Wednesday, July 04, 2018

1400ஆவது பதிவு. கங்கை நதி ஓரம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 அடுத்த நாள் ,பொழுது விடிந்ததும் குளியல்,எல்லாம் முடித்து
 புதிய உடைகளை உடுத்துக் கொண்டு, காலைப் பலகாரமான
இட்லி, பால்,காப்பி ,டீ என்று முடித்துக் கொண்டனர்.

தாங்கள் தங்கும் விடுதியிலேயே லக்ஷ்மி நாராயணனையும் தங்கும்படி கேட்டுக் கொண்டார்
வாசு.
அவர்கள் தங்கள் குழுவிலிருந்து
பிரிய முதலில் தயங்கினாலும் நட்பிற்காக ஒத்துக் கொண்டார்.
வஞ்சுமாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி.
திரு .நாராயணனின் உதவி தேவைப்படும் என்று தோன்றியது.
வாசுவுக்குக் கிரியைய்களில் அவ்வளவு  விஷயம் தெரியாது.
நாராயணனோ சம்ப்ரதாயங்கள் அனைத்தும் அறிந்து
வைத்திருந்தார்.

12 மணி அளவில் மதிய உணவும் வந்தது.மணக்க மணக்க சாம்பார் சாதம்,
பொரித்த வடகம், உ.கிழங்கு கறி என்று அமர்க்களமாகக் கொண்டு வைத்தார்.
அதைத்தவிர  ஒரு கூஜா நிறைய பாயசம், வாழை இலைகளில் கட்டிய தயிர் சாதம், மாங்காய் ஊறுகாயோடு கொண்டு வந்து வைத்தார்.

இல்லை இது ரயில்வே செலவில்லை வெங்கட் ராமன் சீர்.
உங்க பயணம் ஆரோக்கியமாகத் தொடங்கி அதே போலப் பூர்த்தி செய்யணும்னு காசி விஸ்வனாதனிடம் வேண்டிக்கொண்டு கொடுக்கிறேன் என்றார்.

பெங்களூரு வந்ததும் உங்களை வந்து பார்க்கிறேன்.
என்றபடி விடை பெற்றார். எத்தனை நறுவிசா, மரியாதையாகப் பேசுகிறார்.

உண்மையில் அந்த விடுதி உணவு பற்றி எனக்குக் கவலைதான் என்றார் வஞ்சுமா.
 அங்கேயும் தமிழ் சமையல் காரர் உண்டு. செட்டினாட்டு அரசர் விடுதியில் நம்
உணவுக்கு குறைவு இல்லை .உனக்குக் கவலை வேண்டாம் வஞ்சு என்று ஆதரவாகச் சொன்னார்.வாசு.

தன் பெற்றோர்கள் குடும்பத்தோடு ஒரு ரயிலில் சலூன் எனப்படும்
பிரத்தியேக வண்டியில் ஆசாரம் கெடாமல் சென்னையிலிருந்து
பத்ரினாத் வரை போய் வந்து சொன்னதேல்லாம் வஞ்சுமாவுக்கு நினைவு
வந்தது.
தாத்தா ஜட்ஜ் ஆக இருக்கும் போது அரசாங்க அலுவலாக தில்லி செல்ல அந்த
1930ஆம் வருடம் பாட்டி பயணம் செய்த கதை.
கோதாவரி ஆற்றங்கரையில் , அடுப்பு மூட்டி, பங்களூர் கத்திரிக்காய் கூட்டு
செய்ததைஎல்லாம்  பாட்டீ சொல்ல ,காலடியில் உட்கார்ந்து
 கேட்ட நினைவு பசுமையாக இருந்தது.
லக்ஷ்மிமாவும் தன் அம்மா,அப்பா எல்லோரும் சென்று வந்ததை
வர்ணித்தார். முந்தைய நாட்களில் ஆறு மாதம் கூட ஆகுமாம் காசி சென்று வர,.
யார் கண்டா நம் குழந்தைகள் இரண்டே நாளில் சென்று வருவார்களாக இருக்கும்
என்று யோசித்து சிரித்துக் கொண்டார்கள்.
வாராணசி நிலையம் வந்ததை  அவர்கள் இருந்த ரயில்வே கார்ட் சொன்னார்.

நீங்கள் இறங்குங்கள் நாங்கள் பெட்டி படுக்கை கொண்டு வருகிறோம்
என்றார் வாசு.
 அதற்கு அவசியம் இல்லாமல் விடுதியிலிருந்த வந்த
நடேசன் அவர்களுக்கு வரவேற்பு சொல்லி அழைத்துச் சென்றார்.

விடுதியின் வண்டி சௌகர்யமாக இருந்தது. வெய்யில்
உரைக்கத்தான் செய்தது. அண்ணாமலை பவனம் பிரம்மாண்டமாய்
இருந்தது.
 இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகள் விசாலமாக இருந்தன.
ஜன்னலைத் திறந்த வஞ்சுமாவுக்கும் லக்ஷ்மிக்கும் கங்கையின் படிகளும்
அதன் விஸ்தாரமான கரைகளும் கண்ணில் பட்டன.

வஞ்சுமா உணர்ச்சி மிகுதியில் லக்ஷ்மி மாவை அணைத்துக் கொண்டாள்,
எனக்கு ஒரு நல்ல தோழி கிடைத்திருக்கிறாள்.
இந்தக் கங்கை அம்மாவுக்காக எத்தனை நாள் தவம் இருந்தேன்
என்றவர் கண்களில் நீர்.
வாசு அருகில் வந்து அணைத்துக் கொண்டார். மூன்று நாட்களோ
 ஒரு வாரமோ நீ சொல்லும் வரை நாம் நகரப் போவதில்லை
 என்று மென்மையாகச் சொன்னார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
நண்பர்களே, தோழிகளே இந்தப் பதிவு நாச்சியாரின் 1400
ஆவது பதிவு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 என் சக
பதிவர்கள் எழுதின அளவில் இது மிகவும் குறைவுதான்.
எனக்கு ஒரு மகிழ்ச்சி .இவ்வளவாவது எழுத முடிந்ததே என்று.
உங்களது ஆதரவுதான் என் பதிவின் எழுத்தின் வளர்ச்சிக்குக் காரணம்.26 comments:

KILLERGEE Devakottai said...

ஆஹா கங்கையோரம் 1400-வது பதிவு அமைந்து இருக்கிறது வாழ்த்துகள் அம்மா.

ஸ்ரீராம். said...

1400 வது பதிவுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் அம்மா..

அந்தக் காலத்திலேயே பயணம் சற்றே நேரம் எடுக்கும் விஷயமாகவும், கடினமாகவும் இருக்கும் நேரங்களிலும் மூத்தோர்கள் இப்படியான பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பது வியப்பு. நெகிழ்வு.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

1400ஆவது பதிவிற்கு வாழ்த்துகள். பல துறைகளில் காணப்படுகின்ற உங்களின் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன். ஆனால் சில சமயங்களில் மட்டுமே கருத்திட முடிகிறது, நேரமின்மை காரணமாக. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

நெ.த. said...

முதலில் 1400வது பதிவுக்கு வாழ்த்துகள். விரைவில் 1500வது பதிவு வரவேண்டும், அதுவும் கீழந்த்தம், திருக்குறுங்குடி பெருமாள் படங்களுடன்.

காசி பிரயாணத்தை ஆவலுடன் வாசிக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

1400_வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் வல்லிம்மா.

சமீபமாகத் தொடர முடியவில்லை என்றாலும் கவனித்து வருகிறேன். சிறு இடைவெளிக்குப் பின் தொடர்ந்து எழுதுவது பார்த்து மகிழ்ச்சி.

கோமதி அரசு said...

அக்கா, 1400வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
காசி யாத்திரை பதிவு காசிவிஸ்வ நாதன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு.
உடல்நலத்தோடு இருந்து மேலும் நிறை பதிவுகள் தர வேண்டும்.
வாழ்க வளமுடன் அக்கா.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே தேவகோட்டையாரே.

நான் வெகு நாட்களாகப் பார்க்க ஆசைப்படும் இடம்.
என் பதிவுகளின் வழியாக நிறைவேற்றிக் கொள்கிறேன்.
1400 என்பது எண்தான் இருந்தாலும் என் பெற்றோர்
கற்றுக் கொடுத்த தமிழ் உங்களைப் போன்ற நண்பர்களைச் சேர்த்துக் கொடுத்ததே.
அதுதான் என் பாக்கிடம். நன்றி ஜி.

வல்லிசிம்ஹன் said...

பாக்கியம் என்று படிக்கவும்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
உங்கள் ஆதரவுகள் இருப்பதால் ஏதோ எழுதுகிறேன்.
காசி கங்கையின் மகத்துவம் அவர்கள் ரத்ததில் ஊறி
இருந்ததால் தான் அந்த முனைப்பு வந்திருக்க வேண்டும்.

இத்தனைக்கும் வெளியே சாப்பிடும் வழக்கம் பாட்டிகளுக்குக் கிடையாது
அம்மா அப்பா பரவாயில்லை.
அப்பாவுக்கு இரண்டு நாள் வெளியே சாப்பிட்டால்
வயிற்றுப் பிரச்சினை வந்துவிடும். என்னைப் போல.ஹாஹா.
நன்றி மா..

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா. மனம் நிறை நன்றி.
உங்கள் வாக்கு பலிக்கட்டும். 9 வயதில் பார்த்த நம்பி
இப்பொழுதும் அருள்செய்வார் என்று நம்புவோம்.
நீங்களும் சென்று வந்து எழுதுங்கள். இந்த எழுத்துப் பைத்தியம் இருக்கு பாருங்கள்.
அது சுலபத்தில் விடாது.
பெண் நான் கூன் போடுவதாக இப்பவே சொல்கிறாள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
வருக வருக. நாம் எல்லோரும் முக நூலுக்குப் போய் விட்டோம்
வலைப் பதிவுகள் நல்ல பதிவுகளைக் கொடுக்கின்றன.
நேரம் எடுத்து நான் தான் பார்ப்பதில்லை.
பழைய பதிவுகளில் உங்கள் பெயரைப் பார்க்கும்போது அத்தனை அன்பா இருக்கும்.

வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி மா. வாழ்க வளமுடன்.

Avargal Unmaigal said...

1400 வது பதிவுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா.தங்கள் வாழ்த்துகளுக்கு
மிக நன்றி. எங்கள்ப்ளாகில் என் பதிவு வரும். தமிழ்மணத்தில் வரலாம்.
வேறெங்கு வரும் என்று தெரியவில்லை/.

வெறும் குடும்பங்களைச் சுற்றியே என் வலைப்பதிவுகள். விஞ்ஞானம்
மற்றும் பொது அறிவு பற்றி இருக்காது.
இருந்தும் நீங்கள் அன்பினால் என்னையும் வாழ்த்த வந்திருக்கிறீர்கள்.
நன்றி மிகுந்த வணக்கங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. நம் நட்பு இன்று போல் என்றும் இருக்க இறைவன் அருள் இருக்கட்டும்.
மன்ம் நிறை நன்றி என் தங்கைக்கு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
12 வருட நட்பு நம்முடையது. என்றும் நீடிக்கணும். நன்றி மா.

Geetha Sambasivam said...

1400 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ரேவதி. எத்தனை பதிவுகள் எழுதினோம் என்பதை விட எத்தனை அர்த்தமுள்ள பதிவுகள் என்பதே கணக்கு. அவ்வகையில் பார்த்தால் நீங்கள் வெகு தூரம் முன்னே நிற்கிறீர்கள். நான் அதிகம் எழுதினது, எழுதுவது மொக்கை தானே! :))))

Geetha Sambasivam said...

கங்கைக்கரையிலும் தம்பதிகளின் வேலைகள் அனைத்தும் இனிமையாகவும் அருமையாகவும் நடந்திருக்கும் என நம்புகிறேன். தொடரக் காத்திருக்கேன்.

priyasaki said...

ஆ..வ் வல்லிம்மா 1400 பதிவா. வாழ்த்துக்கள்,வாத்துக்கள் வல்லிம்மா.
ஆரோக்கியமாக இருந்து இன்னும் பல பதிவுகள் தரவேண்டும் என வாழ்த்துகின்றேன்.

Thenammai Lakshmanan said...

கங்கை அழகு. அவர்களின் அன்பும் நெகிழ்வு. 1400 க்கு வாழ்த்துக்கள்மா. :)

Thulasidharan V Thillaiakathu said...

1400 வது பதிவிற்கு வாழ்த்துகள் அம்மா.

என்ன ஒரு இதமான பயணம். நல்லபடியாக எல்லாம் நடக்கட்டும்! தொடர்கிறோம் அம்மா

துளசி, கீதா

கீதா: அப்போதெல்லாம் இப்படி சமைத்துத் தர ஆட்கள் இருப்பார்களா அம்மா ரயிலில். சூப்பரா இருக்கே.... இப்போதுள்ள கேட்டரிங்க் போல இல்லை போல இருக்கே. இப்போதெல்லாம் கேட்டரிங்க் படு மோசம். சில செய்திகள் படித்தால் மிகவும் அருவருப்பா இருக்கு..

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா.
அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். நாம் பேசிக் கொள்வதே
இந்த வலைப்பதிவுகள் வழியாகத்தானே.
எத்தனை எத்தனை சமாச்சாரங்கள் நீங்களோ நானோ சொல்லாத
விஷயங்களே இல்லை.
அதிலும் உங்கள் கண்ணன் படைப்பு எத்தனை அற்புதம். சாப்பிடலாம்
வாங்க இன்னும் உயர்த்தி. எத்தனை கீரை வகைகள் ,தானிய வகைகள்.

ஸ்ரீரங்கத்தில் நீங்கள் இருப்பது நான் இருப்பதைப் போல அத்தனை
சமாசாரங்கள்,ரங்குவுடனான அத்யந்த ப்ரேமை
அதன் வழியாக நீங்கள் அறியக் கொடுப்பது எல்லாமே அருமை.
பகீரதப் பிரயத்தனமாக துர்கா தேவியே அருள் செய்தது போல ஒரு குழந்தை வரம் கிடைக்க எத்தனை பிரார்த்தனைகள் வேண்டுதல்கள்.
உங்களைப் போல, துளசியைப் போல நான் பார்த்ததில்லை.
பொறுமை,அதித விஷய ஞானம்,பக்தி சகபதிவர்களுடன் அருமையான பாசம் இவ்வளவும்
கொண்டவர் நீங்கள்.
எல்லா நலன்களும் எப்போதும் பெற்று சுகமாக வாழ என் பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

இனிதே நடக்கும் கீதா மா. கதை மாந்தர்கள்
எப்பொழுதும் நலமுடன் இருக்கவே என் ஆசை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அம்மு ப்ரியசகி நலமா மா. உங்களைப் பற்றி எழுத விட்டது போல அனேக
நண்பர்களை குறிப்பிட மறந்து விட்டேன். வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா.

வாழ்க வளமுடன்.அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேன்,
எத்தனை தோழிகளை விட்டுவிட்டேன் பார்த்தீர்களா.
மனத்திடம் இல்லாதவர்கள் செய்யும் செய்கை.
நீங்கள் எங்களை விவரித்த சாட்டர்டே கார்னர் இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.
இன்னும் இரவுத் தூக்கம் கெடுகிறதா .இல்லை முன்னேற்றம் உண்டா.
குடும்பத்தினர் எல்லோருக்கும் என் ஆசிகள் மா.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, அன்பு கீதா வாழ்த்துகளுக்கு நன்றி. 12
வருடங்களுக்கு இந்த எண்ணிக்கை குறைவுதான்.

நம்மால் முடிந்ததைச் செய்தோம் என்ற திருப்தியே.

கீதாமா, அந்த ரயிலில் தெரிந்த மனிதர் சமையல் பொறுப்பில் இருந்ததே
அவர்கள் அதிர்ஷ்டம்.
என் பெற்றொர் பயணம் செய்த போது அவர்கள் நிறைவாகவே சொன்னார்கள்.
மாமாவுக்கும் தில்லி சென்னை பயணம் அருமையாகவே இருந்ததாகச் சொல்வார்.
வருடா வருடம் வருவார்களே. இப்பொழுது எல்லாமே சுத்தம் குறைந்து

விலை அதிகரித்து ம்ஹூம் நன்றாக இல்லை.

வெங்கட் நாகராஜ் said...

கங்கையைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருப்பதில் ஒரு அலாதியான மகிழ்ச்சி, மன அமைதி கிடைக்கத்தான் செய்கிறது. இப்போது கூட மனதில் ஹரித்வார் போக வேண்டும் என்ற எண்ணம் வந்தபடியே இருக்கிறது. நேரம் அமைய வேண்டும்.

1400-வது பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.... தொடர்ந்து எழுதுங்கள்.