Blog Archive

Sunday, January 26, 2020

அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்

வல்லிசிம்ஹன் 
எல்லோரும் வளமாக   வாழ வேண்டும் 


அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்


அண்ணா அண்ணா என்றபடித் தன் பின்னாலயே வரும் தங்கச்சியைப் பார்த்துச் சின்னாவுக்குக் கோபமாக வந்தது.ஒண்ணரை வயசில்குண்டு குண்டுக் கால்களை வைத்துக் கொண்டு தட்டுத் தடுமாறித் தன்னை எங்கேயும் போகவிடாமல்

தொல்லை கொடுக்கும்,அவளை அப்படியே தூக்கி அம்மாவிடம் விட்டுவிட்டு வந்தான்.அம்மாவுக்கு அவன் கோபம் சிரிப்பை வரவழைத்தது.ஏண்டா தங்கச்சியை அழைச்சுண்டு போயேன். அவளும் மணலில் விளையாடுவாள் என்று கேட்டாள்.



அவள் மண்ணைச் சாப்பிடுவா, இல்லாட்டாத் தலைல போட்டுப்பாம்மாஎன்று முணுமுணுத்தான் சின்னா.

சரி இங்க வா, ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நான் கதை சொல்கிறேன்.அவள் தூங்கிடுவா. நீ விளையாடப் போலாம், என்றபடி வாசனையாகக் கடுகும்,கொத்தமல்லி,கறிவேப்பிலை தாளித்த

தயிர்சாதத்தைப் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டுதங்கச்சிப் பாப்பாவையும்

தரையில் உட்கார்த்தித் தானும் உட்கார்ந்து கொண்டாள்.



சின்னாவும் கைகைளைக் கழுவிக்கொண்டு,ஆவலோடு வந்தான்.''ஒரே ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம். அவருக்கு ஒரு இரண்டு குழந்தைகளாம். ஒண்ணு ராஜகுமாரன்,இன்னோண்ணு ராஜகுமாரி.அவன் பேரு சின்னா.அவ பேரு தங்கச்சியாம்மா என்று ஆவலோடு கேட்டான் சின்னா. அப்படியே வச்சிக்கலாமே என்றபடி கதையைத் தொடர்ந்தாள்,. அம்மா.அந்த ராஜகுமாரன் ரொம்ப புத்திசாலி,தங்கச்சிகிட்ட நிறையப் பாசமா இருப்பான்.

ஒரு நாள் ராஜா ராணி இரு குழந்தைகளும் காவிரி ஆற்றின் கரையோரமாக உலாவி வரப் போனார்கள்.வழியெங்கும் பூத்திருந்த பூக்களையெல்லாம் பறித்துத் தங்கச்சி கிட்டக் கொடுத்துக் கிட்டே அண்ணன்,தங்கச்சியோட கொஞ்சம் தூரம் வந்துவிட்டான்.பின்னால் அம்மா அப்பா வருகிறார்கள் என்று நினைத்தபடி இருவரும் ஓடிக் கொண்டிருந்தனர்.



திடீர் என்று வானம் இருட்டிக் கொண்டு மழை வருவது போலத் தோற்றம் கொடுத்தது வானம்.

சட்டென்று நின்றான் ராஜகுமாரன். தங்கச்சி கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு, பாப்பா பயப்படாதே, நாம திரும்பிடலாம்என்று வந்தவழியே திருபினேன். ஆறும் அப்போது பார்க்க வேற வர்ணத்தில் இருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. அங்கெ ஒரு பெரியவர் அடுத்த கரையில் நிற்பதைப் பார்த்தபோதே அந்தப் பெரியவர் அவனைப் பார்த்து

'' தம்பி சீக்கிரம் மேட்டுப் பக்கம் ஏறு.ஆத்தில வெள்ளம் வர சத்தம் கேக்குது'' என்றார்.


ஒரு கணம் கலங்கினாலும், தன் பயத்தைக் காட்டிக் கொள்ளாமல்,தங்கச்சிப் பாப்பாவை அழைத்துக் கொண்டு காவிரியின் கரையை விட்டுமேலே மரங்கள் அடர்ந்த பகுதிக்கு அவன் ஏறவும்தடதடவென்று ஆற்றில் வெள்ளம் நுரைத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. சற்றுமுன் மணலாக இருந்த இடத்தில் எல்லாம் தண்ணீர் நிரம்பி ஓட ஆரம்பித்தது.தங்கச்சியை அருகில் இருந்த மரத்துக் கிளையில் ஏற்றிவிட்டுத் தானும் ஏறிக்கொண்டான் அண்ணா. பயப்படாதே பாப்பா, வெள்ளம் வந்தா உதவிக்கு யராவது வருவாங்க'என்றவனைப் பார்த்துத் தங்கச்சிப் பாப்பா சிரித்தது. நீ தான் என்னைப் பார்த்துப்பியே அண்ணா. எனக்குப் பயமில்லை என்றது.தைரியமாக இருக்கும் தங்கச்சியைப் பார்த்து அண்ணாவுக்குப் பெருமை.சாப்பிட ஒன்றும் எடுத்து வரவில்லையே என்று தோன்றியது.



பக்கத்துமரத்தில் நாவல் பழங்கள் இருப்பதைப் பார்த்தான். ''பாப்பா ,நீ கவனமா உட்கார்ந்துகொள்,நான் நாவல் பழம் பறித்து வருகிறேன், நாம் சாப்பிட்டுக் காத்து இருப்போம். அம்மா அப்பா இருவரும் படகு கொண்டு வருவார்கள்'' என்றபடி அடுத்த மரத்துக்கு எச்சரிக்கையோடு தாவிப் போனான். அண்ணாவையே பார்த்தபடிப் பத்திரமாக இருந்தாள் பாப்பா.

ஒரு கையில் பறித்த பழங்களைப் பிடித்தபடி இன்னோரு கையால்மரக்கிளைகளைப் பற்றிகொண்டு சின்னா திரும்பி வந்தான்.

பசி மிகுதியாக இருந்ததால் இருவரும் பழத்தைசி சீக்கிரம் சுவைத்துச் சாப்பிட்டார்கள்.



கதையை நிறுத்திய அம்மாவிடம்,சின்னா கேட்டான்,ஏம்மா ராஜாராணி குழந்தைகளைத் தேடவில்லையா என்று கேட்டுக் கவலைப் பட்டான்.இன்னும் கொஞ்சம் சாதத்தைக் கலந்து வந்த அம்மா,அவனிடம்.''பின்ன ராஜகுமாரன்,குமாரி காணோம்னா தேட மாட்டாங்களா, இப்ப நீ எங்கியாவது போனா அம்மா தேடுவேன் தானே? என்று மறு கேள்வி அவனுக்குப் போட்டாள்.ஓ அப்ப சரி.. என்று கொஞ்சம் தெளிந்தான்.பாதித்தூக்கத்தில் சாமியாட ஆரம்பித்த பாப்பா கூட விழித்துக் கொண்டு, அம்மா தன்னி என்ன ஆச்சு என்றாள்.



அப்படிக் கேளுடா கண்ணுன்னு அம்மா தொடர்ந்தாள். கொஞ்சம் இருட்டிய பிறகே ராஜாவோட பெரிய படகில் ராஜகுமாரனையும் பாப்பாவையும் கூவி அழைத்தபடி ராணியும் ராஜாவும் ரொம்பக் கவலையோடு வந்துக் கொண்டிருந்தார்கள்.அவர்கள் கண்ணுக்கு வெள்ளம்தான் தெரிந்தது. கரையோரம் பார்க்கத் தோன்றவில்லை.ராஜகுமாரன் சின்னா தான் மரக்கிளையிலிருந்து குரல் கொடுத்தான்,சின்னப் பாப்பாவும் சேர்ந்து கொண்டாள்.



குரல் வந்த திசையில் பார்த்தாலும் அவர்களுக்கு குழந்தைகள் தெரியவில்லை. சற்றே ஜாக்கிரதையாக உற்று நோக்கியதில் ராஜ உடைகளும் பாத அணிகளும் தெரிந்தன.

நிதானமாக அந்த மரத்துப் பக்கம் வந்தது படகு.தண்ணீர் சுழித்துக் கொண்டு ஓடியதால் கவனமாக இருந்தார்கள்.

படகிலிருந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு ராஜா மரம் பக்கம் வந்து,முதலில் பாப்பாவையும்,சின்னாவையும் இறக்கினார் ராஜா.அவர் கைக்குள் வந்ததும் குழந்தைகள் அதுவரை தைரியமாக இருந்த அழகை,வீரத்தைப் பாராட்டினார்.

இருவரையும் தண்ணீரில் விடாமல் தான் அவர்களைத் தூக்கி கொண்டு தண்ணீரில் நீந்தி,

ராணியிடம் கொடுத்தார்.

குழந்தைகளை மீண்டும் கண்டபிறகுதான் ராணிக்குக் கவலை தீர்ந்தது.



இந்தக் கதையிலிருந்து என்ன தெரிந்தது சின்னா என்று அம்மா கேட்டாள்.பாப்பா, உடனே ''தண்ணி கிட்டப் போகக் கூடாது'' என்றது. சரி.பாப்பா சமத்தாச் சொல்லிட்டா. புத்திசாலிப் பப்பா.சின்னா நீ சொல்லு என்று மீண்டும் கேட்டாள்.சின்னா சிறிது யோசித்து ''அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்'' என்ற நீதியுரையைச் சொன்னான்.

எந்த நேரத்திலும் பயப்படக் கூடாது. பதறாத காரியம் சிதறாது என்றும் சொன்னான்.

இந்தக் கதையை எங்கள் பேரனிடம் சொல்ல நேர்ந்த காரணம், முதல் தடைவையாக அவன் ஒரு பெரிய மால் இல் வழிதெரியாமல்வேறெங்கோ போன விஷயம்தான்.அப்புறம் மைக்கில் அவனை விளிக்கவும் வந்துவிட்டான்.அதிலிருந்து மனம் போன போக்கில் அவன் போவதில்லை.:)



இது மிகப் பழைய கதை. இங்கிருக்கும் பேரன் பேத்திக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் நேற்று வந்தது.

15 comments:

வல்லிசிம்ஹன் said...

இப்பொழுது தெரிகிறதா சொல்லுங்கள் கீதாமா.

துரை செல்வராஜூ said...

நல்ல கதை..
பிள்ளைகள் கேட்டு நடந்தால் அவர்களுக்குத் தான் பெருமை...

நலம் வாழ்க...

Geetha Sambasivam said...

நல்ல கதை!குழந்தைகள் இப்படி ஒற்றுமையாகவும் ஆதரவாகவும் இருந்தால் நல்லது தானே. தைரியமும் மன உறுதியும் கூடத் தேவை. இப்போது இவை எல்லாம் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்குத் தேவை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு துரை. அவ்வையார் மூதுரைகளைச் சொல்லி அதற்குக் கதைகள் சொல்லிக் கொண்டு வந்தேன்,.
பத்து வருடங்களுக்கு முன் எழுதியது.
மிக நன்றி மா.
நம் பேரப்பிள்ளைகளுக்குக் கதை சொல்லியாக வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.
இல்லையானால் தொலைக்காட்சி, அலைபேசி என்று மூழ்கிவிடுவார்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதாமா.
எங்கள் தாத்தா எங்களிடம் பக்கத்த்ல் இருத்தி
இது போலக் கதைகள் சொல்வார்.
இப்பொழுதும் குழந்தைகளுக்கு நேரம் கிடைக்கும் போது
சொல்கிறேன்.
அவர்கள் உலகம் மிக முன்னேறிவிட்டது.
பார்க்கலாம்.

கோமதி அரசு said...

நீதிக்கதை சொல்லும் பாட்டி, அதை கேட்டு நடக்கும் பேரன் , பேத்திகள் இருக்கும் போது எதிர்காலத்தைப்பற்றி கவலை இல்லை.
குழந்தைகள் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாக என்றும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
அன்பு வாழ்க! வாழ்க வளமுடன்.

மாதேவி said...

குழந்தைகளுக்கு மன உறுதியை தரும் கதை.வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அதுதான் உண்மை அன்பு கோமதி. சகோதர ,சகோதரிக்குள்
அருமையான பாசம் வேண்டும்.
அது கடைசி வரை கூட வரவேண்டும்.
நமக்கு வாய்த்தது. நம் செல்வங்களுக்கும் அவர்கள் செல்வங்களுக்கும் அது அமைய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி நன்றி மா.

ஸ்ரீராம். said...

மனம் சிறுகுழந்தையாகி, பெற்றோர் குழந்தைகளைத் தேடி எப்போது வருவார்கள் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. 

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
மிக மிக நன்றி மா. நலமாக இருக்கிறீர்களா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
குழந்தைகளுக்கு மனதில் பதியவே இந்தக் கதை சொன்னேன்.
இங்கிருக்கும் குழந்தைகள் படு புத்திசாலிகள்.
சுதந்திரமும் அதிகம்.
அதற்குத்தான் இந்தக் கதை.
ரசித்துச் சொன்னதற்கு மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கதை.

சொல்லிச் சென்ற விதம் சிறப்பு.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி மா வெங்கட்.

Bhanumathy Venkateswaran said...

குழந்தைகளுக்கு ஏற்றார் போல் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.