Blog Archive

Wednesday, May 04, 2022

பால்யு பக்கங்கள். 2012

வல்லிசிம்ஹன்

 எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

பால்யு பக்கங்கள்.

அன்பும்   நம் எண்ணங்களும்
நமக்குப் பின் வரும் சந்ததியை நோக்கியே
தொடரும்..
தந்தையின் கை நீளும் மகனின் தோளை அரவணைக்க
மகனின் கை தேடும் தன் பிள்ளையின் பிஞ்சுக் கரத்தைப் பிடிக்க.
பிள்ளையின் கரத்தில் 
தாத்தா வாங்கின குட்டி மோட்டார் கார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

பால்யூ  அவர்கள் எழுதின சிறுகதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
தவிப்பு என்று அந்தக் கதையின் தலைப்பு.

பேரனைத் தாத்தா கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார்.
அவன் அங்கு போய் ஆறு மாதம் ஆகியும் திரும்பவில்லை.
சென்னையில் இருக்கும்   தந்தைக்கு மகனைப் பார்க்கும் ஆவல். அதற்குள் மனைவி  இரண்டாவது  கர்ப்பம் தரித்திருப்பது தெரிய வருகிறது. அவளோ என்னுடைய இந்த நிலையில் அவனைப் பார்த்துக் கொள்வது கடினம். அவன் உங்கள் அப்பாவுடனேயே இருக்கட்டும்  என்று விடுகிறாள்.

முத்துப்பேட்டை கிராமத்தில் இறங்கும்
இந்தத் தகப்பன் மகனைத் தேடி ஓட,
   அவன் தந்தை அவன் உடல் நலம் விசாரிக்கிறார்.  அவருக்குப் 
பதில் சொல்லாமல் தன் மகனைத் தேடுகிறான்.  

அதிகாலை வேளையில் வாயில்  விரலை  வைத்துப் பல் தேய்க்கும்
 அந்தப் பிஞ்சோ கொஞ்ச நேரம் கழித்தே புரிந்து கொள்கிறது.
யப்பா.....என்று ஓடி வருகிறது.
அவன் கிராமத்தில் இருக்கும் நான்கு நாளும் அவனுடனேயே
ஒட்டிக் கொள்கிறது.
அப்பா கிளம்பும் நேரமும் வருகிறது.
அப்பாவோட ஊருக்கு  வரியா கண்ணா 
என்று கேட்டால்
துளி கூடத்தயக்கம் இல்லாமல் தாத்தாவின் தோளைத் தழுவிக் கொள்கிறது
குழந்தை..''நீயும் இங்க இரு அப்பா'' என்கிறது,.
தாத்தாவும் சொல்கிறார்.
''நீ  தான் எங்களை மறந்து   நாட்களைக் கழிக்கிறாய்.
இவனாவது எங்களிடம் இருக்கட்டும் என்று
ஆதரவாக  பேரனை அணைத்துக் கொள்கிறார்..

ரயிலில் ஏறும்  மகனின் தொண்டையில்
தவிப்பு உருள்கிறது.
தன்னை ஈந்தவரையும் தான் ஈந்தமகவையும்
விட்டுப் பிரியும்  சோகம்.

இது போல  கதைகளை   இப்பொழுது படிக்க முடியவில்லையே
என்ற   தவிப்பு எனக்கும்:)

ஆசிரியர் பால்யூவைப் பற்றித் தெரியாதவர்கள்  இருக்க முடியாது.  குமுதம் பத்திரிகை வந்ததும் படிப்பது பால்யூவின் பக்கம் தான்.
அவ்வளவு பிரபலம்.
சிறுகதைகளை  நாம் தேடிப் படிக்கவேண்டி இருக்கிறது இப்போது.
என்னுடைய  இளமைக்காலங்களைப் பற்றிப் பேசினால்,
 ஒரு  விகடன் என்றால் மூன்று, கல்கி என்றால் மூன்று, குமுதம் என்றால் இரண்டாவது  இருக்கும். ஏனெனில் தொடர்கதைகளும் நிறைய வரும்.
தற்கால  நிலை....ம்ஹூம்   நான் சொல்வதாக  இல்லை.
இப்போது இந்தப் பதிவில்   பால்யூ அவர்கள் 1948 இலிருந்து எழுதின கதைகள் இந்தப் புத்தகத்தில்  இருக்கின்றன.
இந்தப் புத்தகத்தகத்தை நான் வாங்கினது    எட்டு வருடங்களுக்கு முன்னால்..


இப்போது கிடைக்கும் என்றே நம்புகிறேன். தொலைபேசி எண்ணும் இருக்கிறது. வாங்கிப் படியுங்கள். நல்லதொரு அனுபவம்    கிடைக்கும்.:)





8 comments:

வெங்கட் நாகராஜ் said...

பால்யு கதைகள் படித்த நினைவில்லை. இணைய வழி கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
குமுதம் ஆசிரியர் பால்யூ எத்தனையோ அருமையான கதைகள் எழுதியவர்.
பழகுவதற்கும் இனியவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

மனித மன மாற்றங்களை அருமையாக விஸ்தரிப்பார். கிடைத்தால் படியுங்கள் அப்பா.

ஸ்ரீராம். said...

குமுதத்தில் பால்யூ பக்கங்கள் என்றுமே சுவாரஸ்யமானவை.  ஒவ்வொரு செய்தியுடனும் முத்தாய்ப்பாய் ஒரு ஆங்கில வாக்கியம் வைப்பார்.  

ஸ்ரீராம். said...

தவிப்பு அருமையான சிறுகதை என்று தெரிகிறது.  உணர்வுபூர்வமான கதை.  பிள்ளைகள் அப்பாவைத் தேடுவதில்லை.  பெற்றவர் பிள்ளையைத் தேடுகிறார். பேரன்கள் தாத்தாவுடன் எளிதாய் ஒட்டிக்கொண்டு விடுகிறார்கள்.

ஸ்ரீராம். said...

பாக்கெட் நாவல் ஜி அசோகன் தொகுத்திருக்கிறார், இந்தச் சிறுகதைகளை.  இணையத்தில் கிடைக்கிறதா என்று நானும் பார்க்கிறேன்.  பொருத்தமான மூன்று தலைமுறைகள் படத்தை இணைத்திருக்கிறீர்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

பால்யூ கேள்விப்பட்டதுண்டு அம்மா. ஆனால் வாசித்ததில்லை.

கதை அருமை. அப்போதே இப்படி எழுதியிருப்பதிலிருந்து தெரிவது எல்லாக் காலமும் ஒன்றுதான் என்பது!!!

மிக்க நன்றி அம்மா அறிமுகப்படுத்தியதற்கு

கீதா

கோமதி அரசு said...

அருமையான கதை பகிர்வு.
இப்போது இப்படி சிறு கதைகளை சினிமா ஆக்கி விடுகிறார்கள் சத்தமில்லாமல்.

அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.

Geetha Sambasivam said...

நல்ல விமரிசனம். பால்யூ பக்கம் குமுதத்தில் படித்தது தான். புத்தகமாக வந்திருப்பதோ அதில் இருக்கும் சிறுகதைகள் பற்றியோ அறியவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி. கடைசியில் இணைத்திருக்கும் படம் அபாரம். கண்களையும் மனதையும் நிறைத்தது.