வல்லிசிம்ஹன்
வளம் பெற வாழ்வோம்
எண்ணெய்க் குளியலும்அதனுடன் தொடரும் வாழ்வும்
வளம் பெற வாழ்வோம்
எண்ணெய்க் குளியலும்அதனுடன் தொடரும் வாழ்வும்
குழந்தைகள் எப்போதும் அவ்வளவாக விரும்பாதது
எண்ணெய்க்குளியல்:)
இப்பொழுது எத்தனை வசதிகள் வந்துவிட்டன.
அப்பொழுது பாட்டியின் கால்களில்
படுக்க வைக்கப்பட்ட 11 நாள் குழந்தை படும் பாடு சொல்லி முடியாது.
எண்ணெய் தடவப் பட்ட பட்டுமேனியில்
கொதிக்க கொதிக்க சுடுனீர் விடப்படும்.
அதன் காச் மூச் கத்தலில் அன்னை காதை மூடிக்கொள்வாள்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடரும்
இந்த வன்முறை!!!!!!!!! பிறந்தகத்தைவிட்டு
அம்மாக்காரி புக்ககத்துக்குப் போகும் வரை தொடரும்.
அன்னை நனைந்து ,பிள்ளை அதற்கு மேல் கதறி
அந்தக் காலனியில் எல்லோருக்கும் காலை பத்து மணி என்றாலே
ஒரு உதறல் பிறக்கும்.
பத்துமாதக் குழந்தையைக் கையாள அன்னையும் பழகி ,
அந்தப் பிள்ளையும் வளர்ந்திருக்கும்.
நடக்க ஆரம்பித்தவுடன் எண்ணெயைய்க் கண்டால்
ஓட ஆரம்பிக்கும்:)
பத்துவயது வரும்போது தனக்கும் எண்ணெய்க் குளியலுக்கும் ஸ்னானப் ப்ராப்தி
கிடையாது என்று முடிவெடுத்துவிடும்.
மேலே நடந்தது எங்கள் வீட்டுக் கதை.
பெரியவனுக்கு அப்புறம் வந்த மகளும்;
சின்னவனும் அத்தனை அழவில்லை.
எனக்கும் 20,22 வயதானதால் முதிர்ச்சி வந்துவிட்டது
என்று நினைக்கிறேன்.
தினசரி யுத்தம் முடிந்து குளியலைக் குழந்தைகள்
ரசிக்க ஆரம்பித்தார்கள்.
ப்ளாஸ்டிக் வந்த புதிது. கோவையில்
இரண்டு பெரிய குளியல் தொட்டிகள் கிடைத்தன.
இரண்டிலும் நீர் நிரப்பி,
அவர்களை விளையாட விட்டதில் எனக்கும் நிம்மதி அவர்களுக்கும்
ஆனந்தம்.
தோட்டத்தில் அவர்களை எனக்கு உதவியாக
இருந்த ராஜம்மா கவனித்துக் கொள்ள
நான் சமையலை முடித்துக் கொள்வேன்.
மூவருக்கும் பெரிய கிண்ணதில் பருப்பு சாதம்,
பிறகு தயிர் சாதம், தனித்தனியே கிண்ணத்தில் காய்கறிகள்
கொடுத்துவிட்டால்,
அவர்களின் அப்பா வரும் நேரம் மதியத் தூக்கத்துக்கு
தயார் ஆகிவிடுவார்கள்.
சிங்கத்துக்கு வெளியே சாப்பிடப் பிடிக்காது.
ஒரு மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிட வந்துவிடுவார்.
ஓஹோ இது எண்ணெய் சம்பந்தப் பட்ட கதை. மீண்டும் நாளை தொடருகிறேன்.
அனைவருக்கும் இந்த நாள் நல்லதாகட்டும்.
19 comments:
இது தான்... இப்படித் தான்...
தங்கள் கை வண்ணம் அருமை...
எனக்கென்னவோ -
எண்ணெய்க் குளியலைத் தவறாகக் கையாண்டு அன்றைய இளந்தலைமுறைக்கு எண்ணெய்க் குளியலின் மீது ஏகத்துக்கும் காழ்ப்புணர்ச்சியை உண்டாக்கி விட்டோமோ.. என்று...
பழைய நினைவுகள் சிலவற்றைத் தூண்டி விட்டிருக்கின்றது - தங்களது பதிவு..
ஃபார்வர்ட்களை விட இந்த மாதிரி அனுபவங்களைப் படிக்கும்போது நினைவை பின்னோக்கி இழுத்துடறீங்க வல்லிம்மா..
எங்க அப்பாவும் சனி தோறும் எங்களுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைப்பார். ஊறுவதற்கான நேரம், அப்பா குளித்து முடியணும், நீங்க மூணு பேரும் தேசிகர் ஸ்தோத்திரங்களை ஒவ்வொரு ஸ்லோகமாக சொல்லி முடிக்கணும். ட்ரையலாக நாங்கள் குளிர் பிரதேசத்தில் இருந்தபோது, விளக்கெண்ணெய் தோய்த்தும் குளித்திருக்கிறோம். ஹா ஹா. அது பயங்கர அழுத்தமா இருக்கும்.
அன்பு துரை,,
நன்றி ராஜா. எங்கள் காலத்தில் அம்மா பேச்சிக்கு மறு பேச்சு கிடையாது.
இப்பொழுதும் எங்கள் சின்னவன் மனைவி தூண்டுதலில் அந்தப் பழக்கத்தை விடவில்லை.
மற்ற இருவரும் வேலை பளு காரணமாக. தொடரவில்லை.
ஆமாம் பழைய நினைவுகளை நினைக்கும் போது அந்த இளம் குருத்துகளை அணைத்துக் கொள்ளும் சுகம்
கிடைக்கிறது. உங்கள் நல்ல நினைவுகளைக் கொண்டு வருவதும் நல்லது தான். தொடருகிறேன் பா.
அன்பு முரளிமா,
நம் சிறு வயது நிகழ்வுகள் எப்போதும் இனிமை கொடுக்கும். உங்கள் அப்பா, குழந்தைகளை நன்றாக வளர்ததிருக்கிறார்.
தேசிகர் ஸ்தோத்திரங்களைச் சொல்ல வைப்பது பெரிய விஷயம்.ஃபார்வர்ட்கள் எனக்கும்
ஒத்துக் கொள்வதில்லை. வேண்டுமானால் நாமே தேடிக். கண்டு கொள்ளலாம்.
விளக்கெண்ணெய் குளியலா. கடவுளே. ! உறைந்து போய்விடுமே! புதுவிதமான அனுபவம் தான்.
அப்பாவின் தலையில் எண்ணெய் வைத்து தட்டின அடிகள் எல்லாம் ஞாபகம் வந்தது அம்மா...
நமது பக்கங்களில் அந்நாட்களில் எண்ணக் குளியல் இருக்கும் மேல் பொறுக்கும் மெல்லிய சூட்டில்தான் ஊத்துவார்கள்.
மலரும் நினைவுகள் அருமை.
சொல்லிய விதம் அழகு.
எண்ணெய் குளியல் பிள்ளை பெற்ற அம்மாவுக்கும், குழந்தைக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள்.
அம்மாவின் பத்திய சாப்பாடு எல்லாம் நினைவுக்கு வந்து விட்டது.
இனிய நினைவுகள்....
எங்கள் அத்தைப் பாட்டி (அம்மாவின் அத்தை) தான் எங்களுக்கெல்லாம் எண்ணெய்க் குளியல் செய்து விடுவார். அவர் ஒரு ரிதமிக்-ஆக தலையில் தட்டி குளிப்பாட்டிவிடுவதை ரொம்பவே ரசித்திருக்கிறேன் - நிறைய முறை - வளர்ந்தும் கூட!
தொடரட்டும் இனிய நினைவலைகள்.
பத்து நாட்கள் கழிச்சு இன்னிக்குத் தான் நேரம் கிடைச்சு எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சேன். இங்கே வந்தால் பதிவும் அதுவே! நான் இன்னமும் விடவில்லை இந்த எண்ணெய்க்குளியலை. அதுவும் முக்கூட்டு எண்ணெய்! நல்லெண்ணெய்+தேங்காய் எண்ணெய்+விளக்கெண்ணெய். வெந்நீரில் வைத்து சூடு பண்ணிக் கொள்வேன். முன்பெல்லாம் வீட்டில் அரைத்த சீயக்காய் தான்! அதுவும் இப்போப் பழக்கம் இல்லாமல் போய்விட்டது. வாங்கும் சீயக்காய் தான்
எண்ணெய்க் குளியலை விட மாசம் ஒரு நாளோ அல்லது 3 மாதத்துக்கு ஒரு நாளோ கொடுக்கும் விளக்கெண்ணெய் மஹாத்மியம் சொல்லி முடியாது. அடியெல்லாம் விழும். ஓடுவேன்! துரத்திப் பிடித்துக் காஃபியில் கலந்து கொடுத்துச் சாப்பிட வைப்பார்கள். அதனால் காஃபியே பிடிக்காமல் போனது.
நாங்கள் தினமுமே தேங்காய் எண்ணை தலைக்கு வைத்துக் குளிக்கும் பழக்கம். தினமுமே தலைக் குளியல்தான்.
நல்ல நினைவுகள்
துளசிதரன்
வல்லிம்மா நம் வீட்டில் கேரளத்துப் பழக்கம் பெரும்பாலும் என்பதால் தலைக்கு எண்ணை வைத்துத்தான் குளிப்போம் தினமுமே இல்லை என்றால் மேலுகழுவுதல்/மேல் அலம்புவது குளிப்பது என்றாலே தலைக்குக் குளித்தல்தான். அப்புறம் நல்லெண்ணை தேய்த்துக் குளித்தல் எண்ணைய்க் குளியல் வாரம் ஒரு முறை கண்டிப்பாகக் குளிக்க வேண்டும் அப்போது இப்போதெல்லாம் விட்டுப் போச்சு தினமும் குளித்தல் வாரம் இரு முறை ஷிகக்காய் சாம்பு போட்டுத் தலையை அலசுதல் என்றாகிப் போனது.
மகனை புண்ணியாவாசனம் பிறகு முதல் ஒரு வாரம் தான் அம்மா குளிப்பாட்டினார் அப்புறம் நான் தான் என் காலில் போட்டுக் குளிப்பாட்டியது. 45 நாளில் பிறாந்த வீட்டிலிருந்து நாங்கள் இருந்த இடத்துக்குப் போயாச்சு. அங்கும் நானே செய்து கொண்டேன் எல்லாமும். சி செக்ஷனாக இருந்தாலும். அப்போ குழந்தைக்கு எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டி, உரை மருந்துகொடுத்து என்று பல நினைவுகள்.
கீதா
என் சிறு வயதில் அப்பாவின் அம்மா தான் என்னைக் குளிப்பாட்டி விட்டு தலைக்கு சாம்பிராணி போட்டு, அன்று மிளகு ரசம் பருப்பு போட்டு பிசைந்து தருவார்.
கீதா
@ தனபாலன், அட,இங்க பாருடா. அப்பா தலையைத் தட்டினீர்களா:)
எத்தனை அன்பான அப்பா!!
சிறுகைகள் மெத்து மெத்தென தலையில் தட்ட கொடுத்து வைத்த .
அப்பா.
ஆமாம் ராஜ நாராயணன் இதைப் பற்றி மழலை தொடு சுகம் என்று முன்பு எழுதியது
நினைவுக்கு வருகிறது.
நன்றி தனபாலன்.
உண்மைதான் மாதேவி,
பின்னாட்களில் பேரப் பிள்ளைகளை சீராட்டும் போது இப்படித்தான்
நான் செய்தேன்.
பழைய காலங்களில் அம்மா எங்களுக்கு கிடைத்த நீராட்டங்களை விவரிப்பார்.
நடுங்கிப் போவேன்.
தண்ணீர் படப் பட, உடல் விரிந்து
பசி எடுக்கும் என்பது அந்தக் கால நினைவோட்டம்!!!
அன்பு கோமதி.
மதுரை ,பசுமலையில் கிணற்றடியில் வென்னீர்ப்பானையில் தண்ணீர் ஊற்றப்பட்டு அடுப்பு
பற்ற வைக்கப் படும்.
கிணற்றை ஒட்டிய தாழ்வாரத்தில்
தை மாதம் கூட குளிரும்.
ஒரே சீராகத் தண்ணீர் விளாவி
வைத்தாலும் நிமிடத்தில் ஆறி விடும்.
ஊருக்குக் கிளம்பும் முன அம்மா என்னைப் பழக்கித்தான் அனுப்பினார்.
நீங்கள் சொல்வது நிஜம். அந்தப் பத்தியமும்
சாம்பிராணி வாசமும் மறக்க முடியாதவை.
என் மகளுக்கு அப்படி எல்லாம் செய்ய முடியவில்லை.
இங்கே எல்லாமே வேறு விதம். நன்றி மா.
அன்பு வெங்கட்,
எத்தனை நல்ல மனிதர்கள் நம் வாழ்வில் இருந்திருக்கிறார்கள்,
உங்கள் அன்பு அத்தைக்கு நமஸ்காரங்கள்.
எண்ணெய் தேய்த்து விடும்போது
தன் பாசிட்டிவ் எண்ணங்களையும்
செலுத்தி இருப்பார். நன்றி மா.
அன்பு துளசிதரன் மா.
நான் பழகிய கேரளாக்காரர்கள் எல்லோரும் இப்படித்தான் சொல்வார்கள்.
நான் வாரத்துக்கு ஒரு நாள் என்றால்,
ஐய்யே என்பார்கள்.
அவங்க தண்ணீர் வளப்பத்தில் வளர்ந்தவர்கள்:)
அன்பு கீதா ரங்கன்,
பாவம் டா நீங்க்கள்.
சி செக்ஷனோடு சமாளித்தீர்களா. அச்சோ வலித்திருக்குமே.:(
எத்தனை விவரணையாகச் செய்து இருக்கிறீர்கள்.
உடல் நலத்துக்கு எண்ணெய் தேய்த்துக்
குளிப்பது எத்தனை நன்மை என்றூ அம்மா சொல்லிக் கொன்டே இருப்பார்.
நானும் ஷாம்பூவோடு நிறுத்திக் கொள்கிறேன்.
உங்கள் உடம்பு வலிக்கெல்லாம் இது நல்ல உதவியாக இருக்கும்மா.
தங்கள் பாட்டியின் அன்பை நினைத்து மனம் நெகிழ்வாக இருக்கிறதும்மா,
Post a Comment