Blog Archive

Friday, March 05, 2021

ஸோஹன் ஹல்வா செய்முறை.........

வல்லிசிம்ஹன்


பக்கத்து வீட்டில் இருக்கும் ஷீதல்  , இந்திய கான்பூரில்
இருந்து வந்தவர்.
வயதான மிக மிக வயதான மாமனார் ,மாமியார்.

28 வயது மகள், 20 வயதில் இன்னோரு மகள்,
கடைக்குட்டி செல்ல மகன்.
வியாபாரம் செய்யும் கணவன். 
இவர்கள் அனைவருக்கும் சமையல் செய்து விட்டு

ஒரு பெரிய கடையில் வேலை
பார்க்கவும் கிளம்பி விடுவார்.

அவர்கள் வீட்டில் ஒரு விருந்துக்குப் போயிருந்தோம்.
அப்பொழுதுதான் ,வெகு நாட்கள் முன்பு
ருசி பார்த்திருந்த சோஹன் ஹல்வாத் துண்டங்களைப்
பார்த்தேன்.
நாங்கள் சேலத்தில் இருக்கும் போது
அங்கே இருக்கும் அகர்வால் ஆர்யபவன் ஹோட்டலிலிருந்து
சிங்கம் வாரத்துக்கு ஒரு முறை
ஒரு பெரிய டின் டப்பாவில் வாங்கி வருவார்.
12 எண்ணமாவது இருக்கும்.
அப்போதெல்லாம் எதுவும் சாப்பிடத் தடை இல்லையே.

மூன்றே நாட்களில் காலி செய்து விடுவேன்.
பாவம் சிங்கம், வாங்கி வைத்த கையோடு வேலை வந்து விடும். திரும்பி வரும் வேளையில்
இரண்டு மீதி இருக்கும்.
களைப்பில்
கொஞ்சம் ருசி பார்த்துவிட்டு வைத்துவிடுவார்.
குழந்தைகள் இருவருக்கும் 
இந்த அல்வாத்துண்டை  நறுக்கித் துண்டுகளாகக் கிண்ணத்தில் வைத்துக் 
கொடுப்பேன். நெடு நேரம் சுவைப்பார்கள்.


கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பிறகு
இந்தத் துண்டங்களைப் பார்த்தேன்.
ஹல்வா என்பது பெயர் மட்டில் தான். இது டாஃஃபி
மாதிரி கடிக்கக் கடினமாக இருக்கும்.
வாயில் போட்டவுடன் கரைந்து விடும்.


ஷீதல் இந்த அல்வா செய்முறையை எளிதாகச் சொன்னாள்.
 முந்திய வாரம்  அவர்கள் வீட்டுக்கு மைசூர் பாக்
கொடுத்து விட்டிருந்தேன்.

இப்போது எனக்கு ஞாபகப் படுத்தினாள்.
கைவிடாமல் Myசூர் பாகு கிண்டி 
தட்டில் கொட்டினதை மாதிரி
இந்தக் கோதுமை மாவால் செய்த அல்வாவைச் செய்ய வேண்டும் என்றாள்.
எனக்குப் பழைய காலத்து செங்கல் மைசூர்பாக்  ஜோக்குகள்

நினைவு வந்து தொலைத்தது:)

தேவையான பொருட்கள்...
1, ஒரு கப் கோதுமை மாவு,
2,ஒரு கப் பால்,
ஒரு கப் நெய்,
ஒரு கப் சர்க்கரை,
100 க்ராம் நறுக்கிய பாதாம், பிஸ்தா,முந்திரி பருப்புகள்,
1 கப்  தண்ணீர்
ஒரு டப்பா குங்குமப்பூ,
கொஞ்சம் ஏலத்தூள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஷீதல் செய்த முறை.

ஒரு அடி கனத்த பாத்திரத்தில் கோதுமை மாவை சிவக்க வறுக்கணும்.
2, அதை எடுத்துவிட்டு  ஒரு   கப் ஜலத்தில்
ஒரு கப் சர்க்கரயைப் போடவேண்டும்.சேர்ந்து கொதித்து கிட்டத்தட்டக் கம்பிப்பாகு பதம் வந்த பிறகு


அதனுடன் பாலையும் சேர்த்துக் கொதித்து வரும்போது
இறக்கி ஒரு மஸ்லின் துணியில் வடித்துக் கொண்டு
மீண்டும் அடுப்பில் ஏற்றி, குங்குமப்பூவை சிறிது பாலில்
கரைத்து விட்டு,
கோதுமை மாவை மெது மெதுவே தூவிக் கொண்டே கிளற
வேண்டும்.

கோதுமை மாவும் சர்க்கரையும் கெட்டியாகும் போது,பாதாம், பிஸ்தா
முந்திரித் துண்டுகளையும் ஏலத்தூளையும்
சேர்க்க வேண்டும்.

இது சேர்ந்து வரக் கொஞ்சம் நேரம் பிடிக்கும் 
பொறுமை தேவை,
ஒரு திடமானத் திட்டத்துக்கு வந்தவுடன்
நெய்யை மெது மெதுவே சேர்க்க வேண்டும்,
அல்வாக் கெட்டி முறுக ஆரம்பிக்கும். 
விடாமல் கிளறி அது பொங்கும் நிலைக்கு வந்தாலும்
மீண்டும் நெய் விட்டு நல்ல மணம் வந்ததும்,
ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி வைத்தால்
பத்தாவது நிமிடம்
 கத்தியால் துண்டு போடலாம். 
நல்ல பழுப்பு நிறத்தில்,பளபளக்கும் நெய்யுடன் சுவையான
அல்வா தயார்.
கோதுமை அல்வா அப்படியே வாயில் வழுக்கிக் கொண்டு போகும்.


இந்த சோன் அல்வாவுக்கு
 பல் வேண்டும் கடிக்க.
ஆனாலும் ருசி ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். சொல்லி முடியாது.
அந்த நெய் வாசனையோடு 
பருப்புகள் நறனறவென்று நொறுங்க
சாப்பிடும் வைபவமே தனி ருசி!!

சாப்பிடும் போது என் அன்புக் கணவரையும் 
வாழ்த்தி சாப்பிடுங்கள். நன்றி.



24 comments:

Angel said...

வாவ் !! இந்த சோன் ஹல்வா எங்கப்பா அம்மா இரண்டு பேருக்கும் பிடிக்கும் .அப்பா  சௌகார்பேட் கிட்ட ஒரு வடஇந்திய கடையில் வாங்கிவருவார் ..நானா விரும்பி சாப்பிட்டது அதன் மேலுள்ள நட்ஸ் சிலவற்றை மட்டும் :)ரெசிப்பி இவ்ளோ சுலபமா இருக்கே .டைம் கிடைக்கும்போது செய்வேன் .ஸ்வீட் பிரியர் என் கணவர் மட்டுமே எங்க வீட்டில் :)

ஸ்ரீராம். said...

நான் சுவைத்ததில்லை!  ஆனால் செய்ய ரொம்பப் பொறுமை வேண்டும் போல!

ஸ்ரீராம். said...

சமீபத்தில் மசாலா கடலை வாங்கி வைத்தேன்.  பொதுவாக கடலை பக்கம் போகமாட்டேன் என்றாலும் இது அப்புறம் சாப்பிடறேன் என்று சொல்லி இருந்தேன்.  இரண்டு நாட்கள் கழித்து நினைவுக்கு வந்து கேட்டபோது காலி ஆகி இருந்தது!!!

Anuprem said...

கோதுமை மாவு அல்வா செய்து இருக்கிறேன் ...ஆனால் இப்படி பால் எல்லாம் சேர்த்து செய்தது இல்ல மா ...



புதிய செய்முறை ..

Bhanumathy V said...

சோஹன் ஹல்வா எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்! டில்லியில் இது மிகவும் ஃபேமஸ்! டில்லியை பிறந்த வீடாகக் கொண்ட என் மருமகளிடம் இதன் பெயர் தெரியாமல் ஹார்டாக இருக்கும், நிறைய நெய், என்றெல்லாம் சொன்னேன், அவளால் கண்டுபிடிக்க  முடியவில்லை.  சமீபத்தில் டில்லி சென்ற பொழுது, என் அக்கா, அவளுடைய மாமியாருக்கு சோஹன் ஹல்வா மிகவும் பிடிக்கும், என்றதும்தான் பெயர் நினைவுக்கு வந்தது. வாங்கி வந்தேன். செய்முறைக்கு நன்றி. செய்து பார்த்து விட வேண்டியதுதான்.  

கோமதி அரசு said...

படங்களும் ஹல்வா செய்முறையும் மிக அருமை.
மலரும் நினைவுகளுடன் பதிவு அருமை.

வெங்கட் நாகராஜ் said...

சோஹன் ஹல்வா - ஆஹா... ருசியான ஹல்வா. இங்கே சுவைப்பதுண்டு.

துரை செல்வராஜூ said...

மகிழ்ச்சி ததும்பிடும் மலரும் நினைவுகள்...

ஸோஹன் ஹல்வா போல பதிவும் இனிமை..

Geetha Sambasivam said...

சோஹன் ஹல்வா சென்னையில் மின்ட் தெருவில் ஒரு கடையில் நன்றாக இருக்கும். அங்கேயே மில்க் அல்வாவும் வாங்கி இருக்கோம். இப்போதெல்லாம் இனிப்புக்கள்/தித்திப்புகள் பண்ணுவதே குறைவு/ வாங்குவது அதைவிடக் குறைவு. :))))

நெல்லைத் தமிழன் said...

சோஹன் ஹல்வா ரொம்ப சூப்பராக இருக்கும். எனக்கு ரொம்பவே பிடித்தது. ஆனால் பல்லுக்குக் கெடுதி (இனிப்பு உள்ள ஒட்டிக்கும்). நான் எங்க பார்த்தாலும் வாங்குவேன். பஹ்ரைன்ல, பாகிஸ்தானி இனிப்புக் கடைகளில் நிச்சயம் இருக்கும்.

ஆனா இது நிச்சயம் டயபடீஸ்ல கொண்டுபோய் விடும். காரணம் நெய்யும் (பி.பி எகிறும்) ஜீனி, மாவு. ஹாஹா.

வல்லிம்மா - நீங்க சில சமயம் ஒரு நாளிலேயே இரண்டு இடுகைகள் போட்டுடறீங்களா இல்லை எ.பி ல அப்டேட் ஆவதற்கு முன்பே அடுத்த இடுகை வந்துடுதான்னு தெரியலை. இந்த இடுகையை எதேச்சையாக இதற்கு முந்தைய சேலம் நாட்டு மருந்துல சாப்பாடு போடற இடுகையில் நீங்க என்ன மறுமொழி கொடுத்திருக்கீங்க என்று பார்க்கப் போனபோது கண்ணில் பட்டது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
அதுதான் சொல்ல வந்தேன். என் மாமியார் எந்தப் பண்டமாக இருந்தாலும் பையனுக்காக்த் தனியாக எடுத்து வைப்பார்.

இவருக்குச் சுய நலமாக எடுத்துக்கவும் தெரியாது.
லன்சுடன் எடுத்துக் கொண்டு போகவும்:)

வல்லிசிம்ஹன் said...

ஆ மாம் ஸ்ரீராம். ரொம்பப் பொறுமை வேண்டும். அந்த முறுகல் வந்த பிறகுதான்
எடுக்க முடியும்.
நான் செய்த போது அல்வா மாதிரி வந்த உடனே நிறுத்திட்டேன்.
அடுப்பு பக்கத்துல நிற்க முடியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனு,
நலமாப்பா.

கொஞ்சம் முற்றின அல்வான்னு வைத்துக் கொள்ளலாம் மா.
பொறுமை வேண்டும்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

சோஹன் அல்வா செய்முறை அழகாக பொறுமையாக தந்துள்ளீர்கள். நான் வெறும் கோதுமை மாவுடன் சர்க்கரை சேர்த்து அல்வா கிளறியுள்ளேன். அதுவே நீண்ட நேரம் கிளற வேண்டியிருக்கும். பொதுவாகவே மைசூர் பாகை விட அல்வா கிளறும் நேரம் அதிகம். நீங்கள் பாலும் விட்டு கிளறும் போது மிகவும் அதிக நேரம் எடுத்து கொள்ளும் போலும். நீங்கள் சொல்லும் அழகிலேயே இந்த அல்வாவை செய்து சாப்பிடும் ஆசை எனக்கும் தோன்றுகிறது. ஆனால், பல்லை பதம் பார்க்கும் என்ற செய்தி சற்று பயத்தை தருகிறது. ஹா.ஹா.ஹா. இனிப்புக்களை எடுத்துக் கொண்டாலே என் பற்களுக்கும், இப்போது சற்று ஒத்துக் கொள்வதில்லை.

தங்களது இளமை காலத்து மலரும் நினைவுகளும் மிக அருமையாக இருக்கிறது. தங்கள் கணவரும் எங்கிருந்தாலும் உங்களை நினைத்தபடியேதான் வாழ்வார். அன்பான,ஆத்மார்த்தமான சொந்தங்கள் நம் நினைவுகளை விட்டு என்றும் பிரியாதது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல், முதல் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள்.
பார்க்காமல் விட்டு விட்டேன். ஸாரி மா.

உண்மைதான் .சோகன் அல்வாவின் பருப்பு ருசி அலாதி. அதுவும் பிஸ்தாவின் அருமை.!
அப்பொழுதே சாப்பிட மாட்டீர்களா?

இப்பொழுதும் சாப்பிட நான் ரெடி:) உடம்போடு இருக்கும் சர்ககரை தடுக்கிறது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனு,
ரொம்பப் பொறுமை வேண்டும் அம்மா. ஒரு மணி நேரம்
ஆனது எனக்கு.அப்படியும்
ஃப்ரிட்ஜ் ல வைத்தபிறகு தான் கெட்டியானது.
செய்து பாருங்கள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா,
ஓ. திரும்பியாச்சா.
இந்த ஸ்வீட் ,செய்ய ஒரு மணி நேரம் ஒதுக்கி விடுங்கள்/.
இதோ முடியும் அதோ முடியும்னால் இழுத்துண்டே
போனது.
நெய்யும் குடித்தது.
இங்கே அதெல்லாம் நடக்காது:)
அல்வாவுக்குப் பக்கம் வந்ததும் நிறுத்தி விட்டேன். நெய் கக்கி விட்டது. பிறகு ஃப்ரிட்ஜில்
வைத்து சரி செய்தாச்சு.!!!
நீங்களும் செய்யலாம். நன்றி மா.சரியான அத்தேரி மாக்கு கதையாக
நீங்கள் சொஹன் அல்வா கண்டுபிடித்திருக்கிறீர்கள்.
மகிழ்ச்சியும் பாராட்டுகளும் மா!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி வாழ்க வளமுடன் மா.
நல்லதொரு இனிப்பு அது. செய்வது கொஞ்சம் கடினம் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம்.
தில்லியில் இல்லாத ஸ்வீட்டா.
அனுபவித்துச் சாப்பிடுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு துரை.

இனிமையான நினைவுகளை இனிப்புடன் பகிர்ந்து கொள்ளவே ஆவல்.
உங்கள் ஊரில் கிடைக்குமா என்று தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா.
மிக மிக உண்மை. உடம்பு இருக்கும் இருப்பில்
இது உனக்குத் தேவையா என்றே கேட்பார்கள்.

நிறைய சாப்பிட்டாச்சு. போதும் தான்.
நாங்களும் மிண்ட் போகும்போது அகர்வால்
கடையில் வாங்கி இருக்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா.
ஹாஹ்ஹா.
மிக உண்மை, அதனால்தான் சின்ன அளவில் செய்தேன்.
குழந்தைகள் சாப்பிடலாமே என்று.

அது அல்வா வடிவிலேயே நின்று விட்டது:)
பல்லில் ஒட்டிக்கொள்ளத்தான் செய்யும்.
இந்த ஸொன் அல்வாவின் அருமை நான் வேறெந்த
இனிப்பிலும் கண்டதில்லை.!!!
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
உங்கள் ஒவ்வொரு பின்னூட்டமுமே கதையாகக் கவிதையாக இருக்கிறதும்மா.
இது நாழிதான் எடுக்கிறது.

இங்கே கார்ன் ஷுகர் கிடைத்தது. அது ஒரு மாதிரி எல்லாவற்றையும் ஒன்று
சேர்க்க முடிந்தது.
இல்லாவிட்டால் இன்னும் இழுத்திருக்கும்.
இன்னும் ஒரு தடவை செய்யப் போகிறேன்.
பிறகு தான் படம்.

இனிப்புகளும் இனிமையான நினைவுகளும் இணையும் போது
இன்னும் சுவை கூடுகிறது.
அவர் நிறைந்திருக்கும் மனதில் வேறு கவலை இல்லை.
அன்பு வார்த்தைகளுக்கு மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வல்லிம்மா - நீங்க சில சமயம் ஒரு நாளிலேயே இரண்டு இடுகைகள் போட்டுடறீங்களா இல்லை எ.பி ல அப்டேட் ஆவதற்கு முன்பே அடுத்த இடுகை வந்துடுதான்னு தெரியலை///////////////////////////////
அன்பு முரளிமா,

அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைமா.
என்னவோ அப்படி அமைந்து விட்டது.

இனி எழுதுவதிலியே கவனம் செலுத்துகிறேன்.