Blog Archive

Saturday, September 30, 2006

சரஸ்வதி பூஜை விஜய தசமி வாழ்த்துக்கள்


வெண்தாமரை அமர்ந்து
அருள் வீணை மீட்டி
அளவில்லாக் கருணை
அமுதையூட்டி
மாந்தர் உள்ளங்களில்
ஒளிகொடுத்த,
அம்மா சரஸ்வதி,,
என்றும் தெளிவுக்கு
வழிகாட்டு.
அனைவருக்கும் சரஸ்வதி,விஜயதசமி
பூஜை வாழ்த்துக்கள்.

Friday, September 29, 2006

பொதிகை தரும் தென்றல்





பொதிகை என்றதும் நினைவுக்கு வருவது

சாரல், இதமான காற்று. அருவியின் ஓசை,

அருவியை ஒட்டிய வீடுகளைக் கொண்ட அதிர்ஷ்ட மனிதர்கள்.

திருப்பதி செல்லுவது போல் குற்றாலத்துக்குச் செல்வதையும் குறிக்கோளாகக் கொண்ட

சில நண்பரகள்.

குற்றாலம் அனுபவித்த மாமனிதர்கள்.

அவர்களைப் படித்து ,தெரிந்து களிக்கும் நாம்.

இப்படி இன்னும் எத்தனையோ பெருமை வளர்

இன்னும் ஒரு நன்மையும் செய்கிறது.

நம் தொலைக்காட்சி வழியாக வரும் பொதிகைச்

சானலைத் தான் சொல்கிறேன்.

முன்பு தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலத்திலும்

நாம் பல நல்ல விஷயங்களைக் கண்டிருக்கிறொம்.

இப்போது இன்னும் மெருகேறி

கமர்ஷியல் என்னும் இனிப்பு (தடவிய நச்சு) கொஞ்சமே பரவி நல்ல சேவைகளைக் கொடுத்து வருகிறது.

நம்பிக்கையுடன் எந்த நேரம் பொதிகைக்குப் போனாலும், சீரியல் நேரங்களைத்தவிர,

நன்மை தரும் பலநிகழ்வுகளைக் காண முடியும்.

எல்லாத் தரப்பினருக்கும் பரபரப்பு இல்லாத நிதானத்துடன் ரசிக்க,

காலையில் நல்ல கர்னாடக இசை, பிறகு

விவசாயிகளுக்காக, அப்புறம்

காலைத் தென்றல்.

காலைத் தென்றல் ஒரு அனுபவமாகத் தினம் மலர்கிறது.

தினம் ஒரு குறள்.

அதை விளக்கிச் சொல்ல கற்றவர்கள். காலைதென்றல் நமக்கு அளிக்கும் திருமதிகள் விமலா,ஜயஸ்ரீ, சுதா மற்றும்

குறளை அழகாகப் பாடிக்காட்டும் உத்ரா,திருமதி. சித்ரா(அன்பான சிரிப்பு இவருடைய டிரேட் மார்க்),

திருமதி ஜயந்தி,

இவர்களுடன் இணைந்து , முரண்படாமல்

கவிதையாகப் பொழியும் நெல்லை ஜயந்தா, கவிஞர் யுகபாரதி , கதைகள் நீதியோடு வழங்கும் திரு

நந்தலாலா என்று பண்பட்ட படைப்பாளிகள்.

பெயர் விட்டுப் போனவர்கள் இருக்கக் கட்டாயம் வாய்ப்புண்டு.

ஏனெனில் ஒரு நிமிடம் தப்பினால் கூட, அவர்கள் பெயர் வந்து மறைந்துவிடும்.

இப்போதுதான் 2 வருடங்களாகப் பொதிகையைப் பார்ப்பதால்,

இன்னும் எத்தனை நிகழ்ச்சிகளை தவற விட்டேனோ என்று ஏக்கமாக இருக்கிறது.

தினம் தினம் புதிய நிகழ்ச்சிகள்.

கோவில்கள், கூடவே வரும் அருமையான சத்தம் இல்லாத வர்ணனை.

பிரபலங்களின் சந்திப்பு,அவர்கள் பேசும்போது

குறுக்கிடாத ,ஆனால் பயனளிக்கும்

இதமான கேள்விகள்.

இன்று கூட கணினி வல்லுனர், எழுத்தாளர் திரு.என்.சொக்கன் அவர்களின் பேட்டி

இருந்தது.

இதே போல வாரந்தோறும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்

ஏராளம்.

எங்கள் காலைகளை வளப்படுத்தும்

பொதிகைக்கும் காலைத்தென்றலுக்கும் நன்றி.

Wednesday, September 27, 2006

வேறு யாரும் துணை இல்லாத போது..

டிசம்பர் மாதம் மிகவும் பிடித்தமாதம் எனக்கு.
படிக்கும் காலத்தில் பரீட்சை முடியும் . 15 நாட்கள் லீவு கிடைக்கும்.
படித்தபோது பெற்றோர் இருந்த
திண்டுக்கல் நல்ல சீதொஷ்ணத்தோடு இருக்கும் சில மாதங்களில் டிசம்பரும் ஒன்று.

படிப்பு, திருமணம் குழந்தைகள் பிறந்து அவைகளும் பள்ளி செல்ல ஆரம்பித்ததும் அவர்கள் லீவு நாட்களும்
இனிமையாகக் கழியும்.

அதனால் ஒரு டிசம்பர் சோதனையாக மாறும் என்று நான் நினைக்கவே இல்லை.
அப்போது நாங்கள் திருச்சியில் இருந்தோம்.

சிறு குழந்தைகள். ஒரு நாள் சாயந்திரம்
இவர் வீட்டுக்கு வரும் போதே கடும் காய்ச்சலுடன் வந்தார்.
எப்போதும் எதற்கும் அலட்டிக் கொள்ளாத ஆசாமி
சுருண்டு படுப்பதைப் பார்த்து
பயமாகி விட்டது.
சரி ஜுரத்துக்கு மருந்து கொடுப்போம் என்று ரசம் சாதமும்
பிறகு பாராசிடமால் ஒன்றும் கொடுத்து
தூங்கலாம் என்று பார்த்தால் இரவு 10.30 மணி வாக்கில் உடல் நெருப்பாகக் கொதிக்க சப்தமாக முனக ஆரம்பித்து விட்டார்.
குழந்தைகள் அரண்டு விட்டன.
அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் ஏதொ அலுவலாக வெளீயூர் போயிருந்தார்கள். நாங்கள் இருந்த மன்னார்புரம்
அப்போது அவ்வளவாக ஜனநடமாட்டம்
இல்லாத இடம்.

வெளியே டெர்ரஸில் வந்து மலைக்கோட்டைப் பிள்ளையாரை (விளக்குகள் தெரியும்) வேண்டிக்கொண்டு,

கீழே போய், ரோடு தாண்டினால் இருக்கும் ஒரு காலேஜ்
ஹாஸ்டலில் மாணவர்களிடம் டாக்டர் கிடைப்பாரா என்று தெரிந்து கொண்டு
அவரை அங்கிருந்த போனிலேயே
எங்க வீட்டுக்கு வரச்சொல்லி
வேண்டிக்கொண்டேன்.
அப்போதுதான் அங்கிருந்த காலண்டரில்
நம்ம சமயபுரம் அம்மா இருந்தது தெரிய வந்தது.

சாமி ஞாபகம் வருவது நமக்கு எமர்ஜென்சி டையத்தில் தானே. உடனே அவளைக் கைகூப்பிக் காப்பாத்து
என்று சொல்லி விட்டு,
வீட்டுக்குத் திரும்பினேன்.
டாக்டர் எங்கேயோ இருப்பவர். பெயர் கூடத் தெரியாது.
முப்பத்து இரண்டு வருடங்கள் முன்னால்
இப்போது இருக்கும் தெளிவோ
துணிவோ கிடையாது. :)))
ஆனால் டாக்டர் சொன்னதென்னவோ பெரிய வார்த்தை.
இவர் மேல் அம்மா வந்து இருக்கிறாள் என்று.
சிக்கன்பாக்ஸ்.

அறியாமை ,பயம் நிறைய என்னை ஆட்கொள்ள
அடுத்த வேண்டுதல் சமயபுரத்து மாரியிடம்தான்.

நீ காப்பாத்து என்பதைத் தவிர அந்த இரவு வேறு எந்த வார்த்தைகளும் என்னிடமிருந்து.

டெலிபோன் எல்லாம் வீட்டில் அப்போது கிடையாது.
காலை நெருங்கும்போது கொஞ்சம் தெளிவு வந்தது.

எங்கள் வீட்டு வேலைக்கார அம்மா பேரு மேரி.
அவங்க வந்ததும் அவரிடம் நானும் குழந்தைகளும்
அடைக்கலம்.

அவர்தான் எங்களைத் தேற்றினார்.
அய்யா வயசில (34) பெரியவரு இல்லை. வந்தா எல் லாம் கொஞ்சம் பயமாக இருக்கும்.
20 நாளில் எல்லாம் சரியாகி விடும்
என்று எனக்கு இந்த சமயம் செய்ய வேண்டிய பத்திய சாப்பாடு, வேப்பிலை பற்றி எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.
மறக்காமல் கடைக்குப் போய் (அப்போது) இரண்டு ரூபாய் விலையில் சமயபுரம் அம்மாவின் படமும் வாங்கி வந்தார்கள்.

என் பெற்றொருக்கும் இவர் பெற்றொருக்கும் கடிதங்கள் எழுதி போஸ்ட் செய்யச் சொன்னேன்.
பதில் 2 நாள் கழித்து வந்தது.
இருவராலும் வரமுடியாத நிலை.

அப்போது எனக்கு இன்னும் தைரியம் வந்தது.
கூடவே இந்த மூன்று குழந்தைகளுக்கும்
பரவி விட்டது.
அப்புறம் கேப்பானேன்.

எல்லோருக்கும் தயிர் சாதம், இளநிர்,
பச்சை வெங்காயம், பூண்டு போட கீரை,
தக்காளி சூப்.
இதெதான் காலையும் மாலையும்.

இரு வாரம் சென்றதும் மேரியம்மா
பருத்திக்கொட்டை கொண்டு வந்தார்.
எதற்கு என்றபோது அவைகளை ஊற வைத்து
பால் எடுத்து இவர்கள் குடிக்க வேண்டும் என்று

எடுத்து வைத்தார்.
இதுவரை பருத்தியும் பசுவும் தெரியும்
மனிதர்கள் சாப்பிடுவார்கள் என்று தெரியாது.
வேப்பிலை மஞ்சள் அரைத்துக் கொடுப்பது,
எப்போதும் துணையாகப் படுப்பது
என்று
சமயசஞ்சீவியாக வந்தது, காப்பாற்றியது அந்த அம்மாதான் என்று உணர்கிறேன்.

இது எங்கள் எல்லோருக்கும் சேர்ந்து
அனுபவமானதால் இன்னும் குடும்பத்தில் நெருக்கம்
சேர்ந்தது.
ஏனெனில் அப்பா என்பவரைப் பார்ப்பதே
குழந்தைகளுக்கு அபூர்வம்.
மூன்று வாரங்கள் அப்பா வீட்டில் ிருந்து
அவர்களோடு கதை பேசினது,
எல்லாம் நல்ல விதமாக முடிந்தது.
நாங்களும் சமயபுரம் 3 வாரங்கள் போய் வந்தோம்.
மேரியம்மாவுக்கு நான் என்ன கொடுத்து
கடன் தீர்க்க முடியும்?
அவருடைய இஷ்ட தெய்வமான வேளாங்கண்ணி அம்மாவுக்கு மெழுகு வர்த்தி ஏத்த சொன்னார்கள் செய்து விட்டேன்.
கால்த்தில் செய்த உதவி.
அவர்கள் பேரன் பேத்தி கல்யாணங்கள்
முடிந்தததாக் அறிந்தேன்.
நான் தினமும் செய்யும் வழிபாட்டில் மேரிக்கு எப்போதும் இடம் உண்டு.
திக்கற்றவற்குத் தெய்வமே துணை.
தெய்வம் மனித ரூபத்தில்
வந்து விட்டது.

Sunday, September 24, 2006

நன்மை செய்யும் கோபம்





இங்குள்ள இராமனின் கோபம் நன்மையில் தான் முடிந்தது.
கிருஷ்ணனின் கோபம் உங்களுக்குச் சொல்ல இந்தப் பதிவு.
அத்துடன் அம்பரீஷ அரசனின்
மகிமையும் இன்னொரு சுவையான
நிகழ்ச்சி.

மஹாபாரதப் போர் ஆரம்பித்தவுடன்
அர்ஜுனனின் பக்கம் கண்ணன் இருப்பது முடிவானது. கண்ணனின் சேனைகள் கௌரவர் பக்கம்.
சகுனிக்குத் துரியோதனின் பேரில்
கோபம் வந்தது. கண்ணனோட சக்கராயுதம் ஒன்றே போதுமே நூறு சேனையை அழிக்க. நீ ஏமாந்து விட்டாய்.
போய்த் திருப்பி அவனைக் கேள். "நீ ஆயுதம் எடுக்கக் கூடாது என்று" ஏவிவிட்டான்.
கண்ணன் முதலிலேயெ தீர்மானம் செய்த விஷயம் அது.

துர்புத்தி சகுனிக்கு அது தெரிய நியாயம் இல்லை.
ஆனால் பீஷ்மருக்கு ஒரு சபதம்.

வாழ்க்கை பூராவும் பிரம்மச்சாரியாக
இருக்கத் தீர்மானித்ததைச் சொல்லவில்லை.

இந்த யுத்தத்தில் கண்னனை ஆயுதம் எடுக்க
வைக்க வேண்டும் என்பதே.
கண்ணன் கையால் மோக்ஷம் வேண்டும்
என்ற ஆசைதான்.

போர் அரம்பித்து உக்கிரமாகப் போகிறது.
இரண்டு தரப்பிலும் சில பல நபர்கள்
மறைகின்றனர்.

தேரோட்டியாகப் பணிபுரியும் கண்ணன்
அர்ஜுனனிடம் பீஷ்மரை வீழ்த்த வேண்டிய அவசியத்தை உணர்த்தித் தேரைப் பீஷ்மரைப் பார்த்து ஓட்டுகிறான்.

அவ்ோ இவனுக்காகத்தானெ காத்து
இருக்கிறார்.
அருச்சுனன் மேல் சரமழை வந்து விழுகிறது.
அதையெல்லாம் அவ்ன மேல் விழாமல் தன் மார்பில் வாங்கிக் கொள்ளுகிறான் கண்ணன்.
பார்த்தனுக்கொ வருத்தம்.

நிராயுத பாணிக் கண்ணனுக்கு அடி படுகிறதே என்று.

மேலும் மேலும் தன் தாத்தாவைத் தாக்குகிறான்.
அவரோ அசராமல் அம்புகள் விடும்போது
ஒரு அம்பு அருச்சுனன் மேல் தைத்துவிடுகிறது.

வருகிறதே கோபம் கண்ணனுக்கு.
தான் கஷ்டப்பட்டால் அவனுக்கு வ்ுத்தம் இல்லை.

தன் பாகவதனான பார்த்திபனுக்கு வலி என்றால்
அவன் நிலை மறந்தான்.
எங்கேயோ மறைந்து இருந்த சக்கிராயுதம்
வந்துவிட்டது அவ்ன கையில்.
இதோ தொலைத்து விடுகிறேன் இந்தக் கிழவரை!!

என்று தேரிலிருந்து குதிக்கிறான்.
பீஷ்மரோ பார்த்தார். அவர் நினைத்தப்
பூஜித்த தருணம் வந்தது என்று
ஆனந்தத்தோடு,
கண்ணா, வாசுதேவா,கோவிந்தனே
காக்க வா என்று
கண்ணன் வரும் ஆவெசக் கோலத்தின் அழகைப்
பார்க்கிறார். அவர் கண்ணில் நீர்ச்சரங்கள்
மழையாக உதிர,
கண்ணனுக்குத் தன் சபதம் நினைவு வருகிறது.
ஆஹா, ஏமாற இருந்தோமே என்று
நின்று விடுகிறான்.

தலைவனின் நோக்கு அறிந்த சக்கரமும்
திரும்பிவிடுகிறது.
பீஷ்மர் ஏமாந்தவராய்த் துவங்குகிறார் மறுபடி.
ஒரு க்ஷணத்தில் தன் விடுதலை தடைப்பட்டதை எண்ணுகிறார்.

இதே போல ஆனால் எதிர்மறையாகக் கண்ணன்
கோபம். போவதைப் பார்ப்போம்.
அம்பரீஷன் என்ற மன்னன்
விஷ்ணு பக்தன். அதீதமான நம்பிக்கை
சம்பிரதாயங்களில்.
நித்திய வழிபாடு,அனுஷ்டானம் எல்லாவற்றையும்

அனுசரிப்பவன். ஏகாதசி,உபவாசம்,துவாதசிப் பாரணை
விடாமல் செய்பவன்.
அப்படி ஒரு ஏகாத்ி பூரண உபவாசத்துடன் முடிகிறது.
அடுத்த நாள் துவாசியைச் சீக்கிரம் முடிக்க வேண்டும்.
அதற்கு அப்போதெல்லாம் நேரக் கணக்கு உண்டு.

அந்த நேரம் பார்த்து வந்தார் துர்வாச மஹாரிஷி.
அவரைப் பற்றித்தான் தெரியுமே. // பிடி சாபம் //அவருடைய
மறுபெயர்.
மன்னனைப் பார்த்து 'காத்திரு. நதி நீராடி வருகிறேன்' என்று சொல்லிக் குளிக்க தன் சீடர்களோடு
போனார்.
அம்பரீஷனும் காத்துப் பார்த்தான்.
பாரணை முடிக்க வேண்டிய நேரம் வந்ததால்
தயங்கினான்.
அவனுடையா குரு வார்த்தையை மேற்கொண்டு துளி துளசித் தீர்த்தம் பருகினான்..
அதுவும் வரம்புக்கு உட்பட்டு விரதத்தை முடிக்க வேண்டிய
கட்டாயத்தால்.
வந்தார் ரிஷி.
ஞானக்கண்ணில் நடந்ததை யூகித்தார்.
கோபம் தலைக்கேறியது.
அம்பரீஷன் விளக்கியம் அவரது அகந்தை அதை ஏற்கவில்லை.
உன்னைத் தண்டித்தே தீருவேன் என்றவரின் வார்த்தைகள்
ஆரம்பிக்கும் முன்னரே வந்தது சக்கிராயுதம்.
துரத்தியது துர்வாசரை.
தருணத்தில் மாதவன் அடியாரைக் கோபித்த தவறை
உணர்ந்தார்,.
அடைக்கலம் தேடி எங்கு போயும்

விடவில்லை சக்கரம்.
முடிவாக அம்பரீசனிடமே வந்ததும்,

அவன் அந்த சக்கிராயுதத்தை வேண்ட
அதுவும் திரும்பியதாக புராணம்.

ராமன் கோபம் சேதுப் பாலம். நன்மை
திரௌபதியின் கோபம் பாரதப் போர்.- அழிவு

சூர்ப்பனகையின் கோபம் இராவணின் அழிவு.

கோபம்--பாபம்--- என்று ஒரு பழமொழி உண்டு
யோசித்து வரும் கோபத்தை அடக்கலாம்.
சட்டென்று வரும் சினத்தால் யாருக்கும் நன்மை இல்லை. நாம் நம் வசம் இழப்பதோடு சரி. அதனால்
சினத்தை அடக்கி சாதிக்கும் வழியைப்
பார்ப்பதெ நன்மையாக்ப் படுகிறது.
உங்கள் எண்ணம் என்ன.?

Thursday, September 21, 2006

சொல்லலாமா?


வார்த்தைகளுக்கு எப்போதுமே வலிவு உண்டு. இது மிக்க நல்ல விளைவுகள் ஏற்படுத்தும் நல்ல வார்த்தைகளாக இருக்கும் வரை.

நல்ல நினைவுகள் செய்து முடிக்கும்
திறன் கொண்டவை. இதை முயற்சி செய்து பார்த்தால்
தெரியும்.
அதே போல நல்லவை அல்லாத வார்த்தைகளுக்கும்
பயன் உண்டு.

வேறு வேறு சொற்பொழிவுகள், உபன்யாசங்கள்
கேட்கும்போது,
காதில் விழுந்ததவை.:
ஐய்யொ பாவம் சொல்லக் கூடாதாம்.

//இதுவும் கடக்கும். நல்லது நடக்கும்,//

என்று நினைத்துக் கொள்வதோடு
நாம் நமக்கும், பாதிக்கப் பட்டவர்களுக்கும்
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள
வேண்டிய positive,
affirmative words இவைகள்.
முடிந்தால் நல்ல உதவிகளைச் செய்யலாம்.

நம் மனதுக்கு இந்த வழியிலேயே பயிற்சி கொடுக்க வேண்டும்.
எப்போதுமே காவல் இருக்க முடியாது மனம் ஓடும்
ஓட்டத்திற்கு..
அது என்னவோ மாற்றுப்பாதையில் செல்லத்
தான் பழக்கப் பட்டு இருக்கிறது.
ஒரே ஒரு துன்பம் நிகழ்ந்தால் போதும்,
அதை சுற்றியே வட்டமிடும்.

எதிர்காலத்திலும் நிகழப் போகும்
கடின, கஷ்டங்களை நினைத்து நினைத்து

நல்லவை நடக்கும் போதும் மகிழ்ச்சியாக இல்லாத
நிலையை எட்டிவிடும்.

நமக்குத்தான் பதப் படுத்தி வைத்து இருக்கிறார்களே.
"ரொம்ப சிரிக்காதே. நாளைக்கு அழ வேண்டி இருக்கும்''

மனம் அப்போதே தயாராகி விடும், ஓஹோ ஏதோ
நடக்கப் போகிறது.//

மனநல நிபுணர் பிருந்தா ஜயராமன்
தொலைக் காட்சியில் தோன்றும்பொது

நல்ல ,,,மனதுக்கு இனிதான
பயிற்சிகள் சொல்கிறார்.
அதே போல டாக்டர் ஷஆலினி பேசும்போது
பிரச்சினை என்று வரும்போது ஒரு கணம்

மனம் திகைத்தாலும், செயலிழக்காமல்
மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதற்கு
ஒரு வழி சொன்னார்.

சோ வாட்?
வாட் நெக்ஸ்ட்?

இந்த வார்த்தைகளை எப்போதும்
நினைவில் வைத்துக் கொண்டால்
போதும். மன அழுத்தம் வரும்போது,
சரி , இது நடந்து விட்டது.

நான் தளர்ச்சிக்கு இடம் கொடுப்பதும்,
அல்லது

இதிலிருந்து மீள வழி தேடுவதும்
என் கையில் தான் இருக்கிறது.,

என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டால் போதும்.
அதனால் என்ன.?? அடுத்தது என்ன செய்யலாம்.

இது சாத்தியமா/?
சில சமயங்களில் இதைத் தவிர வேறு வழியில்லை. எல்லோருமே சோர்ந்து விட்டால்,
என்ன ஆவது?
ஒருவராவது சமாளிக்க வேண்டுமே.

இதே போல் சந்தர்ப்பங்களில்
ஒருவர் மட்டும் சுறுசுறுப்புடன்
ஓடியாடுவதைப் பார்க்க முடியும்.

சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ உதவ
ஓடி வரும் ஆத்மாக்கள்.

ஐந்து அல்லது ஆறு நபர்கள் கொண்ட இடத்தில்,
குடும்பத்தில் ஒருவ்ுக்கு மட்டும் எப்படி
இந்த தைரியம் வருகிரது.

அதற்காக அவருக்கு உணர்ச்சிகள் குறைவு
என்றும் மதிப்பிட முடியாது.
புதுப்புது அவதாரம் தோன்றுவது
கடவுளால் மட்டும் இல்லை.
மனிதர்களாலும் தான்.

நவராத்திரி வாழ்த்துக்கள்

மஹாளய அமாவாசை நாளை 22 ஆம் தேதி. நாளையே இரண்டு பொம்மைகளையாவது எடுத்து வைத்துவிட்டால்

கொலு நவராத்திரி ஆரம்பித்துவிடும்.
நகரம் ஒர் மாதமாகவே பண்டிகைக்கோலம் போட்டாச்சு. எங்கே பார்த்தாலும் சேல் !! சேல்!! எதை எடுத்தாலும் தள்ளுபடி. புதுவிதமான
புதுசு புதிசாக உடைகள். வித விதமான கண்ணைப் பறிக்கும் விளம்பரங்கள்.

எது வாங்குவது?
முதலில் பொம்மை விற்கும் கடைக்குப் போனால் படைக்கும் கடவுளுக்குப் போட்டியாகப்
படைக்கப்பட்ட
வண்ண வண்ண பொம்மைகள்.
கடவுளர்கள், மிருகங்கள், காட்சிகள் இன்னும் எத்தனை வகை.
அதிலும் வேறு வேறு ஊர்களிலிருந்து
வகை வகையாய் செய்யப் பட்ட, வார்க்கப் பட்ட
அருமையான உணர்ச்சிகளை, அருளை, இன்பத்தை அளிக்கும் அற்புதமான உருவங்கள்.

இவர்கள் எல்லோரும் வந்து நம் வீட்டில் இருந்து,
நம் உலகை நினைக்க வைத்து ,
ஒன்பது
நாட்களும் மகிழ்ச்சியை வாரிக்கொடுக்கும்
உயிர்கள்.
ஆமாம், நம்முடைய பிரதிகள் தானே
இந்தக் கொலு.

அதனால் வரும் நவராத்திரிகளும் அனைவரும் கூடியிருந்து கொண்டாடித் துதி செய்து
உய்யலாம்.
நவராத்திரி வாழ்த்துக்கள்.

Friday, September 15, 2006

கண்ணா வா வா.



திருவளர் செல்வன் கண்ணன் இன்றுதான் வருகிறான் எங்கள் வீட்டுக்கு. இந்த வருடம் 3 தடவையாக வருகிறான். ஏற்கனவே
ஆடி மாதமே ஒரு வரவு. ஆடிப் பௌர்ணமி கழிந்த எட்டாம் நாள் வந்துவிட்டான்.
அமோகமாக எண்பது சதவிகிதம்
சீடை முறுக்கு என்று அவனுக்குக் கை காண்பித்து விட்டு,
மகிழ்ந்து அவை எல்லாவற்றையும்
எல்லோரும் கபளீகரம்
செய்தாச்சு.
நேற்று சில வீடுகளுக்கு வந்தான். பாவம் கால்கள் வலிக்கிறதோ கிருஷ்ணா உனக்கு.
எத்தனை வீடுகளில் பாதங்கள்
போட்டிருப்பார்கள்?
அத்தனை பாதங்களிலும் திருவடிகளைப்
பதித்தாயோ.
சுக்கு வெல்லம் சரியாகச் சாப்பிட்டாயா.

அவல் வறுத்தால் பிடிக்குமா? அப்படியே
சாப்பிடுவாயா? அவலுடன் அன்பு கொடுக்க
நாங்கள் குசேலர்களா //
உன்னைப் பார்த்து உருக?உடனேயே
நீயும் அணைக்க? நாங்கள் உன் குழலும் இல்லையே.

அதுதான் வெண்ணை பிடிக்கிறதோ உனக்கு.
உன்னைப் பார்த்தவுடன் அதற்கு
உற்சாகம் பொங்கி வெண்ணையாகக்
கரைந்து விடுகிறது.
கரைந்து ,உன்னில் இணைந்து 'வேறு' என்பதே இல்லாமல்
ஒன்றாகத்தான் ஆசை.
நீயே வந்து ஆட்கொண்டால் தான் எங்களுக்குப் பெருமை.
நீ வரும் நேரத்தை நாங்கள் அறிந்து கொண்டால்
போதும்.
அந்த அறிவையும் நீதான் கொடுக்க வேண்டும்.


இதோ இன்றைய தினமணியில் கண்ணனைப் பற்றி
வந்த அரும் உரை.
கண்ணன், பாண்டவர்களைப் பார்க்க வனத்திற்கு வந்தாராம்.
அப்போது பாண்டவர்கள் குளிக்க ஏதுவாக ஒரு பெரிய பாண்டத்தில் தண்ணீர் கொதிக்க வைக்க திரௌபதி அடுப்பில் தணல் சேர்த்துக்கொண்டு இருந்தாளாம்.
சிறிய நேரம் கழித்து சோதித்தால் தண்ணீர் சூடாகவே இல்லை.
மற்றவர்கள் தொட்டுப் பார்த்தால் சுடவில்லையாம்.
அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
இதென்ன அதிசயம்!!அக்கினி சூழ எரிகிறது,, தண்ணீர் கொதிக்கவில்லையே என்று கிருஷ்ணனைப் பார்த்தார்களாம்.
அவன் சிரிக்கிறான்.
அந்தத் தண்ணீரைக் கீழே கொட்ட சொல்லுகிறான்.
ஒரு தவளைக் கொட்டிய தண்ணீரிலிருந்து குதித்து
ஓடுகிறது.
என்ன பண்ணுவது த்ரௌபதி
நீ ஊற்றிய தண்ணீரில் இருந்த தவளை முன்னாலேயே என்னைச் சரண் அடைந்துவிட்டது.
அதைக் காப்பாற்ற
அக்கினியின் தன்மையை மாற்றிவிட்டேன் என்றானாம்.
(புசித்துவிட்டுக் கூட ) பஜனை செய்வோம் கண்ணன் நாமம்!

Tuesday, September 12, 2006

லிஃப்ட்?

அம்மா
பிறந்ததிலிருந்தே இவள் நம்மைத் தூக்கி நிறுத்துகிறாள்.அவளுக்கு முன்னால் மற்ற

லிஃப்ட்எல்லாம் சிறியது.உலகத்திலேயே அம்மா அப்பா இருவரைத்தவிரவேறு யார் கேள்வி கேட்காமல் நம்மைமேலே மேலே அழைத்துப் போகிறவர்கள்/?

அடுத்த லிஃப்ட் அப்பா.
தூக்கிப்
படிக்க சேர்த்த
லிஃப்டர்.
அப்புறம் நான்
படித்த பள்ளி ஆசிரியைகள்..ஓவியம், பாட்டு, ஓட்டம்,நடனம்விளையாட்டு......எல்லாத்துறைகளிலும் உன்னால் முடியும் என்று சொன்னவர்கள்.


பாதுகாப்பாக அறிவை புத்தியில் தூக்கி வைத்தவர்கள்;அவர்கள் கொடுத்த ஊக்கம்கல்லூரிக்குக் கூட்டிப் போனது.

அவர்கள் ஏற்றி வைத்த ஞானம்தான் எங்கள்குழந்தைகள் பள்ளிக்குப் போகும் காலத்தில்
அவர்களுடைய ஹோம்வொர்க் செய்யும் நேரம்கைகொடுத்தது.இல்லாவிட்டால் பெற்றோர் ஆசிரியைகள் சந்திப்பில் வழிந்து ஆறாகஓடியிருக்கும் என் மானம்.:-0)

இப்போது நம்மை மகிழ்ச்சியாக இருக்க வைப்பதும்
நாம் பெற்ற செல்வங்கள் கொடுக்கும் ஊக்கம் தான்.

இவர்கள் எல்லொருக்கும் மேலாக நம்முடன் எப்போதும் இருந்து வாழ்வின் எல்லா தளங்களிலும் நம்மை விடாமல் தூக்கி நிறுத்துபவர்இறைவன் தானே.

Saturday, September 09, 2006

கூவி அழைத்தால் வருவானோ





நம்மில் சில பேர், சாமிக்கு ஏன் ஏதாவது படைக்க வேண்டும்? நாம் சாப்பிடும் பொருட்களை அவர் சாப்பிடப் போகிறாரா. ராத்திரி வேளையில் அவருக்கு எதற்கு ஏகாந்த சேவையும் நாதஸ்வரமும் நீலாம்பரி இசையும் /அவர் தூங்கப்போகிறாரா/?



டெல் மி ஒய் என்று முன்னால் சிறுவர் சிறுமியருக்கு ஒரு செலக்ஷன் of குட் க்வெஸ்டியன்ஸ் அண்ட் ஆன்சர்ஸ் வரும். ஆனால் அதில் நம்ம சாமியைப் பற்றி ஒண்ணும் கிடைக்காது. நமக்கு இவ்வளவு முன்னோடிகள் இருக்கும்பொதே சில கேள்விகளுக்கு பதில் தெரிவதில்லை



. வரப்போகும் தலைமுறை கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? ஏனெனில் நமக்குத் தெரிந்ததும் கொஞ்சம் தான்.

அப்போதுதான் இன்று காலை இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தது. வடமொழியில் இருந்தாலும் புரிந்தது. எனக்குத் தெரிந்தவரை அதன் பொருளைக் கொடுத்து இருக்கிறேன்.
யார் சொல்வது ராமன் சாப்பிடவில்லை என்று.? நீங்களும் சபரியின் அன்போடு கொடுத்தால் அவன் ஏற்றுக்கொள்ளுவான்.
யார் சொல்வது கிருஷ்ணன் தூங்குவதில்லை என்று. நீங்களும் யசோதா போல் அவனுக்குத் தாலாட்டுப் பாடினால் அவன் தூங்குவான்.


யார் சொலவது அவன் பாடி ஆடிக் களிக்க மாட்டான் என்று, நீங்களும் கோபிகளுடன் சேர்ந்தால் பக்தியில் அவன் பாடி ஆடுவான். அவர்களைப் போலப் பாடிப் பழகுங்கள்.

யார் சொல்வது அவன் அழைத்தால் வரமாட்டான் என்று
நீங்களும் த்ரூவனைப் போல்,
த்ரௌபதிபோல்,கஜேந்திரனைப் போல், பிரகலாதனைப் போல் கதறிக் கூப்பிடுங்கள்
அவன் வருவான்.
என்று
இதே போல் போகிறது. இனிமையான பாடல். சில கேள்விகளுக்குப் பதில் இப்படித்தான் கிடைக்கும். இதை நம்பினால் போதும் என்று எனக்குத் தோன்றுகிறது.

Thursday, September 07, 2006

இங்கிதம் அறிந்தவர்


வினய அனுமான். எங்க வீட்டில் இவருக்கு அஞ்சு என்று பெயர்.

அவ்வளவு அன்பு இவர் மேல் எல்லோருக்கும்.
நம்ம வீட்டுப் பசங்க மத்திரம் என்று இல்லை.

அநேஹமாக மைலாப்பூர் வாசிகள்
எல்லோரும், சென்னையில் வசிக்கும்
கேஜி குழந்தைகளிலிருந்து,
எம்.ப்ஃஇல் முடிக்கும் சற்று வயதானவர்கள் வரை, இவரைப் படிப்பு, பரீட்சை என்று அப்பிளிகேஷன் பாஃர்ம்ஸ் வாங்கின கையோடு முறையிட்டு விட்டு, வேலை முடிந்ததும் க்ஐயோடு வடை மாலை, வெண்ணைக்காப்பு
என்று

ஒரு வழி பண்ணி வ்இடுவார்கள்.
அத்தனை பேருக்கும் இவர் எப்படித்தான் கவனம் வைத்துப் ப்ஆர்த்துக் கொள்ளுகிறாரோ என்று கூட்டம் ில்லாத மதிய நேரத்தில்
போய்ப்பார்க்களாம் என்றால் அப்போதும் விடாமல் யாரவது ஒருத்தர் அடிப் ப்ரதட்சிணம் செய்து கொண்டு இருப்பார்.

இந்த 30 வருடங்களாக இவருடைய கீர்த்தி வடபழனி,கோடம்பாக்கம்
என்று சினிமா லெவலுக்குப் போய்விட்டது.

வியாழன், சனிகளில் கூட்டம் நெறிபடும்.
அதுவும் பார் புகழ் அமெரிக்காவில் பக்த்ரகள்
நிறையவே இருக்கிறர்கள்.

படித்து வேலையாய்ப் போனவர்கள்,
திருமணம் முடித்துக் குழந்தை குட்டிகளோடு
வரும் பெண்கள், ஆண்கள்.

அனைவரும் மாறாத பக்தி கொண்டிருக்கும் இந்த ப்
பாங்க் ஆஞ்சனேயர் உன்மையிலேயெ மகா வரப்பிரசாதி.

த்ிழ்நாடு மெர்கந்டைல் வங்கியின் முகப்பில் கட்டிடத்தின் மேலே இருந்தவரைக் கீழே ஒரு சன்னிதி கட்டிக்
கும்பாபிஷேகம் செய்தார்கள்.
அப்போது காலை வேளையில் நான் போகும்போது நானும்
இன்னும் இருவரும் அர்ச்சனை செய்பவரும் தான் இருப்போம்.
கூப்பிய கரங்களோடு இந்த அனும வடிவைப்
பார்க்கும்போதெல்லாம் நம்முடைய

அறியாமையால் வரும் கர்வமெல்லாம் ஒழிந்துவிடும்.
அமைதியான காலை. சத்தமே இல்லாத சூழ்நிலை.

எதிரில் உட்கார்ந்து தியானம் செய்யலாம் என்ற நல்ல எண்ணத்தைத் தூண்டும்

மனம் ஒருமைப் படுகிறதே என்ற எண்ணத்துக்கு எதிராகக் காலை வேளை வேலைகள் என்னை வீட்டிற்கு அழைத்து
வந்துவிடும்..
இப்போது போகலாம் தானே.
பிக்கலா பிடுங்கலா.
ஆனாலும் அடிக்கொருதரம் ஹனுமானைப் பார்க்க விரைந்த கால்கள்
ஆடிக்கொருதரம் தான் போகின்றன.

எப்படி இப்படி ஒரு 'ஒரு பிடிச்சு வைச்ச பிள்ளயார் மாதிரி"
இருக்கீறோம் என்று நினைத்துக் கொள்வேன்.
நாம் போகா விட்டால் என்ன, அவர் நம்மைப் பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கையா,
சோம்பலா, அவசியம் போயே ஆக வேண்டும் எந்த ஜோசியரும் சொல்லாததாலா?
தெரியவில்லை.
ஆனால் ஒவ்வொரு தடவையும் அந்தக் கோபுரத்தைத் தாண்டும் போதும் மன்னிப்புக் கேட்கிறது மனம்.

இதுவும் கடக்கும்.

Tuesday, September 05, 2006

வணக்கம் ஐயா.

Posted by Picasa ஆனாவை நெல்லில் எழுத வைத்து
பள்ளிக்கு அனுப்பிய அம்மா,
அழைத்துப் போன அப்பா

அரவணைத்த முதல் வாத்தியாரம்மா
பொறுமையாக போர்டில் எழுதி விளக்கி வைத்து,
பூகோளத்தையும், வரலாறையும்
கணிதம்,அல்ஜீப்ரா இன்ன பிற
கடினங்களையும்
மூளையில் புகுத்தி
என்னையும் ஒரு(ஆறு) அறிவு
கொண்ட உயிராக்கிய
என் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு
என் வணக்கம்