

இந்த மாதிரி பதில் சொல்வது உங்க பக்கத்து வீட்டு ஐயாவோ அம்மாவாகவோ,
தினம் அவங்க வீட்டு நடவடிக்கை உங்களுக்குத் தெரிந்ததாக
இருந்தால்?
அதாவது 20 வருடங்களாகத் தெரிந்தவராக இருந்தால்?
இதுக்குப் பெயர் தான் வேண்டாத
பொய் சொல்வது.
அவசியமே இருக்காது.

கேள்வி கேட்டோம் இவர்களை!!!!!!
தொலைந்தோம். !
பொய் சகட்டு மேனிக்கு வரும்.
அப்படியாவது கேள்வி கேட்கணுமா என்ன
என்பீர்கள்.
சரி , இதோ ஒரு உதாரணம்.
ஒரு ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டு இருக்கும்

எங்கள் நண்பர் வருகிறார்.
அவர் இன்னும் சில நாளில் வேறு
இடம் வேலை நிமித்தம்
வெளிநாடு போகப் போகிறார்.
விசா,டிக்கட் எல்லாம் வந்தாச்சு.

எப்படித்தெரியும்னு கேக்கறீங்க. அவங்க
இல்லாளும் நமக்குத் தோழிதான்.

புதிய சூட்கேஸ், தைத்த துணிவகைகள், அரைத்து வைத்த
(வெளிநாடு எடுத்துப் போக)ப் பொடிவகைகள்
முதல் நம்மிடம் கேட்டுவிட்டு,,
அவங்க வீட்டுக்கு வரச் சொல்லி

பார்க்க வைத்து அனுப்பும் வெகுளி அந்த அம்மா.

.
இவ்வளவு ஆன பிறகு நம்ம வீட்டுக்கு வர மனிதரிடம்
என்ன கேட்போம்?
என்ன சார் ஊருக்குக் கிளம்பராப்பில இருக்கு. எத்தனை நாள் போவதாக உத்தேசம் என்றால்,
அவர் ச்ஒல்லும் பதில் என்ன தெரியுமா?
" அதை ஏன்மா கேக்கறீங்க,
இன்னும் முடிவா ஓண்ணும் தெரியலை.
எங்க ஆபீசில் அப்படி ஒண்ணும் சீக்கிரமா

முடிவு செய்துற மாட்டாங்க.
கடைசி நிமிடத்தில் மாத்திடுவாங்க
நாளை.
எல்லாம் ஏர்போர்ட்டில் காலை வைத்து
ப்ளேனில் ஏறினாதான் நிச்சயம்''
என்று பதில் வரும்.
அய்யோடா ஏண்டா கேட்டொம்னு இருக்கும்.

அப்புறம் இன்னோரு ரகம்.
அவங்களுக்கு உண்மையே வாயில வராது.

எனக்குத் தெரிந்த மனிதர் அவர் பொண்டாட்டிகிட்ட
வீட்டை விட்டுக் கிளம்பும் போது

"இந்தப் பாரு எங்கே போறேனு கேக்காதே.
உன் கிட்ட கிழக்கே போறேனு சொல்லுவேன், ஆனால்
மேற்காலே தான் போவேன்.
என்னைப் பொய் சொல்ல வைக்காதே''

அந்த அம்மா சிரிச்சுப்பாங்க.
50 வருஷக் குடித்தனமாச்சே.

''சரி, கழுதை கெட்டா குட்டிசுவர்''
எனக்குத் தெரியாதானு சொல்லுவாங்க.
நான் அந்த அம்மாவோட பொறுமையைப்
பார்த்து அதிசயப் படுவேன்.

அவங்க '' இளமையிலே நிறையாக் கவலைப் பட்டாச்சு.

எனக்கே 64 ஆச்சு.
அவரோட சினேகிதர்கள் எல்லோரும்

எப்படிப் பட்டவர்கள் என்றும் தெரியும்.
அவரைத் தேடி அவர்கள் இங்கே வருவார்கள்,
பின்னாலேயெ அவரும் வருவார்.

எல்லோருக்கும் இங்க தானெ காஃப்பி'
என்பார்.
அப்பாடி இவ்வளவு இருக்கானு நினைப்பேன்.
நமக்கும் இத்தனை வயசானா
புத்தி தெளியுமோ என்னவோ:-)

குடும்பப் பொய் இருக்கட்டும்,எங்க வீட்டு
முனி(உதவி செய்யும் அம்மா)
இருக்காங்களே,,
அவங்க பெண்ணும் வேறு இடத்தில் வேலை
செய்பவர்.அவரும் வருவார்.
இந்த அம்மாவைப் பத்தி அந்தப் பெண்ணுகிட்ட
கேட்டா,''ஐய்ய எனிக்கு இன்னா தெரியும்
அது எங்கியோ போவும் வரும்.
நானா காண்டேன்''
என்பார். ஒரே வீட்டில் இருப்பவர்கள் இருவரும்.

என்ன ,,அம்மா அயனாவரம் போயிருப்பார்.
பொண்ணு அம்மா என்கிட்ட சொல்லாமல் இரண்டு

நாள் விடுமுறை எடுத்ததை மறைக்க
ஹார்ம்லெஸ் லைஸ்// சொல்லுவார்.

பொய் சொல்லலாமே என்று பதிவு
போட்டதற்கு மாற்று இந்தப் பதிவு.:-)

Friday, October 20, 2006

பொய் உரைக்கலாமா---மே

இதோ இருக்கிறார் ஹரிச்சந்திர மஹராஜா.
அவர் காலமா இது/
அந்த யுகம் முடிந்தது.
துவாரபர்யுகத்தில்

கண்ணன் வந்து கொஞ்சம் பொய் கலந்த
உண்மைகளை, உண்மைக கலந்த பொய்களைச் சொல்லி
பூமி பாரத்தைக் குறைத்தான்.

அவன் துவாரகைக்கு வெளியே பிபாச ஏரிக்கரையில் படுத்து ஓய்வு எடுக்கும் போது ஒரு வேடன்,
அவரது முழந்தாளை,
ஒரு மான் முகம் என்று நினைத்து
அம்பு விட பகவான் உயிர் விடத் தீர்மானிக்கிறான்.

வேடன் பதைத்து பக்கம் ஓடி வர அவனையும் சமாதானப் படுத்தி வான் ஏறி வைகுண்டம் ஏகுகிறார்.
போகும்போதே கலி வந்து விட்டதை அறிவிக்கிறார்.
இப்போதும் துவாரகையில் அந்தப் புனித இடத்தைத் தரிசிக்கலாம்.

கண்ணபிரான் மற்றவர்களைக் காக்கப்

பொய்யுரைத்த, இல்லை உண்மையை மறைத்த இடங்கள் மஹா
பாரதத்தில் உண்டு.
அபிமன்யு அராஜகமான சக்கிரவியூகத்தில் மாட்டிக் கொள்ளுகிறான்.
வயதில்,நேர்மையில் ,அரசியலில், தர்மத்தில் தேர்ந்தவர்களைக் கொண்ட வியூகம் அது. அத்தனை
பெரியவர்களும் சேர்ந்து,
அவன் வீழ, உயிர் துறக்கக் காரணமானார்கள்.
இதைக் கேட்ட சுபத்திரை,அர்ஜுனன், கண்ணன்,யுதிஷ்டிரர்
அனைவரும் நெருப்பில் வீழ்ந்தது போல் தவிக்கிறார்கள்.

அவர்கள் அவனுடைய வீர மரணத்தில் அவர்களுக்குத்
திருப்திதான். ஆனால் ஒரு சிங்ககுட்டியை நரிக்கூட்டம் போன்ற நயவஞ்சகத்தோடு அம்புகளால்
அடித்துப் போட்டதை அவர்களால் சகிக்க முடியவில்லை.

சபதம் செய்கிறான் அர்ஜுனன். இன்று இரவு முடிவதற்குள்

அபிமன்யுவைக் கொன்றவனைச் சாய்ப்பேன். இல்லை
நான் மரிப்பேன் என்கிறான்.

கண்ணனும் ஆமோதிக்கிறான்.
துரியோதனாதிகள் அபிமன்யுவைக் கொன்ற
ஜயத்திரதனை போர்நடக்கும் களத்திலிருந்து தனிப் படுத்துகிறார்கள்,.
அர்ஜுனனும் அவன் சாரதி கண்ணனும் குருக்ஷேத்திரம்

முழுவதும் தேடிக் களைத்தார்கள்.
அந்தி நெருங்குகிறது. சூரியன் மறையும் நெரம் வந்துகொண்டிருக்கிறது.

கண்ணனுக்கு அர்ஜுனனும் அலுப்பின் எல்லையை
அடைந்துவிட்டதை உணர்கிறான்.

நிலைமையைச் சமாளிக்க யோசித்த அடுத்த
கணத்தில் தோன்றுகிறது சுதர்சனம்
அவன் கையில்.
பிரயோக சக்கிரமாகப் பாய்கிறது.

கண்ணன் மனம் அறிந்த சக்கிரம் சூரியனைச் சென்று மறைக்கிறது.
அந்தியும் முடிந்து இரவு வந்துவிட்டதாகக்
களியூட்டம் போடுகிறான் துரியோதனன்.
மறைவிடத்திலிருந்து
வெளியே வருகிறான் ஜயத்ரதன்.

அவன் கண்ணன் கண்ணில் பட்ட மறுகணம்
சுத்ர்சனம் ஆதவனைவிட்டு விடுகிறது.
மறுபடி வெளிச்சம் பரவ
அதிர்கிறது கௌரவ முகாம்.


கண்ணன் கைசேர்ந்து ஓய்கிறது சுதர்சனம்.
பார்த்தனை அழைத்து ஜயத்ரதன் இருக்குமிடம்
வருகிறது ரதம்.
ஆத்திரமும் பெற்றபாசமும்

மேலோங்க
காண்டிபம் அதிர,

எடுத்தான் அம்பை, விடுத்தான் சரங்களை.

அனுமன் உட்கார்ந்த கொடி வீரவிலாசமாகப் பறக்கிறது.

கிருஷ்ணனின் பாஞ்சஜன்யம்,
கேட்பவர் நெஞ்சங்களை நடுங்க வைக்க ,


முடிகிறது அபிமன்யுவைக் கொன்றவனின்
கதை. இது கண்ணன் செய்த பொய்தான்.
அடுததது ,




யுதிஷ்டிரர் சொன்னச் சின்னப்பொய்.
துரோணரின் ரதம் சென்ற இடமெல்லாம்

உயிர்விட்டவர்களின் எண்ணிக்கை உயர்கிறது.
இதைத் தடுக்காவிட்டால்
தோல்வி நிச்சயம் பாண்டவருக்கு.
கண்ணனுக்குத்தான் அவர்களைக்காப்பதே தர்மம்.

அவனுக்குத் தோன்றிய திட்டம் தர்மருக்குத் தெரிவிக்கப் படுகிறது.
பிறவி எடுத்ததிலிருந்து பொய் என்பதைக் கருத்தில் கூட
நினையாதவர்.
அவருக்குப் பொய் நாவில் வரமுடியாது.
அவரிடம் கண்ணன் கூறியது,''அஸ்வத்தாமா ஹதஹ''
//அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்//
துரோணரின் உயிர்நாடி அவர் மகன் அஸ்வத்தாமன்.
அவன் இறந்தான் என்ற சொல்லைக் கேட்டால் அவர் வில்லைத் துறப்பார், போர் முக்கால்பங்கு முடிந்தது போல்தான்.
ஆனால் அஸ்வத்தாமனோ யாராலும் அழிக்க முடியாதவன்.

அதனால் கண்ணனால் கற்பிக்கப்பட்டப் பொய் ,,
அஸ்வத்தாமா என்ற பெயர் கொண்ட யானையைத்
தர்மன் வதம் செய்தவுடன் ,

கூவ வேண்டியது'' அஸ்வத்தாமா(என்ற யானை )
கொல்லப்பட்டது உண்மை.''
என்ற வாக்கியம்.
தர்மன் மனமில்லாமல் அஸ்வத்தாம என்ற யானையயும்
அதன்மேலிருந்த வீரனுடனும் போர்புரிந்து
யானையையும் கொன்றுவிடுகிறான்.

அதெபோல் சொல்லிக் கொடுத்த வசனத்தையும்
சங்கு ஊதி,
போர் நடுவே ஏற்படும் அமைதியில்
சத்தமாகச் சொல்கிறான்.
அவன் யானை என்ற சொல்லை உச்சரிக்கும் போது கண்ணன்,பார்த்தன் இருவரது சங்குகளும் எக்காளமிடத் துரோணர்,
அஸ்வத்தாமா மடிந்துவிட்டான் என்ற உணர்வு தாக்க
ரதத்தை விட்டு இறங்கி விடுகிறார்.

இதே போல இன்னும் சில இடங்களில்
கையாளப்படும் தந்திரங்களில்\பொய்கள்

நிறையவே இடம் பெறும்.
கௌரவர்கள் சொன்ன ப்ஒய்களைக் கணக்கு எடுக்க முடியாததால் விட்டு விடலாம்.

கவிதையில் பொய் சொல்லலாம்,
காதலில் பொய் உண்டு.
கல்யாணத்திலும் அதே.

இல்லறத்திலும் மட்டும் இல்லையா.
அங்கும் பொய்யில்லாமல் ஏதாவது நடக்குமா என்ன.

நான் எப்போதுமே உண்மைவிரும்பி என்று ,
கூடப் படிக்கும் மாணவியின்
உருவ அவலட்சணத்தைக் கூறு போடுபவர்களையும்
பார்த்திருக்கலாம்.

பொய்யும் நலமெ.
அதனால் நன்மை விளையுமென்றால்.
உங்கள் கருத்தென்ன?

Wednesday, October 18, 2006

சதிஅனுசூயா ஸ்ரீதத்தாத்ரேயா


ரி மஹ
அனுசூயா தவம் இருந்து வேண்டியது, மும்மூர்த்திகளின் எல்லா நலனும் பொருந்திய ஒரு குழந்தைக்காக.
நாரதர் அனுசூயாவையும், அவள் கற்பின் மேன்மையையும் பற்றிக் கூறிய புகழ் மாலையைக்
கேட்ட மூன்று தேவிகளுக்கும்
அவளை பரிசோதிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.

அவர்கள் ஏன் இந்த மங்கையைச் சோதிக்க வேண்டும் என்ற கெள்விகெல்லாம் இப்போது போக வேண்டாம்.
(என்னிடம் பதில் இல்லை என்பது வேறு விஷயம்:-) )
அவர்கள் உடனே தங்கள் தங்கள் பதிகளைஅத்ரிஷி சப்த ரிஷிகளில் ஒருவர். அவரின் ஒழுக்கம் மிகுந்த மனைவி அனுசுயா.
அவளுக்கு சதி அனுசூயா என்ற பெயர் வந்தது எப்படி என்பது அனைவரும் அறிந்ததே. அவளின் அழகே அதற்கு
முதல் காரணமாக இருந்தது. அவளின் அழகையும் பதிவிரதா தவத்தையும் கேள்விப்பட்ட மூன்று தேவியர், லக்ஷ்மி,சரஸ்வதி, பார்வதி தேவியரும் அவளைப் பரிசோதிக்க விரும்புவதாக கதை ஆரம்பிக்கும்.
நாரதர்தான் எப்பவும் போல் ஆரம்பிக்கிறார்.
அதற்கு முன்னாலேயெ அவருக்கு 'அனுசூயா குழந்தைவேண்டும் என்று' தவம் புரிவதும் தெரிந்து இருந்தது.
அதுவும் அவள் ஆசைப்படுவது சாதாரண குழந்தைக்கு இல்லை.
எப்பவுமே நாம் பெரிய பொருளுக்கு ஆசைப்பட்டு முயற்சி செய்தால்தான் கொஞ்சமாவது முன்னேறுவோம்
என்பது அவர்களுக்கு எந்த மெனேஜ்மெண்ட் வகுப்பில் சொன்னார்களோ.
அணுகி அனுசூயாவின் நேர்மை,பதிவிரதத்தைச்
சோதிக்க வேண்டும் என்ற தங்கள் ஆசையை வெளியிட்டனர்.
நமக்குத்தான் தெரியுமே, இந்த மும்மூர்த்திகளின்
பத்தினிகளின்  விரதம் பற்றி.
அவர்களும் யோசித்தார்கள்.. எப்படியும் அனுசூயாவின் தவம் நிறைவேற வேண்டும்,
அதற்காக அவளுக்குத் தங்கள் தரிசனமும் வேண்டும்
என்ற உயர்ந்த நோக்கத்துடன்,
அவ்ரகள் குடிலுக்கு சன்னியாசி வேடம் தரித்து செல்லுகிறார்கள்.

பவதி பிக்ஷஅம் தேஹி ''
என்ற மூன்று குரல்களைக் கேட்டு வெளியே
வந்த அனுசூயா வந்திருக்கும் மூவரின்
தேஜஸைப் பார்த்து வியக்கிறாள்.

அந்த நேரம் தன் கணவர் அங்கு இல்லையே
என்று தோன்றுகிறது.
நீராடப் போயிருக்கும் கணவர் சார்பாக
அவர்களுக்கு உபசாரம் செய்து உட்கார வைக்கிறாள்.

அவர்களும் தாங்கள் வந்த வேலையை முடிக்க,
அவளிடம் தாம் அங்கே உணவு உட்கொள்ள வேண்டுமானால் அவள் ஆடையில்லாமல் தங்களுக்கு

அன்னமிட வேண்டும் என்ற கோரிக்கையை
வைக்கிறார்கள்.
அந்தக் கணத்திலேயெ
அனுசூயாவிற்குப் புரிந்து விடுகிறது, வந்து இருப்பது

கடவுள்களே என்று.
தனக்கு வந்த சோதனையைச் சமாளிப்பது பற்றிச் சிந்திக்கிறாள்.

எப்போதுமே தன் கணவர் பாதங்களைச் சுத்தம் செய்து தன் சிரசில் தெளித்துக் கொள்ளும்
வழக்கம் அவளுக்கு உண்டு.
அந்த புனித நீர் இருக்கும் பாத்திரத்திலிருந்த

மிச்சம் உள்ள நீரை,
மனம் நிறைந்த பிரார்த்தனைகளோடு
முழு முதல் கடவுள்கள் மேல்
தெளிக்கிறாள்.
அவள் பிரார்த்திபடியே அவர்களும் சிறு குழந்தைகள்
ஆகி விடுகிறார்கள் .
ஏற்கனவே குழந்தைகளைப் பற்றி நினைத்து
ஏங்கி இருந்த அனுசூயாவுக்கு இந்த அழகுக் குழந்தைகளைப்
பார்த்ததும் தாய்மை உணர்வு மேலிடுகிறது.
பாலூட்டி, தொட்டிலில் இட்டுத் தாலாட்ட ஆரம்பிக்கிறாள்.
நீராடி வீடு திரும்பும் அத்ரி முனிவரும்
நடந்ததை தன் ஞானக்கண்ணால் அறிகிறார்.

அழகு கொஞ்சும் அந்தக் குழந்தைகளை ,
மூன்று சக்திகள்
ஒன்று சேரும் ஒரு குழந்தையாக ஆக்கிவிடுகிறார்.

அப்போதுதான் உருப்பெறுகிறார் தத்தாத்திரேயர்.

மூன்று தலைகள், ஆறு கரங்கள்
என்று
ப்ரம்ம ஞானம்,வைணவம், சைவ சித்தாந்தம்
என்று தத்துவங்களைப் புரிந்தவராக

தத்தாத்திரேயர் உருவாகி நின்றார்.

இதற்குள் கணவர்களைத் தேடி வரும்
லக்ஷ்மி,சரஸ்வதி,பார்வதி மூவரும் வருகிறார்கள்.
அதிர்ச்சி காத்து இருக்கிறது.
கணவர்களுக்குப் பதிலாக அவர்கள் சாயலில்
சிறுவன் நிற்கிறான்.
முனிவரிடம் அவர்களுக்கும் தயை செய்யும்படி வேண்ட

அவரும் மும்முர்த்திகளையும் விடுவிக்கிறார்.

அவர்களின் சக்தி தத்தாத்திரேயரிடம் தங்குகிறது.

அனுசூயாவுக்கும் அத்திரி முனிவர்க்கும் இன்னோரு புதல்வனும் பிறக்கிறான். அவன் சந்தாமா என்று
அழைக்கப் படுகிறான்.
அத்திரி,அனுசூயா வாழ்க்கையின் உச்சகட்டம் .

ஸ்ரீராமனும்,சீதை,லக்ஷ்மணனும்
ஆரண்யகாண்டத்தில்
அத்திரி ரிஷியின் ஆசிரமத்திற்கு வருகிறார்கள்.
சீதையை உபசரிக்கும் அனுசூயா அம்மா அவளுக்கு
ஆபரணங்கள் பூட்டி அலங்கரிக்கிறாள்.

இராமனுக்கே இன்னோரு தடவைக் கல்யாணம் நடந்ததோ என்று பிரமை ஏற்படுகிறதாம்.

இந்த ஆனந்தத்தோடு நாமும் விடை பெற்லாமா.

Saturday, October 14, 2006

திருக்குறுங்குடி நம்பி




நம்பி வருவோருக்கு நல்லது செய்பவன் நம்பியோ?
நம்பி என்றால் நல்லதொரு
ஆண்மகன் என்று பொருளாம்.

எம் பிரானை,ஆதியன் ஜோதியை, நம் பிரான்
அழகிய குறுங்குடி நம்பியை
சேவிக்கும் அதிர்ஷ்டம்

ஜெயா டி வி உபயத்தில் இன்று காலை கிடைத்தது.

நூற்றெட்டுத் திவ்விய தேசங்கள்
அத்தனையும் நேரே போய் பார்க்காத ,
அதிர்ஷ்டம்
சந்தர்ப்பம் வாய்ப்பு கிடைக்காத என் போல் சில
மக்களுக்கு இது நிஜமாகவே அரிய சேவை.

பொதிகையிலும் தினம் கோவில்
தரிசனம் கிடைக்கிறது.
பொதிகையில் (பாண்டி நாட்டு வைணவ)
நவதிருப்பதிகளையும்
போனவாரம்,

அவைகளின் முழு விவரங்களோடு
ஒளிபரப்பினார்கள்.
தலபுராணத்தை சுவையோடு கூறுவது யார் என்று
கணிக்க முடியாமல் போய் விடுகிறது.
அத்தனை பேருக்கும் நன்றி சொல்லிப்
பாராட்ட வேண்டும்.

நாம் தொடங்கிய இடத்திற்கே போவோம்.

எங்கள் மூதாதையர்களின் பிறப்பு இடம்
குறுங்குடி என்பதால் ஒரு தனி அபிமானம்.
19ஆவது நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்த்து
தான் எனக்கு அவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.

பாட்டி சொல்லுவார், கூப்பிடு தூரத்தில்
வைகுண்டம் அதனால் புண்னிய காரியம் நிறைய செய்ய வேண்டும் என்று.
சிறு வயதில் ஒரு தடவையே போக முடிந்த இடம்
திருக்குறுங்குடி.
கோவில் மதிலும் படிக்கட்டுகளும்,
மலைமேல் கோவிலும்
பசுமை வளப்பமும், தூசியுடன் மண் ரோடு
கலங்காமல் ஓடும் நம்பியாறு, களங்கமிலாத
மக்கள்.
ஓ,நீ அந்த வீட்டுப் பொண்ணா.
கேள்விகள்.//

ஒட்டியிருக்கும் வீடுகள்.
சுவருக்கு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நின்று பேசிக்கொள்ளும் பெண்கள்.

ஆற்றங்கரையில் குளித்து குடமும், தோளில்
துவைத்த துணிகளும் வாயில் நாராயண நாமமும்

கொண்டு வரும் இல்லத்து அரசிகள்.

எல்லோருக்கும் மங்கை,வல்லி,திருமலை,திருவேங்கடம்,
கிருஷ்ணா, ரங்கா,அலர்மேலு இப்படித்தான் இருக்கும்.

வீட்டுத்தலைவர்கள் பெயரும் இதே போல்
நம்பி, திருமலை, திருவேங்கடம்,
கிருஷ்ணா,ரங்கா,... இப்படி போகும்.
அதனாலே எனக்குக் குழப்பம் வரும்.

//பாட்டி நீங்க யாரைப் பத்தி இப்ப சொல்லறீங்க.

ரங்கா சித்தியா ரங்கா சித்தப்பாவா? என்று
கேட்ட நேரங்கள் உண்டு//

எல்லோருக்கும் நம்பிமேல் அலாதி பற்று.

இங்கேதான் திருமங்கை ஆழ்வார் இறுதி நாட்களைக்
கழித்தார்.
பெரியாழ்வார்,
திருமழிசையாழ்வார்,
நம்மாழ்வார்
என்று பெரியோர்களின்

மங்களாஸாசனம் வாங்கிக் கொண்டவன்.
இங்கேதான் கைசிகனுக்கு வைகுண்டப் ப்ராப்தி கிடைத்தது
நம்பியின் கோவிலில் நடைபெறும்
கைசிக புராணம்
கார்த்திகை ஏகாதசி அன்று விமரிசையாக
இரவு முழுவதும் விழித்திருந்து பார்த்தாக பாட்டி சொல்லுவார்.
வாக்குத் தவறாத ஒரு ஏழை திருமால் பக்தனின்
கதை.
நம்பாடுவான் என்றும் பெயர் அவனுக்கு.

மாலைப் பாடி மகிழும் அவனுக்கு ஒரு
பிரம்மராக்ஷசனால் அபாயம் ஏற்படுகிறது.
அதற்கு அவன் வாக்குக் கொடுக்கிறான். திரும்பி
வருவதாக.
அப்படியெ திருமாலைத் தரிசனம் செய்து திரும்பும்
அவனது நேர்மையைக் கண்டு நெகிழ்ந்த அந்த துர்ப்பாக்கிய ப்ரம்ம்ராஷசன்
ந்மபாடுவானிடம் தன்னைக் கரையேற்றச் சொல்லி வேண்டுகிறது.
அப்படியே அவனும் தன் புண்ணிய பலன்களைத் தத்தம் செய்து கொடுத்து அந்த சாபத்திலிருந்து விடுவிக்கிறான்.

இதுவே கைசிக புராணம் என்று அழைக்கப் படுகிறது.
இவ்வளவு பெருமை கொண்ட எங்கள் ஊருக்குப் போய் வாருங்களேன்.

Wednesday, October 11, 2006

மஹாபலிபுரம் 1978

ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்து எட்டில்
நாங்கள்
முதலில்
பார்த்த
கடற்கரைக் கோவில் காட்சிகள்
இவைகள்

மஹாபலிபுரம் தபால் அலுவலகத்தில்
எங்கள் அப்பா தலைமை அலுவலராக இருந்த 2 வருடங்கள் எங்களுக்கு மிகுந்த சுவாரஸ்யமான நாட்கள்.

பள்ளிபோகும் எங்கள் குழந்தைகளின் விடுமுறை நாட்கள்
அங்கே தான் செலவழியும்.

அப்போது ஒரு அமைதியான , உளிச் சத்தம் அதிகம் கேட்கும்

இடமாக இருந்தது மஹாபலிபுரம்.

எண்ணி முப்பது காரை வீடுகள்.
ஒரு பழைய கோவிலாக தலசயனப் பெருமாள்

பள்ளிகொண்ட திருத்தலம்.
அதை ஒட்டி நவீனத் தோற்றத்தை
அளிக்க முயலும் ஒரு ஜவுளிக்கடை.

நிறைய சிப்பி,சோழி இவற்றால் ஆன பொருட்கள்
விற்கும் நான்கு அல்லது ஐந்து கடைகள்.

வெளிநாட்டு டூரிஸ்டுகளுக்காக 'சம்மர்வைன்' என்று பெயர் வைத்த ஒரு இருளும் ஒளியும் கலந்த ஒரு டீக்கடை.

சிற்பக்கூடங்கள்.
ஒரெ ஒரு சின்ன பஸ் ஸ்டாண்ட்.
இரண்டு மணி நேரத்துக்கு ஒரு டிரிப்,
சென்னை செல்லும்
பஸ்.

அதை நம்பி பிழைக்கும் சோடா,பழக்கடைகள்.
மாமல்ல பவன் என்ற பெயர் தாங்கின சாப்பாடு,
டிபன்,காப்பி எப்போதும் கிடைக்கும்
ஹோட்டல் ஒன்று.
மனதுக்கு இதமான ,அதே சமய்ம தூங்கி வழியாத ஊராக இருந்தது.
கத்திரிக்காயும்,இளநீர்,முலாம் பழம் எல்லாம் கோடையில் 50 பைசா விலையில் கிடைக்கும்.
கொஞ்சம் பெரிய தர்பூசணி இரண்டு ரூபாய்.
மாசி மாதம் உற்சவம் போது வெளியூரிலிருந்து
வரும் கிராமத்துவாசிகள்.
பஞ்சி மிட்டாய், பீப்பி ஊதும் சிறுவர்கள்,
கலர் கலராக பனை விசிறிகள்,
ஆந்திராவிலிருந்து வந்து இறங்கும், திருப்பதியில்
முடியிறக்கம் செய்த பக்த கோஷ்டிகள்,.
வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தால் ஆளைத்தள்ளும் கடல் காற்றோடு இவர்களைப் பார்ப்பதே சுவையான பொழுதுபோக்கு.

இப்போது உலகம் மாறிய வேகத்தில் மாமல்லபுரமான மஹாபலிபுரமும்
வேடம் அணிந்த கிராமம் ஆகிவிட்டது.

நேற்று முன்தினம்
உறவினரை அழைத்த்ப் போனபோது அந்த அழகான கிராமம் எங்கெயோ ஓடிப் போயிருந்தது.
பழமையும் போகவில்லை. புதுமையும் விடுவதாக இல்லை.
உளிச் சத்தத்துக்குப் பதில் கட்டிங் மஷின் சத்தம்.
சிற்சில கூடங்களுக்குப் பதில் பெரிய

தூசி நிறைந்த மாஸ் ப்ரொடக்ஷன் செய்யும்
கலை(?)ப் பட்டறைகள்.

ஒரு ஹோட்டல் இருந்த இடத்தில் பல மூன்று நட்சத்திர விடுதிகள். நிரந்தரமாகக் குடியேறிவிட்ட வெளி நாட்டவர்,
போதை மருந்து நடமாட்டம்,

நாற்பதுக்கு மேற்பட்ட சங்கு,சோழி கடைகள்.
புரியாத தமிழ் பேசும் அன்னியர்கள்.

திருத்தி அமைக்கப் பட்ட அழகூட்டப் பட்ட கடற்கரைக்
கோவில்,
உட்கார்ந்து ரசிக்க முடியாத,
அழுக்கு நிறைந்த கடல் மணல்.
ஏமாந்தால் ஆளைத்தள்ளும் குதிரை ஓட்டிகள்.

நல்ல வேளை, கல்லில் வடித்ததால்
மாறாமல் இருக்கும் அர்ச்சுனனும், யானையும்,
சிங்கமும் கறைபடாமல் பாதுகாக்கப் பட்டு இருக்கிறார்கள்.
1300 வருடங்கள் பிழைத்துவிட்ட கலை வண்ணங்கள் என்றும் கதை சொல்லியபடி இருக்கும்.
அதுதான் அங்கெ உண்மை
அங்கே இருக்கும் கல்லில் வடிக்கப்பட்ட விவரங்களைப் படித்தால் பல்லவ மன்னர்கள் ஆயுள்

குறைவாகவே இருந்து இருக்கிறது.
அத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு சரித்திரம் படைத்த மா மல்லன் பெயர் நிலைத்து இருக்கும்.

சிவகாமி எந்தப் பாறையில் மானையும், கிளியையும் வரைந்தாளோ என்ற முணுமுணுப்போடு
விடைபெற்றேன்.

Monday, October 09, 2006

அதிசய காம்பினேஷன் புடவை


வழிவது என்ற சொல் எப்படி வந்து இருக்கும்.?

பாத்திரம், பண்டம் நிறைந்து விட்டால் வழிந்து ஓடும் அதே மாதிரி அணைக்கட்டு, பால் பொங்கி வழிவது எல்லாமே நமக்குத் தெரிந்த விஷயங்கள்தான்.





இப்பொது நான் சொல்ல வந்தது அந்த வழிவது இல்லை. பழங்கால வழிசல்.
எப்போதெல்லாம் இந்த அனிச்சை செயலை நாம்,இல்லாவிட்டால் மற்றவர்கள் செய்கிரார்கள் என்று பார்த்தால், முதல் காரணம் நம் புத்திசாலித்தனத்தின் மேல் நமக்கு இருக்கும் அபார நம்பிக்கை தான்.

ஒரு உற்சாக வேளையில், ( எங்களுக்கெல்லாம் புடவைகள், சினிமா, சாப்பாடு (சர்க்கரை ரத்ததில் இருந்தால் )அதை பற்றியே பேசத்தோணுமாம்) பற்றிப்பேசும்போது தனியாக ஒரு உற்சாகம் பிடித்துக்கொள்ளும்).

என் தோழி தான் வாங்கின கைத்தறி புடவையை சிலாகித்துப் பேசி எல்லாரையும் அசத்தினாள். அந்த ஊரில் நெசவாளிகள் கஷ்டப்படுவதையும் தான் எல்லோருக்கும் அங்கிருந்து தறி விலைக்கே தருவித்துக் கொடுப்பதாகவும் உணர்ச்சி பொங்கக் கூறும் போது தான் மாட்டிக்கொண்டாள்.

{ஓ ஈ என்று இப்பத்திப் பசங்க சொல்றது} இதோ

அவள்,"" இந்த மாதிரி நீங்க பார்த்தெ இருக்க முடியாது.நீலத்திலெ ப்ளூ ஸ்பாட்ஸ்,ப்லாக்கிலே கருப்பு பொட்டு,சிவப்பிலே ரெட் பார்டெர் "" என்று அடுக்கிக் கொண்டே போனாள்.எங்களுக்கு அவள் பேச்சின் தீவிரம் உரைத்ததே ஒழிய அதிலிருந்த காமெடி,முரண் புரியவில்லை.

"உண்மையாகவா? எல்லாம் புதுப் புது அமைப்பாக இருக்கிரதே. நீலத்திலே ப்ளூ!!. ரேர் காம்பினஷன்"!!! நம்ம எல்லோரும் சேர்ந்து வாங்கினால் அந்த தறிக் குடும்பத்துக்கு உதவி. செய்த மாதிரி இருக்கும். ,என்று


ஆளுக்கு 2 கருப்பிலே ப்லாக் புட்டா, ரெட்டிலே சிகாப்பு பார்டர் என்று அவரவர் கற்பனையில் மூழ்கின போதுதான்,அடச்சே என்று விழித்துக்கொண்டோம். அவள் சொன்னதைதிருப்பிச் சொல்லும்போது நாங்கள் செய்த வண்ணக் கனவு புடவைகள் சாயம் இழந்தன.


ஓ, இந்த வெய்யில் என்னை குழப்பி விட்டது. உங்களுக்குப் பிடித்த எப்போதும் உடுத்தும் துணிமணிகளே வாங்கலாம் என்று அவசர அவசரமாக நடையைக் காட்டினாள்.

நாங்கள் நினைத்து நினைத்து சிரித்தோம். அதிலிருந்து நாங்கள் அவளை " அ ரேர் காம்பொ " என்றுதான் அழைக்கிறோம். // posted by manu (வல்லி சிம்ஹன்)@ 8:41 PM Comments:

நீளும் பாதை-தொடும் வானம் பூக்கும்




பாதை நீளும்போது
சிலபல சிந்தனைகள்
சோதனைகள்
சாதனைகள்.
வானம் தொடும் வரை
ஆக்கம் வேண்டும்.

சோர்விலா உழைப்பு
எதிர்பார்க்கும்
பரிசு இந்தப்பூதான்.
என் பேத்தியின் சிரிப்பைப் பார்த்ததும்
எனக்குத் தோன்றிய சிந்தனை.
அவளுக்கு நன்றி.
நீண்டு வாழ்ந்து சிரித்து இருக்கட்டும்.

Friday, October 06, 2006

மருதமலை முருகன்


அப்பனே முருகா இது வீட்டில அடிக்கடி கேட்கும் சப்தம்.
என்னடா பெருமாள் உலாவும் இடத்தில் இந்த முருகசாமி எங்கேருந்து வந்ததுனு கேக்க முடியாது.
அதுவும் இந்த மருதமலை முருகன் இருக்கானே இவன் எங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது
மலையிலிருந்து ஜோதியாகப் பார்த்து இருப்பான்.
காலையில் எழுந்ததும் சேவிக்க,
சூரியன் வருமுன்னே
மருதமலை நீல விளக்குக் கண்ணில் பட்டுவிடும்.
அரோகரா ஷண்முகா ஆறுமுகா ,குமரவேளே
என்று அவனைக் கைகூப்பிவிட்டுத் தான் கேட்டே{வாசல்}
திறப்பேன்.
கோயம்பத்தூரில் நாங்கள் இருக்கும்பொது(எங்க வீட்டுக்காரர் வேலையும் 3 வருஷத்துக்கு ஒரு
ஊரு.) எங்கள் வீட்டு வாசலில் இருந்து மருதமலை தெரியும்.
இப்போது அந்த எஸ்.ஆர்.பி நகரெல்லாம்

எப்படி மாறி இருக்கோ.
அப்போதெல்லாம் மருதமலை முருகனும் குருவாயூரப்பனும் மிக நெருக்கமாக
இருப்பார்கள். எப்போது வேண்டுமானாலும்
போய்ப் பார்க்கலாம்.

எங்க மாடி வீட்டு அம்மாவுக்கு குருவாயூரப்பனுக்குத்
தினம் பாலும் தேனும் தரவேண்டும்.
மாடியில் பூஜை மணி அடித்ததும்
எங்க வீட்டுப் பசங்க ஓடிவிடும்..

தினப்படி தேன்,கல்கண்டு கிடைத்தால் கசக்குமா.

அப்போது மழைக்கும் வெயிலுக்கும் மாற்றி மாற்றி
வரும் சளித்தொந்தரவு
பாடாய்ப் படுத்தும்.
அப்போது முருகன் விபூதி கொடுத்து

மார்பில் தடவச் சொல்லுவார் அந்த அம்மா
அசல் பழனியாண்டியாகி விடுவான் பையன்.
விக்ஸ் வேப்பரப்+ விபூதி நல்ல காம்பினேஷனாக வேலை செய்யும்.

காதிலோ தொண்டையிலோ தொந்தரவாயிருந்தாலும் ஒரு பால் அபிஷேகத்துக்கு சொன்னால் போதும்.

அப்போதுதான் தெரியும் இந்த மருதமலை முருகனுக்கு
நோய் தீர்க்கும் சக்தி அதிகம் என்று.
முனிவர் ஒருவர் தாகம் தாளாமல் மலையில்
மரத்தடியில் உட்கார்ந்து 'முருகா தண்ணீர் தண்ணீர்'
என்று அரற்றியதாகவும்
உடனே பெருமான் அருளால் தண்ணீர் ஊற்று
வந்ததாகவும் ஐதிகம்.

அவர் மருதமரத்தடி வேலா, மருதாசலபதி
என்று அழைத்ததால்
அந்த மலையே மருதமலை ஆனதாகச்
சொல்லுவார்கள்.
ஒரு குன்றும் குமரனும் மீண்டும் இணைந்தனர்.

எல்லா முருகன் பாட்டும் அழகு. ஆனால் மதுரை சோமு அவர்களின்
'மருத மலை மாமணியே
முருகய்யா' என்ற உருக்கும் குரல் எல்லோரையும்
கட்டிப் போடும்.

அவனுக்கு எங்கள் சார்பில் செலுத்த வேண்டிய
காணிக்கையும் இருக்கிறது.

குடும்ப அங்கத்தினர்கள் ஒன்று சேரும்போதுதான் போக முடியும் .
பார்க்கலாம் எப்போது கூப்பிடுகிறான் என்று.

Sunday, October 01, 2006

விடுதலை-தேன்கூடு போட்டிக்கு

விடிவை  நோக்கி















விடிவை நோக்கி ################# சிறு நெடுங்கதை
******************************************************

வெளிச்சத்துக்கு வந்ததும் வினிதாவின் கண்கள்
மூடித்திறந்தன.
நெஞ்சு படபடப்பு அடங்கி சுவாசம் சீரானது.

கதவைச் சத்தமில்லாமல் மூடி வராண்டாவிலிருந்த
கூடை நாற்காலியில் அமர்ந்தாள்.

காய்கறிக்காரியின் குரல், பேப்பர் விற்பவன்,
பக்கத்து வீட்டுப் பாப்பாவின் செல்ல அழுகை, அதை அமர்த்தும் அதன் அம்மாவின் குரல்
எல்லாமெ தான் இன்னும் உலகத்தில் வாழ்கிறொம் என்ற தெம்பைக் கொடுத்தன.

உள்ளிருந்து வந்துவிடுமோ சத்தம் என்று ஒரு காது
மட்டும் தயார் நிலையில் இருந்தது.

ஏன் தனக்கு மட்டும் இந்தக் கொடுமை.

தான் எந்த வழியில் தப்பு செய்தோம்.
பாதை ஏன் திருமணமான மூன்று வருடங்களில்
மாறியது?
யார் காரணமா?
வேலையில் தொந்தரவா,
கெட்ட சகவாசமா.?
தன் மேல் சலிப்பு வந்துவிட்டதா?

ஒரு கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை.
அழகான ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமான
குடும்பத்தில் ஒரே ஒரு பதவி உயர்வு

இத்தனை போராட்டங்களைக் கொடுக்குமா என்று அந்த
மனசு யோசித்தது.

திறமையான கணவன், அவனுடைய
தனியார் அலுவலகத்தில் நல்ல உழைப்பாளி என்ற
பெயர் வாங்கினவன்.

சிவசங்கரி அம்மா கதைகளில் வரும்
ஹீரோ போல மென்மையானவன்.
திருமணமோ காதல் திருமணம்.

பிறர் பார்த்துப் பொறாமைப் படும்
சிறிய குடித்தனம்.
ஒரு ஜாவா பைக்கில் குடும்பமே
கோவை மாநகரை வலம் வந்து விடுவார்கள்.

ஒரு நாள் ராமர் கோவில்,ஒரு நாள் மருத மலை
ஒரு நாள் ஆர்.எஸ், புரம் பானிப் பூரி கடை.

100' ரோடில் கடைகளில், ஒன்று விடாமல் ஏறி இறங்கி
மாமியார், மாமனார் உட்பட எல்லோருக்கும் கூல்
காட்டன் ரெடிமேட் உடைகள்.

பெண்ணுடைய முதல் பிறந்த நாளுக்கு பட்டுப் பாவாடை.

ஒன்றுமே குறைவில்லை.

கணவனுடைய அலுவலகத்தில்
அவனுக்கு ஜூனியருக்குப் பதவி
ஏற்றம், அதுவும் எப்படி இவனுக்கு
மேற்பார்வையாளராக. வரும் வரை.

அவனால் அதைஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தான் வஞ்சிக்கப் பட்டதாக
எண்ணினான்.
வினிதாவுக்கும் வருத்தம் தான்.

கணவனுடைய மன அழுத்தம் அவளையும் தாக்கியது.
எத்தனையோ ஆறுதல் சொன்னாள்.
மரமேறிய மந்திக்குத் தேன்கூடு கிடைத்தது போல
ஒரு தோழனும் வந்தான்.
கட்டுப்பாடோ, அமைதியோ இல்லாத
குடும்பம் அவனது.
தோழன் தன் வீட்டிற்கு இவர்களை
அழைக்க இவர்களும் ஒரு மாற்றுக்காக அங்கே போக,
ஆரம்பித்தது குடிப் பழக்கம்.
ஒரு வார இறுதி அங்கெ.
மறு வாரம் இவர்கள் வீட்டில்.வெறும் பீர்
என்று ஆரம்பித்து,
ஹார்ட் டிரின்க்ஸ் என முன்னேறியது.
இதற்காகவே புதிய நண்பர்கள் சேர
சம்பாதிக்கும் நல்ல சம்பளம்
சரசரவெனக் குறைய ஆரம்பித்தது.

முதலில் கணவன் சந்தோஷத்தைத் தானும் மகிழ்ச்சியாக
இருந்த வினிதா,
கொஞ்ச நாளுக்குப் பிறகு,
வரும் நண்பர்களுக்குத்
தோசையும் புலவும்
செய்து கொடுத்து சலித்தாள்.

வீட்டில் அமைதி குறைந்தது.
கணவன் வெளியில் கடன் வாங்குவதும் தெரிந்தது.
பிளே ஸ்கூல் செல்லும் குழந்தைகள் பள்ளி முடிந்து
வீட்டுக்கு வரவே பயந்தனர்,.
'ஏம்மா, அப்பாவுக்கு ஆஃபீசில் இவ்வளவு லீவு கொடுக்கிறார்கள்?'
என்று கேட்கும் குழந்தைகளைக் கவனிக்க
முடியாத அளவு
பழக்கம் வளர்ந்து விட்டது.
எவ்வளவு பெரிய ஜெண்டில்மேன்தன் கணவன் என்ற
மாயையிலிருந்து விலகி அவனைப் பார்த்து பயப்பட ஆர்மபித்தாள்.

உலகத்தில் எல்லோரும் நார்மலாக இருக்கும்போது இதென்ன இப்படி ஒரு அரக்கன் நம் கணவரைப்
பிடித்துவிட்டானே என்று வழி தெரியாமல் மருகத் தொடங்கினாள்.

அவனுடன் உறவாடிக் கெடுப்பவர்களை விலக்க நினைத்து
தோல்வியாயிற்று.
அன்றும் அப்படி ஒரு நிதானத்தில் இல்லாத தருணத்தில் வெளியே போக முயற்சித்தவனைத்

தடுத்துத் தனக்குத் தெரிந்த சாம தான பேத தண்ட முறைகளை உபயோகித்து
அவனைத் தூங்க வைத்து வெளியெ வரும்போதுதான் நாம் அவளைப் பார்க்கிறோம்.

அந்த நிலைமையில். வேலைகூடப் பறி
போகுமோ என்ற கடைசித்தரு ணத்தில்
'ஒரு மனிதனின் கதை''
படித்த ஒரு தோழி அவளுக்கு வழி இருப்பதைச் சொன்னாள்.

தீர்மானத்துக்கு வந்த வினிதா, கணவனின் அலுவலக

மேலாளரைப் பார்த்து தன்
எண்ணத்தைச் சொன்னாள்.
அவரோ ஒரு கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு வழியில் வந்த அதிகாரி.சற்றே வயதானவர்.
அவருக்கு
குடிப்பழக்கம் ஒரு வியாதியாக இருக்கக் கூடும் என்று
நம்ப முடியவில்லை.
எப்பவுமே அவருக்குச் சின்ன வயதிலேயெ
இவ்வளவு பெயரும் புகழும் கிடைத்த

வினிதாவின் கணவனிடம் அவ்வளவு மதிப்புக்
கிடையாது. மதிப்பைத் தக்கவைக்க முடியாத
சஞ்சல புத்திக்காரன் என்று நினைப்பு.

எவ்வளவு முட்டுக்கட்டைப் போடமுடியுமோ அத்தனையும்
போட்டுக் கடைசியில் சம்மதித்தார்.
சிகித்சை முடிந்து பிறகு வேலையில் சேரலாமென்ற
விதிகளோடு வினிதா வீடு திரும்பினாள்.
அடுத்த கட்டமாக வட மாநிலத்தில் வேலையில்
இருந்த தன் மாமனார், மாமியாருக்குக் கடிதம்
எழுதி தங்கள் இரண்டு குழந்தைகளையும்
அவர்கள் கவனத்தில் விட வேண்டிய
அவசியத்தை எழுத அவர்களும்
நிலைமையின் அவசியத்தைப் புரிந்து வந்து சேர்ந்தனர்.

அதற்குள் இரு முறை அதிகமாகக் குடித்ததில்
இருதய வலி வந்து அவஸ்தைப்பட்டக்

கணவனை அழைத்துக் கொண்டு ,வினிதா சென்னை வந்து
சேர்ந்தாள்,.

போதை மாற்று சிகிச்சை செய்யும்
அந்தப் பிரபல மருத்துவ மனையில்
தனது அன்புக் கணவனைத்
திரும்பவும்

சாதாரண மனிதனாகப் பார்த்தவளின்
அழுகை அடங்க வெகு நேரமாகியது.

அங்கு அவளுடைய உள் மனக் காயங்கள்

ஆறு வதற்கும் மனநல மருத்துவர்களிடம்

பயிற்சி

பெற்றவள் முகத்தில், இப்போது சிரிப்பைப் பார்க்க முடிகிறது .
இப்போது இன்னோரு பெண் குழந்தையும் அவர்கள்
வாழ்வில் வளம் பெருக்க வந்தது.

ஒருவர் மனநலத்தோடு ,சுய புத்தியோடு இருந்தாலே

அதுதான் உண்மையான விடுதலை என்று நான்
நினைக்கிறேன்.

அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
இப்பவும் வினிதாவைப் பார்க்க நேரும்போது

நான் எதாவது சொல்லி அவளைப் புகழ முற்பட்டால் அவளுக்குப் பிடிக்காது.
'என்னக்கா, என் புருஷன் எனக்கு வேணும்னு நினைச்சேன். கடவுளும் அருளினார்'' என்று
சுலபமாக முடித்து விடுவாள்,
இந்த நவீன சாவித்திரி.