Blog Archive

Tuesday, July 03, 2018

1399, வாராணசி வந்துவிட்டோம்.காசிப்பயணத்தின் நடுப்படி

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 சுகமான பேச்சு, சீட்டு விளையாடுதல், அப்போது வந்திருந்த
 சிலபடங்களின் பாடல்களைக் கேட்டல்
என்று  பொழுது இரவை எட்டியது. அவர்களைப் பார்க்க வெங்கட் ராமனே வந்துவிட்டார்.

அம்மாவுக்கு என்ன உடம்பு,
என்று விசாரித்துவிட்டு அதெல்லாம் பத்தியமா உங்களுக்குச் செய்து கொடுக்கிறேன்
அம்மா. என்றதும் நால்வருக்கும் மிக மகிழ்ச்சி.
இரவுக்குப் புளிக்காத தயிர்சாதமும், சூடான் பாலும் ,வாழைப் பழமும் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள்.
அவர் கையில் இரண்டு பயத்தலாடு வைத்துக் கொடுத்தார் வஞ்சுமா,
தாங்கள் கொண்டு வந்திருந்த கமலா ஆரஞ்ச் பழங்களை லக்ஷ்மிமா
தட்டில் வைத்து அவரிடம் கொடுத்தார்.
இது நல்ல வேடிக்கை என்றபடி வாங்கிக் கொண்டார் வெங்கடராமன்.

இரவு பார்ப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
கை மஹா சுத்தம். அவர் சமைத்துச் சாப்பிடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று மெச்சிக் கொண்டார் வாசு.

அடுத்த நாள் வாராணசியில் இறங்கியதும் விடுதியில் குளித்துவிட்டு
 என்ன செய்யலாம் என்று திட்டம் இட ஆரம்பித்தனர்.
 அவர்களுக்கு முக்கிய இடம் கயாவும், அங்கு செய்ய வேண்டிய ஸ்ராத்தமும்.
அக்ஷய வடம், கங்கை ஸ்னானம், பிறகு முடிந்தால் வஞ்சுமாவின் சௌகர்யத்தைப் பொறுத்து
விமானப் பயணமாக ரிஷிகேஷ் செல்ல தீர்மானம்.
லக்ஷ்மி நாராயணன் தம்பதிகளும் இதே முனைப்பில் இருந்தனர்..
 அவர்களுக்கு தில்லியில் உறவினர்கள்  இருந்ததால்
வாராணசியில் இருந்து தில்லிக்குப் பயணிக்கப் போவதாகச் சொன்னார்கள்.

முன்னோர்களுக்குத் திதி கொடுப்பதே முக்கியம், பிறகு கோயில்கள்
என்றூ தீர்மானமானது.
 வஞ்சும்மாவிடம் ஓகே தானே என்று கேட்டுக் கொண்டார் வாசு.
முடிந்ததைச் செய்யலாம். எனக்கு முடியவில்லை என்று தோன்றினால் உங்களிடம்
 சொல்கிறேன் என்று சிரித்தபடி பதில் அளித்தார் அவர்.
எனக்காக விட்டுக் கொடுக்காதே. என்று அன்போடு சொன்ன கணவனிடம், நான் அப்படியெல்லாம்
செய்வதாக இல்லை. கவலை வேண்டாம் என்று அத்துடன் முடித்துக் கொண்டனர்.

நாராயணனும் லக்ஷ்மியும் இவர்களைக் கனிவுடன் பார்த்தபடி இருந்தனர்.
அப்படியே தங்கள் திருமணம் 1943இல் கீழனத்தம் கிராமத்தில் நடந்த கதையை
நகைச்சுவையாகச் சொல்ல ஆரம்பித்தார்.
மாப்பிள்ளை அழைப்பின் போது சாரட் வண்டி குடை சாய்ந்ததையும் தான் தப்பி
இறங்கியதையும் சொல்லும்போது எல்லோருக்கும் சிரிப்புத் தாங்க முடியவில்லை.

எங்க கீழ நத்தம் குதிரை மக்கர் பண்ணாது. இவர்கள் வீட்டில் திருனெல்வேலிக் குதிரை வேண்டும் என்றதால் அங்கிருந்து  வரவழைத்தோம்.
அதுக்கு அப்பப் பார்த்து ஜீரணம் சரியில்லாமல்
வலுவில்லாமல் இருந்தது. ஆள் ஏறியதும் மிரண்டு விட்டது பாவம் என்று
சிரிப்புக்கு நடுவில் லக்ஷ்மிமா சொன்னார்.

உங்க கல்யாணம் எப்படி என்றதும் , வஞ்சுமாவும் வாசுவும்
சிரித்துக் கொண்டார்கள். அது ரொம்ப சுவாரஸ்யம்.
இவள் வந்து என்னைத்தான் செய்துப்பேன்னு எங்க பாட்டிகிட்ட சொல்லிவிட்டாள்.
என்றாரே பார்க்கணும்.
அடக் கடவுளே, அப்படியே மாற்றிச் சொல்கிறார் என்று அவர் தோளில்
செல்லமாகத் தட்டினார்.
 என்னை இவர் எங்க தாத்தாவின் சதாபிஷேகத்திலேயே
பார்த்து வைத்துவிட்டார்.
 சொந்தமாக வேற போய்விட்டது. ஐந்து வருஷம் கழித்து அம்மாவிடம் சொல்லி
எங்கள் சந்திப்பு நடந்தது. கும்பகோணத்தில் திருமணம் என்றதும்,
லக்ஷ்மிக்கு ஆச்சர்யம்.
அதெப்படி உங்களுக்கு என்ன வயசு என்று வஞ்சுவிடம் கேட்க, எனக்கு 13 வயசு இருக்கும் . இவருக்கு 20 என்றார்.

love at first sight என்று கேள்வி கேட்டார்  நாராயணன்.
யெஸ் சார் என்று விளையாட்டாக சல்யூட் வைத்துக் கொண்டார்.வாசு.
நெகிழ்ந்துவிட்டனர் லக்ஷ்மியும் நாராயணனும்.

எட்டு மணிக்குச் சரியாக தள்ளு வண்டியில் வைத்த சாப்பாடு வந்ததும். பேச்சு
நிறுத்தி உணவை உண்டனர். நடுவில்  ஸம்சாரம் என்பது வீணை பாடலைத் தட்டிவிட்டு
 மகிழ்ச்சியாகக் கேட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

பத்து மணி வாக்கில் அண்ணமாச்சார்யாரின் கீதங்களை
எம் எஸ் அம்மாவின் குரலில் கேட்டபடி உறங்கச் சென்றனர்.

14 comments:

நெல்லைத் தமிழன் said...

நடந்தது நன்றாகச் செல்கிறது.

கீழந்த்தத்தில் 43ல் திருமணமா? அதற்கு 13 வருடம் கழித்து கீழந்த்தத்தில் என் பெற்றோரின் திருமணம் தடந்தது. எப்போ கீழந்த்தத்தை விட்டுச் சென்றாரகள்? அங்கு எந்த வீட்டில் வசித்தார்கள்?

ஸ்ரீராம். said...

சந்தோஷ கணங்கள். இனிமையான ஜோடி. சுவையான அனுபவங்கள்.

கோமதி அரசு said...

அருமையாக செல்கிறது .
அன்பு, காதல், பரிவான உரையாடல் என்று பதிவு மனதுக்கு இதமாய் இருக்கிறது.

Geetha Sambasivam said...

அருமையான பொழுது, இனிமையாகக் கழிந்துள்ளது. வயசானாலும் உறவின் இனிமை மாறாமல் இப்படி எத்தனை பேரால் இருக்க முடியும்! கொடுத்து வைத்த தம்பதிகள். இப்படி மனிதர்கள் கிடைப்பதே அரிதாகி விட்டது!

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெ.த ,அவர்களின் பெற்றோர் முன்பே சென்னை
சென்றுவிட்டனர்.
சென்னையில் வைத்துதான் பெண்பார்த்து முடித்தது எல்லாம். தாத்தா,அப்பா,பாட்டி திருனெல்வெலியில் இருந்தார்கள்.
அம்மா 4த் ஃபார்ம் படித்துக் கொண்டிருந்தார்.
கீழனத்தம் வந்து திருமணம் செய்தனர். உறவினர் எல்லாம் அங்கே இருந்ததால்.பாட்டி ருக்குமணி
தாத்தா பெயர் வீரராகவன். எந்த வீடு என்று தெரியவில்லை. எல்லாம் மாறி இருக்கலாம். ஸ்ரீ வேணுகோபாலன் கோவில் சன்னதிதெரு என்று நினைவு.
தாத்தா எம்.சி.டிஎம்மில் புரசவாக்கத்தில் சயன்ஸ் மாஸ்டர் என்பது தெரியும்.
அவர் படம் இன்னும் அந்தப் பள்ளியில் இருக்கிறது. நானும் பார்த்திருக்கிறேன்.1956இல் உங்க பெற்றோர் திருமணம் என்றால் எங்க சித்தப்பா ஈடு.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் இனிய ஜோடிதான் ஸ்ரீராம்.

எனக்குத் தெரிந்த பெரியவர்களின் குண நலன் களை ஒன்று சேர்த்து எழுதுகிறேன்.
தொடர்ந்து படிப்பதற்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நல்லவர்களின் தொடர்பு இருந்தால் நடப்பதும் நல்லதாகவே இருக்கிறது.
இறையின் துணை இருந்தால் எல்லாம் நலமே கோமதிமா.

இதில் கற்பனை 25 சதவிகிதம் . நிஜம் 75 சதவிகிதம்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா மா.
மிகவும் அபூர்வமாகவே அமையும் தம்பதிகளின்
பாசமும் அன்யோன்யமும்.
என் அம்மா அப்பாவிடம் அதைப் பார்த்திருக்கிறேன்.
தொட்டுப் பழகுவதில் இல்லை. சினேகம் புரிதலில் நல்ல தம்பதி. என் சித்தப்பா
சித்
தியின் கலகலப்பு மிக நயமாக இருக்கும்.
மாமா மாமியின் இனிய அன்புப் பரிமாற்றம் ஒரு அழகு பார்ப்பதற்கு.
நம் குழந்தைகள் தாம்பத்தியம் வேறு மாதிரி இருக்கிறது.

Angel said...

பாதியில் நுழைகிறேனோ .இருங்க ஆரம்பத்தில் இருந்து வாசிச்சிட்டு வரேன்.
அழகான தம்பதிகள் அன்பான உரையாடல்கள் ..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல், என்னப்பா பாதி, நடுன்னுட்டு.
பத்து வருஷ பந்தம் நம்மளோடது

நான் நிறைய பதிவுகள் படிப்பதில்லை மா.
பின்னர் எப்படி,நான் எழுதுவது மற்றவர்களுக்குத் தெரியும்.
நிதானமாகப் படித்து விட்டு வாருங்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான நட்பும் கிடைத்துவிட்டது அவர்களுக்கு. அதோடு அன்பும். இப்போது புதுவரவு வேறு சொல்லியாயிற்று. குதூகலத்திற்குப் பஞ்சமா என்னா ஆரம்பிங்க ஆரம்பிங்க சீட்டுக் கச்சேரியை...நாங்களும் தொடர்கிறோம் உங்களை

துளசிதரன், கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஓ கமென்ட் மாறி வந்துவிட்டது போலும்...சீட்டுக் கச்சேரி முடிந்து சாப்பாடு முடிந்து படுப்பதற்கு ஆயிற்று போல....எப்படி இப்படியாச்சு கமென்ட் மாறி...ஸாரிமா...

இனிய ஜோடிகள் லவிங்க் கப்பிள் மனது நிறைந்து இருக்கு வாசிக்க வாசிக்க உங்கள் எழுத்தின் வலிமை எல்லாம் நல்லாதாகவே....அருமை அருமை

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி கீதா
பின்னூட்டம் எங்கே வந்தால் என்ன. கண்ணில் பட்டால் படிக்க இனிமை.
அவர்கள் பயணம் இனிமையாகத் தான் அமையும்.
தடங்கள்,அசுகம் இல்லாமல் தொடரட்டும். மிக மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

பயணத்தில் சீட்டுக் கச்சேரி, பாடல்கள், சுவையான உணவு - அதுவும் கலந்து உண்பது - அதில் இருக்கும் இன்பம் இப்போதைய பயணங்களில் இல்லை.... ஏதோ தனித்தனி தீவுகளாகத் தான் பயணம் - ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது வெகு அரிது.

பயணம் தொடரட்டும். நானும் தொடர்கிறேன்.