வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
கமலியும் வந்துவிட்டாள். கூடவே வந்த தந்தை அவளை இரண்டொரு நாள்
கல்லூரி வரை சென்று விட்டு வந்து
அழைத்தும் வந்தார்.
விசாலிக்கு ஒரு பக்கம் தங்கை படிப்பாப் பற்றிப்
பெருமையாக இருந்தாலும்,
அடுத்து அவள் செய்தது அதிர்ச்சி கொடுத்தது.
ஒரு நாள் சாயந்திரம் எல்லோரும் சாப்பிடும்போது''அத்திம்பேர் ,தினமும் நீங்கள் எங்கள் காலேஜ் வழியாகத் தானே செல்கிறீர்கள்?
நானும் உங்களோடு வந்து இறங்கிக் கொள்கிறேன்.
சாயந்திரம் தோழிகளுடன் வந்து விடுகிறேன் "
என்றாள்.
விசாலிக்கு அடிவயிற்றிலிருந்து ஆத்திரம் பொங்கியது.
மாமியாரைத் தீனமாகப் பார்த்தாள்.
அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
குழந்தைத்தனமாகப் பேசுகிறாள்,
தன் மகன் மறுத்து விடுவான் என்றெண்ணி கணேஷைப்
பார்த்தாள். அவனோ யோசிக்கவே இல்லை.
அதனால் என்ன தயாராக இருந்தால்
அழைத்துப் போகிறேன்.
தாமதமானால் நிற்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான்.
அவனுக்கு மனதில் தப்பென்று படவில்லை.
விசாலிக்குத் தான் மனம் படபடத்தது.
இந்தப் பூட்டிலிருந்து எப்படி வெளிவருவது
என்று சிந்தித்து மனம் நொந்தாள்.
சாப்பிட்டு எழுந்திருக்கும் போது கமலி அவளைப்
பார்த்து கண் சிமிட்டியது இன்னும் வேதனை.
பலன்........அடுத்த நாள் காலை எழுந்திருக்கும் போதே
தலை நோவு.
கண்கள் சிவக்கக் காய்ச்சல் கண்டது.
மனைவி எழுந்திருக்காமல் இருப்பதைப்
பார்த்து திடுக்கிட்டான் கணேஷ்.
குழந்தை மீனாக்ஷி விடாமல்
அழ,
கணேஷின் தாயார் உள்ளே வந்தாள்.
என்னா ஆச்சும்மா விசாலி,?என்று தொட்டுப் பார்த்தவளுக்கு
அதிர்ச்சியும் கவலையும் சேர,
கணேஷ், நேற்றிலிருந்தே அவளுக்கு வேலை செய்யத் தள்ளவில்லை.
நீ இன்னிக்கு லீவு போட்டு விட்டு
அவளை டாக்சியில் டாக்டரிடம் அழைத்துப் போ.
மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்''
என்ற சொன்னபடி குழந்தையை அழைத்துக்
கொண்டு வெளியே சென்றாள்.
என்ன செய்தி என்று அறிய அறை வாசலில் நின்ற கமலி,
விசாலி துவண்டு படுத்திருப்பதும்,
கணேஷ் அவளுக்குத் தெர்மாமீட்டரில்
ஜுர அளவைப் பார்ப்பதும் தெரிந்தது.
அன்று முக்கியமான ரெக்கார்ட் ஒன்றைக்
கல்லூரியில் கொடுக்க வேண்டி இருந்தது
நினைவுக்கு வர, விசாலியின் மாமனார் உதவியை
நாடினாள்.
அவரும் தானே அவளை டாக்சியில் கொண்டுவிடுவதாகச் சொல்ல
அன்றைய பிரச்சினை தீர்ந்தது.
ஒன்றுமே அறியாமல் உறக்கத்தில் இருந்தாள்
விசாலி.
கணவன் அழைத்துக் கொண்டு சென்ற போதும்
உடல் தளர்வு அவளைப் பேச விடவில்லை.
குளிர் கைகளை உறைய வைக்கிறது.
அடுத்த பாகம் வெய்யில் வந்தவுடன்.
தொடரும்.
11 comments:
சின்னச் சின்ன விஷயங்கள் கூட மன உளைச்சலை தந்து விடும் என்பதைச் சொல்கிறது இந்தப் பகுதி. தொடர்ந்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் படிக்க காத்திருக்கிறேன்.
உறையும் குளிர் - கவனமாக இருங்கள் மா.
கமலி நடந்துகொண்டது சரியாகப் படலை கணேஷும் appropriateஆக நடந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
திருமண வாழ்க்கையில் உறவுகள் என்பது கத்தியின்மீது நடப்பது போன்றது. மனது நிர்மலமாக இருந்தாலும், மூன்றாமவருக்கும் நம் மனம் நிர்மலம் என்று தெள்ளத் தெளிவாகப் படும்படி நடந்துகொள்வது முக்கியமல்லவா?
முடிவில் பாடல் மனதின் நிலையை சொல்லி விடுகிறது...
வணக்கம் சகோதரி
அக்காவின் மனம் தெரிந்தும், கமலி இப்படி நடந்து கொள்வது சரியில்லை. கல்லூரி படிக்கும் பெண் தனியாக போய் வர தெரிந்து கொள்ள
வேண்டாமா? பாவம்....! அக்காவை விளையாட்டுக்கு கூட இப்படி நோகும்படி செய்ய கூடாதென்று அவளுக்கு சொல்லி புரிய வைப்பது யார்? கட்டியவரும் மனதில் களங்கமில்லையென்றாலும் மனைவியை, மனைவியின் சுபாவத்தை புரிந்து கொள்ள வேண்டும். மனவுளைச்சல் சமயத்தில் எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல் போகும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
உறைய வைக்கும் குளிரில், தங்கள் உடம்பை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு வெங்கட்,
மிக மிக உணமை.
மிக மென்மையான உணர்வுகள் கொண்ட பெண்கள்
சீக்கிரமே பாதிக்கப் படுகிறார்கள்.
சின்ன வயது. கணவனின் மேல் அதீதப்
பாசம். தங்கையிடம் பயம்.
வாழ்க்கையைக் கடக்க திடம் வேண்டும் என்று புரிந்து கொள்வாள்.
நன்றி மா.
அன்பு முரளிமா.
அவள் பார்வையில் ,தங்கை தன் உடமையைப் பறித்துக் கொள்வாளோ
என்ற பயம் வந்து விட்டது.
கணேஷுக்கு விசாலியே சின்னக் குழந்தை. அவள் தங்கை இன்னும் சிறியவள்.
விகல்பம் இல்லாத மனது அவனுக்கு.
அந்த நாட்களில் அப்பா,சகோதரர்கள் இவர்களுடன்
ஸ்கூட்டரில் உட்கார்ந்து போவது மட்டும் அனுமதிக்கப் பட்ட காலம்.
இரு சகோதரிகளுக்குள் இத்தனை வித்தியாசம்.
வாழ்க்கையில் பாடமாக அமையும்
நிகழ்வுகளைச் சமாளிக்கவும் திடம் வேண்டும்.
அதுதான் நடந்தது. ஆழமாகப் படித்து கருத்தும் சொன்னதற்கு
மிய நன்றி.
அன்பு தனபாலன் ,மிக நன்றி மா. அந்தக்
காலத்துப் பாடல்கள் அனைத்துமே
முத்தானவை.
மனதை விட்டு அகலாதவை.
நீங்கள் வந்து கருத்து சொன்னத்ற்கு மிக நன்றிமா.
அன்பு கமலாமா,
குண விசேஷங்கள் மாறி இருப்பது கொஞ்சம் வேதனைதான்.
பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது
பெண்களின் கடமை. விசாலி மூத்தவள் ஆனதால் இயல்பாகவே
கண்டித்து வளர்க்கப் பட்டாள்.
கமலியிடம் அத்தனை கண்டிப்பு காட்டப்
படவில்லை.
இருந்தாலும் அத்து மீறி நடப்பது எப்பொழுதுமே தவறு.
அது அவளுக்கும் புரியும்.
விசாலியும் மன திடத்துடன் வாழ்க்கையை
அணுகக் கற்க வேண்டும்.
இப்போது இத்தனை தெளிவாக அந்த நிகழ்வுகளைப்
புரிந்து கொள்ள முடிகிறது, அந்தப் பதினெட்டு வயதில்,
விசால்யின் துயரம் என்னையும்
பாதித்தது.
அவள் மீண்ட கதையை வரும் அத்தியாயத்தில் பகிர்கிறேன்.
தங்கள் அன்புக்கு மிக நன்றி. நான் பத்திரமாக
இருக்கிறேன். கடவுள் அருள்.
கதையும் பாடலும் என்று இலங்கை வானொலியில் வைப்பார்கள் அது போல இருக்கிறது. அருமையான கதைக்கு பொருத்தமான பாடல்கள்.
விசாலியின் மனநிலை உடல் தொந்திரவு கொடுக்கிறது.
எல்லாம் சரியாக வேண்டும்.
இப்போத் தான் இதைப் பார்த்தேன்.படித்தேன். கமலி செய்வது சரியல்ல. விசாலியும் மனத்திண்மையுடன் இருக்க வேண்டும். அவள் தொட்டால் சுருங்கியாக இருப்பதால் கமலிக்கு விளையாடிப் பார்க்க ஆவல்.
நல்லவேளையா விசாலியின் மாமியார் பக்குவம் நிறைந்து விசாலிக்குத் துணையாக நிற்கிறார்.
Post a Comment