Blog Archive

Sunday, February 21, 2021

உறவின் மேன்மை....அவர்க்கும் எனக்கும்...பாகம் 5

வல்லிசிம்ஹன்
முன் கதை சுருக்கம்.
++++++++++++++++++++++++
விசாலி ,கமலியும் வித்தியாசமான சகோதரிகள். விசாலியின் நிதானத்துக்கு 
மாற்று தங்கை கமலி. துறு துறு ,குறும்பு,அக்காவை வம்புக்கு இழுப்பது.

எல்லா விஷயத்திலும் பொறுமை காட்டும் 
விசாலி ,தனக்கு சொந்தமான எதையும் கமலி தொடுவதை
வெறுக்கிறாள்.

விசாலிக்கும் திருமணமாகி புக்ககம் வந்த பின் அங்கு
மேல் படிப்பு படிக்க வரும் கமலி,
தன் சீண்டுதலைத் தொடர்கிறாள்.இந்தத் தடவை
விசாலியின் கணவனைக் கவர்வதை.தொடர் வதை விசாலிக்கு.
அங்கே வந்த அவர்களின் தந்தை
கமலியை ஊருக்கு அழைத்துப் போய் 
புத்தி சொல்ல விரும்புகிறார். தொடர்வோம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அப்பாவின் சொற்களைக் கேட்டு அதிர்ச்சி
அடைந்த கமலி''என்னப்பா. எதுக்கு என்னை அழைக்கிறாய். நிறைய வேலை இருக்குப்பா.
நாளைக்கு வேற தோழிகளோடு தங்கம் தியேட்டரில் 
ஆயிரத்தில் ஒருவன் பார்க்கணு" என்று சிணுங்கினாள்.

''எல்லாம் நம்ம ஊர்லயும் வந்திருக்கு அங்கே பார்க்கலாம்.
முதலில் வேணும்கிற துணிமணிகள்  எடுத்துக்கோ.
நாம் கிளம்பலாம். அம்மம்மா உன்னை அழைத்து வரச் சொன்னாள்.''
என்றார்.
அடுத்தாற்போல் அக்கா கணவனைப் பார்த்தாள்.
நீங்க சொல்லுங்களேன்'' என்று கேட்கும் 
மைத்துனியை சங்கடமாகப் பார்த்தான்.
உள்ளேயிருந்து வந்த காமாட்சி , 
''அவள் இருக்கட்டுமே சம்பந்தி. எங்களுக்குத் தொந்தரவில்லை''
என்றாள். அவள் சொல்வதைப் புரிந்து கொண்ட
நடேசன், ''மாமியார்  வந்திருக்கிறார் அம்மா, இரண்டு நாட்களில்
திரும்பி
வரட்டும்'' என்றார்.
 ஒரு நிமிடம் நிதானித்தவர்
''நீ உள்ள வாம்மா. தக்காளி சூப் செய்திருக்கேன்.
உங்க அக்காவோட பேசிட்டு வா"
என்றாள்.

''அக்காவுக்கு இன்னுமா சரியாகலை. ஜாலியா
ஓய்வெடுத்துக் கொண்டு விட்டாளா''
என்று கேட்டபடி அலுத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

(நம் வீட்டு சூப் படம்)
அப்போதுதான் கண் திறந்த விசாலி, கமலியைப் பார்த்து புன்னகைத்தாள்.
''ஏன் இப்படி தகர டப்பா மாதிரி சத்தம் போடறே கமலி.
நிதானமா இரேன். நமக்கு அம்மம்மா செல்லம் வேண்டும்தானே.
எனக்கும் சேர்த்து நீ பார்த்துவிட்டு வா"
என்றாள்.
"  உனக்கு உன் அகத்துக்காரர் உன்னுடனேயே இருக்கணும்.
என்னை மாதிரி யாராவது அவர் பக்கத்தில் போய் சிரித்தால்
ஆகாது உனக்கு. எத்தனை நாளைக்கு 
இந்த மாதிரி  பிடிச்சு வைத்துக் கொள்றே 
பார்ப்போம்" என்று விஷமத்தனமாகச் சிரித்தாள்.

விசாலிக்குக் கொஞ்சம் உறுத்தினாலும்
சமாளித்துக் கொண்டு ''என் வீட்டுக்காரர் எனக்கு
மட்டும் தான் வீட்டுக்காரர். அதுல உரிமை கொண்டாடறதிலே
எனக்கு சங்கடம் இல்ல. உனக்குத் திருமணம் ஆனாலும்
அப்படித்தான் இருக்கப் போறே. வீணாக வார்த்தை விடாதே.
நீ இன்னும் சின்னப் பாப்பா இல்ல. அடக்கமாக
இரு ''என்று சூடாகப் பதில் கொடுத்தாள்.

கொஞ்சம் திகைத்த கமலி'' அட உனக்குக் கூட
பேச வருமா.சரியான சௌகார் ஜானகி மாதிரி அழுமூஞ்சியா
இருக்கே. உலகத்தைப் பார்த்து கத்துக்கோ.
எனக்குக் கல்யாணம் ஆகும்போது அவரை என் பிடிக்குள் வைத்துக் கொள்ள
எனக்குத் தெரியும்" என்றபடி வெளீயேறி விட்டாள்.

விசாலிக்கு அவளை நினைத்தால் பாவமாக இருந்தது.
எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்? யாரைக் கவர்ந்து
இவள் என்ன  நிலை நிறுத்தப் போகிறாள்.
அதிக சினிமா, அதிகப் புத்தகம்,அதிகக் கற்பனை என்று
ஏதோ ஒரு உலகில் இருக்கிறாள்.
முருகா மீனாட்சி இந்தப் பெண்ணைக் காப்பாற்றுங்கள் 
என்று கண்களை மூடிப் பிரார்த்தனை
செய்தாள்.
''ஹை விஷ்," என்று சொன்னபடி உள்ளே வந்த
கணேஷ், தங்கைக்குப் பாடம் சொன்ன காசி விசாலாக்ஷி
அம்மையெ!!!!!

நீவிர் எனக்கும் ஏதும் சொல்லலாகுமோ"???
என்று நாடகக்காரன் போல் கைகுவித்ததும்
விசாலியின் கண்கள் சிரிப்பில் விரிந்தன.

''அன்னைக்குக் காவல் கணேசன் தான்!
உமக்கு நான் உபதேசம் செய்யப் போமோ?""
என்று சொல்ல இருவரின் சிரிப்பும்
அறைக்கு வெளியேயும் கேட்டது.
கணேஷின் தந்தையின் முகத்தில் புன்னகை விரிந்தது.

சமையலறைக்குச் சென்று கிண்ணங்களில்
தக்காளி சூப் எடுத்துக் கொண்டு 
விசாலியைக் காண வந்த காமாக்ஷியம்மாவும்
''பேஷ் பேஷ், நம் விசாலிக்கு உடம்பு சரியாகி விட்டது"
என்று இருவரிடம் கிண்ணத்தைக் கொடுத்தாள்.
''அம்மா நாங்கள் வெளியே வந்து சாப்பிடுகிறோம்.
அறை முழுவதும் சாப்பாட்டு வாசனை.மீனாக்ஷி!!"
என்று விளித்தபடி வெளியே வந்த அம்மாவைப் பார்த்துக்
கால்களைக் கட்டிக் கொண்டது குழந்தை.

நம் விசாரத்தில் இந்தக் குழந்தையை மறந்தோமே
என்று அதை வாரி அணைத்துக் கொண்டவளின் தோள்களில்
மாமியாரின் கைகளும் படர்ந்தன.

சாப்பாட்டு மேஜையிலிருந்து இதைப் பார்த்த
அப்பா நடேசன் கண்களில் ஆனந்தம்.

''சரி கமலி. கிளம்பு. இந்த மதுரை வெய்யில் 
நமக்கு ஆகாது. திண்டுக்கல் காற்று மாதிரி வருமா""
என்று எழுந்தார்.
தந்தையின் உறுதியைக் கண்ட கமலி மறுக்கவில்லை.

திண்டுக்கல் போய்ச் சேரும் வரை
மகள் காதில் நிதானமாக இருக்க வேண்டிய
அவசியத்தைச் சொல்லியபடி வந்தார்.
அடக்கம் இல்லாவிட்டால் வாழ்வில் 
என்னாளும் முன்னேற முடியாது.
அதுவும் பெண்களுக்கு எவ்வளவு அவசியம்.
பழகும் விதத்தில் எல்லோரிடமும் மரியாதை பெறும்படிப்
பழக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வேண்டா வெறுப்பாகக் கேட்டுக் கொண்ட கமலி
''முடிந்த வரை கடைப் பிடிக்கிறேன் அப்பா.
எனக்கு  விசாலி வீட்டுக் கட்டுப்பாடு பிடிக்கவில்லை,
என் கல்லூரி விடுதிப் பெண்கள் இன்னும் 
சுதந்திரமாக இருக்கிறார்கள்...என்னை அங்கே
சேர்த்து விடுங்கள்.காமாட்சி மாமி ரொம்பக் கட்டுப்
பெட்டி. இந்த விசாலியும் அவர்கள் கட்சி.
கணேஷ் ஒருத்தரைத்தான் எனக்குப் பிடிக்கும்.
அவரையும் விசாலி எடுத்துக் கொண்டுவிட்டாள்"

என்ற மகளின் பேச்சு அவரை அதிர வைத்தது.
வயசுக் கோளாறு என்று வைத்துக் கொண்டாலும்
இதைத் திசை திருப்ப வேண்டும் என்று
தீர்மானித்த பிறகு
எல்லாமே  அந்தந்தக் கட்டத்தில் அடங்கின.
திங்கள் அன்று மதுரை திரும்பியவர்கள் கமலியின் உடமையோடு
கல்லூரி விடுதியில் சேர்ந்தார்கள்.
இன்னும் ஒரு பெண்ணோடு கமலிக்கு
அறை கிடைத்தது. ஆனந்தமாக அவள் விரும்பிய சுதந்திரம் கிடைத்தது.
அங்கேயும் கட்டுப்பாடுகள் உண்டு 
என்று தெரிந்ததும் கொஞ்சம் சுணக்கம் தான்.

ஆனால் பாடங்கள் கற்றால் தானே செம்மை வழியில் 
செல்ல முடியும்.?
படித்து முடித்து அதே கல்லூரியில் பாட போதகராகவும் 
பரிமளித்தவள்,
தான் விரும்பிய ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரரைக்
கைபிடித்தாள்.

விசாலி,கணேஷ்,மற்றும் பெற்றோர் ஆசியுடன் 
அவர்கள் சென்னைக்குக் குடி பெயர்ந்தார்கள்.

இன்னும் அனைவரும் நலமாகப் பேரன் பேத்திகளுடன்
நல் வாழ்க்கை வாழ்கிறார்கள்.

நல்ல தந்தையும் தாயும் இருந்து அவர்கள் சொல்வழி நாமும் நடந்தால்
வாழ்வு என்றும் சிறக்கும்.
இந்தப் பயணத்தில் என்னுடன் வந்த அனைவர்க்கும் நன்றி.

பெயர்,ஊர்கள் மாறினாலும் கதை அதுதான்.




10 comments:

கோமதி அரசு said...

கதை மிக அருமை. சொல்லிய விதம் மிக மிக அருமை.
விசாலிக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருந்தது குறிப்பாக மாமியார் நல்ல மாமியார் அவரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

//நம் விசாரத்தில் இந்தக் குழந்தையை மறந்தோமே
என்று அதை வாரி அணைத்துக் கொண்டவளின் தோள்களில்
மாமியாரின் கைகளும் படர்ந்தன.//

இந்த வரிகளை ரசித்தேன்.

(அவர்கள் பட மாமியாரை எனக்கு மிகவும் பிடிக்கும் மிகவும் நன்றாக நடிப்பார்.)

கமலி நல்லபடியாக படித்து முடித்து பாட போதகராக வந்தது மகிழ்ச்சி. வாழ்க்கை பாடத்தை நன்கு கற்றுக் கொடுத்த தாய் தந்தையை வணங்க வேண்டும்.

உங்கள் வீட்டு சூப் படம் மிக அருமை.
பகிர்ந்த பாடல் மிக பிடித்த பாடல் கேட்டு மகிழ்ந்தேன்.
அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.


நெல்லைத்தமிழன் said...

நீங்க நல்லவிதமா, மனக் கஷ்டமான பகுதியை சுலபமா கடந்து நடந்ததைச் சொல்லிட்டீங்க. சிப்லிங்க்ஸ் இடையில் பொறாமை தவிர்க்க முடியாது. அதோடு விஷமத்தனம் சேர்ந்தால் உறவுகளுக்குள் ஆபத்தைக் கொண்டுவந்துவிடும். பொதுவா வயதுக்கு வந்த தங்கையை அக்கா வீட்டிற்கு தனியாக அனுப்புஙது இல்லை.

வெங்கட் நாகராஜ் said...

கடைசியில் சுபம்.

நலமே விளையட்டும்.

குறுந்தொடர் நன்றாக இருந்ததும்மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

கதை நல்ல முடிவாக இருந்தது. பெரியவர்கள் சொல் பேச்சுப்படி குழந்தைகள் நடந்து கொண்டால், எந்த பிரச்சனைகளும் இல்லாமல் அவர்கள் வாழ்க்கை வெற்றிகரமாகத்தான் அமையும் என்பதற்கு இந்தக் கதை ஒரு உதாரணம். இறுதியில் கமலிக்கு நல்லதோர் இடத்தில் வரன் அமைந்து வாழ்க்கைச் செழிப்புடன் பேரன்,பேத்திகளை பார்த்து வாழ்க்கையை அனுபவித்து வருவதற்கு மகிழ்ச்சி. விசாலியும் நல்லபடியாக குழந்தைகளுடன், அன்பான கணவர். மாமனார், மாமியாருடன் வாழ்ந்திருப்பாள். நல்லதொரு அனுபவபூர்வமான கதையை ருசிகரமாக தொகுத்து தந்தமைக்கு உங்களுக்கும் மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. வாழ்க வளமுடன்,

ஒன்றும் தவறாக எழுதாமல் சுமுகமாகவே எழுதி முடிக்க சிரமப்பட்டேன்.
எப்பொழுதோ நடந்ததை
அப்படியே சொல்ல முடியவில்லை.

அதனால் யாருக்கும் பயனுமில்லை.
அவர்களின் பெற்றோர்கள் இப்போது இல்லை.

காமாட்சி மாமி உண்மையில்யே என்னை மிகவும் கவர்ந்தவர்.
அவ்வளவு நிதானம் ,இறை பக்தி,நேர்மை
கடின வார்த்தைகள் பேச மாட்டார்.

விசாலி கொடுத்து வைத்தவள்.
ஆழ்ந்து படித்து அழகான் பின்னூட்டம்
கொடுத்திருக்கிறீர்கள். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
இந்த வயதிலும் அந்த சங்கடமான காலத்தை மீண்டும் எழுத மன
மில்லை.
நல்ல பெற்றோரின் வழிகாட்டல்
எப்போதும் குழந்தைகளுக்குத் தேவை என்பதில் மாற்று யோசனை
எனக்குக் கிடையாது.

நாம் நிதானமாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
அவர்களும் கலைந்து நாமும் குழம்பினால் விடிவேது!!!

விசாலியின் மாமியாரின் ஸ்திர மனோபாவமும், நடேசனின் பொறுமையும்
அனைவரையும் கட்டுக்குள் வைத்திருந்தது மா.
தொடர்ந்து படித்து வருவதற்கு மிக நன்றி.ஆமாம் பொதுவாகத் தங்கையை அனுப்ப மாட்டார்கள். என்னவோ அந்த உரண்டு வாரம் விசாலிக்குச் சோதனை காலம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
சகோதரிகள் இருவரும் என்னுடன் கடிதத் தொடர்பில்
இருந்தார்கள். நல்ல விதமாக மேகங்கள்
மறைந்து ஒளி வீச ஆரம்பித்தது அவர்கள்
வாழ்வில்.தொடர்ந்து படித்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
நம் பெற்றோருக்கு நம் வாழ்க்கை ஆசீர்வதிக்கப் பட வேண்டும்.
நமக்கு நம் குழந்தைகள் நல் வாழ்வு பெற வேண்டும்.

அவ்வளவே தான், சின்னவர்கள் , பெரியவர்களை மதிக்கும் போது வண்டி சரளமாக ஓடும். நீங்களும் ,நானும் மற்றும் நம் தோழிகளும்
இது நாள் வரை அப்படித்தான் இருக்கிறோம்.

நிறை வாழ்வு நம் குழந்தைகளுக்குத் தொடர வேண்டும்.
தொடர்ந்து படித்ததற்கு மிக மிக நன்றி மா.

Angel said...

///அதிக சினிமா, அதிகப் புத்தகம்,அதிகக் கற்பனை என்று
ஏதோ ஒரு உலகில் இருக்கிறாள்.//

உண்மைதான் வல்லிம்மா .நிறைய பெண்கள் எதிர்பார்க்கும் நற்குணங்கள் நிரம்பிய  ஆதர்ச கணவன் என்ற ஒருவர் மிக அருகில் இருக்கும்போது அவர் தனக்குரியவரில்லை  எனும்போதும் வேறேதும் கண்ணுக்கு தெரியாது மனத்துக்கும்தான் .அந்த குடும்பமே மிக நல்ல விதமா இதை கையாண்டிருக்காங்க .சிறு பிசிர் ஏற்பட்டிருந்தாலும் சர்வ நாசம் .கம்பி மேல் நடப்பதுபோல் தான் இச்சம்பவமும் ...
கதை சம்பவத்தை மிக அழகா எழுதி சொல்லியிருக்கீங்க வல்லிம்மா .இதெல்லாம் ஒருவகை infatuation பப்பி லவ் வகை .சரியான சமையம் பெரியவங்க அசம்பாவிதத்தை தடுத்திருக்காங்க .
தொடர்ந்து எழுதுங்க .

வல்லிசிம்ஹன் said...

ஆதர்ச கணவன் என்ற ஒருவர் மிக அருகில் இருக்கும்போது அவர் தனக்குரியவரில்லை எனும்போதும் வேறேதும் கண்ணுக்கு தெரியாது மனத்துக்கும்தான் .அந்த குடும்பமே மிக நல்ல விதமா இதை கையாண்டிருக்காங்க/////////அன்பு ஏஞ்சல்,
ஆமாம் மா. விபரீதமாக ஏதும் நடப்பதற்கு முன்னால் விழித்துக் கொண்டார்கள்.
விசாலி தன் கணவனின் மேல் நம்பிக்கை இழக்கவில்லை.

ஆனால் இதுவே தொடர்ந்திருந்தால் தன் மன நிம்மதியைப் பூரணமாக
இழந்திருப்பாள்.

அருமையாகப் புரிந்து கொண்டீர்கள்.
அப்போதைய மில்ஸ் அண்ட் பூன்.
ரொமான்ஸ்க்காகவே படித்த பெண்களை எனக்குத் தெரியும்.

எங்கள் தந்தை அந்தப் பக்கம் போக விடமாட்டார்:)
வந்து படித்துக் கருத்தும் சொன்னதற்கு
மிக நன்றி ராஜா.