Blog Archive

Saturday, September 17, 2022

ஏழுமலைவாசா வெங்கடேசா🙏🙏🙏🙏🙏🙏🙏

வல்லிசிம்ஹன்

புரட்டாசி சனி விரதம்

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான். சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.

பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.

சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார்.
ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.
கோவிந்தா கோவிந்தா


20 comments:

ஸ்ரீராம். said...

புரட்டாசியின் சிறப்பை அறிந்துகொண்டேன்.  தஞ்சையில் மதுரையில் இருந்தபோது புரட்டாசி சனிகளில் வீட்டு வாசலில் சில குழந்தைகள் வந்து "வெங்கட்ராமா... கோவிந்தா' என்று குரல் கொடுப்பார்கள்.  அரிசியோ, பணமோ பெற்றுச் செல்வார்கள்.

Geetha Sambasivam said...

புரட்டாசியின் சிறப்பை அழகாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகள். நன்றி.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது. புரட்டாசி மாதத்தின் சிறப்புகளை தாங்கள் சொன்ன விதம் நன்றாக உள்ளது.எல்லா விபரமும் தங்கள் பதிவால் தெரிந்து கொண்டேன்.

குயவன் கதை அருமை. அவருக்குத்தான் பெருமாளின் மீது மனத் தூய்மையான எவ்வளவு பக்தி. கதை படிக்கும் போது மனம் சிலிர்த்துப் போகிறது. இறைவனுக்கும் ஆடம்பரங்கள் என்றும் ஒரு பொருட்டல்ல.. உண்மையான பக்தியை மட்டும் நேசிக்கிறார் என்பதை விளக்கும் கதை.

தங்கள் வீட்டு பூஜையறை படங்கள் அருமை. குழலூதும் கண்ணன் மனம் கவர்கிறார். பெருமாளை மனங்குளிர தரிசித்துக் கொண்டேன். புரட்டாசி மாத முதல் நாளன்று நல்லதொரு பதிவை தந்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கங்கள் அருமை...

கோமதி அரசு said...

கோவிந்தனின் புகழ் பாடும் பதிவு அருமை.ஏழுமலை வாழும் பெருமாளே பாடல் மனதில் ஒலிக்கிறது. டி.எம்.எஸ் பாடல்.

ஏழுமலை வாழும் பெருமாள் அனைவரையும் காத்து ரட்சிக்கவேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

தகவல்களும், அதற்கான கதையும் சூப்பர் வல்லிம்மா.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

குயவர் கதை இதுவரை கேட்டதில்லைம்மா. இப்ப உங்க மூலம் தெரிஞ்சாச்சு

கீதா

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

KILLERGEE Devakottai said...

புரட்டாசி மாதத்தின் சிறப்புகள் அறிந்து கொண்டேன் நன்றி அம்மா.

நெல்லைத்தமிழன் said...

கதையை ரசித்துப் படித்தேன். அருமை

மாதேவி said...

புரட்டாசி மாத சனிக்கிழமையின் சிறப்பு அறிந்து கொண்டோம். பகவான் அனைவரையும் காக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
உடனே மறு மொழி சொல்ல முடியவில்லை
மன்னிக்கணும் மா.
இதோ இன்னோரு சனிக்கிழமையும்
வந்துவிட்டது.
கோவிந்த நாமம் என்றும் நம்முடன் ஒலித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
சென்னையிலும் 20 வருடங்களுக்கு முன்
வெங்கட் ரமணா கோவிந்தா ஒலித்தது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருக்க பிரார்த்தனைகள்.

பதிவில் வந்திருக்கும் செய்தி நான் எழுதியதில்லை.
தம்பி முகுந்தன் அனுப்பியது.

நல்ல செய்திகளைப் பதிவதில் நமக்கு நன்மை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலா ஹரிஹரன் மா,
என்றும் நலமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

தாமதமாகப் பதில் எழுதுகிறேன் மன்னிக்கணும் மா.

எங்கள் வீட்டுப் பெருமாள் அறையைப் பற்றி
நல்ல வார்த்தைகள் சொல்லி இருக்கிறீர்கள்.
என் மனம் எல்லாம் அந்த வீடும் கடவுளுமே
நிறைந்திருக்கிறார்கள்.

இன்றைய வாழ்வுக்கும் அவரே ஆதாரம்.
நன்றியுடன் இருக்க வேண்டும் நான்.
புரட்டாசி முழுவதும் பகவன் நாமாவை
ஸ்மரணை செய்தால் ஏற்படும் நற்பலங்களைப்
பெரியோர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். நாமும் ஜபிப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
நலமாயிருக்க அவனே அருள வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.

ஏழுமலையானைப் பற்றித் தான் எத்தனை பாடல்கள்.
எத்தனை கதைகள்!!!!!

வருடம் தோறும் சென்று தரிசிப்போம். இப்போது எல்லாம் மாறி விட்டது.
கேட்டவர்க்குக் கேட்டவரம் தரும் கடவுள்.
நம்மை வாழ வைக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா.

என்றும் நலமுடன் இருங்கள்.

ஏழுமலை வாசா எனை ஆளும் வேங்கடேசா பாடல்
எனக்கு மிகப் பிடிக்கும்.
குயவன் கதை , செருப்பு தைக்கிறவர் கதை என்று முன்பெல்லாம்
வரும்.
இப்போது மீண்டும் படிக்க சந்தோஷம் தான்.

மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...


அன்பின் ஜெயக்குமார் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவ கோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
இறைவன் கருணையால் எழுதுகிறோம்.
அவன் புகழ் சொல்வதில் நமக்குத் தான்
இன்பம் அதிகம் அப்பா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
வெகு நாட்கள் கழித்துப் பார்க்கிறோம். நலமா
அம்மா.
தவறாமல் வந்து பின்னூட்டம் இடும்
நட்புகளின் அன்புக்கு நான் மிகவும்
கடமைப் பட்டிருக்கிறேன். என்றும்
வாழ்க வளமுடன்.