Blog Archive

Friday, April 15, 2022

சிம்ஹாசலம் வராஹ நரசிம்ஹன்

வல்லிசிம்ஹன்

சிம்மாசலம்வராஹ நரசிம்ம #நரசிம்ஹபெருமாள்


இந்த கோயில் விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது. 

மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியில் இருபது நிமிடம் பிடிக்கிறது. படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் எற வேண்டும்.

விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனைக் கொல்ல இரண்யகசிபு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவை பயனற்றுப்போன நிலையில், பிரகலாதனைக் கடலில் வீச ஆணையிட்டான். ஆனால், அவ்வாறு வீசும்போது விஷ்ணு அந்த மலைமீது இறங்கி பிரகலாதனைக் காத்தார். அதுதான் சிம்மாத்ரி (இன்றைய சிம்மாச்சலம்). முனிவர்கள் பக்தர்களின் வேண்டுகோளின்படி வராக நரசிம்மராக அங்கேயே குடிகொண்டார்.

வராஹ நரசிம்மரின் கட்டளைப்படி இன்றுவரை சந்தன மேனியுடனே நரசிம்மர் காட்சியளிக்கிறார். வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தன பூச்சு வ…பவுர்ணமி, ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500 கிலோ சந்தனம் சாத்துகிறார்கள். 

எல்லா நாட்களும் சந்தனகாப்புடன் காட்சியளிக்கிறார் இந்த வராஹ நரசிம்மர்  என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ராமானுஜர் ஸ்ரீ கூர்மத்தில் வைணவத்தை நிலைநாட்டியபின், தெற்கே அடுத்த தலமான சிம்மாசலமான இம்மலையை அடைந்தார். 

விசாகப்பட்டினத்திற்கு பதினைந்து மைல் தூரத்தில் இருக்கும் மலைக் கோயில் இது. 

இங்கு கோயில் கொண்டிருக்கும் வராக நரசிம்மர், பின்னாளில் ஹிரண்யகசிபுவை வதைத்தபின் இங்கு பிரஹலாதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வராக முகத்துடன் மனித உடலோடு, சிங்கத்தின் வால்கொண்டு, வராக நரசிம்மனாக காட்சி அளிக்கிறார். 

பிரஹலாதன் பெருமாள் காத்தருளிய அந்த இடத்தில் நரசிம்மருக்கு கோயிலைக் கட்டிய இடமே சிம்மாசலம்.

பெருமாளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். 

அருகிலேயே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள். 

வெளியே வந்து காங்கதாரா அருவி, எங்கிருந்து வருவதென்று தெரியவில்லை.  

ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் தெளித்துக்கொள்ளலாம்.  

சனக, சனந்தன, சனாத, சனத்குமாரர்களுக்கும், தேவர்கள், நாரதர், ரிஷிகளுக்கும், இவர்  தரிசனமளித்ததாக தலபுராணம் கூறுகிறது. 

இங்குள்ள நரசிம்ம தீர்த்தம், கங்காதாரா தீர்த்தம் எனும் இரு அருவிகளிலும் நீராடி வராஹநரசிம்மரை வணங்க தீரா நோய்கள் தீர்ந்து பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். 

உடல் வளமும் உள்ள வளமும் பெற இந்த வராஹ லட்சுமிநரசிம்மர் பேரருள்  புரிகிறார்.
[5:41 AM, 4/15/2022] Vasu: 

பலமும் பலவீனமும் நிரந்தரமல்ல
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஒரு காட்டில் கரையான்கள் ஒன்று கூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன.   அதற்கான இடத்தை தேர்வு செய்தன.  புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து புற்றை கட்டத் தொடங்கின.  அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது.  கரையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது.  அன்றிலிருந்து கரையான்களை வேலை செய்யும் இடத்திற்கு வருவதும், வேடிக்கை பார்ப்பதும் வழக்கமாக கொண்டிருந்தது பாம்பு.   இப்படியே ஒரு வருடகாலம் சென்றது.  கரையான்கள் புற்றை கட்டி முடித்தன.   பாம்பு பேசியது.
''கரையான்களே!  நீங்கள் கட்டிய புற்று அருமையாக இருக்கிறது.  நான் ஒருமுறை உள்ளே சென்று பார்க்கட்டுமா?''  என்று கேட்டது.
கரையான்கள் சம்மதித்தன.  பாம்பு புற்றுக்குள்ளே சென்று பார்த்தது.   பாம்பு வெளியேவரும் என்று கரையான்கள் காத்திருந்தன.   வெளியே வரவில்லை.   கரையான்கள் வெளியிலிருந்து பாம்பை கூப்பிட்டன.  
''புற்று வசதியாக இருக்கிறது.  இனி இது என்னுடையது.  வேண்டுமென்றால், நீங்கள் இன்னொரு புற்றை கட்டிக்கொள்ளுங்கள்.  இங்கிருந்து கிளம்புங்கள்.  இல்லையென்றால், என் விஷத்துக்கு இரையாவீர்கள், என்று மிரட்டியது பாம்பு.
சோகத்தோடு கிளம்பின கரையான்கள்.   வழியில் சாதுவை சந்தித்து நடந்தவற்றை சொல்லி வருத்தப்பட்டன.  சாது பாம்பிடம் பேசினார்.  
''பாம்பே!  புற்றை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் உனக்கில்லை.   அடுத்தவன் உழைப்பை திருடுகிறாயே!  அடுத்தவன் உழைப்பை பலத்தால் பெறுவது நியாயமல்ல, என்றார் சாது.
பாம்பு பேசியது.
சாதுவே!  உலகத்தில் பலவான்கள் வைத்ததுதான் தர்மம், சட்டம் என்பது உங்களுக்குத் தெரியாதா?   பலவானிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம், என்று சொல்லிவிட்டு நகர்ந்தது.
கரையான்கள் அழுதுகொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தன.  சாதுவும் நகர்ந்தார்.   சில மாதங்கள் சென்றன.  பாம்பு தனது குடும்பத்தோடு புற்றில் வசித்து வந்தது.  
ஒரு நாள் பாம்பு தனது குட்டிகளோடு புற்றிற்கு வெளியில் உலவிக்கொண்டிருந்தது.   அப்போது அங்கு வந்த பருந்து பாம்பை கொத்திக்கொண்டு பறந்தது.  குட்டிகள் கதறின.   வானத்தில் பறந்துகொண்டிருந்த பருந்து பொத்தென்று பாம்பை கீழே போட்டது.   பாம்பு விழுந்த இடம் சாதுவின் ஆசிரம வாசல்.   உயிர் பிரியும் தருவாயில் சாதுவிடம் பேசியது பாம்பு.  
சாதுவே!  நான் இல்லாமல் குட்டிகளால் வாழ முடியாது.   ஆகைவே என்னைக் காப்பாற்றுங்கள், என்று கெஞ்சியது.  
சாது பேசினார்.
''பாம்பே!  விதி சொல்லிக்கொடுக்கும் பாடம் ஒன்றைத் தெரிந்துகொள்.    வலிமை, பலம் என்பது நிரந்தரமல்ல.  இன்று எவற்றையெல்லாம் பலமாக உணர்கிறாயோ, அவற்றையெல்லாம் நாளை பலவீனமாக உணர்வாய்.   அதே போல, இன்று பலவீனமாக பார்க்கப்படுபவை, பலமாக மாறும் காலமும் வெகு தொலைவில் இல்லை.  ஆகையால், பலவானாக இருக்கும் போது பக்குவமாகவும், பிறருக்கு கெடுதல் செய்யும் பழக்கமில்லாதவனாகவும் வாழ்ந்திருக்க வேண்டும்.    ஆனால் நீ அப்படி வாழவில்லை.    கரையான் என்ற வலிமையில்லாத எதிரியை நீ தேர்ந்தெடுத்தாலும், பருந்து என்ற பலமான எதிரிக்கு பதில் சொல்லும் நிலைக்கு காலம் உன்னை தள்ளியிருக்கிறது''.  
''பாம்பே!  நிதர்சனமான ஒரு உண்மையைத் தெரிந்துகொள்.   நாளை உனக்கு கிடைக்கும் தண்டனைக்கு உன்னை தயார்படுத்துவதே இன்று பலத்தை நம்பி நீ செய்யும் அராஜகங்கள்தான்.   அடுத்தவனை வருத்தி, அதை ரசிக்கும் உன் குணத்தை இந்த உலகம் வேண்டுமானால் மறந்து போகலாம்.  ஆனால், நீ கீழே விழும்போது காலம் அதை உன் நினைவில் கொண்டு வரும்.   அப்போது அதை தாங்கும் சக்தி உனக்கோ, உன் சந்ததிகளுக்கோ இருக்காது.  உன் சந்ததிகள் உன் பாவத்தை பங்காக பிரித்துக்கொள்வார்கள்'', என்று சொல்லிவிட்டு சாது சென்றார்.  
அதற்குப் பிறகு பாம்பு என்ன செய்தது என்பது நமக்கு முக்கியமல்ல.  காரணம் காலம் அதை தன் பிடியில் எடுத்துச் சென்றுவிட்டது.   பலம் பொறுந்திய ஒருவனின் அராஜகம், அகந்தை, கோபம் ஆகியவற்றை நினைக்கும் போது பகவத்கீதையில் - 7வது அத்யாயம் - 11வது ஸ்லோகம் நம் நினைவிற்கு வருகிறது.  
பலம் பலவதாம் சாஹம் காமராக விவர்ஜிதம்
தர்மாவிருத்தோ பூ தேஷு காமோஸ்மி பரதர்ஷப
ஆசையும், பற்றும் நீங்கப் பெற்ற பலம்பொறுந்தியவர்களின் வலிமையாகவே நான் இருக்கிறேன் என்கிறார் பகவான் ஶ்ரீகிருஷ்ணர்.   காமம், பற்று அதாவது அளவில்லா ஆசை, அஹங்காரம், கோபம் முதலியவற்றோடு கூடிய பலம் அசுரபலம் ஆகும்.    இதைத் துறக்க வேண்டும் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.   இதைப் போலவே தர்மத்திற்கு முரணான காமமும் அசுரத்தனத்தின் முக்கிய குணம்.   இதுவே எல்லாவகை துன்பத்திற்கும் காரணமாக இருக்கிறது.   இதுவும் விலக்கத்தக்கது.
கீதையாக இருந்தாலும் சரி, இதிகாச புராணங்களாக இருந்தலும் சரி, அழுத்திச் சொல்லும் ஒரு விஷயம், பலவானின் பலம், பலவீனமானவர்களை பாதுகாக்க மட்டுமே பயன்பட வேண்டும் என்பதுதான்.  
எதற்காக இந்தக்கதை?  சென்னை அயோத்யா மண்டபம்தான் கரையான்கள் கட்டிய புற்றா?என்று யாராவது நினைத்தால் அதற்கு கட்டுரையின் ஆசிரியர் பொறுப்பல்ல.    அப்படி நினைத்தாலும்  தவறில்லை என்றுதான் இன்று நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.   இந்து சமய அறநிலையத்துறை இந்தக் கதையில் வரும் பாம்பைப் போலத்தான்.  சுதந்திர இந்தியாவில் எத்தனை புதிய கோவில்களை அவர்கள் கட்டியிருக்கிறார்கள்?  அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் இன்றைய நிலை என்ன?   என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாதவர்கள் யாருமில்லை.  எல்லாம் தெரிந்தாலும், அரசியல் எல்லோர் வாயையும் அடைத்திருப்பதுதான் பக்தர்களின் அவல நிலை.    விழித்துக்கொண்டிருப்பவர்களை எழுப்ப வேண்டியதில்லை.   
அனைவருக்கும்  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.   சுபகிருது வருடம் உங்களுக்கு எல்லா நலன்களையும் தரட்டும்.   
அன்புடன் சாது ஶ்ரீராம்


18 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதுவரை பார்த்திராத கோயிலுக்கு அழைத்துச் சென்றது இப்பதிவு. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வேன்.

ஸ்ரீராம். said...

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களையே நான் இன்னும் பார்க்கவில்லை.  விசாகப்பட்டினம் கோவில் செல்லும் ஆசையும் வந்து விட்டது.   இன்று இதுவரை நான்கு கோவில்கள் பற்றி படித்திருக்கிறேன்.  முதலாவது மதுரை.  பார்த்திருக்கிறேன்.  இரண்டாவது மத்யாகைலாஷ், சென்னை.  பார்த்ததில்லை!!  அடுத்து குடந்தை தெருப்பாநல்லூர் கோவில் பார்க்க ஆவல்.  இப்போது இந்தக் கோவில்.  நான் அதிக பட்சம் சென்றிருக்கும் ஆந்திரா திருப்பதுதான்.  ஆந்திராவில் இந்தக் கோவிலும் இன்னும் சில மலைக்கோவில்களும் சென்று தரிசிக்க ஆசை.

ஸ்ரீராம். said...

அந்த பாம்புக்கு முனிவர் சொன்ன பதில் மனதுக்கு திருப்தியைத் தரும்.  ஆனால் பொதுவாக இதுமாதிரி அனுபவங்களில் அந்த நல்ல விளைவுகள் யாவும் நம் ஆயுசு காலத்தில் வருமா என்பது சந்தேகம்!

Geetha Sambasivam said...

என்ன சொன்னாலும் இவங்க புரிஞ்சுப்பாங்களானு சந்தேகமே! சிம்ஹாசலம் பற்றிய தகவல்கள் அருமை. அடுத்துப் பாம்புப் புற்றுக்குள் குடி புகுந்ததும் அதன் கடைசி காலமும் . இதெல்லாம் கதையில் தான் நடக்குமா எனக் கேட்க வைக்கிறது. மொத்தத்தில் நல்லதுக்குக் காலம் இல்லை. :( ஆந்திராவில் அதிகம் கோயில்கள் பார்த்ததில்லை. அஹோபிலமும், திருப்பதியும் தவிர்த்து.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முனைவர் ஐயா. வணக்கம். என்றும் நலமுடன் இருங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக சில கோவில்களையாவது காண
ஆசை. கண்டிப்பாகச் சென்று வாருங்கள்.
வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அந்த பாம்புக்கு முனிவர் சொன்ன பதில் மனதுக்கு திருப்தியைத் தரும். ஆனால் பொதுவாக இதுமாதிரி அனுபவங்களில் அந்த நல்ல விளைவுகள் யாவும் நம் ஆயுசு காலத்தில் வருமா என்பது சந்தேகம்!''

உண்மைதான். எப்பவாவது கொடுமைகளுக்குப் பதில் கிடைத்தால்
போதும்.
நன்றி அன்பு ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

''இரண்டாவது மத்யாகைலாஷ், சென்னை. பார்த்ததில்லை!! அடுத்து குடந்தை தெருப்பாநல்லூர் கோவில் பார்க்க ஆவல். இப்போது இந்தக் கோவில். நான் அதிக பட்சம் சென்றிருக்கும் ஆந்திரா திருப்பதுதான். ஆந்திராவில் இந்தக் கோவிலும் இன்னும் சில மலைக்கோவில்களும் சென்று தரிசிக்க ஆசை.''

உங்கள் ஆசைகள் நிறைவேறும் காலம் அருகில் வருகிறது. இன்னும் இரண்டு வருடங்கள்
காத்திருங்கள்.
இப்போதிலிருந்து குட்டி டிரிப்ஸ் போய் வாருங்கள்.
வேலை ஒய்வுக்குப் பிறகு மருமகளும் வந்ததும்
நீங்களும் பாஸ் உம். ரயில் ஏறுங்கள் உன்னதமான கோவில்களின் தரிசனம் கிடைக்க
ஆசிகள்.

வெங்கட் நாகராஜ் said...

எங்களது விசாகப்பட்டினம் பயணத்தில் இந்த கோவிலுக்கும் சென்று வந்தோம். தகவல்கள் அனைத்தும் சிறப்பு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

என்றும் நலமுடன் இருங்கள்.

''அடுத்துப் பாம்புப் புற்றுக்குள் குடி புகுந்ததும் அதன் கடைசி காலமும் . இதெல்லாம் கதையில் தான் நடக்குமா எனக் கேட்க வைக்கிறது. மொத்தத்தில் நல்லதுக்குக் காலம் இல்லை. :( ஆந்திராவில் அதிகம் ''

இது மஹாபாரதக் காலத்திலிருந்து நடந்து வருகிறது.
தர்மம் தலைகாக்கும்.
அதர்மம் தோற்கும் என்பதெல்லாம் நாம் சின்னவர்களாயிருந்ததில் இருந்ததிலிருந்து
சொல்கிறார்கள்.
என்ன நடக்கணுமோ அதுதான் நடக்கிறது.

சொல்றதைச் சொல்லி வைக்கலாம்.

நாங்கள் விஜயவாடா, அஹோபிலம்
போயிருக்கிறோம்.

அதுவும் முக்கூரார் சொன்னதினால் நடந்தது.
இனிப் பயணம் எல்லாம் இணையத்தில் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட் என்றும் நலமுடன் இருங்கள்.

நீங்கள் சென்றிருக்கும் பயணங்கள்
கணக்கில் கொள்ள முடியுமா.
அதைப் பதிவிலும் சொல்லி எங்களுக்கெல்லாம் உதவி இருக்கிறீர்கள்.
அதற்கே நன்றி சொல்ல வேண்டும்.
மிக்க மகிழ்ச்சி மா.

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா அம்ம சிம்மாச்சலம்....நான் போயிருக்கிறேன். ஓ இன்னும் அந்த விசாகப்பட்டினம் ஊர் சுற்றல் எழுதவில்லை...படங்கள் இருக்கு நிறைய. எழுத வேண்டும். படங்கள் எல்லாம் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கில் இருக்கிறது. அதை இந்தக்கணினியில் ஏற்ற இது ரெக்கக்னைஸ் பண்ண மாட்டெங்கிறது அதனால் பல அதில் மாட்டிக் கொண்டு இருக்கிறது.

கோயிலுக்குள் செல்ல கட்டுப்பாடுகள் இருந்தது. பிரசாதம் நன்றாக இருந்தது. புளியோதரை.

கோயில் வளாகமே அழகு ஆனால் இன்னும் கட்டிக் கொண்டே போவது மலையை உடைத்திருப்பது எல்லாம் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கதை அருமை. சிம்மாச்சலம் கோயில் பற்றிய தகவல்களும் சிறப்பு

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

கதையில் வருவது போல அடக்கி ஆள நினைப்பவர்கள் அனுபவம் னம் எல்லோர் வாழ்விலும் நடக்கிறதே. அதாவது இப்படியான வலுவான மாந்தரகள்

ஆனால் கதையில் வருவது போல நம் வாழ்க்கையில் நடக்குமா..அதாவது பனிஷ்மென்ட் மற்றும் நல்லது அதென்னவோ நலல்து மட்டும் சிலருக்குதான் நடக்கும் போல...கொடுப்பினை வேண்டுமோ

கீதா

கோமதி அரசு said...

சிம்மாசலம்வராஹ நரசிம்ம #நரசிம்ஹபெருமாள்
கோவில் பற்றி தெரிந்து கொண்டேன். தரிசனம் செய்ய கோவில்கள் நிறைய இருக்கிறது.

கரையான் கதை படித்தவுடன் நினைவுக்கு வந்தது. ."கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி கொண்டது போல" என்ற பழ மொழி நினைவுக்கு வந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.


''கோயிலுக்குள் செல்ல கட்டுப்பாடுகள் இருந்தது. பிரசாதம் நன்றாக இருந்தது. புளியோதரை.

கோயில் வளாகமே அழகு ஆனால் இன்னும் கட்டிக் கொண்டே போவது மலையை உடைத்திருப்பது எல்லாம் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.''

எனக்கு இந்தக் கோவிலைப் பற்றி அப்பாவின் பாட்டி சொன்னார்.
அவருடைய அப்பா முன்னக்காலத்து
ரயிலில் சலோன் என்று சொல்வார்கள். அதில்
குடும்பத்தோடு பயணித்தாகவும்,
ஆந்திரா கோவில்கள் அனைத்தையும் தரிசித்ததாகவும்
சொன்னார்.
நீங்கள் சென்று வந்தது மனசுக்கு ரொம்ப சந்தோஷம் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்..
இந்தக் கோவில் தல வரலாறு மிகப்
பிடித்தது. அதனால் பகிர்ந்தேன் மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆனால் கதையில் வருவது போல நம் வாழ்க்கையில் நடக்குமா..அதாவது பனிஷ்மென்ட் மற்றும் நல்லது அதென்னவோ நலல்து மட்டும் சிலருக்குதான் நடக்கும் போல...கொடுப்பினை வேண்டுமோ''


அன்பின் கீதாரங்கன், கண்ணுக்குத் தெரிவதெல்லாம்
தினசரி நடக்கும் நல்லன அல்லாத செயல்களே.

தெய்வ நம்பிக்கையும் வேண்டித்தான் இருக்கிறது.
ஏதாவது ஒன்றைப் பிடித்துக் கொள்ள வேண்டி வருகிறது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
''கரையான் கதை படித்தவுடன் நினைவுக்கு வந்தது. ."கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி கொண்டது போல" என்ற பழ மொழி நினைவுக்கு வந்தது.''

ஆமாம். பழமொழி அப்படித்தான் படித்திருக்கிறோம்.

மஹாபாரதத்தில் கூடப் பாண்டவர்களுக்கு
இது போல கானகத்தில் தவம் இருப்பவர்கள்
அறிவுரைக் கதைகள் சொல்வார்கள்.

மனிதர்களின் நல்ல மனம் செழிக்கட்டும் துர்க்குணம
அழியட்டும்.
நன்றி மா.