Blog Archive

Tuesday, February 23, 2021

Madurai Kizhangu Pottalam | Spicy Potato Masala Parcels



நெடு நாளைய விருப்பம்.

இதைவிட இன்னும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்
மசாலா உருளைக் கிழங்கை,
உணவு விடுதி நடத்திய வைத்தி மாமா,
ஒரு மாட்டுவண்டியில் கண்ணாடிக் கொண்டுக்குள் வைத்துக்
கொண்டுவருவார்.
அதுசரியாக நமது இரவு  சாப்பாட்டு நேரமாகவும் இருக்கலாம்
இல்லையானால் மாலை நேர டிஃபன் டைமாகவும் இருக்கலாம்.
எங்கேயோ உள்ளே இருக்கும் சின்னத்தம்பி 

மணி சத்தம் கேட்டதும் அவ்வ்வளவு பெரிய நீண்ட முற்றத்தைத் தாண்டி வாசல் கேட்டுக்குப் 
போய்விடுவான்.

நானும் ,பெரிய தம்பியும் அம்மாவிடம் காசு
அதாவது எட்டணா வாங்கிக் கொண்டு வெளியே
விரைவோம். 
வைத்தி மாமா அதற்குள் வண்டியை விட்டு இறங்கி
ஒரு இலையில் பூந்திலட்டுவை வைத்துத் தம்பியிடம்
நீட்டி இருப்பார்.

நானும் தம்பியும் பெரியவர்கள் இல்லையா....
கௌரவமாக வேண்டாம் என்று சொல்லிவிட்டு
எட்டணாவை அவர்கையில் கொடுத்ததும்,
இந்த இலை உருளைக்கிழங்கு மசாலா
மூன்று பொட்டலம் கொடுப்பார்.

மத்தியானம் அம்மா நல்ல காய்கறி வதக்கி செய்திருந்தால்
நாங்கள் காலி செய்திருப்போம்.
அந்த நாட்களில்
மாமா கொண்டுவரும் மசாலா உருளைக்கிழங்கு
தயிர் சாதத்துடன்   சுகமாக உள்ளே இறங்கும்.

மீனாட்சி அம்மன்  சன்னிதிதெருவில் அனேகமாக எல்லோருமே வாங்குவார்கள்.'
ராஜாமணி மாமாவின் அம்மாப்பாட்டி ரொம்ப ஆசாரம்.
அதனால் அந்தக் குழந்தைகளும் நம் வீட்டுக்கு
வந்துவிடுவார்கள்:)
சொகுசான வாழ்வுக்குத் திருமங்கலம் பெயர் போனது.

18 comments:

Angel said...

கிழங்கு பொட்டலம்னு படிக்கும்போதே யம்மியா இருக்கும்போலிருக்கே .ரெசிப்பி காணொளி பார்க்கிறேன் .நீங்க உங்க அம்மா செய்முறையும் பதிவிடுங்க . சிறு வயது இனிய நினைவுகளை பகிர்ந்தது வாசிக்க அருமையா இருந்தது .

Angel said...

இந்த கிழங்கின் சுவை வாழை இலையில் அல்லது தையல் இலையில் சுற்றி  பொட்டலம் ஆக்கும்போதுதான் சுவை கூடும்னு நினைக்கிறேன் .தேங்க்ஸ் வல்லிம்மா பகிர்வுக்கு .

கோமதி அரசு said...

உருளை கிழங்கு பொட்டலம் அருமை.
அதை விட உங்கள் மலரும் நினைவுகளின் பகிர்வு மிக அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்.

அந்த இலையில் , தையல் இலையில் சுற்றி வரும் போது கிடைக்கும் நறுமணம் தனியே தான். நினைத்தாலே இனிக்கும்
மணம்.

சென்னையில் மந்தார இலை. மதுரையில். வாழை இலை.
உடனே சொல்லி விட்டீர்களே!
அம்மாவும் பூரிக்குத்தொடுகையாக , தோசைக்குத் தொட்டுக் கொள்ள உ.கி செய்வார். ஆனால் இந்த மாமா
வண்டியில் கொண்டு வருவதில் எங்களுக்கு மோகம் அதிகம்.
எப்பவும் கிடைக்கும் வீட்டு சாப்பாடை விட ஹோட்டல் சாப்பாடு அப்போதெல்லாம் ருசிக்கும்:)
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

சிறு வயது நினைவ நமக்கு இனிமை தானே. அன்பு ஏஞ்சல், நீங்கள் ஏதாவது எழுத வேண்டும். நீங்கள் எழுதி நான் காணவில்லையானால்
எனக்கு சொல்லுங்கள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா, தவறாமல் வந்து கருத்திடுகிறீர்கள் அதற்கே தன்றி சொல்லணும்.
மகள் சொல்வது உண்மை தான். பௌர்ணமி. நினைவலைகளைக கொண்டு வருகிறதோ என்று நினைக்கிறேன்.
அப்படி இல்லை, நீ எப்பவுமே இப்படித்தான் என்று தம்பிகள் சொல்வார்கள் :)
நன்றி என் அன்பு தங்கச்சி.வாழ்க வளமுடன்.

ஸ்ரீராம். said...

உருளைக்கிழங்கு கறி போல இருந்தாலும் இதை புதுசாகக் கேள்விப்படுகிறேன்.  இதுமாதிரி மதுரையில் நான் பார்த்ததில்லை.  பூரி மசாலாவே மந்தார இலையில் கட்டிக்கொடுப்பதால் ஒரு புது வாசனை, ருசி கிடைக்கும்.  அதுபோல வாழை இலையில் இதைக் கட்டிக்க கொடுப்பதால் சுவை கூடுகிறது போல.  வீட்டில் செய்து எத்தனை பேர்கள் இருக்கிறோமோ அத்தனை வாழை இளைப்பு பொட்டலம் போட்டு வைத்து விட்டு சாப்பிடும்போது ஆளுக்கு ஒரு பொட்டலம் எடுத்துக் கொள்ளலாம்!  உங்கள் நினைவுகள் அருமை.

Geetha Sambasivam said...

உங்களுக்குத் திருமங்கலம் வைத்தி மாமா எனில் மேலாவணி மூலவீதியில் இருந்த எங்களுக்கெல்லாம் மேல கோபுர வாசலுக்கு எதிரே இருக்கும் நாகப்பட்டினம் ஒரிஜினல் நெய் மிட்டாய்க்கடை. நாங்க அம்பி கடை என்போம். அப்பாவின் உறவு தான். அவங்க கடையில் தினமும் காலை பதினோரு மணிக்குப் போடும் கோதுமை அல்வாவும், இந்தக் கார உருளைக்கிழங்கு மசாலாவும் இப்போதும் நினைவுகளில். மத்தியானங்களில் இரண்டாம் தரம் வெறும் மோர் சாதம் சாப்பிடுகையில் தொட்டுக்கொள்ள அருமையா இருக்கும். காரம் உச்சி மண்டையில் மோதினாலும் தெரியாத/புரியாத வயசு. மோரின் வாசனையோடு சேர்ந்து கிழங்கின் வாசமும் சேர்ந்து சின்ன வெங்காயத்தின் நறுமணத்தோடு உள்ளே இறங்கும். இப்போதும் மதுரை போனால் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாலும் பழைய சுவை இல்லை.

Geetha Sambasivam said...

ஸ்ரீராம் கோயிலுக்கருகில் இல்லாததால் இதைப் பற்றித் தெரியவில்லை என நினைக்கிறேன், மதுரையில் பார்த்ததே இல்லை என்கிறாரே! இப்போவும் அம்பி கடையில் மசாலாக்கிழங்கு காலை பதினோரு மணியிலிருந்து விற்கின்றனர். ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துவிடுகிறதாம். பழைய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

கிழங்கு பொட்டலம் - புதிதாக இருக்கிறது... காணொளி மாலையில் காண்பேன்.

நெல்லைத் தமிழன் said...

கிழங்கு பொட்டலம் பார்த்தேன். ஆனால் பூரி மசாலுக்குக் கொடுப்பதுபோல மஞ்சள் நிறத்தில் இல்லை. ரொம்பவே மசாலாவும் காரப்பொடியும் சேர்த்ததுபோல இருக்கு. பார்க்கும்போதே நாக்கில் காரம். ரொம்ப எண்ணெயாகவும் இருக்கோ?

நெல்லைத் தமிழன் said...

உங்கள் எழுத்தைப் படிக்கும்போது, பழைய காலத்தில் பால் எப்படி டெலிவர் பண்ணுவாங்க (குதிரை வண்டில ஒரு பாட்டில்ல வரும்), அப்புறம் எப்படி மாறினது என்றெல்லாம் நினைவுக்கு வருது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
நான் மதுரையில் எங்கள் சித்தப்பாவுடன் சென்று சாப்பிட்டிருக்கிறேன்.
1960 என்று நினைக்கிறேன்.
காரமாக எல்லாம் இருக்காது.
நன்றாக இருக்கும். உங்களுக்குத் தெரியாததாமா. வீட்டில் அருமையாகச் செய்து விடுவீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, அதே நாகப்பட்டினம் கடைக்குத்தான்
எங்கள் சித்தப்பாவும் அழைத்துச் செல்வார்.

அப்போது ,அது சின்னக் கடை. அல்வா தொண்டையில் வழுக்கிக் கொண்டு செல்லும்.

தாத்தா இருந்தபோது,என் பிறந்தகத்துப் பெரியப்பா, புக்ககத்து மாமா
எல்லோருமாக அவரது ஆஸ்டின் வண்டியில் செல்வோம்.

அதற்குப் பிறகு திருமங்கலம் வைத்தி மாமா தான். தினம் வரமாட்டார்,
வெள்ளி அல்லது ஞாயிறு தான் வருவார்.
அத்தனை சுவையான உ.கிழங்கு மசாலா இன்னும் நினைவில் இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
ஸ்ரீராம் அந்தப் பக்கம் போயிருக்க மாட்டார்.
ஆமாம் மதுரை உ.கிழங்கு தயிர் சாததுக்கு அவ்வளவு
நல்ல துணை.
சின்ன வயதில் எல்லாவற்றையும் ஜீரணிக்கும் சக்தி இருந்தது.
இப்போதெல்லாம் அது நடக்காது.
அதே போல திருச்சியில் பத்மா விலாஸ் ஹோட்டலில் பஜ்ஜி அவ்வளவு
திடமாக ,பொன்னிறத்தில் ருசியாக இருக்கும் . இப்போது அந்த ஹோட்டலே
இருக்கோ தெரியாது.
சுதந்திரமாகச் சுற்றிய சின்ன வயதில் எத்தனையோ
நல்ல நினைவுகள் அம்மா. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் மெதுவாகப் பாருங்கள். நீங்கள் வந்து கருத்துச் சொன்னதே அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
இவர்கள் சொல்லி இருப்பது கஷ்மீர் சில்லி. காரம் இருக்காது என்று நம்புகிறேன்.
நாங்கள் சாப்பிடும்போது
கொஞ்சம் தான் காரம் இருக்கும். பச்சை மிளகாய் அகப்படாது.
நல்ல வாசனையாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
இவர்கள் சொல்லி இருப்பது கஷ்மீர் சில்லி. காரம் இருக்காது என்று நம்புகிறேன்.
நாங்கள் சாப்பிடும்போது
கொஞ்சம் தான் காரம் இருக்கும். பச்சை மிளகாய் அகப்படாது.
நல்ல வாசனையாக இருக்கும்.