Monday, July 29, 2019

வட்டம் போடும் வாழ்க்கை

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக வாழ வேண்டும்

வட்டம் போடும் வாழ்க்கை. இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது, இந்தியாவை விட்டு வந்து.
வாழ்க்கை ஆரம்பிக்கும் போது
எல்லாச் சிறார்களைப் போலத்தான் நாங்களும் வளர்ந்தோம்.
படித்தோம்.
அவரவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை நிம்மதியாகவே வாழ்ந்தோம்.
பொருளாதாரம் சம் நிலையில் தான் இருந்தது.
ஓஹோ என்று இல்லாவிட்டாலும் கடனில்லாத வாழ்க்கை.

தந்தை வழி,சகோதரகள் வழியும் அதே,.

பிள்ளைகள்,பெண் படிக்கும் வரை சிக்கனமே வாழ்க்கை.

பிறகு அவரவர் வேலைக்குச் சேர்ந்து வெளினாட்டுக்குப் பறந்தனர்.
எங்கள் சுமை பெண்ணின் திருமணத்துக்குப்
பிறகு குறைந்தது.
வெகு பல வருடங்களுக்குப் பிறகு தனி வாழ்க்கை
தொடங்கியது. இதுவும்  புதிதாகத்தான் இருந்தது.
பிறகு பேரன்கள் பேத்திகள் வரவு.
பல கோவில்கள் சென்று வர இருந்தோம்.
அமெரிக்காவுக்கும் அடிக்கடி பயணம்.

இந்தப் பழைய கதை அத்தனையும், இன்றைய வால்மார்ட்
கடைக்குப் பொருட்கள் வாங்க பெண்ணுடன் சென்றபோது
நினைவு வந்தது.
 இவரில்லாமல் முதல் தடவை இதே கடையில் ஒரு சிகரெட்
பெட்டியைப் பார்த்துக் கண் கலங்கியதும் ஞாபகம். இப்பொழுது
அதே இடத்தை அமைதியாகக் கடந்தேன்.

அவ்வளவுதான். பழைய நினைவுகளைச் சுமக்கும் போது
பாரம் நம்மை வளைத்து விடும். தூக்கி எறிந்துவிடவேண்டும்
என்று பாரதி பாஸ்கர் சொன்னது,எதிர்மறை சிந்தனைகளை.

மறக்க முடியாத இனிய நினைவுகள்
இப்போது என் வலைப்பதிவில் தடங்கள் பதிக்கின்றன.

முடிந்த வரை எழுதலாமே. நட்புகள் இத்தனை பேர் இருக்கும்போது என்ன குறை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
25 comments:

KILLERGEE Devakottai said...

நினைவுகள்தான் பலரது வாழ்க்கைக்கு பிடிமானமாக இருக்கிறது அம்மா.
பொருத்தமான பாடல்...

Avargal Unmaigal said...எழுதுங்கள் நாங்கள் தொடர்கிறோம்.....உங்களை போன்றவர்களிடம் நாங்கள் கொண்டிருப்பது நட்பு அல்ல உறவுதான்

வெங்கட் நாகராஜ் said...

தேவையில்லாத எதிர்மறை நினீவுகளை விட்டு இனிய நினைவுகளை மட்டுமே மனதில் வைப்போம்.... நல்ல விஷயம்.

முதலாம் காணொலி இங்கே பார்க்க இயலவில்லை. இரண்டாவது கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

முதலாம் காணொலியும் கண்டேன் யூவில். இனிமையான பாடல்.

கோமதி அரசு said...

பகிர்ந்த இரண்டு பாடல்களும் இனிமை.

முதல் பாடல் வரவில்லை , ஆனால் நான் யூ-டயூப் போய் கேட்டு விட்டேன்.

நினைவுகளை தடுக்க முடியாது. நினைவுகளில் உள்ள இனிமையான காலங்களை நினைத்து அதை பகிர்ந்து மகிழுங்கள் அக்கா.

எழுதுங்கள், படிக்க காத்து இருக்கிறோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பு தாயென்னும் கோயிலை நாடி
அலை பாயுது ஆசைகள் கோடி
அன்பு தாயென்னும் கோயிலை நாடி
அலை பாயுது ஆசைகள் கோடி

என்னை வாவென்று தாவிடும் பாசத்துடன்
வந்து வாழ்த்திடும் போற்றிடும் நேசத்துடன்

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

ஸ்ரீராம். said...

நினைவுகள் இனிமையானதாய் இருந்தாலும், துன்பமானதாய் இருந்தாலும் அவற்றை நம் கட்டுப்பாட்டில் வைக்க முடியாது. ஏதாவது வேலையில்கொஞ்ச நேரம் மறக்கலாம்.

இரண்டு இனிய பாடல்களுடன் பதிவு இனிமை சொல்கிறது.

Anuprem said...

நினைவுகளே சில நேரம் நம் கைபிடித்து செல்லும் ஊன்றுகோல் போல மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி.
உண்மை உறவுகள் என்றும் நம்முடன். நல்ல நினைவுகளுடன் தங்கட்டும்.
நம் வாழ்க்கை துன்பம் இல்லாமல் தொடரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே துரை.
நீங்கள் எல்லோருமே சந்தேகம் இல்லாமல் அன்பு உறவுகளே.

ஏதோ ஒரு பாசம் நம்மை இணைக்கிறது. எதையும் எதிர்பாராத
உறவு. இதுதான் நன்மை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் , தாங்கள் எழுதிய ஜாலி அம்மாவை நினைத்துப் பார்க்கிறேன். என்ன ஒரு சோகம் அவர்கள் வாழ்வு.
அதெல்லாம் இல்லாமல் நல்ல வாழ்வை இறைவன் அளித்திருக்கிறான்.
நன்மைகள் தொடரட்டும். நலமாக இருங்கள் அம்மா.
முதல் பாடல் சிங்கத்துக்குப் பிடித்தது. இரண்டாவது எனக்குப் பிடித்தது.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு கோமதி.
எத்தனையோ நீதிக்கதைகள் படித்து வளர்ந்தவர்கள் தாமே நாம்.

கட்டாயம் நன்மைகளை நினைத்து வாழ்வைத் தொடரலாம்.
உங்கள் உடல் நலம் தேவலாமா.

பாடல்களே நம் வாழ்வின் ஆதாரம். நல்லதைக் கேட்டு
நல்லதை நினைப்போம்.

வல்லிசிம்ஹன் said...

நம் வாழ்வினில் துயர் வரப் பாதை இல்லை.
அன்பு தன பாலன் என்றும் வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், இரண்டுமே இல்லாமல் வாழ்வு இல்லை. என் வாழ்வின் சில பாதைகள்
இருண்டே கிடந்தன.
அதைப் பற்றி எழுதப் போவதில்லை.
இறைவன் துதியிலும், கணவர் துணையிலும் தான் கடந்தேன்.

நல்லதே நடக்க என் பிரார்த்தனைகள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுப்ரேம், எத்தனை உண்மையான
வார்த்தைகள். துன்பம் நமக்கு உரம் இடும். இன்பம்
நம்மை நிலை நிறுத்தும். நன்றி ராஜா.

Geetha Sambasivam said...

இரண்டு வருடங்கள்? ஓட்டமாக ஓடிப் போய் விட்டன. அனைவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத அழிக்க முடியாத பல நினைவுகள் இருக்கும். அவை ஒவ்வொன்றும் பொக்கிஷம். அவ்வாறே உங்கள் இனிய நினைவுகளும் தடம் பதித்துச் செல்லட்டும். துன்ப நினைவுகளை அழித்துவிடுங்கள். அவற்றை நினைக்கவே வேண்டாம். சிங்கம் என்றென்றும் உங்களுக்குத் துணை இருப்பார்.

Geetha Sambasivam said...

இரண்டுமே பிடித்த பாடல்கள். முன்னால் எல்லாம் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

நெல்லைத்தமிழன் said...

அன்றே படித்துவிட்டேன். மனதில் எண்ண மோதல்கள். அதனால் பின்னூட்டம் இடவில்லை (இட்டுவிட்டேன் என்று வேறு நினைத்துக்கொண்டேன்).

காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும் ஆற்றல் வாய்ந்தது. அது புதிய புதிய கதவுகளைத் திறக்கும்.

ஜீவி said...

சின்ன சின்ன வரிகள் தாம் இந்தப் பதிவுக்கு அழகு. அந்த சின்ன வரிகளில் பெரிய விஷயங்களைப் பொத்தி வைத்துச் சொல்வது இன்னும் அழகு. உங்கள் வரிகளை அப்படி அப்படியே எழுதியவாறு படிப்பதில்லை நான்.

சில வரிகளைத் தாண்டும் பொழுது பிரேக் போட்ட மாதிரி
படிப்பது நின்று மனம் ஒரு சுற்று பயணம் முடித்து மறுபடியும் விட்ட இடத்திற்கு வரும்.

ஏகாந்தன் ! said...

என்றும் துன்பமில்லை என்று ஆரம்பிக்கிற அந்த பழையபாடலை உங்கள் தயவில் போட்டுக்கேட்டேன்.

நினைவுகளில் நல்லதும், கெட்டதும், அயர்வுதரும் விஷயங்களும் உண்டுதான். இதைக் கொள்வேன், அதைத் தள்ளுவேன் எனச் சொல்லிக்கொள்ளலாம். வீரவசனம் பேசும் வாய். ஆனால் மனம் அதன் இயல்புக்கேற்றபடி எதையாவது காண்பித்துக்கொண்டுதான் இருக்கும். விடாது!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா.இப்படி எல்லாம் வாழ்க்கை மாறும் என்று நினைத்ததே இல்லை.
நான் இருக்கிறேன் உன் வாழ்க்கை உன்னுடையது என்று நினைக்காதே
என்கிறார் பகவான்.
அதே போல நடக்கிறது. தினசரி பிரார்த்தனை உள்ளத்தையும் உடலையும் சீராக வை என்பதே. முடிந்த உதவிகளைச் செய்கிறேன்.
எதிலும் தலையிடுவதில்லை. எல்லா சௌகரியங்களும் இருக்கின்றன.
மேற்கொண்டு நன்றாகவே செல்லும் வாழ்க்கை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா.
எண்ண மோதல்களுக்கு விடை கிடைத்ததா.
பிரச்சினை இல்லாத வாழ்க்கை இல்லை.

இந்த ஆறு வருடங்களில் நிறையப் பண்படுத்தப்
பட்டிருக்கிறேன். இணையம் வந்த பிறகு உறவுகள்
பாலம் கெட்டியாகி விட்டது. இதெல்லாம் கொடுப்பினைதான்.
இல்லையா.
நான்,நான் என்று அலை மோதாமல்
சிறிது சிறிதாக விலகக் கற்க வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார் வணக்கம்.
உங்களுடைய தீர்க்கப் பார்வை வியப்பளிக்கிறது.

நீங்கள் சொல்வது சரிதான். ஓடி வரும் எண்ணங்கள் எல்லாவற்றையும் வடித்து விடமுடியாது.
அவ்வப்போது ஒரு தடை போட்டு மீண்டும் தொடரவேண்டும்.

இத்தனை உயர்வான மதிப்பு
உங்களிடம் இருந்து கிடைப்பது மிக மிகப்
பெரிய விஷயம்.

மிக மிக நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஏகாந்தன் சார்.
ஆமாம் எந்த நினைவையும் அழிக்க முடியாது.
அசைபோடும்படியான நல்ல நினைவுகளை மேல் தளத்தில் வைத்துக்
கொடு,
அச்சுறுத்தும் சோகத்தை கீழே அனுப்புவது
பிரம்மப் பிரயத்தனம்.
மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
பழைய பாடல்கள் கேட்பது என் வழக்கம்.
என் வயதும் அதற்கு ஒரு காரணம்.
கருத்து சொன்னதற்கு மிக மிக நன்றி சார்.

மாதேவி said...

உங்கள் எழுத்துகளை படிக்க நட்புகள் நாங்கள் பலர் இருக்கும்போது தொடருங்கள் சிறப்பாக.

அதே அதே.