Blog Archive

Thursday, July 26, 2018

SUTOKUஉனக்கும் எனக்கும் இனிமேல் என்ன குறை.. -

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இது  நம்ம ஏரியாவில்
+++++++++++++++++++++
 வெளியான கதையின் முதல் பாகம். கெளதமன் அவர்கள்  கொடுத்த கருவுக்கு நான் எழுதிய கதை.
பெயர் சூட்டியது ஸ்ரீராம் . மிக மிக நன்றி ஸ்ரீராம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருவிடந்தை வராஹ பெருமாளைப் பூமிப்பி ராட்டியை ஏந்திய கோலத்தில் அவளூக்கு உபதேசம் செய்யும் அழகை  ,நித்ய கல்யாணப் பெருமாளாகத் தரிசனம் செய்து வாங்கிப்
போன அழகிய ரோஜா மாலையை அவ்ருக்குச் சார்த்தினார் சுந்தரியின் அப்பா.

அங்கிருந்த அர்ச்சகர் ,சுந்தரியின் பெயருக்கு ,அர்ச்சனை செய்து அந்தமாலையை சுந்தரியிடம் கொடுத்து அணிந்து
கொள்ளச் சொன்னார்.

கையில வச்சுக்கறேனேப்பா என்று கெஞ்சலுடன் அப்பாவைப் பார்த்தாள் சுந்தரி.
இல்லைம்மா கழுத்தில போட்டுக்கோ
என்ற அம்மாவின் கண்டிப்பான வார்த்தையை மீற முடியாமல்
மாலையை அணிந்து கொண்டாள்.
 இத்தனை பேர் முன் னால் மாலையோடு ஒன்பது தடவை கோவிலைச்  சுத்தணுமாம்.


என்ன பைத்தியக் காரத்தனம் என்று மனம் முரண்டு பிடிக்க
கடுகடு முகத்துடன் கருவறைப் படியைத் தாண்டும்போது அந்தப்பக்கம் ஒரு வாலிபனும்
அவன் பெற்றோர்களும் கைகளில்  மாலையுடன் உள்ளே நுழைவதைக் கண்டாள்.
ஆஹா இன்னோரு பலியாடு போகிறது.
என்று சன்னிதி வெளிச்சத்தில் அவனை எடை போட்டாள்.
ம்ம். நல்லாத்தானே இருக்கார்.
எந்த இடத்தில தோஷமோ என்று குறும்பு கண்களில் மின்ன
அவனை நோக்கவும், அந்தப் பையனும் எதேச்ச்சை யாக இவளைப் பார்க்கவும்,
அந்தக் குறும்பைப் புரிந்து கொண்டவனாக,
அவனும் முறுவல் செய்தான்.

  அடுத்து சூரிய வெளிச்சத்தில் வந்ததும், துவஜஸ்தம்பத்தைச் சுற்றி
பிரகாரத்திற்கு வந்தார்கள்.
அங்கே பார்த்தால் இவளைப் போல பத்துப் பேராவது மாலை
 அணிந்து இலக்கிலாமல் பார்த்துக் கொண்டு தாயார் சன்னிதிக்கு ச் சென்று கொண்டிருந்தார்கள்.
உள்ளே போக வழி இல்லாமல் ஏதோ வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

வெளியிலிருந்து சேவித்துவிட்டு,  அடுத்தாப்பில இருந்த ஸ்தல வ்ருக்ஷத்தை
நோக்கிச் சென்றனர்.
கல்யாணம் ஆன பிறகு இங்கே கொண்டு வந்து மாலையை மரத்துல
சார்த்தணும்பா.
பாரு எத்தனை வாடின மாலை தொங்குகிறது.
ரொம்ப  கருணையான பகவான். வருடத்தில் எல்லா நாளும் கல்யாணம்
புரிந்து கொள்ளும் தயாபரன். 365 கன்னிகைகளைத் திருமணம் செய்து கொள்வதாக அவர்களது தந்தைக்கு
வாக்குக் கொடுத்திருக்கிறான்.
குணபதி மரத்தை வணங்கிக் கொள்ளப்பா, சீக்கிரமே மணப்பெண்ணுடன் வர
அருள் செய் என்று வேண்டிக் கொள் என்னும் குரலைக் கேட்டு மீண்டும் திரும்பினாள்.
ஓ அதே  பையன் குணபதியா. படு கர்னாடகமா இருக்கே.
இந்தக் குணபதிக் கேற்ற குணவதியே மணப் பெண்ணாகவரட்டும்,
என்று மீண்டும்  சிரிப்புத் தோன்ற, முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அப்படியும் பார்த்துவிட்டான் அந்தக் குணபதி.
மிக்க சிரமத்துடன் தன்னை அடக்கிக் கொண்டான்.

இதே போல ஒன்பது தடவை சுற்றி வருவதற்குள்
பெற்றோர்கள் பழகி விட்டார்கள். குலம் கோத்ரம் எல்லாம்
எல்லாம் தெரிந்து கொண்டார்கள்.. ஏதோ தெய்வாதீனமாகச் சந்தித்திருக்கிறோம்.

ஆனால் என்று இழுத்தார் சுந்தரியின் அப்பா  முத்துராமன்
எங்கள் குல வழக்கப் படி ஜாதகம் குறிப்பதில்லை,
என்றதும் ஆச்சர்யத்துடன் பார்த்தார் நடராஜன்.
எங்க வீட்டில தான் அந்தப் பழக்கம்னு நினைத்தேன்.
நாங்க நெல்லைப் பக்கம், நீங்க ....நாகர்கோயில் என்று முடித்தார் முத்துராமன்..

எங்க வழக்கப் படி 23 24 வயசில பையனுக்கு மணமுடிச்சுடுவோங்க.
இவனுக்கு 24ம் முடிஞ்சுடுத்து.

எங்க வீட்டிலயும் 20 வயசுல பொண்ணு வீட்டை விட்டுப் போயீடும். பட்டம் வாங்கியாச்சு மேல படிக்கணுமாம்.
இவளுக்கு 21 ஆகிறது என்றார் சுந்தரியின் அப்பா.

மௌனம் நிலவியது.
சுந்தரியின் அம்மா  கோமதியும், குணபதியின் அம்மா காந்திமதியும்
 தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
தொலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டார்கள்.
 சுந்தரியும் குணபதியும் மௌனம் காத்தார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பகுதி 2
++++++
 சு to கு 2
++++++++++++++++++
கோவிலில் சந்தித்ததால் இந்த சந்திப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்
பெரியவர்கள்.
 குணபதிக்கு  சுந்தரியைப் பிடித்துவிட்டது.
சுந்தரி ஜாக்கிரதையாக இருந்தாள்.
முதல் சந்திப்பில்
எப்படி எல்லாவற்றையும் முடிவெடுக்க முடியும்.
சந்திப்பு நல்லது தான் .அவனுடன் பேசணும்.
அம்மா அப்பா எப்படி இருப்பார்களோ.
என்று யோசித்தபடி வெளிமண்டபத்தில் வாங்கிய
வடைமாலைத் துணுக்குகளைச் சத்தம் வராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

மகன் அடிக்கடி சுந்தரியைப் பார்ப்பதைக் கண்ட  அவன் அப்பா நடராஜன்
பேசுவதானால் பேசேன் பா. என்றதும்
இல்லப்பா நீங்க பேசி முடிங்க. நான் அப்புறம் பேசுகிறேன் என்றான்.
முத்துராமனும் சுந்தரியைக் கேட்டார். அவளோ நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள்.
பிறகு நாங்கள் பேசிக்கொள்கிறோம்.
பெற்றோருக்கு இவர்கள் சொல்லி வைத்தாற்போல
ஒரே மாதிரி பேசுவது சிரிப்பு வந்தது.

 நாளை உங்களுடன் பேசுகிறோம்  என்றபடி விடை பெற்றனர்
இரு குடும்பத்தினரும். சுந்தரியும் குணபதியும்
 வணக்கம் சொல்லி அவரவர் வண்டியில் ஏறிக் கொண்டனர்.

இரு பெற்றோர்களும் பெண் பையனைக் கேட்ட போது
நாங்கள் இருவரும் முதலில் சந்திக்கிறோம்.
அவள் விருப்பம் என் விருப்பம் எல்லாம் ஒத்துப் போகணும்,. பிறகு உங்க இஷடப்படி உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுகிறோ என்று இருவருமே சொல்லிவிட்டார்கள்.

No comments: