++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருக்குறுங்குடியிலிருந்து கிளம்பி திருச்செந்தூர் வந்தோம்.
அந்தப் பிராகாரம் செல்லும் மண்டபப் பாதையில் காற்றும் மேகமும் சூழ்ந்திருந்தது. அங்கு உட்கார்ந்து மதிய உணவை உண்டதும்
நினைவில் இருக்கிறது.
இப்போது எல்லாம் மாறி இருக்கலாம். தாத்தா பாட்டி வண்டியில்
அமர்ந்திருக்க நாங்கள் மட்டும் கடலருகே நின்று
முருகன் சன்னிதிக்கும் சென்று வந்தோம்.
இந்தப் பாடல் வெளிவந்த போது நாங்கள் திருச்சியில் இருந்தோம்.
நாங்கள் சென்ற போது இவ்வளவு கூட்டம் இருக்கவில்லை.
''ஆவணி ,மாசியிலும், வரும் ஐப்பசித் திங்களிலும்''
என்ற வரி பாடலில் இருக்கிறது. தை மாதம் தாத்தாவின்
பிறந்த நாள் ( 78ஆவது) கொண்டாடினோம்.
தாத்தாவுக்கு எப்பொழுதும் ஆஸ்துமா இருமல் இருக்கும்.
இந்தத் தொல்லைகளிலிருந்து விடுபட இந்தக் கோவில்
பயணங்களை மேற் கொண்டிருக்கலாம்.
மதிய சாப்பாடு முடிந்ததும் மீண்டும் அலைகளில்
அருகினில் சென்றோம். கடல் கொஞ்சம் உள் வாங்கி இருந்தது.
அதை நம்பி அலைகள் பக்கம் சென்றால் பெரிய அலையொன்று
சீறிக் கொண்டு வந்து என் கைகளிலும் அப்பா கைகளிலும் இருந்த பாத்திரங்களை அடித்து சென்றது.
நான் பாத்திரங்கள் பின்னால் போன போது அப்பா என்னைப் பின்னிழுத்தார். கூடவே இருந்த ஒரு மீனவர்
சொன்ன சொற்கள் இப்போதும் என் காதில் ஒலிக்கிறது
''பாப்பா கடலம்மா திருட மாட்டா. அதெல்லாம் திரும்பிடும் பார்''
அவர் சொன்னது போலவே அடுத்த அலையில் அவை திரும்பி வந்தன.
தாத்தா எங்கள் இருவரையும் கடிந்து கொண்டார்.
வெறும் பாத்திரம் தானே. ஏன் இப்படி அவஸ்திப் பட்டீர்கள் என்றார்.
2004 சுனாமியின் போது ஏன் இப்படிக் கடல் பொங்கியது என்று யோசித்தேன்:((
1957க்கும் 2004க்கும் இடையே 47 வருடங்களில் இயற்கைக்கு ஒவ்வாத
செயல்கள் நிகழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மீண்டும் பயணம் தொடங்கிக் கன்யாகுமரி செல்லும்
சாலையில் திரும்பினோம்.
No comments:
Post a Comment