தங்கியிருந்த விடுதியின் ஜன்னலிலிருந்து.
பயணம் முடிந்து கிளம்பும் நாள் வந்தது.
அன்புத் தோழி திருமதி.பானுமதி வெங்கடேஸ்வரனின் கணவர் பூரண குணம் பெற வேண்டும். நம் எல்லோருடைய பிரார்த்தனைகளும் அவர்களுடன் தான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆரம்பித்திலிருந்து ஆரம்பிக்காமல் ஒரு மாறுதலுக்காக
பூர்த்தியான பயண நாளிலிருந்து எழுதுகிறேன்.
காலை 8 மணிக்கு சியாட்டிலிலிருந்து கிளம்ப வேண்டும்.
நான்கு அனைவரும் எழுந்தாகி விட்டது.
இந்த எட்டு நாட்கள் , அருமையான சாலைகளில்,
சொகுசான வண்டியில் அமர்ந்து பயணம் செய்தாலும் சென்ற இடங்கள்
200 மைல்கள் தூரத்தில் அமைந்திருந்ததால்
முதுகும் ,காலும் தங்களைக் கவனிக்கச் சொல்லி வற்புறுத்தின.
சின்னப் பேரனே, கால் வலி சொன்னான் என்றால்
பார்த்துக் கொள்ளுங்கள்.
பெரிய பேரன் கொண்டுவந்த டிராலியில் பெட்டிகளை
அடுக்கி வைத்தான். அவன் இந்த ஊரில் மூன்று மாதங்களாகத்
தொழில் பயிற்சி மேற்கொண்டிருந்ததால்,
அவன் பெட்டிகள் இரண்டு எங்கள் நால்வருக்கும் ஏழு நாட்களுக்கான
உடைகள் நிரம்பிய பெட்டிகள் மூன்று என்று அந்த
தள்ளு வண்டி நிரம்பியது.
காப்பி தயாரித்துக் குடித்துவிட்டு, ஹில்ட்டன் அளிக்கும்
விமான நிலையத்துக்கான பெரிய வண்டியில் ஏறத்தயாரானோம்.
மற்ற பயணிகள் ஏறியதும் என் முறை. உயரமாக இருந்த அந்த வண்டியின்
படியில் ஏற முயற்சி செய்து முழங்காலில் அடி வாங்கியதுதான்
மிச்சம்.
பிறகுதான் அந்த ஓட்டுனர் ஒரு ஸ்டூலைக் கொடுத்து உதவினார்.
அதன் மேல் கால் வைத்து ஏறுவது சுலபமாக இருந்தது.
இதை அப்பவே கொடுத்திருக்கக் கூடாதோ
இந்த மனிதர் என்று சுணங்கிய வண்ணம் காலைக் கதிரின் உதய நேரம் விமான நிலையம்
வந்தடைந்தோம்.
Sea/tac Airport , Seattle Tacoma, வசதி நிரம்பியது. ஆர்ப்பாட்டம் இல்லாமல்
சக்கிர நாற்காலி ஏற்பாடு செய்துகொண்டு
உதவிக்கு வந்த மரியாவுடன் முன்னேறினோம்.
American Airlines விமானம் தயாராகிக் கொண்டிருந்தது.
பக்கத்திலிருந்த நம்மூர்க்காரர்களுடன் பேச்சுக் கொடுத்ததில்,
கல்கத்தாவிலிருந்து பயணம் மேற்கொண்டவர்கள் என்று
தெரிந்தது.
இரண்டு தம்பதிகள் .60 வயதுக்காரர்கள். ஒரு மாத பயணத்தில்
நியுஜெர்சியில் ஆரம்பித்து பத்து இடங்கள் சுற்றி, இங்கு
வண்டி ஏறுகிறார்கள்.மீண்டும் நியுஜெர்சி சென்று இந்தியா திரும்பப்
போவதாகவும் சொன்னார்கள்.
நல்ல உற்சாகம், உடல் தெம்பு எல்லாம் இருந்தது.
அடுத்த பயணமாக ஜப்பான் முதலிய நாடுகளுக்குச் செல்லப் போவதாகத் திட்டம்
போட்டாகிவிட்டது.
விமான முன்னறிவிப்பு வந்ததும் கிளம்பினோம்.
நான்கு மணிகள் கடந்து சிகாகோ வந்துவிட்டோம்.
என் கைப்பையைத் தான் காணவில்லை.
சக்கிர நாற்காலியில் உட்கார்ந்த போது இருந்தது.
வெளி லௌஞ் வந்த போது காணோம்.
பெண்ணும் மாப்பிள்ளையும் மீண்டும் உள்ளே ஓடினார்கள்.
என் க்ரெடிட் கார்ட், வங்கி கார்ட் எல்லாம்
அதில் இருந்தன.
கடவுளைப் பிரார்த்தித்தபடி இருந்தேன்.
பெண்ணும் மாப்பிள்ளையும் கவலை தோய்ந்த முகத்தோடு விமானத்திலிருந்து வெளியே
வர ,கலங்கி விட்டேன்.
அடுத்த நிமிடம் விமானத்தைச் சுத்தம் செய்யும் பெண்
இதுதான் உங்கள் பையா என்று நீட்டினார்.
சென்ற மூச்சு திரும்பி வந்ததும் நன்றி சொல்லி இடத்தைக் காலி செய்தோம்.
உள்ளிருக்கும் பர்சைத் திறந்து பரிசோதனை செய்தேன்.
அட்டைகள் இருந்தன, மாலை ஒன்றும், பேத்திகளுக்காக வாங்கிய
மணிகள் கோர்த்த வளையல்களையும் காணோம்.
அவைகளையும் கையில் கொண்டு சேர்த்து விட்டார் . அந்தப் பணிப்பெண்.
என்றும் வளமுடன் வாழ வேண்டும் அவரது நேர்மை.
கடவுளுக்கு நன்றி சொல்லிய படி, வாடகை வண்டியில் ஏறி
ஒரு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தோம். தொடரும்
|
19 comments:
சகோ. பானுமதி வெங்கடேஸ்வரனின் கணவர் பூரண நலம் பெற எமது பிரார்த்தனைகளும்...
பயணக்கட்டுரை அருமை அம்மா தொடர்கிறேன்...
உண்மையாக உழைத்த செல்வம் நம்மை விட்டு போகாது அம்மா.
வெங்கடேஸ்வரன் ஸார் பூரணகுணம் அடைய அனைவருடனும்னானும் பிரார்த்திக்கிறேன்.
அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாத அந்த பணிப்பெண் வாழ்க.
பயணக்குறிப்புகள் கடைசியில் ஆரம்பிக்கிறதா? நேற்றே நீங்கள் ஏறுவதைப் பற்றிச் சொல்லும்போது எனக்குப் பக் பக் கென்றே இருந்தது. நல்லபடியாகப் பயணம் முடிந்தது குறித்து ஆண்டவனுக்கு நன்றி. கால் வலி, உடம்பு வலி எல்லாவற்றில் இருந்தும் பூரண குணம் அடையப் பிரார்த்தனைகள். நம்மை எல்லாம் பொறுமையாகப் பொறுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு நாம் நன்றி சொல்லி எல்லாம் கடனைத் தீர்க்க முடியாது. ஆண்டவன் அருளால் குழந்தைகள் நல்லதொரு ஆனந்தமான வாழ்க்கையை எவ்விதமான பிரச்னைகளும் இல்லாமல் வாழப் பிரார்த்திப்போம்.
ரசிக்கும்படியான அனுபவம்.
அந்த நேர்மையை வணங்குகிறேன்...
பானுமதி வெங்கடேஸ்வரனின் கணவர் பூரண நலம் பெற எமது பிரார்த்தனைகளும்.
என்ன உடம்புக்கு?
எனக்கு தெரியாதே! இரண்டு நாள் வலைபக்கம் வரவில்லை.
உங்கள் பயண தொடர் படித்தேன், கைபை கிடைத்தது மகிழ்ச்சி. பணிபெண்ணின் நேர்மைக்கு வாழ்த்துக்கள் கண்டிப்பாய் சொல்ல வேண்டும்.
கால்வலி குறைந்து இருக்கும் என்று நம்புகிறேன் ஓய்வுக்கு பின்.
//ஆரம்பித்திலிருந்து ஆரம்பிக்காமல் ஒரு மாறுதலுக்காக
பூர்த்தியான பயண நாளிலிருந்து எழுதுகிறேன்.//
இந்த மாதிரி அவ்வப்போது எழுதுவதில் ஏதாவது சோதனைகள் செய்பவர்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். வாழ்த்துக்கள்.
//காணோம்.//
காணோம் என்றதும் திக்கென்று இருந்தது. நம் நாடாக இருந்தால் சகஜமாக நடப்பது தானே என்று தோன்றியிருக்கும்.
கொண்டு வந்து சேர்த்து விட்டார் என்றதும் எதிர்பார்த்து நடந்ததில் திருப்தி.
இனிய காலை வணக்கம் அன்பு தேவ கோட்டைஜி.
மனதில் சகோதரி பானுவுக்காகப் பிரார்த்தனைகள்.
சோதனைகள் கொடுத்தாலும் வேதனையில் தள்ளாமல் காத்தார்
இறைவன்.
அந்தப் பெண்ணோ ஸ்பானிஷ் மொழி.
நானோ ஆங்கிலம்.
எனக்குப் புரியாததது, இந்தப் பை எப்படி என் கையை விட்டுச் சென்றது என்பதுதான்.
அன்பு ஸ்ரீராம், உண்மைதான் மா.
அந்தப் பெண் கடமை உணர்ச்சியோடு நடந்து கொண்டது
மனசை நெகிழ வைத்துவிட்டது.
இறைவன் காத்தார்.
அன்பு கீதாமா, பயணம் முழுவதும் ஒரு சிக்கல் இல்லாமல் நடந்தது.
இந்த பெரிய வண்டிதான் பதம் பார்த்தது.
குழந்தைகளின் அருமை இல்லாமல் நாம் என்ன செய்ய முடியும்.
நமக்குக் கிடைத்த நட்புலகமும் அது போலத்தான்.
அனைவரும் நலமாக இருந்தால் தான் நம்மால் நிம்மதியாக
இருக்க முடியும்.
நன்றி மா.
அன்பு தனபாலன், நல்லவர்கள்
உல்ககத்தில் இருக்கிறார்கள் என்று தெரிய வைத்து விட்டார்
இறைவன். நன்றி மா.
அன்பு முனைவர் ஐயாவுக்கு வணக்கமும் நன்றிகளும்.
அன்பு கோமதி மா, நம் பிரார்த்தனைகளை பானுமதி அவர்களின் வளமான வாழ்க்கைக்கே
மனதில் நிறைந்திருக்கின்றன.
அன்று பட்ட கால் வலி எவ்வளவோ தேவலை அம்மா.
இறையின் கருணை நம்மை என்றும் காக்கும்.
அன்பு ஜீவி சார் நற்காலை வணக்கம். இங்கேயும் ஏமாந்தால் பைகளைப் பறி கொடுக்க சந்தர்ப்பம் உண்டு.
இது விமானத்துக்குள்ளயே தொலைந்ததால்
கிடைத்துவிட்டது.
கிடைக்காமல் இருந்தால் அதிசயம் தான். அந்த கம்பெனிக்கே
பெயர் கெடும் அல்லவா.
தங்களது ஊக்கம் எனக்கு நல்ல ஆதரவு.
மனம் நிறை நன்றி சார்.
பானுமதிம்மாவின் கணவர் பூரண நலம் பெற எனது பிரார்த்தனைகளும்...
மீண்டும் கிடைத்த கைப்பை... அந்தப் பணிப்பெண்ணிற்கு வாழ்த்துகள்.
கடைசி நாளிலிருந்து பயணக்கதை - நல்லதும்மா... மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
அம்மா உங்கள் கைப்பை மீண்டும் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. பணிப்பெண்ணின் நேர்மையைப் பாராட்டி வாழ்த்துவோம்.
பாபா படம் செம..என்ன அழகு. பொருள் தொலைந்தால் அவரை நினைத்துக் கொண்டால் கிடைத்துவிடும் என்று சொல்லப்படுவதுண்டு.
இந்திய தம்பதியினர் வாவ் போட வைத்தார்கள்.
உங்கள் பயண விவரங்களை அறிய தொடர்கிறேன்..
கீதா
பானுக்கா மாமா நல்லபடி வீடு திரும்ப நாம் எல்லோரும் பிரார்த்திப்போம் அம்மா.
கீதா
வல்லிம்மா நலமா? நான் தளம் வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. மகனின் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைப்பது, பெரிய மகனின் வருகை அவனது உடல்நலக் குறைவு என்றும் கன மழை பாதிப்பு என்றும் வர இயலாமல் போனது.
உங்கள் பயணத் தொடரை வாசிக்கத் தொடங்கிவிட்டேன். உங்கள் பயணம் இனிதாக அமைந்து நலமுடன் திரும்பியதும் அறிய முடிகிறது.
அந்தப் பணிப் பெண் என்ன நேர்மை இல்லையா? அவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்.
தொடர்கிறேன் வல்லிம்மா
துளசிதரன்
பானுமதிம்மாவின் கணவர் பூரண நலம்பெற பிராத்திக்கிறேன்.
பயணம் தொடர்கிறேன்.
Post a Comment