Blog Archive

Wednesday, May 26, 2021

அத்தை......1

வல்லிசிம்ஹன்



 எங்கள் ப்ளாகில் வெளியிட்ட கௌதமன் ஜி க்கும்  ஸ்ரீராமுக்கும் மிக நன்றி.
அங்கு வந்து பின்னூட்டம் இட்ட எல்லோருக்கும்
மீண்டும் நன்றி. வாழ்வு நிறைவது அன்பு நட்புகளின் 
துணையுடன் தான். சங்கடங்கள் தீர்ந்து 
நல் வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1980 களில் ஒரு சம்பவம்.

''அக்கா, !!
என்ன மாலா?

அந்த அத்தை நம் வீட்டுக்கு வருகிறாளாம். எதுக்கு அண்ணா நகரிலிருந்து இங்க மைலாப்பூர் வரணும்.
அப்பாவுக்குபெரியப்பாவின்  பெண் என்றால் அந்தக் காலத்தோடு
போச்சு. இங்க வந்து நம் நேரமும் வீணாக்கி,
நம் மீது அதீத அன்பைக் கொட்டணும்னு 
என்ன அவசியம்?''
"பெற்ற பிள்ளைகள் எல்லாம் திருமணம் ஆகி
வெளியூர் போயாச்சு. பொழுது போக இங்கே வர வேணுமா?''
கோபத்துடன் பொரிந்த  தங்கையை
அன்புடன் கண்டித்தாள் பெரிய அக்கா லக்ஷ்மி.
அப்படியெல்லாம் சொல்லாதேம்மா.
அவர்கள் எல்லாம் கசின்ஸ் ஆக இருந்தாலும்
நல்ல பாசத்தோடு இருந்தவர்கள்.
நம் அம்மா திடீரென்று இப்படி காலமானது அவர்களுக்கு அதிர்ச்சி.
அதுதான் வந்து நம்மைப் பார்த்து விட்டுப் 
போகிறார்.

''கசின்ஸ் நா, அந்தக் காலத்தோட போச்சு''
நம் வாழ்க்கையில் இப்போ வந்து குறுக்கிட என்ன அவசியம்?
சரியான busybody" என்று கரித்துக் கொட்டின
தங்கையைப் பார்த்து வியந்தாள் அக்கா.
அவர்கள் மூவரும் பதின்ம வயதுப் பெண்கள்.
இரண்டு மூன்று மாதங்கள் முன் தான்
அவர்களின் தாயார், தீராத வியாதிக்குப் 
பலியானார்.

அப்போது ஆரம்பித்த பாசம், ,கவனிப்பு இந்த அத்தையோடது.
தன் வியாபாரத்தில் மும்முரமாக இருக்கும்
பெரியப்பா மகன்,
அவன் பெற்ற  பெண் குழந்தைகள்
மீது கவலை கொண்டு , கிடைத்த பலகாரங்களைப்
பையில் அடைத்துக் கொண்டு வந்து 
தந்து சில மணி நேரம் இருந்து பேசிச் செல்வாள்
சுந்தரி அத்தை.
சின்ன லீலா,கடைசிப் பெண்ணுக்கு சுந்தரி அத்தையைப் பிடித்திருந்தது.
14 வயதே ஆகி இருந்தது அந்தப் பெண்ணுக்கு.
அம்மாவை இழந்த துக்கத்திலிருந்து மீள முடியாத சூழ்னிலையில்
இந்த அத்தை வருவது
அந்தக் குழந்தைக்கு மிக இதமாக இருந்தது.

ஐந்து வருடங்களுக்கு முன் தான் சென்னை வந்தார்கள். அதுவும் 
அவர்கள் அம்மாவின் உடல் நலம்  சரியில்லாமல் போனதும்
வைத்தியத்துகாகச் சென்னைக்கு வந்தனர்.

இந்த ஐந்து வருடங்களும் அம்மாவின் நோயோடு 
போராடிக் களைத்து விட்டனர்
கணபதியும் குழந்தைகளும்.
சுந்தரி அவர்கள் சென்னை வந்த நாளிலிருந்து
தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தாள்.

பெரிய மகள் அந்த வருடம் கல்லூரியில்
சேர்ந்திருந்தாள். நடுவில் பிறந்த மாலா
பள்ளி இறுதி வகுப்பை எட்டி இருந்தாள்.
கடைக்குட்டி லீலா ,ஒன்பதாம் வகுப்பு.

இவர்களுக்கு உதவியாகக் கூடவே இருக்கும் 
பங்காரு சொந்த ஊரிலிருந்து
இங்கே வந்திருந்தாள்.
நூற்பாலை சம்பந்தமான இயந்திரங்களை
இறக்குமதி செய்து விற்பனை செய்யும்
வியாபாரத்தில் இருந்த கணபதிக்கு
கடந்த வருடங்களில் சரியாகக் கவனம் 
செலுத்த முடியாமல் போனது.கோயம்பத்தூருக்கும்
சென்னைக்கும் அலைய வேண்டிய
தொழில்.

சுந்தரி அடிக்கடி வந்து போவது அவனுக்கு 
நிம்மதி.
தனியாக இருக்கும் பெண்குழந்தைகளைப் 
பற்றி அவனுக்கு எப்பொழுதுமே கவலை.முதல் பெண் லக்ஷ்மிக்கு, கணபதியின் மனைவி
தன் சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து வைத்திருந்தாள்.

அவனும் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தான்.

எல்லாமே சற்று ஏறுக்கு மாறாக நடந்தாலும்
கணபதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அவன் கோவைக்குப்
போயிருந்த ஒரு மாலை,
சுந்தரி அத்தைக்குப் பங்காரு ஃபோன் செய்திருந்தாள்.
தனக்கு மாலாவின் போக்கு பிடிபடவில்லை என்றும்.
பள்ளிக்குச் செல்லும் போது 
இன்னோரு வாலிபனுடன் தெரு முனையில்
நின்று பேசி வருவதாகவும்,
அவர்கள் இருவரும் சினிமாவுக்குக் கூடச் சென்று வந்ததாகத்
தன் கணவன் சொல்கிறான் என்றும் 
செய்தி சொன்னாள்.
பங்காருவின் கணவன் அந்த வீட்டுக்கு வாட்ச்மேன்.

இந்த செய்தி வந்ததிலிருந்து
சுந்தரிக்கு அந்தப் பெண்களைத் தனியே விடுவதில் 
விருப்பம் இல்லை. 
கணபதிக்கும் அவளுக்கும் கிட்டத்தட்ட
6 வயது வித்தியாசம். 
அவனைச் சிறுவனாகவே பார்த்து, தம்பியாகவே 
பழகி வந்திருக்கிறாள்.
இப்பொழுது மனைவியும் இல்லாத வேளையில் அந்தக் 
குடும்பம் சீரழிவதில் அவளுக்கு வேதனை. அதனாலயே 
ஏதாவது ஒரு காரணம் காட்டி 
மைலாப்பூருக்கு வர ஆரம்பித்தாள்.

இது நீடித்தால் கணபதியுடன் பேச வேண்டிய தேவை
வரும் என்று யோசனை வந்தது.
இந்த நேரத்தில் தான் நம் கதை ஆரம்பித்தது.
சுந்தரி தன் மதிய சாப்பாட்டை முடித்துக் 
கொண்டு மயிலை வந்தடைந்தாள்.
மந்தைவெளியில் இறங்கி சிறிது நடந்தால்
அந்தத் தனி வீடு வரும்.
அவள் தொலைவில் வருவதைப் பார்த்த
பங்காரு,  அவசரமாக வெளியே வந்தாள்.
''சுந்தரி அம்மா, அந்தப் பையன் வீட்டுக்கே வந்து விட்டான்"
ஐய்யா இன்னும் வரவில்லை. லக்ஷ்மிப் பொண்ணும்
வரப் போகிற மாப்பிள்ளை வீட்டுக்குப் 
போயிருக்கு. சின்னப் பாப்பா டென்னிஸ் விளையாடப் போயிருக்கு"
என்று படபடத்தாள்.

 சுந்தரி சற்றே நிதானித்தாள்.
அவளுக்கு மாலாவின்  கோப குணம் தெரியும்.
இருந்தாலும் இப்போது அதை எல்லாம் 
பார்க்கும் நிலைமை இல்லை.

என்னதான் 80கள் என்றாலும்  பண்பாடு மீறி நடப்பது 
எப்பொழுதும் சரியில்லையே.!!

பங்காருவை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நிதானமாக 
நுழைந்தாள்.
வாசல் கதவு சாத்தியிருந்தது.
உள்ளே வானொலி சத்தமும் சிரிப்பும் கேட்டன.
காலிங்க் பெல் அடித்ததும் சத்தம் நின்றதும்

கொஞ்ச நேரத்தில் வாசல் கதவு திறந்து மாலாவின் முகம்
தெரிந்தது.
கதவைத் திறந்து விட்டு உள்ளே தன் அறைக்குள் 
போய்விட்டாள்.
''என்னம்மா.லக்ஷ்மி எங்கே? ''
என்று சுந்தரியும் விடாமல் கேட்டாள்.
வெளில போயிருக்கா. சாயந்திரம் ஆகும் என்றபடி அறைக்கதவை
மூடிக்கொண்டாள்.

தொடரும்.

7 comments:

கோமதி அரசு said...

எங்கள் ப்ளாக்கில் படித்தேன் இங்கும் படித்தேன்.
தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

அத்தையின் படம் நன்றாக இருக்கிறது.

ஸ்ரீராம். said...

நன்றி அம்மா.    இந்தப் படத்தை நான் இணைக்க மறந்திருந்தேன் அங்கு!

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா கோமதி.

என்னுடைய நினைவுக்காக இங்கே பதிவிட்டேன். எல்லோரும் மீண்டும் படிக்கும்படி ஆச்சு.:)
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அத்தை என்று தேடியதும் லவ் மாதிரி கிடைத்தது மா கோமதி!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம் பரவாயில்லை மா. நம் கௌதமன் ஜி நன்றாக வரைந்திருந்தாரே!

மாதேவி said...

தொடர்கிறேன்.....