Blog Archive

Wednesday, December 08, 2021

பொன் மாலைப் பொழுது:)





























எல்லோரும் வாழ வேண்டும்.
 


Labels: வணக்கங்கள்., வாழ்த்துகள்
Friday, December 25, 2009
சென்னை -நான்கு லஸ் சாலையில் பூமியின் நேரம்
 டிசம்பர் இருபத்தி மூன்றாம் தேதி வழக்கம்போலத்தான் சென்றது. சாயந்திரம் நான்கு மணிவரை. வந்திருந்த உறவினர்களும் கிளம்பினார்கள், அந்தக் சத்தம் பெரிதாகக் கேட்டது.
உடனே ஒரு தீய்ந்த வாசனை. மின்சக்தியும் போய்விட்டது.


"அதான் Inverter இருக்கு. மின்சாரம் வந்துவிடும்" 
என்று அதன் பட்டனைத் தட்டினால் ஒ ''என்று காத்த ஆரம்பித்துவிட்டது. இதென்னடா இன்னிக்கு வந்த வேதனை என்று சலித்தபடி,சரி, போ . தானே சரியாகிவிடும் என்று ,ஒரு பொன்மாலைப் பொழுது என்று பாடிக் கொண்டே வாசலில் செடிகள் பக்கத்தில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு ,

என்ன இருந்தாலும் இந்தக் காற்றை உள்ளே அனுபவிக்க முடியுமா என்று நினைத்தபடி தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.
குளிர் காலமாச்சே :) இருட்ட ஆரம்பித்துவிட்டது. கொசுக்கள் படையெடுப்பும் ஆரம்பிக்க, உடல் பயிற்சிக்குப் போயிருந்த சிங்கமும் வந்தார். ஏன் இருட்டில உட்கார்ந்திருக்க ? என்று கேட்டபடி உள்ள போய் விளக்கு ஸ்விட்ச் ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்துவிட்டு,, ஒ!பவர் இல்லையா. வந்துடும் அப்படினுட்டுப் பக்கத்து வீடுகளைப் பார்த்தார்.
ஒரே ஜகஜ்ஜோதியாக விளக்குகள் சுற்றிலும்.

"அட, நம்ம வீட்ல தாம்மா இல்ல.''ஈ.பி '' கூப்பிடு" என்று விட்டுக் குளிக்கச் சென்றார்.
அங்கயும் வெளிச்சம் இல்லாததால் ,
தேடும் படலம் ஆரம்பித்தோம்.
''மெழுவர்த்தி எங்கே, டார்ச் எங்கே.
சாமான் வச்ச இடத்தில இருந்தா இந்தப் பிரச்சினை கிடையாது . தீப்பெட்டில இருந்து ,தேட வேண்டியதா இருக்கே ''என்ற முனுமுனுப்பு காதில் விழுந்தாலும் நான் நகருவதாக இல்லை.

இருட்டில மோதிக்க வேணாம் என்கிற நல்ல எண்ணம்தான்.!
197 அஸ்ஸிஸ்டன்ஸ்  அழைத்து, 
மாறின லஸ் (கம்ப்ளைன்ட்)நம்பரை அறிந்து 
அழைத்தால் அவர்கள்
 இதோ வருகிறேன்னு சொல்லி ஒரு மணி கழித்து வந்தார்கள்.
அப்போதான் புரிந்தது இந்த மின்வெட்டு மாயம்.!!!!

 எங்க வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டும்போது, எங்கள் லைனிலிருந்து பிரித்துக் கேபிள் கொடுத்திருக்கிறார்கள். அது நம் மின்சாரத்தைத் துண்டித்து இருக்கிறது
இந்த நேரத்தில் யாரோட சண்டை போடுகிறது என்று நொந்தபடி ,

வந்த லைன்மேன் சொன்னபடி , இவர் பைக்கை எடுத்துப் போய் எக்ஸ்ட்ரா கேபிள் லைன் வாங்கி வந்தார். மணி ஒன்பதரை.
அதற்கு மேல் அவர்கள் வேலை ஆரம்பித்து நடுவில் காப்பி ,குடிக்கப் போய், மின்சக்தி வந்த பொழுது ,மணி பத்தரை.

அதற்குத்தான் இந்தத் தலைப்பு வைத்தேன். 
நாமளும் ஒரு ஆறு மணி நேரம் இருட்டில இருந்து பூமி நேரம் கொண்டாடி பூமியின் வெப்பத்தைத் தணித்து விட்டோம் என்று:)



எல்லோரும் வாழ வேண்டும்.

14 comments:

ஸ்ரீராம். said...

எனக்கும் இது மாதிரி அனுபவங்கள் அடிக்கடி நிகழும் - பழைய வீட்டில்.  ஆனால் பில் மட்டும் குறையவே குறையாது.  கரண்ட் வரும்வரை நிம்மதியே இருக்காது.

Bhanumathy Venkateswaran said...

ஆஹா! இருண்ட மாலையை பொன்மாலையாக்கிய உங்கள் மனோபாவம் வாழ்க!

மாதேவி said...

பொன்மாலைப் பொழுது அமாவாசை இருட்டானதே :)

கோமதி அரசு said...

பொன்மாலை பொழுது நினைவுகள் அருமை.

//ஒரு பொன்மாலைப் பொழுது என்று பாடிக் கொண்டே வாசலில் செடிகள் பக்கத்தில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு ,//

தோட்டத்தில் அமர்ந்து கதைகளை படித்த காலம் அருமை.
மாயவரத்தில் மழை காலம், புயல் காலம் கரண்ட் இல்லாமல் இப்படி ஏற்படும் .

நினைவுகள் அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

வருத்தத்தையும் பொன்மாலைப் பொழுது என்று எழுத்தில் பொன் நேரமாக்கிவிட்டீர்கள்.

எங்கள் வீட்டிலும் அடிக்கடி பவர் கட் ஆவது உண்டு. இன்வெர்ட்டர் பிரச்சனையும் சேர்ந்து கொண்டு வரும். இன்வெர்ட்டர் சரி செய்து தற்போது கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் பவர் கட் இருக்கத்தான் செய்கிறது.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா அம்மா தோட்டத்தில் அமர்ந்து வாசிப்பது என்பது சுகம்.

மின்சாரப் பிரச்சனை சென்னையில் அதிகம் அனுபவித்ததுண்டு. இங்கும் ஒரு முறை தெருவில் லைன்/ட்ரான்ஸ்ஃபார்மரில் சரி செய்ய நாள் முழுவதும் இல்லாமல் அப்புறம் மின்சாரம் வந்த பின் எங்கள் வீட்டிற்கு மட்டும் அதுவும் நாங்கள் இருக்கும் வீட்டிற்கு எதிரேயே கம்பம். அதிலும் ஏறி அந்தப் பையன் சரி செய்து கொண்டிருந்தார். போகும் போது நம் வீட்டிற்கு வரும் லைனை ஆன் செய்யாமல் போய்விட்டார் போலும்....அந்த லைன் குறுக்கால் நம் வீட்டில் இணைந்து அதிலிருந்து இன்னும் சில லைன்கள்.

அப்புறம் ராத்திரி 12 மணிக்கு மேல் ஆனது வருவதற்கு.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.
இப்பொழுது எங்கள் தெரிவில் ஒரு அமைச்சர் இருக்கிறாராம்.
மின் துண்டிப்பு இல்லையாம்.
எங்கள் வீட்டுக்கு மட்டும் அடிக்கடி
லோ வோல்டேஜ் வருகிறது.

பில் அப்படியே தான்.
மகன் சொல்வது போல் நேரே போய்
பார்த்தால் நடக்குமோ என்னவோ.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானுமா,
நலமுடன் இருங்கள்.

அந்த நாட்களை எல்லாம் நினைத்தால்
பிரமிப்பாக இருக்கிறது. 60 வயதில்
தாங்கிக் கொண்டதை இப்போது
பொறுமையுடன் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை.

இப்பொதாவது மாறி இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நலமுடன் இருங்கள்.

எல்லாமே நம்கையில் தான்.
மனமிருந்தால் மார்க்கபந்து:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

வாழ்க வளமுடன்.
மாயவரத்திலும் மின் வெட்டு உண்டா.

மதுரையில் எப்படியோ தெரியவில்லை.
நான் எழுதியது 12 வருடங்களுக்கு முன்னால்.
அப்பொழுது எல்லாவற்றுக்கும் தெம்பு இருந்தது.


சுதந்திரமும் இருந்தது.

நல்லதையே நினைப்போம்.

''தோட்டத்தில் அமர்ந்து கதைகளை படித்த காலம் அருமை.''

ஆமாம். பொற்காலம் தான் மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது. எதையுமே உங்களைப் போல் சுலபமாக எடுத்துக்கொண்டு விட்டால், மனக்கஸ்டம் என்பது குறைந்து விடும். பொன்மாலைப் பொழுது பாடியபடி நாவலை விட்ட இடத்திலிருந்து தொடங்கி படித்த இடத்தை ரசித்தேன்.

இங்கு இப்போது நீடித்த மின் வெட்டில்லை. ஆனால் அவ்வப்போது அதுவும் நாம் ஏதாவது மிக்ஸி, கிரைண்டர் போடலாம் என நினைக்கும் போது, அதுவும் நாம் சற்று போகலாம் என நினைக்கிறது.

உங்கள் பிரச்சனை அன்று தீர அவ்வளவு நேரம் ஆகி விட்டதா? கஸ்டந்தான். "பூமியின் வெப்பத்தை குறைத்தோம்" என்ற கடைசி வரிகளை ரசித்தேன். எதையும் சுவையாக எழுதும் உங்கள் எழுத்தையும் ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
நலமுடன் இருங்கள் மா.

வருத்தம் இல்லாம் இல்லை அப்பா.
நம் ஊரில் மின்வெட்டு எப்பொழுதும் உள்ளதுதானே.

வேடிக்கைக்காக எழுதினேன்.
நம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது நடந்து கொண்டேதானே இருக்கிறது.

நிகழும்போது சிரமமாக இருந்தாலும் சில வருடங்கள்
கழித்து நினைக்கும் போது அவ்வளவு துன்பம் இல்லை.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,
பங்களூரில் மகன் இருந்த போது டொம்லூரில் அடிக்கடி மின் வெட்டு இருக்கும்.
அடுக்கு மாடிக் கட்டிடத்தில் லிஃப்ட் டில் போகக் கூட பயமாக இருக்கும். இரண்டாவது மாடி என்பதால் சுலபமாக ஏறிவிடுவோம்.

கொசுத்தொல்லை நிறைய. பால்கனியில்
நிம்மதியாக உட்கார முடியாது.

உங்களுக்கு விடுதலை கொடுக்க வந்தவர்,
உங்கவீட்டை மட்டும் விட்டு விட்டுப் போயிருக்கிறாரே.!!!

என்ன செய்யலாம் அனுபவித்துக் கழிக்க வேண்டியதுதான்.

நலமுடன் இருங்கள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.

''இங்கு இப்போது நீடித்த மின் வெட்டில்லை. ஆனால் அவ்வப்போது அதுவும் நாம் ஏதாவது மிக்ஸி, கிரைண்டர் போடலாம் என நினைக்கும் போது, அதுவும் நாம் சற்று போகலாம் என நினைக்கிறது."
அப்போதெல்லாம் இந்த பூமி நேரம் எல்லாம்
அனுசரிக்கும் பழக்கம் எல்லாம் இருந்தது.
இப்போது எல்லா நேரமும் உலக நேரம் ஆகிவிட்டது மா.

சிரித்துக் கடக்க வேண்டியது தான். அதுவும் பண்டிகை சமயங்களில்
இப்படி ஆனால் மிக சிரமம்.

அம்மியை எல்லாம் வெளியே போட்டு விட்டோமே
என்று வருத்தமாக இருக்கும்.
சௌகரியங்கள் வரும்போதே இவையும்
கூட வருகின்றன.