Blog Archive

Friday, May 20, 2022

சின்ன வெங்காய வதக்கல்.

வல்லிசிம்ஹன்

 சின்ன வெங்காய வதக்கல்.

ஏதோ மோகம்... சின்ன வெங்காயத்தின் பேரில்.:)
எல்லாம் அம்மா கை பழக்கத்தினால் தான்.

முன்னாலியே எழுதி இருக்கிறேனோ என்னவோ.
இன்று அம்மாவின் நினைவு நாள்.மே 20.

தேவையான பொருட்கள்.

சின்ன வெங்காயம் அரைக்கிலோ.
பெரிய வெங்காயம் ஒன்று.
மஞ்சள் பொடி,'  ஒரு ஸ்பூன்
கஷ்மீரி மிளகாய்ப் பொடி ஒரு ஸ்பூன்,
கார மிளகாய்ப்பொடி ஒன்றரை ஸ்பூன்,
தனியாப் பொடி இரண்டு ஸ்பூன்.

புளி அவரவர் விருப்பம். நான் கொஞ்சம் தாராளம்.
உப்பு விருப்பப்படி,
 வெல்லப் பொடி ஒரு ஸ்பூன்.
பெருங்காயப் பொடி அல்லது கரைத்து விட்ட
பெருங்காய ஜலம்.
கடைசியில் சேர்க்க கருவேப்பிலை இரண்டு ஆர்க்.

கொத்தமல்லி சேர்ப்பதில்லை.

நான் செய்த முறை.
+++++++++++++++++++++++++
அம்மாவும் அப்பாவும் ஞாயிறும்  சின்ன வெங்காய வதக்கல், கூடவே
உ.கி பொடிமாஸ். யம்ம்ம். 

அப்பா தான் காய்கறி வாங்கி வருவார். வீட்டில் கருவேப்பிலையும், செம்பருத்தியும்,
நந்தியாவட்டை, நித்தியமல்லி.



 இந்தச் செடிகள் இல்லாமல் நாங்கள் வளர்ந்ததே இல்லை.
நறு மணம், நல்ல வார்த்தைகள், முகம் சுணங்காத அம்மா, எப்பொழுதும் சுறு சுறுப்பாக
இருக்கும் அப்பா, 
சண்டை போட்டாலும் சேர்ந்து கொள்ளும் தம்பிகள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சரி கரியடுப்பில்  இலுப்ப சட்டி வைத்தாச்சு.

நல்லெண்ணெய் இரண்டு கரண்டி விட்டு நன்றாகச் சுட்டதும்,
கடுகு சீரகம் வெந்தயம் போட்டு
வெடித்ததும் நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் 
போட்டுலேசாக வதங்கியதும் 
உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தைப் போடணும்.
நன்றாகச் சுருள வதங்க வேண்டும்.


இப்போது மஞ்சள் பொடி , தனியாப் பொடி, இரண்டு மிளகாய்ப் 
பொடியையும் சேர்த்து மீண்டும் பச்சை வாசனி 
போக வதக்க வேண்டும்.



வாணலியை மூடி வைக்கலாம். இரண்டு நிமிடம் கழித்துக்
கரைத்து வைத்த கெட்டிப் புளி ஜலத்தை 
விடவேண்டும். உப்பையும் சேர்த்து
இப்பவும் மூடி வைக்க வேண்டும்.

வெங்காய வாசனை வந்து, புளி வாசனை போனவுடன்,
எண்ணெயும் பிரிந்து நிற்கும்.

இப்பொழுது பொடித்த வெல்லம், பெருங்காயம் எலாம் சேர்த்து
எல்லாம் கெட்டியாகும்.
கறிவேப்பிலையைப் போட்டு இறக்க வேண்டியதுதான்.

தேங்காய்த் துகையல், உ கி பொடிமாஸ் 
சூடான் சாதம் தட்டில் போட்டு,
ஆளுக்கு ஒரு ஸ்பூன் நெய் விட்டு
சாப்பிட்டால்  ஸ்வர்க்கம் போய்த் திரும்பி வரலாம்.
அன்பு அம்மா ஜயலக்ஷ்மிக்கு என் நமஸ்காரமும்
நன்றியும்.

22 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. தங்கள் அம்மாவின் நினைவு நாளில் அவர்கள் பாணியில் நீங்கள் கற்று செய்து வரும் சமையலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

சின்ன வெங்காய வதக்கலை வெகு அழகாக சொல்லியுள்ளீர்கள். படிக்கும் போதே நானும் சுவர்க்கம் போய் திரும்பி வந்த உணர்வு. மேலும் வெங்காயத்தின் வாசனை படிக்கும் போதே என்னைச்சுற்றி சூழ்ந்து கொண்ட பிரமையும் ஏற்ப்பட்டது. நான் சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக கட் செய்து தங்கள் பாணியிலேயே கொஞ்சம் தளர்ந்து சேர்த்தாற்போல புளி விட்டு இதைச் செய்வேன்.இதற்கு பருப்புத்துவையல் தொட்டுக் கொள்ளவோ, இல்லை சாதத்தில் கலந்து கொள்ளவோ நன்றாக இருக்கும். உங்கள் பாணியும், அதற்கு தொட்டுக் கொள்ளும் உ.கி பொடிமாஸும் தேங்காய் துவையலும் அமர்க்களம். தங்கள் அம்மாவுக்கு என் அன்பான நமஸ்காரங்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

மாதேவி said...

உங்கள் அம்மாவுக்கு நமஸ்காரங்கள்
.அவர்கள் நினைவாக சுவையான வெங்காய குழம்பு.
நாங்களும் செய்வதுண்டு.

ஸ்ரீராம். said...

அம்மாவின் நினைவு நாளில் அழகான பதிவு. சின்ன வெங்காயம் மேல் அவ்வளவு பிரியமா? இங்கு சின்ன வெங்காயத்துக்கு பெரிய வெங்காயமும் துணையாகி இருக்கிறது!

ஸ்ரீராம். said...

நீங்கள் சொல்லி இருப்பதைப் பார்க்கும்போது வெங்காய வெந்தயக்குழம்பு சற்றே கெட்டியாக என்பது போல தோன்றுகிறது.  அதைச் சாதம் பிணைந்து சாப்பிட வேண்டுமா?

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

அம்மாவின் அன்பான உணவைச்்சாப்பிட்டு வளர்ந்தவர்கள் நாம்.
அதனால் சாப்பிடும் நினைவு வந்தது.

அதுவும்்ஒரு அழுக்குப் படாமல் அம்மா சமைக்கும்்அழகே தனி.

இப்போது மாதிரி காஸ் அடுப்பு எல்லாம் அப்போது கிடையாது. ஞாயிறு என்றால் எங்களால் ஆன உதவிகள் செய்வோம்.
எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உண்போம்.

தங்களின் மிக அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி மா. அவளின் ஆசிகள் எல்லோருக்கும் எப்பொழுதும் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
துகையலை உரலில் இட்டு அரைப்பேன். பொடிமாசும் இடித்து. செய்வதே. எல்லாம்்நல்ல மணத்துடன் இருக்கும் தங்கள் ரசனைக்கு மிகக்
கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி என்றும் நலமுடன் இருங்கள்.

முன்பு பார்த்த நினைவு இருக்கிறது. நீங்கள் தேங்கயும் சேர்த்து செய்வீர்கள் என்று நினைத்தேன் மா.
அம்மாவை என்றும் மறக்க முடியாது.
நீங்கள் அன்புடன் பின்னூட்டம் இடுவது தான் மகிழ்ச்சி.
நன்றி மா.

கோமதி அரசு said...

அம்மாவுக்கு வணக்கம்.
அம்மாவின் நினைவுகள் அருமை.
சின்னவெங்காய வதக்கல் அம்மாவும் செய்வார்கள் அதற்கு பொட்டுகடலை துவையல் அல்லது துவரம் பருப்பு, பாசிபருப்பு வறுத்து அரைத்த துவையல் உண்டு.

அம்மாவின் கைமணம் மனதெல்லாம் இருப்பதும். தம்பி தங்ககைகளுடன் அமர்ந்து உண்டதும் சொர்க்கம்தான்.

Geetha Sambasivam said...

அம்மாவுக்கு எங்கள் அஞ்சலி. இந்தச் சின்ன வெங்காயம் நிறையப் போட்டுக் குழம்பு போன வாரம் கூட வைச்சிருந்தேன். தொட்டுக்க உருளைக்காரக்கறி. பெரிய வெங்காயம் சேர்த்ததில்லை. நீங்க எழுதி இருக்காப்போல் வைச்சால் அதைப் பொங்கல், உப்புமாவுக்குத் தொட்டுக்க வைச்சுப்போம். இப்போ மருத்துவர் புளியே சேர்க்காதே என்கிறார். அந்தக் காலங்களில் பெரியவங்க புளி சேர்த்துச் சமைத்து ஆரோக்கியமாகவே இருந்தார்கள். :(

வெங்கட் நாகராஜ் said...

சுவையான குறிப்பு. இப்படிச் செய்து சுவைத்ததில்லை. செய்து பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஆமாம் மா சின்ன வெங்காயம் எங்க வீட்டில
ஃபேவரிட்.
அடுத்தாற்போல உருளைக் கிழங்கு.:)

இதை கறி மாதிரி தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

சாதத்திலும் பிசைந்து கொள்ளலாம்.
வெங்காயம் பெரிசு சேர்ப்பது இன்னும் சுவை சேர்க்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் பெரிய வெங்காயமே
வாங்க மாட்டார்கள்.
எல்லாமே சின்ன வெங்காயம் தான்.
தேங்காய் சேர்ப்பது போல சி வெ சேர்ப்பார்கள்!!

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா தாமதமாகிவிட்டது.

சின்ன வெங்காயம் ஆஹா ரொம்ப ரொம்பப்பிடிக்கும்.

தின்ன்வேலிக்காரர்கள், நாரோயில், கேரளத்துக்காரர்கள், இலங்கைத் தமிழர்கள் பெரும்பாலும் சின்ன வெங்காயம் பயன்படுத்துவார்கள். எனக்கும் அப்பழக்கம் உண்டு. ஆனால் விலை பல சமயங்களில் எல்லை மீறிப் போகும் போது வாங்கமுடியாமல் போகும்.
முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன் அம்மா
கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அம்மாவும் அப்பாவும் ஞாயிறும் சின்ன வெங்காய வதக்கல், கூடவே
உ.கி பொடிமாஸ். யம்ம்ம். //

ஹைஃபைவ்! என் பாட்டியும் இப்படித்தான் ஞாயிறு என்றால் செய்வார். அவர் இத்தனைக்கும் ஆஜாரம் ஆனால் எங்களுக்குச் செய்து கொடுப்பார். கரி அடுப்பில் வாணலி// அதே அதே...மற்ற அடுப்பில் செய்ய மாட்டார் இதற்கு என்றே வைத்திருப்பார்!!!!!!!!

அவர் காரப் பொடி போடுவார், தனியாப் பொடி போட்டதில்லை.

அது போல நான் தேங்காய் போடுவதற்குப் பதிலாகக் காயில் சி வெ போட்டு செய்வது வழக்கம் ஆனால் விலை பயமுறுத்தும் போது வேறு வழியில்லாமல் தவிர்ப்பது. இங்கு நம் வீட்டில் இதன் பயன்பாடு அதிகம்,

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் செய்முறையையும் பார்த்துக் கொண்டேன். நான் பொதுவாக இப்படித்தான் சி வெ குழம்பு செய்வது...நானும் இப்போது காஷ்மீரி மிளகாய்ப்பொடி சேர்க்கிறேன் அது ஒரு சுவை மற்றும் நிறம் காரம் அவ்வளவாக இல்லாததால்....

மற்றொன்று சி வெ யும் வெந்தயமும் நல்ல துணை. நல்ல சுவை தரும்.

பாட்டிக்கு அஞ்சலியும் நமஸ்காரங்களும்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சுவையோ சுவை....குறிப்பைப் பார்த்துக் கொண்டுவிட்டேன். பிடித்த ரெசிப்பி.

அப்பளப் பொரியலோடு சி வெ போட்டுச் செய்தாலும் செம சுவையாக இருக்கும்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.

புளியைக் கெட்டிக் கரைசலாக விட வேண்டும் என்று
சொல்ல மறந்துவிட்டேன்.
உங்கள் அம்மாவும் செய்திருக்கிறார் என்பது
மிக மகிழ்ச்சி.
நம் ஊரில் புது வெங்காயம் நிறைய வருமே.
எந்த மாதம் என்று நினைவில்லை

அப்போது செய்தால் மிக அருமையாக இருக்கும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா மா. அம்மாவின் ஆசிகள் உங்களுக்கும் இந்தப் பிறந்த நாள் அன்று சொல்கிறேன்.

என்றும் வளமுடன் இருங்கள்.
மதுரையில் சந்தைக்குப் போய் பாட்டியுடன் வாங்கிய நினைவு.

கொஞ்சம் பெரிய அளவிலும் ,அடுத்த சிறிய ஸைசிலும் கிடைக்கும்.

அதுவும் கோடைக்கானல் சீசன் போது
வரும் காய்கறிகள் உசத்தியாக இருக்கும்.

ஆமாம் பாட்டி காலத்தில் புளி கெடுதல்
என்றெல்லாம் கிடையாது.

அப்பாவுக்கு வயிற்றுப் புண் வந்தது
சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்ததால்.
அதற்கப்புறம் பத்திய சமையல் தான்.
இங்கேயும் மகளுக்கு எதுவும் ஒத்துக் கொள்வதில்லை.





வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.

முடிந்த போது செய்து பாருங்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
என்றும் வளமுடன் இருங்கள். நலம் நிறையட்டும்.


''தின்ன்வேலிக்காரர்கள், நாரோயில், கேரளத்துக்காரர்கள், இலங்கைத் தமிழர்கள் பெரும்பாலும் சின்ன வெங்காயம் பயன்படுத்துவார்கள். எனக்கும் அப்பழக்கம் உண்டு. ஆனால் விலை பல சமயங்களில் எல்லை மீறிப் போகும் போது வாங்கமுடியாமல் போகும்.''


அதான் நம்ம பெயரிலேயே தின்ன வந்து விட்டதே:)

ரசித்து ருசிப்போம். கிடைக்கும் போது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,
என்றும் நலமுடன் இருங்கள்.


"நானும் இப்போது காஷ்மீரி மிளகாய்ப்பொடி சேர்க்கிறேன் அது ஒரு சுவை மற்றும் நிறம் காரம் அவ்வளவாக இல்லாததால்...."
ஆமாம் பா. தனியாப் பொடி கூட அவ்வளவு அவசியம் இல்லை.

ஒரு மாறுதலுக்கு இந்த வதக்கல் செய்யலாம்.
எனக்கு கோமதி, ஷெண்பக வடிவு என்று
இரு தோழிகள். அச்சு அசல் தின்னவேலி பிள்ளைமார்.
அவர்கள் வீடுகளின் அழகும், அவர்கள் அம்மாவின் அமைதியும்
இன்னும் மனதில்.
சிவே மணங்கு கணக்கில் வாங்கு வார்கள்.
உணவு, மருந்து என்று பல உபயோகம்.
நீங்கள் ரசித்து பின்னூட்டம் இடுவதே நல்ல பலன் அம்மா
.என்றும் அமைதி சூழ வேண்டும்.