Blog Archive

Monday, January 31, 2022

வாழ்த்துகள் ,ஆசிகள் தொடரும்.......

வல்லிசிம்ஹன்,

அன்பின் அனைவருக்கும் மங்கள வாழ்த்துகளும் ஆசிகளும்.
தை மாதமும் ,சித்திரை வைகாசி
மாதங்களும்    மிக மிகச் சிறப்பானவை.

மனையின் மங்கலங்கள் அதிகரிக்கும் நாட்கள் நம்மை வந்து சேரும் வேளை.

எங்கள் குடும்பத்தில் எனக்கு மட்டுமே
துரிதமாகக் கல்யாணம் ஆனது.

தம்பிகளுக்கு முறையே 28 வயதிலும் ,29 வயதிலும்
நடந்தேறின அவர்களது திருமணங்கள்.

வேறு வேறு ஊர்களில் இருந்ததால்
பையன், அவன் பார்க்கும் பெண் என்று
சந்திக்க வைப்பது ரொம்ப சிரமமாக இருந்தது.
அதுவும் ஒரு பெண்ணைத் தான் பார்ப்பேன் அவளையே தான்
மணமுடிப்பேன் என்று தீர்மானமாகச் சொன்னதால்,
பெற்றோரும், நானும்  அந்த சுமையை
ஏற்றுக் கொண்டோம்.

எவ்வளவு கடுமையான வேலை அது என்று முதலில்
தெரியவில்லை.
ஜாதகம் பொருந்தி, பெற்றோர் பொருந்தி,
பெண் சிரித்த முகமாக இருந்து
நிறைய சகோதர சகோதரிகளுடன் பிறந்தவளாகவும்
இருக்க வேண்டும்.:)

அழகாகவும் இருந்தால் + பாயிண்ட்.!!
இல்லாவிட்டாலும் ஓகே.
பெற்றோருடன் ஒத்துப் போகும் குணம்(!) வேண்டும்.

ஹப்பாடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
4 வருடங்கள் ஆயிற்று.
கல்கத்தாவிலிருந்து பெரிய தம்பி 
வரவேண்டும்.15  நாட்களில்  10 நாட்கள்
எங்களுடன் இருந்து விடுவான் ,அதாவது திருச்சியில்.
கல்பாக்கம் போடா என்றால் நீயும் அத்திம்பேரும் வரணும் என்பான்.

எங்கள் அருமை வண்டி அந்த மாதிரிப் பயணங்களைச் சுலபமாக
முடித்தது.
ஒரு நவராத்திரி விடுமுறையில்

அவனும் ,வந்து நல்ல பெண்ணும் அமைந்து
இருவரும் பார்த்துக் கொண்டு
உமாபதி தெருவே வெளியே வந்து அவனைப் 
பார்த்து,
மணமகளும் ஒரு வைகாசி மாதம் எங்கள் 
வீட்டுக்கு வந்தாள்.
நலமே வாழ்க.
இவன் இப்படி என்றால் சின்னவன் ,
பெண்ணே பார்க்க வேண்டாம். அக்கா சரின்னு சொன்னால்
போதும்.
நன்றாகப் பழக வேண்டும், வேலைக்குப் 
போனால் தேவலை என்று சொல்லிவிட்டான்.
அவனுக்கும் மூன்று வருடங்கள்
தேடினோம்.


இது 44 வருடங்களுக்கு முன் நடந்த கதை.

அதற்குப் பிறகு 2000த்தில் தொடங்கியா saga
எங்கள் பிள்ளைகளுக்கானது.

முப்பதையும் தாண்டிய பிறகே
அவர்கள் திருமணத்துக்கே சரி என்றார்கள்.
அது அடுத்த பதிவுக்கான விஷயம்.

இந்தத் தையில் திருமண நாள் காணுவது  இன்னோரு தோழி,
நம் திருமதி கோமதி அரசு.

ஏழாம் தேதி வரும் அந்தத் திரு நாள் என்றும் அவர் மனதில் 
பசுமை கூட்டி, அவர்கள் மக்களின் வாழ்வு செழித்திருக்க இறை அருளை
வேண்டுவோம்.சார் எப்பொழுதும் அவர்களுடன்.

எட்டாம் தேதி என் மாமனார் மாமியார் இணைந்த நாள். மஹா உன்னத தம்பதி.

இவர்கள் ஆசி எல்லாம் அடுத்துக்
காத்திருக்கும்  நம்  எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் மகனுக்குக் கிடைத்து
சீக்கிரமே அவர்கள் வீட்டில் திருமணம் நடக்க
இறையருள் கூடி வரட்டும்.
அவரைப் போலவே மண வாழ்க்கைக்குக் காத்திருக்கும் இன்னும் சில 
பெண்குழந்தைகள், பையன்கள்  அனைவருக்கும்
நல் வாழ்வு அமைய வேண்டும்.

வாழ்வில் இன்பம் மட்டுமே கூட வேண்டும்.
வயது முதிர்ந்த பெண்கள் வீட்டில் இருப்பது
பெற்றோருக்கு எத்தனை வேதனை என்று 
அந்தக் குடும்பத்தைப் பார்த்தால் உணர முடிகிறது.

தாயே மாங்காட்டு காமாக்ஷி அனைவருக்கும் உன் கருணா
கடாக்ஷம் நிரம்பட்டும்.




11 comments:

கோமதி அரசு said...

அக்கா உங்கள் அன்பு மங்கள் வாழ்த்துக்களும், ஆசிகளும் தொடரட்டும்.
ஸ்ரீராம் மகனுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கட்டும்.
தம்பிகள் திருமண விவரங்கள் அருமை.
தம்பியின் நிபந்தனைகள் அருமை.
அடுத்த தம்பி அக்கா பார்த்தால் போதும் என்று சொன்னது மிக அருமை.

அடுத்து உங்கள் குழந்தைகளின் திருமண விவரங்களை படிக்க ஆவல்.


//இந்தத் தையில் திருமண நாள் காணுவது இன்னோரு தோழி,
நம் திருமதி கோமதி அரசு.

ஏழாம் தேதி வரும் அந்தத் திரு நாள் என்றும் அவர் மனதில்
பசுமை கூட்டி, அவர்கள் மக்களின் வாழ்வு செழித்திருக்க இறை அருளை
வேண்டுவோம்.சார் எப்பொழுதும் அவர்களுடன்.//

எப்போதும் என் திருமண நாளையும் நினைவு வைத்து வாழ்த்துவதற்கு நன்றி அக்கா.உங்கள் அன்பு நெகிழ வைக்கிறது. கண்களில் நீர் துளிர்த்து விட்டது படித்தவுடன்.

உங்கள் வாழ்த்துபடியே நடக்கட்டும். இறையருளும் உங்கள் வாழ்த்தும் குழந்தைகளை நலமாக , வளமாக வைக்கட்டும்.

நன்றி நன்றி அக்கா.

கோமதி அரசு said...

பாடல்கள் இரண்டு கேட்க முடிந்தது. நல்ல பாடல்கள்.
நல்ல பாடல்களுடன் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் கொடுத்தது மகிழ்ச்சி நன்றி அக்கா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
என்றும் வாழ்க வளமுடன்.

எந்தத் தேதியுமே மறக்க முடிவதில்லை அம்மா.
உங்கள் மண நாள் எப்படி மறக்கும்.
நல்ல நாட்களை மனதில் இருத்த வேண்டியதுதான் நம் கடமை.
மகிழ் நாட்களை நினைக்க
அவை நம்முடன் வளரும் என்று தான் எனக்குத் தோன்றும்.

நமக்கு வருங்கால வாரிசுகளின்
நன்மைதானே இனிதான பிரார்த்தனை!!

உங்கள் பேத்தி, எங்கள் பேரன், ஸ்ரீராம் மகன் அனைவரும் மங்கலங்கள்
பெற இறைவன் துணை நிற்பான்.

வல்லிசிம்ஹன் said...

பாடல்கள் உங்களுக்குப் பிடித்தது தான் மகிழ்ச்சி.
இன்னும் நல்ல பாடல்களை அடுத்த பதிவில் கேட்போம்.

மிக நன்றி அன்பு கோமதி மா.

Geetha Sambasivam said...

இரண்டாவது பாடல் வரலை. திருமண நாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். கோமதி அரசுவுக்கும். ஶ்ரீராமின் மகன்களுக்கும் விரைவில் திருமணம் நடந்தேறப் பிரார்த்தனைகள். என் தம்பி பையருக்குத் தான் இன்னும் எதுவும் தெரியவில்லை. என்னவோ போங்க! விசித்திரமான பெண் வீட்டுக்காரர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

ஓ. உங்கள் தம்பி பையனை மறந்து விட்டேனே:(
நான் நிறைய சிரமங்கள் பட்டேன்.
மறக்க வேண்டியவை அவை.

தாமதமானாலும் நல்ல பெண் வருவாள். அதுதான் வேண்டும் நமக்கு.

என் ஆசிகள் அந்தப் பையருக்கு.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

இரு பதிவுகளும் அருமையாக உள்ளது. தை மாதம் திருமணம் கண்ட அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள். உங்கள் மூன்று குழந்தைகளுக்கும் என் அன்பான வாழ்த்துகள். வரும் ஏழாம் தேதி திருமண நாள் காணும் நம் சகோதரி கோமதி அரசு அவர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள். நம் சகோதரர் ஸ்ரீராம் மகனுக்கும் விரைவில் திருமணம் தகைய வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். என் மூத்த மகனுக்கும் வரும் மூன்றாம் தேதி திருமண நாள் வருகிறது. அனைவரும் நலமே வாழ நாம் பிரார்த்தித்துக் கொள்வோம். வேறு என்ன வேண்டும்...!! அனைவரின் சந்தோஷமே நமக்கு வேண்டும். பாடல்கள் அனைத்தும் பொருத்தமாக, அருமையாக தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

Dear Kamala Hariharan,

நன்றி மா. என்றும் நலமுடன் இருங்கள்.

''என் மூத்த மகனுக்கும் வரும் மூன்றாம் தேதி திருமண நாள் வருகிறது. அனைவரும் நலமே வாழ நாம் பிரார்த்தித்துக் கொள்வோம். வேறு என்ன வேண்டும்...!!''

ஆஹா. மற்றும் ஒரு நாள் நினைவில் வைக்க .மிக நல்ல நாள்.!!
எல்லா நலம்களும் பெற்று நல் வாழ்வு தொடர வேண்டும்.

உங்கள் மகனுக்கும்
அவர் மனைவிக்கும் குடும்பத்துக்கும் நல் ஆசிகள் அம்மா.
நமக்கு வேண்டியது நிம்மதி.
மக்கள் நலமாக இருந்தால் தான் நமக்கும் அமைதி கிடைக்கும்.

எல்லோரையும் இறைவன் காக்க வேண்டும்.
பாடல்கள் நினைவில் இருந்ததைப் பகிர்ந்தேன் மா.
உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா உங்கள் அன்பு வாழ்த்துகள் எப்போதும் எல்லாருக்கும்!!!

மாமாக்கள்!! அதான் உங்கள் தம்பிகள் சூப்பர்! அக்கா பார்த்தால் போதும்!! என்ன அன்பு அக்காவின் மீது. இதுதான் குடும்பத்திற்கு அழகு.

ஸ்ரீராம் மகனுக்குச் சீக்கிரம் அமைய வேண்டும் என்று நானும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன் அம்மா...

நல்லபடியாக அமையவேண்டும் அது முக்கியம். பெண் நல்ல பெண்ணாக...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் மகன்களுக்கும் லேட்டாகத் திருமணமா.

எனக்கும் சரியான வேலை கிடைக்காமல் கொஞ்சம் சிரமபப்ட்டு அதன் பின் தான் திருமணம் எனவே 31 முடிந்து

பாடல்கள் கேட்ட பாடல்கள். மீண்டும் கேட்டேன்

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

குடும்பம் என்று வரும்போது , முதல் பையனுக்கு
பொறுப்பு அதிகமாகிறது.
இப்போது பெண்களுக்கே 31 வயதாகி விடுகிறது.

எல்லாமே தாமதம்.
எங்களுக்கு 30 வய்தில் குழந்தைகள் அனைவரும்
பத்து, பனிரண்டு என்று வளர்ந்து விட்டார்கள்.:)
நன்றி மா.