Blog Archive

Saturday, December 15, 2018

காலமகள் கண்திறந்தாள் 2

Vallisimhan
எல்லோரும் இனிதாக வாழவேண்டும் .

  சாப்பாட்டுக்கடை வாசலில் திகைப்புடன் உட்கார்ந்த
சரவணன் ஐயாவைப் பார்த்த அவரது கிராமத்தவர்கள்
அதிர்ந்து போனார்கள்.
செய்தி கேட்டதும் பதறிப் போய் அவருடைய பையின் அடையாளங்களை
ஒலிபெருக்கியில் சொல்லச் சொன்னார்கள்.

அடுத்த பத்து நிமிடங்களில் பையும் கையுமாக நால்வரைப் பிடித்தனர் போலீசார்.

அவர்களை ஐய்யா அவர்களின் அருகாமையில் கொண்டு வந்ததும் அதிர்ச்சியில்
திகைத்தார் ஐய்யா.
ஏண்டா பக்கத்து நிலத்துப் பங்காளிகள என்னைப் பாதுகாப்பீங்கன்னு நினைச்சேனே /
என் மடியிலிலேயே கை வச்சிட்டீங்களே பசங்களா.
பங்காளின்னால் இப்படியா.
என் அண்ணன் பிள்ளைகள் என்னைத் தாங்கிப் பிடிப்பதை விட்டு
வெட்டிப் போடப் பாத்தீங்களா என்று கண்ணீர் விட்டார்.
பெரியப்பா, தண்டனை கொடுங்க.
நிலத்துல தண்ணி இல்ல, எங்களுக்கு நெஞ்சிலயும்
தண்ணீ இல்ல.
பெரிய மனசு செய்யணும் என்று அவர்களும் அழ, நம்ம சீமைக்கு வந்த
நட்டத்தைப் பாத்தியா.
பாசம் ஓடிவிட்டதே ..பாசனம் எப்படிச் செய்வோம்.
இந்த எட்டாயிரம் எத்தனை நாளுக்குக் காணுமடா உங்களுக்கு.
சரி பேச்சு வேண்டாம்.
எல்லாம் சாப்பிடுங்க. ஒரு வழி செய்யலாம் என்று அவர் சொல்லும்போதே சூறைக்காற்று
அடிக்கத் தொடங்கியது.
ஏதோ கஜா புயலாம், நாம ஊரைப் பார்க்க ஓடுவோம்,
பொண்டு பிள்ளைக் காக்கணும்னு அவசரமாக சாப்பிட்டு
அதே லாரியைப் பிடித்து வீடு நோக்கி விரைந்தார்கள்.
வழி எங்கும் தோப்புகளும்,பசுமையை இழந்து சரிந்து கிடந்தன.
அனைவர் மனங்களும் பதைக்க ஊர் வந்து சேர்ந்த போது இரவாகிவிட்டது.
மழை வீர்யம் கொண்டு முழங்கிக் கொண்டிருந்தது.
இது அரியாங்கோட்டை தானா என்று கேள்வி கேட்க்கும்படி இருந்தது. எங்கும் தண்ணீர்.
ஒரே இருட்டு. அவரவர் தம் மனைவி,பிள்ளைகள் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்தனர். ராமலிங்க சாமி, எங்க பாவத்தை மன்னிச்சுடு. இனித் திருட நினைக்க மாட்டோம். பெரியம்மாவையும்  குடும்பத்தையும் காட்டிகொடு. உயிர் இருந்தால் போதும். பணம் மண் எதுவும் வேண்டாம் என்றூ கூக்குரலிட ஆரம்பித்தனர்.
ஏதோ வண்டி வெளிச்சம் கண்ணில் பாட சாலை நடுவில் நின்று
பார்த்தனர். அது காவல் நிலைய வண்டி. ஓட்டுனர் இறங்கி, ஏன் வழியில் நிக்கறீங்க,புயல் அடிக்கப் போகுதே எங்களுடன் வாருங்கள் என்று வண்டியின்
பின்னால் ஏறிக்கொள்ளச் செய்தனர்.
தங்கள் விவரங்களைச் சொன்னதும், சமூகக் கூடத்தில் நிறையபேருக்கு இடம் இருக்கு. நீங்க அங்க இறங்கிப் பாருங்க..
வெளியே மட்டும் வரவேண்டாம். நாளைக்காலையில்
புயல் கரையைக் கடந்துடும்.காத்து மட்டுப் படும். அப்போ நாங்களே உதவறோம் என்று சொல்லி ,சமூகக் கூடத்தில் இறக்கிவிட்டனர்.

பெரியப்பனைக் கையில் தாங்கியபடி உள்ளே விரைந்தனர்
அந்த வாலிபர்கள். குளிரும் பசியும் வாட்ட,அங்கே கூடி இருந்த மக்களில் தங்கள் குடும்பத்தைதேடினர்.
 அப்பா, தாத்தா, என்னாங்க என்ற குரல்கள் வந்த திசையில் பார்த்தால்,
பர்வதம்மா, மருமகள்கள்,பிள்ளைகள் என்று ஒரே இடத்தில் இருப்பதைப்
பார்த்து ,சரவண ஐய்யாவுக்கு மனம் நெகிழ்ந்தது.
பர்வதம்மா கேட்ட முதல் கேள்வி சாப்பிட்டிங்களா என்பதுதான்.

பெரியம்மா காலில் விழத்தயாராய் இருந்த தம்பி மகன் களைக்
கண்ணால் தடுத்து நிறுத்திய, பெரியப்பா எப்படித் தப்பி இங்க வந்தீங்க எல்லாரும். வர வழி எல்லாம்
மரம் சாய்ஞ்சு கிடக்கே என்று வினவினார்.
நீங்க முந்தின நாள் கிளம்பும்போதே ரேடியோ, டிவில சொல்லிட்டாங்கப்பா.
கிடைத்த வரை எடுத்துக் கொண்டு இங்க வந்துட்டோம்.
நம்ம பந்து ஜனமெல்லாம் இங்கதான் என்றார் பர்வதம்மா.
பெரியம்மா இல்லாட்டா நாங்க நிலத்துலயே மடிஞ்சிருப்போம் என்றாள்
ஒரு மருமகள்.
அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எல்லாம் நல்லதுக்குத்தான்.
குடும்பம்னா இப்படித்தான் இருக்கணும்.
வறுமை வந்தால் விலகிப் போகணும்னு யாரும் சொல்லலியே.
இருக்கிறதைப் பகுந்து கொண்டா,மனசும்,குடும்பமும்
வளரும் பிள்ளை என்றாள் பாசத்தோடு.

வெளியே அடிக்கும் புயல் பெரிசா, மனசில் அடித்த புயல் பெரிசா
என்று யோசித்தார் பெரியய்யா சரவணன்..
 தாயார் அளித்த கூழை உண்டு தகப்பனார் அருகில் வந்தமர்ந்த பிள்ளைகள்,
பெரியப்பா, இந்தமழை நம் குடும்பத்தை ஒண்ணாக்கிடுச்சு.
உங்க நிலமும் எங்க நிலமும் சேர்த்து நாங்க பாடுபடறோம்.
மண்மாதா வஞ்சிக்க மாட்டாள்.
ஒரு போகம் முடிந்ததும் ராமேஸ்வரம் போயீ சாமி கும்பிட்டு வரலாம்
என்று சொல்லி முடித்தனர்.

ஆமாண்டா இனிப் பழைய பகை இல்லை. புது சோறு பொங்கி
,புதுக்காளை வாங்கி, இனி எல்லாம் புதுசு தான்.
பெரியய்யா காளைகளை மீட்கணும் முதல்ல.
ஆமாண்டா முதலில் நம்மைக் கடனுக்காகக் கழுத்தை நெரிச்சதுனால
தான, பெரியய்யாவுக்குத் துரோகம் செய்யப் போனொம்.
நம்ம எட்டு காளைகள்ள இரண்டு ஜோடியைக் கொடுத்துட்டுப் பெரியய்யாவுக்குக் காளைகளை
மீட்டுடுவோம்.
இத்தனை முடிவுகளையும் தீர்மானம் செய்து
அவரவர் குடும்பங்களுடன் தூங்கச் சென்றனர்.
சரவண ஐய்யாவும் பர்வதமும் வெகு நாட்களுக்குப் பிறகு
விடியல் சீக்கிரமே கிடைக்கும் என்ற நிம்மதியோடு
உறங்கச் சென்றனர். வீடு புயலைத் தாங்குமா,மீண்டும் தமக்குக் கிடைக்குமா
என்ற கேள்விகள் மனதின் மூலையில் இருந்தாலும் இன்று
காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்லியபடி
மழையின் சத்தத்தில் லயித்தபடி கண்களுக்கு ஓய்வு கொடுத்தனர்.
நமக்கு என்று இருப்பது பறிபோவது போலத் தோன்றினாலும்
மீண்டும் அது நமக்குக் கிடைக்கக் கடவுள் அருள்
உண்டு .நம்பிக்கையே வாழ்க்கை. வாழ்க வளமுடன்.

No comments: