ஒரு மரணம் நம் வாழ்வை எப்படி எல்லாம்
ரணமாக்குகிறது என்று மீண்டும் யோசிக்க வைத்ததது.
ஒரு உயிர் இறைவனிடம் செல்வது
அவரை விட்டுப் பிரிந்தவர்களுக்கு
என்ன ஒரு அதிர்ச்சி.!!! அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.
அதுவும் ,பாவம் ஒரு நல்ல கலைஞரை
இத்தனை பேச்சு அவர் மறைவுக்குப் பிறகு பேச வேண்டாம்.!!
அந்தக் குடும்பம் நலமாக இருக்கட்டும்.
இதோ ஏழு வருடங்களுக்கு முன், 9.30 மணிக்கு குட்னைட்
சொல்லிப் படுத்தவர், ஒன்பதே முக்காலுக்கு
ஒரு சத்தம் இல்லாமல் குளியலறை வாசலில்
படுத்திருக்கிறார்.
என்ன நடந்தது???
கத்திக் கதறி பெண்ணை அழைக்கிறேன்.
அமெரிக்காவிலிருந்து அவள் எல்லோரையும் அழைத்து விட்டாள்.
முதலில் வந்தவர்கள் எதிர் வீட்டு ஷாந்தி,பின்னோடு பக்கத்து வீட்டுப் பையனும் மனைவியும்.
அவந்தான் தேவகி ,இசபெல்லா என்று அழைத்தான்.
அவர்கள் வந்தார்கள்.
அந்த ஆறடி உரு stretcher ஏற்றும்போதே தொங்கின
கையை நான் தான் மேலே எடுத்து வைத்தேன்.
அப்போதும் சூடு இருந்தது.
சரி நிறுத்திக் கொள்கிறேன்.
எல்லோரும் வர இரண்டு நாட்கள் ஆனது.
அவரை அனுப்பினோம்.
அவரைப் பரிசோதனை செய்த வைத்தியரிடம் இருந்து
சர்ட்டிஃபிகேட் வாங்கப் போனான் சின்ன மகன்.
அதில் எழுதி இருந்த வாசகம் ''டி பி.''
அந்தப் பக்கத்து வீட்டுப் பையன் என்ன சொன்னானோ
அவர் என்ன புரிந்து கொண்டாரோ.
என்னுள் கொதித்த கனலை அளவிட முடியாது.
ஏற்கனவே உறவினர்கள் நீ என்ன செய்துண்டு இருந்தே
என்ற கேள்விக்கு என்னால் சிந்தித்துப்
பதில் சொல்ல முடியவில்லை.
108 எண்ணையே மறந்த நிலையில்
நான் கலங்கியது மட்டும் நினைவில்.
இன்னோரு உறவினர், அவருக்கு நானும் இவரும்
எத்தனை உதவிகள் செய்திருப்போம் என்று தெரியாது.
ஆஸ்பிட்டலுக்கு அழைத்துப் போ என்கிறார்.
மகனிடம் சொல்லி, அவருக்கு இருமல் இருந்ததென்னவோ உண்மை.
எப்பவுமே கபம் உண்டு.
இது எலும்புருக்கி நோய் இல்லை.
சாயந்திரம் கூட பைக்கில் போய்
பெரியவன் பிறந்த நாளுக்கு அர்ச்சனை செய்து வந்தோம்.
வழக்கம் போல் சித்திரக்குளத்துக் கடையில் வறுத்த
நிலக்கடலை வாங்கி வந்து சாப்பிட்டோம்
என்று சொன்னதும்,
அவன் மீண்டும் அந்த டாக்டரைக் காணப் போனான்.
அவர் கார்டியாக் arrest enRu எழுதிக் கொடுத்தார்.
அதற்குப் பிறகு எந்த மரணக் காட்சி வந்தாலும்
பார்ப்பதில்லை என்று முடிவு செய்தேன்.
அதாவது தொலைக்காட்சியில்.
இப்போதும் திரு எஸ்பிபி அவர்களின்
இணையக் காட்சிகளைத் தவிர்த்து
அவர் பாடல்கள் பேட்டிகள் பார்க்கிறேன்.
இன்னும் சில நாட்களில் பாடல்கள் மட்டுமே
கேட்கும் நிலைக்கு வந்துவிடுவேன்.
இப்படி ஒருவர் இறைவனடி அடைந்த
பிறகு அவரது வாழ்க்கையை அக்கு வேறு ஆணி வேறாகப்
பிரித்துப் பார்ப்பது நம் நிருபர் மக்களுக்குக்
கரும்பு தின்பது போல இருக்கிறது.
இனியாவது ஓயட்டும்.
கருணை வாழட்டும்.
12 comments:
ஆம்..பேரிழப்பைச் சந்தித்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கா விட்டாலும் இப்படிப் புண்படுத்தாதேனும் இருக்கலாம்..
வணக்கம் ரமணி சார்.
இறைவனிடம் சென்றவர் அமைதியாக இருக்கட்டும்.
அவரது குடும்பம் அமைதியாக இருக்கட்டும்.
நன்றி மா.
வணக்கம் சகோதரி
மனம் மிகவும் கலங்குகிறது. நீங்கள் சொல்வதனைத்தும் உண்மையே..இறப்புச் செய்திகள் மனதை ஒரு புரட்டு பார்ட்டி விட்டுச் செல்கிறது. அனைவரும் நலமாக வாழ இறைவன் அருள் புரியட்டும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
புரட்டு புரட்டி விட்டு.. எனப்படிக்கவும்
சாரின் இழப்பை சொல்லும் போது மனம் கனத்து போகிறது.
யாரும் இல்லாமல் தனித்து இருக்கும் போது சிந்தனை செய்யுமா மனம் கையும் ஓடாது, காலும் ஓடாது , திக்பிரமை பிடித்த மாதிரிதான் இருக்கும். சற்றுமுன் பேசிக் கொண்டு இருந்தவர் இல்லையென்றால் அதை நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது.
யார் இறந்தாலும் ஏன், என்ன, எப்படி என்று கேட்பதோடு இல்லாமல் அதைச் செய்திருக்கலாம், இதைச் செய்திருக்கலாம் என்பார்கள். மனிதர்கள்! என்ன செய்யலாம்? எஸ்பிபி இறந்ததும் இத்தகைய சர்ச்சைகள் தேவையே இல்லை. ஆனாலும் ஏன் தான் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்காங்களோ! நீங்க இத்தனை பாடுபட்டது எனக்கு இப்போத் தான் தெரியும்! போனவர் போயாச்சு! இருக்கிறவங்க படுத்தற பாடு! :(
செலிபிரிட்டி ஸ்டேட்டஸுக்கு கொடுக்கும் மிகப்பெரிய விலை.
எஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடம், இன்று காலை 10:30க்கு மருத்துவர் குழு கூடி விவாதிக்கிறது. என்ற செய்திகளை கேட்ட பொழுது என் மகள், "இந்த செய்திகளையெல்லாம் கேட்கும் பொழுது அப்பா நினைவு வருகிறது" என்றாள். இறுதிச் சடங்குகளை பார்க்க மனம் வரவில்லை.
அன்பு கமலாமா,
ஆமாம்மா. என்னென்னவோ நினைவுக்கு வந்து விட்டது.
தங்களைக் கலங்க வைத்ததற்கு
மன்னிப்பு கேட்கீறேன்.
சோகத்தில் இருப்பவர்களை மேலும் வருந்த வைப்பது
எத்தனை பெரிய துன்பம்.
இதைத்தான் சொல்ல வந்தேன்.
அன்பு கோமதிமா,
அந்த நாள் என்னைவிட்டுப் போக மறுக்கிறது.
எனக்கு ஏதாவது என்றால் உடனே வண்டி எடுத்துத் தயாராக இருப்பார்.
ஒன்றும் இயலாத கோழையாகி நின்றேனே
என்ற சினம் என்னுடனே தங்கி விட்டது.
முதலுதவி செய்யக் கற்கவில்லை.
அதற்குத்தான் மாற்றாக என்னென்னவோ
பாட்டு,எழுத்து என்று போகிறேன்.
இறையருள் எல்லோருடனும் இருக்கட்டும். நன்றி கோமதி.
நலம் வாழ்ழ வாழ்த்துகள்.
பதிவுக்கான தலைப்பு மிகப் பொருத்தம்.
இந்த மாதிரி விஷயங்களை பார்க்காமல் இருப்பது நல்லது! எல்லாவற்றையும் இங்கே மீடியாக்காரர்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்க் கண்ணோட்டத்துடன் பார்ப்பது வேதனை.
அன்பு கீதாமா,
வருந்தாதீர்கள்.
இப்படித்தான் என்று இறைவன் தீர்மானித்துவிட்டான்.
எல்லோரும் கேட்டது நீ என்ன செய்து கொண்டிருந்தாய் என்பதே.
அவருக்கு வெளிச்சம் இருந்தால்
தூக்கம் வராது.
அதனால் அடுத்த அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன்.
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி இல்லை என்பதுதான்
உண்மை.
பாலு சாரின் குடும்பம் அவதிப் படக் கூடாது.
இறைவன் காப்பாற்றட்டும். நன்றி மா.
அன்பு பானுமா,
அப்பாவுக்கு மிகப் பிடித்த மகள் இப்படி
நினைப்பதில் ஆச்சர்யமே இல்லை.
அதுவும் நீங்கள் பட்ட சிரமம்
கொஞ்சமா.
ஆறுதலாக இருங்கள். பாலு சார் குடும்பம் நலம் பெறட்டும்.
Post a Comment