Blog Archive

Tuesday, April 26, 2022

உலக புத்தக தினம் ஏப்ரில் 24 ஆம் நாள்.

வல்லிசிம்ஹன்
   அனைவரும் வளமோடு வாழ வேண்டும்.
இந்த செய்தி அனுப்பிய சின்ன தம்பி வீரராகவனுக்கு
மனம்  நிறை நன்றி. என் மாமா ராமசாமி  ,மாதிரியே 
இவனும் புத்தகங்கள் ,எழுத்து, பேச்சு எல்லாவற்றிலும்
முன்னிற்கிறான். எப்பொழுதானாலும் அவன் உதவிக்கரம் நீட்ட
மறுப்பதில்லை. நீடு நல் வாழ்வு வாழ ஆசிகள்.@VeeraraghavanRamaswamy.


புத்தகம் வாங்குவோம்!
திருப்பூர் கிருஷ்ணன்
.......................................
   *புத்தகமோ பத்திரிகையோ எத்தனை பிரதிகள் விற்கின்றன என்பதைக் குறித்து அவற்றின் மதிப்பு கணிக்கப்படுவதில்லை. விற்பனை குறைவாக இருந்தாலும் தரம் காரணமாகவே மதிப்பு கூடுகிறது. 

  கடந்த காலப் பத்திரிகை வரலாற்றில் பெரும் பத்திரிகைகளைப் போல் மணிக்கொடியோ தீபமோ, சரஸ்வதியோ, சுபமங்களாவோ விற்றதில்லை. ஆனால் அவைபோன்ற பத்திரிகைகள் தான் இலக்கிய வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றன.

  புத்தகமும் பத்திரிகையும் அதிகப் பிரதிகள் விற்பது நல்லதுதான். ஆனால் அதிகப் பிரதிகள் விற்பதற்கான சமரசங்களில் எழுத்தாளரோ பத்திரிகை ஆசிரியரோ ஈடுபடலாகாது.  

   மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்திலேயே அவரை அவர் சென்ற இடங்களிலெல்லாம் சென்று கண்டு திரைப்படம் எடுத்தவர் ஏ.கே. செட்டியார். உயர்தர காந்தியவாதியான அவர் குமரிமலர் என்ற அற்புதமான மாத இதழை நடத்திவந்தார். மிகக் குறைவான பிரதிகள் மட்டுமே அதை அச்சிட்டார். 

  வாசகர்கள் எந்த ஊரிலிருந்து சந்தா கட்ட விரும்பிக் கடிதம் எழுதினாலும் அந்த ஊரில் ஏற்கெனவே உள்ள குமரிமலர் சந்தாதாரரின் முகவரியை அனுப்பிவிடுவார். கடன்வாங்கி குமரிமலரைப் படித்துவிட்டு ஞாபகமாக திரும்பக் கொடுத்துவிடுமாறு அறிவுறுத்திக் கடிதம் எழுதுவார்! 

   ஆனால் பொதுவாக புத்தகத்தைக் கடன் வாங்குபவர்கள் பெரும்பாலும் திருப்பித் தருவதில்லை. அக்கம்பக்க வீடுகளில் காப்பிப் பொடி, சர்க்கரை கடன் வாங்கினால் திரும்பக் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. புத்தகத்தை வாங்கினால் நம்மிடம் வாங்கிய புத்தகம் வேறு யாருக்கோ கடனாகக் கொடுக்கப்பட்டு விடுகிறது. 

  புத்தகத்தைத் திரும்பக் கொடுக்காதது பற்றிய குற்ற உணர்ச்சி கூட யாருக்கும் இருப்பதில்லை. 

 `புத்தகங்களைக் கடனாகக் கொடுக்காதீர்கள். திரும்பி வராது. உதாரணமாக என் நூல்நிலையத்திலுள்ள புத்தகங்கள் எல்லாம் பிறர் எனக்குக் கடனாகக் கொடுத்தவைதான்!` என்று அனுபவஸ்தர் சொன்ன ஒரு பொன்மொழியும் உண்டு!

  இப்போது சில எழுத்தாளர்கள் நூலகங்களில் தாங்கள் புத்தகத்தைத் திருடிய விஷயங்களை விஸ்தாரமாக எழுதிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். எல்லாத் திருட்டும் தவறுதான். புத்தகத் திருட்டும் அப்படித்தான். 

  ஏடுகளைத் தேடித் தேடி நடந்து உ.வே.சா. பல இலக்கியங்களைப் பதிப்பித்தார். அந்த வகையில் புத்தகப் பதிப்பகங்கள் அவருக்குப் பெரிதும் கடன்பட்டுள்ளன. பல அருமையான ஏடுகளை நதியிலும் நெருப்பிலும் விட்டுவிட்ட மக்கள் மத்தியில், உ.வே.சா.வுக்கு ஏடுதந்த பெருமக்கள் நன்றியுடன் நினைவு கூர்வதற்கு உரியவர்கள்.

  எழுத்தாளர் பிரேமா நந்தகுமாரின் தந்தை கே.ஆர். ஸ்ரீனிவாச ஐயங்கார் புத்தகப் பிரியர். உலக அளவில் நடைபெற்ற ஷேக்ஸ்பியர் மாநாட்டுக்கு ஆசியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே ஆங்கில அறிஞர் அவர். 

  90 வயதுக்கு மேல் வாழ்ந்த அவருக்குக் கடைசிக் காலத்தில் கண்பார்வை போய்விட்டது. அப்போது கூட புத்தகங்களைத் தடவிக்கொடுத்துக் கொண்டிருப்பார். புத்தகங்களைத் தொட்டுப் பார்ப்பது ஒரு பாதுகாப்புணர்வைத் தருகிறது என்பார் அவர்.

  மறைந்த எழுத்தாளர் அநுத்தமா ஒருமுறை சொன்னார், `புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்ல, அடுக்கிவைப்பது, அட்டை போடுவது போன்றவை கூட சுகம்!` என்று. செல்லப் பிராணிகளைப் பராமரிப்பதில் உள்ளது மாதிரி புத்தகங்களைப் பராமரிப்பதிலும் தனி சுகம் உண்டு.

  தம் கடைசிக் காலங்களில், கண்பார்வை இல்லாமல் பல ஆண்டுகள் வாழ்ந்த அ.ச.ஞா., பெரியபுராண நூலின் மேற்கோள்களைப் பக்க எண்ணோடு சொல்வார். தம் புதல்வி செல்வி மீரா வாசித்துக் காட்டும்போது பக்க எண்ணையும் சேர்த்து மனத்தில் வாங்கிக் கொள்வார். 

  அவரும் சரி, பல ஆண்டுகள் கண்பார்வை இல்லாமல் வாழ்ந்த சாதனையாளரான கோவை ஞானியும் சரி - இவர்கள் இருவரும் வேறு வழியில்லாததால் அடுத்தவர்களிடம் வாயால் சொல்லி எழுதியவர்கள். 

  சொல்லி எழுதும் முறைக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் பிள்ளையார் தான். வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் தந்தத்தை ஒடித்து மகாபாரதத்தை எழுதியதாகச் சொல்கிறது புராணம். 

  வை.மு. கோதைநாயகி தொடக்கத்தில் தமது சில நாவல்களைச் சொல்லி எழுதினார். காரணம் அப்போது அவருக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. பிறகுதான் தாம் சொன்னவற்றை எழுதிய தம் தோழி பட்டம்மாள் மூலம் அவர் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். 

  பத்திரிகையாளர் எஸ்.எஸ். மாரிசாமி வயோதிகத்தின் காரணமாகச் சொல்லி எழுத யாராவது ஆள் கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிருந்தார். அப்படி ஆள் கிடைப்பதற்குள் அவர் காலமாகிவிட்டார். 

  அப்போது `முன்பே தெரிந்திருந்தால் நான் போய் உதவி செய்திருப்பேனே, நான் எழுதுவதை விடவும் அவர் எழுதுவதல்லவா முக்கியம்` என்று பெரிதும் மனம் வருந்தினார் வண்ணநிலவன். 

  கோவை போன்ற பெருநகரங்களில் செல்வந்தர்கள், ஆயிரம் ரூபாய்க்கு மேல் அடிக்கடி புத்தகங்கள் வாங்குவார்கள். நல்ல புத்தகம் என்று தோன்றுவதையெல்லாம் வாங்கி வீட்டில் அடுக்கி வைப்பார்கள்.

  படிக்காமல் புத்தகத்தை அடுக்கி வைப்பதால் என்ன பிரயோஜனம் என்று தோன்றும். ஆனால் அப்படி வாங்கி வைப்பவர்களால்தான் புத்தகங்கள் தொடர்ந்து வியாபாரம் ஆகின்றன. அப்படி வியாபாரம் ஆவதால் தான் பதிப்பகமும் அதையொட்டி எழுத்தாளர்களும் பிழைக்க முடிகிறது. 

  எனவே படிக்க நேரமில்லாவிட்டாலும் கூட புத்தகம் வாங்கும் சக்தி படைத்தவர்கள் நிறைய வாங்கவேண்டும். வாங்கியவர் படிக்காவிட்டாலும் படிப்பவர்களுக்கு அந்தப் புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம். 

  தவிர வீட்டைக் கலைப்பொருட்கள் அழகு படுத்துவது மாதிரிப் படிக்காவிட்டாலும் கூடப் புத்தகங்கள் வீட்டை அழகுபடுத்தத் தான் செய்யும். வாங்கியவர் படிக்காவிட்டால் என்ன? அவரது வாரிசுகள் எதிர்காலத்தில் படிக்கக் கூடும்.

  புத்தகங்கள் படிக்க மட்டுமல்ல, நல்ல நிமித்தம் சொல்லும் நண்பனாகவும் இருந்ததுண்டு.. நூல் போட்டுப் பார்த்து வரவிருப்பது நல்லதா கெட்டதா என்று ராமாயணத்தை வைத்து அறிந்து கொள்ளும் பழக்கம் முன்பு இருந்ததுண்டு.

   சாவியின் புகழ்பெற்ற நாவலான வழிப்போக்கனில் ஒரு காட்சி. கதாநாயகன் சென்னைக்குப் புறப்படும்போது அவன் அப்பா ஒரு ராமாயணப் புத்தகத்தை அவனிடம் கொடுத்து `கஷ்டம் வரும்போது இதைப் பிரித்துப் படி. உன் கஷ்டம் தீர்ந்து ஆறுதல் கிட்டும்` என்று சொல்வார். 

  அவன் ரொம்ப காலம் அதைப் பிரித்துப் படிக்க நேரமில்லாமலே இருந்துவிடுவான். 

  உண்மையிலேயே ஒருமுறை கஷ்டம் வரும்போது அப்பா சொன்னது நினைவு வர, அதைப் பிரித்துப் படிப்பான். படிக்க முற்படுவதற்கும் முன்பாகவே அவன் கஷ்டம் தீர்ந்துவிடும். 

  அந்த ராமாயணப் புத்தகத்தின் பக்கங்களின் இடையே நூறு ரூபாய் நோட்டை வைத்திருப்பார் அப்பா. கதாநாயகனின் பொருளாதாரக் கஷ்டத்தை நீக்க அந்த நூறு ரூபாய் பயன்படும். (அந்தக் காலத்தில் நூறு ரூபாய் என்பது பெரியதொகை.)

  இப்போது ஈ புக் எனக் கணிப்பொறிப் புத்தகங்கள் வரத் தொடங்கிவிட்டன. கணிப்பொறியின் மூலம் பழைய இலக்கியங்கள் முழுவதையும் நாம் `ப்ராஜக்ட் மதுரை` போன்ற தளங்களில் வாசிக்க முடிகிறது. 

  ஆனாலும் அச்சிட்ட புத்தகங்களில் இருக்கும் செளகரியம் இதில் கிடையாது. முக்கியமாக சாய்வு நாற்காலியில் மல்லாந்து படுத்துக் கொண்டு கணிப்பொறியை வாசிக்க இயலாது. 

  எதிர்காலத்தில் கூட அச்சிட்ட புத்தகங்களுக்கு இருக்கும் மதிப்பு குறையும் என்று தோன்றவில்லை. 

  நம் மரியாதைக்குரிய முதுபெரும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் தமக்கு ஆங்கிலம் தெரியாது என்று பொய்சொல்வார்! ஆனால் பல ஆங்கில நூல்களைப் பற்றி அற்புதமாக உரையாடக் கூடியவர் அவர். 

 பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், ஆங்கில இலக்கியம் எல்லாமே நம் அறிவை விசாலப்படுத்தக் கூடியவை. ஓர் உண்மையான வாசகன் எந்த மொழியையும் வெறுக்க இயலாது. 

  ஜெயகாந்தன் தாம் பள்ளியில் அதிகம் படித்ததில்லை என்பார். அவர் பள்ளியில் படித்ததில்லை என்பது உண்மையாக இருக்கலாம். 

  ஆனால் தனிப்பட்ட முறையில் ஏராளமாகப் படித்த பெரிய படிப்பாளி அவர். பாரதியையும் கம்பனையும் அவரைப் போல் எழுத்தெண்ணிக் கற்றவர்கள் இன்று சொற்பம்.  

  கவிஞர் வைதீஸ்வரனை ஒரு தொலைக்காட்சியில் ஒரு பெண்மணி பேட்டி கண்டார். தாம் தொடக்கத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி அதன் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றதாகச் சொன்னார் வைதீஸ்வரன். 

  `கையெழுத்துப் பத்திரிகை`யை எத்தனை பிரதி `அச்சிட்டீர்கள்` என்று தம் அடுத்த கேள்வியைத் தொடுத்தார் பேட்டி கண்ட பெண்மணி! இந்த அற்புதமான அறிவுசார்ந்த வினாவுக்கு வைதீஸ்வரன் விடைதெரியாமல் விழிக்க நேர்ந்தது அவரின் துர்ப்பாக்கியமே!

  கல்வெட்டு, ஓலைச்சுவடி, அச்சு, இன்று மின் ஊடகம் எனப் புத்தகத் தொழில் பல்வேறு பரிணாம வளர்ச்சியைப் பெற்றுக்கொண்டே வருகிறது. விரைவில் இன்னும் என்னென்ன விதத்திலெல்லாம் புத்தகங்கள் வருமோ தெரியாது. 

14 comments:

இராய செல்லப்பா said...

உலகப் புத்தக தினத்திற்குப் பொருத்தமான பதிவு இது. வசதி உள்ளவர்கள், தாங்கள் படிக்காவிட்டாலும், புத்தகங்களை வாங்கி அழகுப் பொருளாகத் தங்கள் வீடுகளில் அடுக்கிவைக்கலாம் என்ற கருத்து மிக முக்கியமானது. நவராத்திரிக்கு வேண்டும் என்று பொம்மைகளை நாம் பல ஆண்டுகள் பாதுகாத்து வைப்பதில்லையா, அது போல!

ஸ்ரீராம். said...

புத்தக வாசிப்பு பற்றிய திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் கட்டுரை ரசித்துப் படிக்க முடிந்தது.  நான் பெரும்பாலும் அப்பா சேர்த்து வைத்த புத்தகங்கள் வைத்திருக்கிறேன்.  நானும் நிறையவே வாங்கி இருக்கிறேன்.  சிறு வயதில் 'பாரீஸுக்கு போ' மட்டும் ஒரு த்ரில்லுக்காக நூலகத்திலிருந்து அழுத்திக் கொண்டு வந்தேன்!  நீங்கள் கொடுத்த தேவன் புத்தகங்கள் கூட என்னிடம் இருக்கிறது!

ஸ்ரீராம். said...

"கையெழுத்துப் பிரதியை எத்தனை பிரதிகள் அச்சீட்டீர்கள்?"   அந்த வருடத்தின் சிறந்த கேள்வியாக இருந்திருக்கும்!  அவ்வளவு அறிவுசார் பேட்டி காண்பவர்கள்!

கோமதி அரசு said...

அக்கா அருமையான பகிர்வு.
வாசிப்பை நேசிப்பவர்கள் இருக்கும் வரை புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கும்.

புத்தக விற்பனை இப்போது மீண்டும் அதிகரித்து இருக்கிறது.

என் அம்மாவின் சேகரிப்புகள் படிக்க கடனாக வாங்கி திரும்பி கொடுக்கவில்லை. கோல புத்தகம், சமையல் புத்தகம் அம்மா எழுதியதும் அடக்கம்.

சிலர் நம்மிடம் படிக்க வாங்கி போய் அதற்கு அட்டை எல்லாம் போட்டு திரும்ப கொடுப்பார்கள். அவர்கள் புத்தகத்தை நேசிப்பவர்கள்.


நூலகத்தில் வாங்கி படிக்கும் புத்தகத்தில் கதையை பற்றிய தன் கருத்தை பதிவு செய்வார்கள் சிலர்.

அநுத்த்மா சொன்னது போல என் கணவர் அட்டை போட்டு பராமரிப்பார்கள் .

வல்லிசிம்ஹன் said...

அன்பின் திரு ராய செல்லப்பா ஸார்,
வணக்கம்.
''நவராத்திரிக்கு வேண்டும் என்று பொம்மைகளை நாம் பல ஆண்டுகள் பாதுகாத்து வைப்பதில்லையா, அது போல''

அருமையான சொற்கள்.
பொம்மைகளாவது சில சமயங்களில் உடைய
சந்தர்ப்பம் உண்டு. புத்தகங்கள் அதற்கும் மேல்
வாழ்வு படைத்தவை என்று நம்புகிறேன்.

நம் மனத்திலும் பதிந்துவிடும்.
நன்றி மாஅ.

வல்லிசிம்ஹன் said...

''புத்தக வாசிப்பு பற்றிய திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் கட்டுரை ரசித்துப் படிக்க முடிந்தது. நான் பெரும்பாலும் அப்பா சேர்த்து வைத்த புத்தகங்கள் வைத்திருக்கிறேன். நானும் நிறையவே வாங்கி இருக்கிறேன்''

அன்பின் ஸ்ரீராம்.
உங்கள் சேமிப்பு நீடித்து இருக்க வேண்டும். அற்புதமான
பொக்கிஷங்கள் அவை.

எங்கள் வீட்டுப் புத்தகங்கள் எப்படி இருக்கின்றனவோ.
நிஜமாகவே வருத்தமாக இருக்கிறது.



வல்லிசிம்ஹன் said...

அந்த வருடத்தின் சிறந்த கேள்வியாக இருந்திருக்கும்! அவ்வளவு அறிவுசார் பேட்டி காண்பவர்கள்!''

உணர்ச்சி இல்லாத ரசனை இல்லாத மனிதர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன் மா.

''என் அம்மாவின் சேகரிப்புகள் படிக்க கடனாக வாங்கி திரும்பி கொடுக்கவில்லை. கோல புத்தகம், சமையல் புத்தகம் அம்மா எழுதியதும் அடக்கம்.''

அம்மாவின் சமையல் குறிப்புகள் நிறைய வருடங்கள்
இருந்தன.
அதே போலக் கோலம் புத்தகமும்.
எம்ப்ராய்டரி , எத்தனையோ நல்லவை. சொத்துக்கள்
அவை.

அம்மா பைண்ட் செய்த ஒரே ஒரு புத்தகம் இருக்கிறது.

உங்கள் ஸார் அட்டை போடுவது அருமை
எங்கள் வீட்டிலும் இந்தப் பழக்கம் உண்டு. பொன் போலக் காப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

சிலர் நம்மிடம் படிக்க வாங்கி போய் அதற்கு அட்டை எல்லாம் போட்டு திரும்ப கொடுப்பார்கள். அவர்கள் புத்தகத்தை நேசிப்பவர்கள்.

ஆமாம் தங்கச்சி.


நூலகத்தில் வாங்கி படிக்கும் புத்தகத்தில் கதையை பற்றிய தன் கருத்தை பதிவு செய்வார்கள் சிலர்.''

இவர்கள் மற்றவர்கள் படிப்பதை எப்படித் தடை செய்கிறார்கள்
என்று தோன்றுகிறது.

வெங்கட் நாகராஜ் said...

புத்தக வாசிப்பு குறித்த சிறப்பான கட்டுரை. படித்து ரசித்தேன். அச்சுப் புத்தகங்களில் இருக்கும் வாசிப்பு அனுபவம் மின்புத்தகங்களில் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். ஆனாலும் இப்போது மின்புத்தகங்களே அதிகம் வாசிக்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா அழகான பதிவு. அதுவும் உலகப்புத்தகத்தினத்திற்கு ஏற்ற பதிவு.

புத்தகங்கள் ரொம்பப் பிடிக்கும் ஆனால் நடைமுறையில் எனக்கு அது சாத்தியப்படவில்லை. இருந்தாலும் வீட்டில் பல புத்தகங்கள் மகன் வாசித்த கதைப்புத்தகங்கள் ரெஃபெரன்ஸ் புத்தகங்கள் நிறைய உள்ளன. அவனுக்காக வாங்கிய என்சைக்ளோபீடியா புத்தகங்கள் ஒருவர் வாங்கிக் கொண்டு போய் திரும்பக் கிடைக்கவே இல்லை! சிலர் நல்லபடியாகப் பாதுகாத்து அதை பைன்ட் செய்துகொடுத்தவர்கள் ஒரு சிலர்.

பதிவில் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் சொல்லியிருப்பது போல் புத்தகங்கள் ஒரு வீட்டில் அணிவகுத்திருக்க வேண்டும். அதுவே வீட்டின் கடாட்சம்.

பதிவை ரசித்து வாசித்தேன் அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

`கையெழுத்துப் பத்திரிகை`யை எத்தனை பிரதி `அச்சிட்டீர்கள்` என்று தம் அடுத்த கேள்வியைத் தொடுத்தார் பேட்டி கண்ட பெண்மணி!//

ஹாஹாஹா!! பேட்டி எடுப்பவருக்குப் புத்தக ஆர்வம் இல்லை என்றாலும் தன் தொழிலுக்கு வேண்டியாவது கொஞ்சம் தேடி அறிவை வளர்த்துக் கொண்டு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு பேட்டி எடுக்கலாம் இல்லையா. சும்மா பேட்டி என்ற பெயரில்...பாவம் வைத்தீஸ்வரன் அவர்கள்.

எனக்கு புத்தகம் வாங்க முடியாத நடைமுறைப் பிரச்சனையால் நெட்டில் பல இறக்கி வைத்துக் கொண்டுள்ளேன் இல்லை என்றால் ஆன்லைன் ரீடிங்க்...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
உங்கள் கருத்துக்கு மிக நன்றி.
உங்களால் தான் நிறைய மின்னூல்கள் கிடைக்கின்றன.
கௌதமன் ஜிக்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
மிக நன்றி ராஜா.
என்றும் நலமுடன் இருங்கள்.

''புத்தகங்கள் ரொம்பப் பிடிக்கும் ஆனால் நடைமுறையில் எனக்கு அது சாத்தியப்படவில்லை. இருந்தாலும் வீட்டில் பல புத்தகங்கள் மகன் வாசித்த கதைப்புத்தகங்கள் ரெஃபெரன்ஸ் புத்தகங்கள் நிறைய உள்ளன. அவனுக்காக வாங்கிய என்சைக்ளோபீடியா புத்தகங்கள் ஒருவர் வாங்கிக் கொண்டு போய் திரும்பக் கிடைக்கவே இல்லை! சிலர் நல்லபடியாகப் பாதுகாத்து அதை பைன்ட் செய்துகொடுத்தவர்கள் ஒரு சிலர்.''

அனேகமாக எல்லோர் வீட்டிலும் ஒரு புத்தகக் கதை
இருக்கிறது.
எல்லாவற்றையும் தாண்டி நாம் இப்போது இணையத்தில் இருக்கிறோம்.
ப்ரிட்டானியா என்சைக்லோப்ட்டியா வைத்திருந்தோம்.
ஆமாம் எல்லாம் இறந்த காலம்.