Blog Archive

Thursday, September 15, 2022

கடந்து வருகிற காலம்.





வல்லிசிம்ஹன்

அனைவருக்கும் இனிய நாட்களே தொடர 
இறைவன் அருள வேண்டும்.

அன்பின் நண்பர்களையும் அவர்களது அருகாமையை
மீண்டும் சந்திப்பது இனிமை.

பல பல  நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள
சந்தர்ப்பம் இருந்தும்,
மனமும் உடல் நலமும் ஒத்துழைக்காத நிலைமை.

மீறி வருவதற்கே எழுதுகிறேன்.
நம் ஸ்ரீராம் சொன்னது போல மீண்டு வர முதல்
படி இந்தப் பதிவு.

நட்புகள் அனைவரும் உடல் நலத்துடனும் 
மன ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.


 

  பல நிகழ்ச்சிகளை மெதுவாக அனுபவிக்க முடியாமல்
அவசரமாகக் கழிந்த சென்னை நாட்கள்.
30 நாட்களுக்குத் தமிழை சுவாசித்து,
உறவு நட்புகளோடு மனம் நிறையப் 
பேசி வந்தாலும் , இன்னும் பலரைக் காண முடியாமல் வந்து தடுத்தது
தொற்று பயம். 
வீட்டிலேயே பாதிப்பு வந்ததால்,
நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு  அது செல்ல
வேண்டாம் என்பதில் முதல் மூன்று வாரங்கள்
சென்று விட்டன.

அதுசரி நாம் செல்ல வேண்டாம். தொலைபேசியில் 
நலம் விசாரித்துக் கொள்ளலாம் என்றால் ஒரு நெருங்கிய
உறவு அதில் தொடர்பு கொள்ள மறுத்துவிட்டார்!!

அந்த பேச்சு வழியே தொற்று வரும் என்று நினைத்தாரோ
என்னவோ. மனம் மிகக் கலங்கியது. இறைவன் 
பற்று அறுப்பது பற்றிப் 
பாடம் நடத்துகிறான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை தங்கும் விடுதியில் சௌகரியங்களுக்குக் குறைவில்லை. பேரன்கள்,
பேத்திகள் சகிதம் கோவில்கம் சென்று வந்தேன்.

ஏதோ ஒரு உணவு ஒத்துக் கொள்ளாமல்
வயிற்று வலி ஆரம்பிக்க,
மீண்டுவர ஒரு வாரம்.
அது இன்னும் என்னுடன் ஒட்டி இருக்கிறது.
பாசலில்    ( Switzerland)  பல்லுக்கு சிகித்சை:)

இதோ இங்கே வந்தாச்சு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடைசியாக விடுதியில் நடந்த ஒரு சின்ன டிராமாவைக் கொசுறாக
வைக்கிறேன்.
எங்கள் எட்டாவது  மாடி அறைக்கு அடுத்த அறையில் காலையிலிருந்தே 
சந்தோஷக் கொண்டாட்டம். 
மாலையில் சுருதி சேர ஆட்டமும் ஆரம்பித்தது. 

தொலைக்காட்சியில்  சோகப் பாடல்கள் ,காதல் தோல்வி 
என்று ட்ரம்ஸ் வெளுத்துவாங்க 
அந்த சத்தம் பால்கனி வழியே தடித்த சுவர்களையும் மீறி வந்து என் தூக்கத்தைக் கலைத்தது.
மகனோ ஒரு நாள் கடின உழைப்புக்குப் பின் தூங்குகிறான்.

படுக்கையிலிருந்து எழுந்து அந்த அறைக் கதவை மூடி ஹாலில் வந்து உட்கார்ந்தால்
தூக்கம் போயே போய்விட்டது.
'பொய் சொல்ல இந்த இதயத்துக்குத் தெரியவில்லை''
எப்று சோகம் வழியும் பாடலை  தொ கா ஒளிபரப்பக் கூடவெ
இரண்டு இளைஞர்கள் அலறுகிறார்கள்.

சரி இரண்டு மணியாகிறது தூங்குவார்கள்  என்று காத்திருந்தேன்.
ம்ஹூம்.
https://youtu.be/uhI8jbV-wGU


 ''என் காதல் சொல்லத் தேவையில்லை''
என்று தொடர்கிறது. 
நிலைமை கட்டு மீறுகிறது என்ற கோவம் தலைக்கேறியது.

உடனே கீழே  மானேஜருக்குத் தொலைபேசினேன். ஐந்து 
மணி நேரமாக இந்தத் தொல்லை. தயவு செய்து 
கட்டுப் படுத்தவும் ' என்று சொன்னேன்.
அவர்கள் தயங்கினார்கள்.

மேலிடத்துக்குச் சொல்வேன் என்றதும்
உடனே பலன்.
அங்கே செக்யூரிட்டியாக இரண்டு பௌன்சர்களைப்
பார்த்திருக்கிறேன்.
அந்த பூட்ஸ் சத்தம் கேட்டது.
அறையின் கதவைத் திறந்து அவர்கள் தானா
என்று உறுதி செய்து கொண்டு கதவை சாத்தினேன்.
அப்போது மணி 3.
4 மணிக்கு ஓய்ந்தது இசை.

நம் தூக்கமும் போனது.
காலையில் எழுந்த மகனிடம் (காப்பி சாப்பிட்ட பிறகு)
நடந்ததைச் சொன்னேன்.

அவனுக்கு நான் செய்தது கொஞ்சம்  மனத்தாங்கல் தான்.
ஏம்மா உனக்கு மட்டும் சத்தம் க்ட்டது.
இங்கெல்லாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். பணக்காரப்
பசங்க. நீ ஏன் தலையிடறே என்று வருத்தப் பட்டான்.
ரூம் கதவை வேற திறந்தியா என்று அதிசயப் 
பட்டான்.

அந்த அறைப் பசங்கள் வெளியேற்றப் பட்டார்கள் என்று அடுத்த செய்தி:)
மீண்டும் பார்க்கலாம்.

20 comments:

KILLERGEE Devakottai said...

வணக்கம் அம்மா நலமா ?
மீண்டும் தங்களது அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.

Avargal Unmaigal said...


உங்களது அனுபவங்களை படிப்பது மூலம் எனக்கு புதிய அனுபவங்களை தெரிந்துக் கொள்ள முடிகிறது தொடருங்கள்

ஸ்ரீராம். said...

மறுபடி பதிவுகள் எழுதத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி.  என்னையும் குறிப்பிட்டிருபப்தற்கு நன்றி அம்மா.  உங்கள் கமெண்ட்ஸ் தேவகோட்டையர் பக்கத்திலும் பார்த்தேன்.  சந்தோஷமாய் இருந்தது.  உறவினரின் செய்கை வருத்தத்திற்குரியது.

ஸ்ரீராம். said...

பெரிய இடத்துப் பசங்கள் என்றாலே அரசியல், காவல்துறை தொடர்பும் இருக்கும்.  அராஜகங்கள். எ அடுத்தவரைப் பற்றி யோசிக்காத ஜென்மங்கள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமா? எப்படியிருக்கிறீர்கள்? தங்களை மறுபடியும் வலைத்தளத்தில் பார்க்கும் போது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. தங்களுடைய நிறைய பதிவுகளை எப்போதும் போல் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.தங்களின் அன்பான வலைத்தள வருகைக்கு நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வருக... தொடர்க...

Thulasidharan V Thillaiakathu said...

அதுசரி நாம் செல்ல வேண்டாம். தொலைபேசியில்
நலம் விசாரித்துக் கொள்ளலாம் என்றால் ஒரு நெருங்கிய
உறவு அதில் தொடர்பு கொள்ள மறுத்துவிட்டார்!!//

ஆ!! விடுங்க பரவால்ல. நம்மை நமக்காக அன்பு செய்பவர்கள் போதும், அம்மா.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் செம...

உங்களின் அபிமான, ஆஸ்தான நிலாவின் வருகை!!!!! அழகு படம்!

உங்கள் உடல்நலம் பற்றி அவ்வப்போது அறிந்தோம் இப்போது ம் உங்கள் உடல் நலம் தெரிகிறது...இன்னும் பூரணமாக குணம் அடையவில்லை என்று... ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் பதிவுகள் பக்கம் வந்து இங்கு எல்லோருடனும் அளவளாவும் போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். ஸ்ரீராம் எனக்கும் இது சொல்வதுண்டு.

இதோ அந்த கொசுறு பார்த்துவிட்டு வருகிறேன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அடப் பாவிகளா.....அதெப்படி அந்த செர்வீஸ் அபார்ட்மெண்டில் இப்படி சுருதிக்கு அனுமதி அளிக்கிறார்கள்? மற்றவர்களுக்குத் தொல்லை ஆகலாம்னு அதை நடத்துபவர்களுக்குத் தெரிய வேண்டாமா?

நீங்கள் சொன்னது தவறே இல்லை அம்மா. ஆனால் எங்கள் வீட்டிலும் உங்கள் மகன் சொன்னது போலத்தான் சொல்லியிருப்பாங்க. ஆனால் பாருங்க எனக்கு ஒரு சௌகரியம் மூன்றாவது காது இருந்தாலுமே சத்தம் அவ்வளவு கேட்க்காது அப்புறப்படுத்திவிட்டால் சுத்தம்!!!

உங்கள் மகனுக்கு அசதியில் நன்றாகத் தூங்கியிருப்பார். அதனால் கேட்டிருக்காதாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் சிரமம் புரிகிறது அம்மா..

பாருங்க மேலிடம் நு சொன்னதும்தான் வேலை நடக்கிறது!!!!

கீதா

கோமதி அரசு said...

அக்கா உங்கள் பதிவு வந்தது மகிழ்ச்சி. உடல் நலம் விரைவில் சரியாகி விடும்.

சென்னை விடுதியில் நடந்த செய்தி கலக்கம் தான்.
தைரியமாக சொல்லி விட்டீர்கள்.
மகன் வருத்தப்பட்டதும் சரிதான் காலம் அப்படித்தான் இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
தாமதமாகப் பதில் தருகிறேன்.

புதுப் புது அனுபவங்களைக் கடவுள் தருகிறார்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துரை, என்றும் நலமுடன் இருங்கள். நான் இறைவன் அருளால் நலமுடன் இருக்கிறேன்,
நீங்களும் குடும்பமும் நலமுடன் இருக்க இறைவன்
அருளட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் சந்தோஷமாக இருக்க இறைவன் அருளட்டும்.

உறவினர் அலட்சியம் என்னை மிக வேதனைப்
படுத்தியது. பிறகுதான் தீர்மானமாக இந்தப் பாடம்
எனக்கு நல்ல அனுபவம்.
பாசம், எதிர்பார்ப்பு எல்லாவற்றையும்
விலக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தது.

நீங்கள் சொல்லும் அராஜக நடவடிக்கை
இந்த ஒன்பது வருடங்களில் இதற்கு
முன் நான் கண்டது இல்லை.

மறு நாள் தான் தெரிந்தது. என்னைத் தவிர மற்றவர்களும்
சொல்லி இருக்கிறார்கள் என்று.

ஃப்ரண்ட் டெஸ்க் மேனஜர் நல்லவிதமாக அவர்களை
அனுப்பி வைத்தார்.
இந்த ஊர் மாதிரி மர சுவர் கூட இல்லை.
நல்ல செங்கல் கட்டிடம்.

மகனுக்கு என்னைப் பற்றிக் கவலை.
நாள் முழுவதும் நான் தனியாகத் தானே இருந்தேன்.
அதனால் தான். மற்றபடி மிகப் பாதுகாப்பான
இடம் தான். மிக தோழமையான பணியாளர்கள்.

மிக நன்றி மா.நீங்கள் ,கீதா ரங்கன், மற்றும் பாஸ் வந்திருந்தது
மிக மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சகோதரி கமலாமா,
நலமாப்பா.

என்றும் நீங்களும் மகள் ,மகன்
மற்றும் குழந்தைகளுடன் நலமும் சந்தோஷமும் சூழ
வாழ இறைவன் அருள வேண்டும்.

வாழ்க வளமுடன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
பரிவுடன் வந்து பின்னூட்டம் இட்டதற்கு மிக நன்றி மா.

நாம் எல்லோரும் சந்தித்த தமிழ் மணம்
விழாப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
பத்து வருடங்கள் ஆகிவிட்டன.

என்றும் நலமுடன் இருங்கள்.
மீண்டும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
கடவுள் சிலரைத் தள்ளி வைக்கிறார்.
பலரைச் சேர்த்து வைக்கிறார். அதுவும் வாழ்வின் ஆரம்பத்திலிருந்து கடவுள் கொடுத்த ரத்த பந்தம், வேண்டாம் என்று வைத்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.


இணையத்தின் நட்புகள் என்னுடன் ஆத்மார்த்தமாகப் பாசம் கொண்டாடுவது
எத்தனை பெரிய கொடுப்பினை.

''ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் பதிவுகள் பக்கம் வந்து இங்கு எல்லோருடனும் அளவளாவும் போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். ஸ்ரீராம் எனக்கும் இது சொல்வதுண்டு.''

உண்மைதான். கண்கள் சங்கடப்படாத படி எழுதப் படிக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

''அடப் பாவிகளா.....அதெப்படி அந்த செர்வீஸ் அபார்ட்மெண்டில் இப்படி சுருதிக்கு அனுமதி அளிக்கிறார்கள்? மற்றவர்களுக்குத் தொல்லை ஆகலாம்னு அதை நடத்துபவர்களுக்குத் தெரிய வேண்டாமா?''

நாங்கள் இருந்த இடம் கொழுத்த பணக்காரர்கள் உலவும் இடம்.
அந்த விடுதியிலும் பல சினிமா நட்சத்திரங்கள் தொடர்ந்து இருப்பார்களாம்.
பெயர் சொல்ல இஷ்டம் இல்லை.
சினிமா ஷூட்டிங்க் கூட நடந்தது.
இனிமேல் அங்கே போக வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறோம்.
நம் வீடும் ரெடியாகிவிடும். கடவுள் துணை.
மிய நன்றி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

''உங்கள் மகனுக்கு அசதியில் நன்றாகத் தூங்கியிருப்பார். அதனால் கேட்டிருக்காதாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் சிரமம் புரிகிறது அம்மா..

பாருங்க மேலிடம் நு சொன்னதும்தான் வேலை நடக்கிறது!!!!''

மகன் படுத்திருந்த அறைக் கதவைச் சார்த்தி விட்டேன் அம்மா.
நான் படுக்க நினைத்த இடத்தில் தான் இந்த திடும் திடும்னு
சத்தம்:)

பொறுக்க முடியாமல் தான்,
டெஸ்குக்கு ஃபோன் செய்தேன்.
இது போல என் வாழ்வில் நடந்ததில்லை:)
எல்லாம் ஒரு பாடம் தான்.

வல்லிசிம்ஹன் said...

சென்னை விடுதியில் நடந்த செய்தி கலக்கம் தான்.
தைரியமாக சொல்லி விட்டீர்கள்.
மகன் வருத்தப்பட்டதும் சரிதான் காலம் அப்படித்தான் இருக்கிறது.''


அன்பின் கோமதி என்றும் வாழ்க வளமுடன்.

அந்த இரண்டு நாட்களில் நான் வயிற்றுத் தொந்தரவில் மிக அவதிப் பட்டுக் கொண்டிருந்தேன்.

டாக்டர், வலிக்கு மருந்து கொடுத்திருந்தார் மா.

உடல் வலிக்கு மேல் தலை வலி வந்தால் என்ன செய்ய
முடியும்.

விடுதி உரிமையாளர்கள் சரியான நடவடிக்கை
எடுத்தார்கள்.
நன்றி சொல்ல வேண்டும்.

மாதேவி said...

மீண்டும் பகிர்வு மகிழ்ச்சி.

உங்கள் பகிர்வில் பல அனுபவங்களைப் படிக்கிறோம்.