Blog Archive

Friday, May 25, 2018

வாழ்க்கையின் குரல் 6

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


   சந்திரா கிளம்பின  அரைமணி நேரத்தில் சுந்தரம் அங்கு
வந்தான்.  பூட்டியிருந்த வீடு அவனைக் குழப்பியது.

அவனது மோட்டர் பைக் சப்தம் கேட்டுப் பக்கத்து வீட்டு
சுப்ரமணியம் வெளியே வந்தார்.

 சந்திரா  ,இப்போ ஒரு அரை மணி முன்னதாகக் கிளம்பினாள். திடீரென்று
 அலுவலக விஷயமாக ஹைதராபாத் போவதாகச் சொன்னாள்.
குழந்தைகள் எங்கே என்பதற்குள்

 கிளம்பி விட்டாள்.  உங்களிடம் கொடுக்கச் சொல்லி சாவியைக் கொடுத்தாள் என்றவரிடமிருந்து இயந்திரத்தனத்துடன்  சாவியை வாங்கி வீட்டைத் திறந்தான்.

காலையில் ஏற்றிவைத்த அகர்பத்தி மணமும் , தொங்க விட்டிருக்கும்
மணிச்சரங்களின் ஒலியும் அவனை வரவேற்றன.
எனக்குத் தெரியாமல் இது என்ன பயணம். என்று நினைத்தபடி தொலைபேசியைக் கையில் எடுத்தான்.

சந்திராவின் மானேஜர் மீனாக்ஷிக்குப்  பேசத் தொடர்பு கொடுக்கக் கேட்டுக் கொண்டான்.
 ஆபரேட்டரின் குரல் தான் பதில் சொன்னது.
மீனாக்ஷி தன் குழுவுடன் ஹைதராபாத் செல்வதாகவும்,
ஒரு அவசர அஸைன்மெண்ட் முடித்து வர 2 வாரமாவது ஆகும் என்றாள்.

உடனே தன் செக்ஷனில் இருக்கும் , பாலச்சந்திரனுக்குத் தொலைபேசினான்.
சந்திராவின் குழு வெளியூர் போன விஷயம் தெரியுமா என்று கேட்டதற்கு,
 தனக்கு முழு விவரம் தெரியாது,ஆனால் அவர்கள் அலுவலகத்தில் இல்லை
என்றான்.
எரிச்சல் மிகுதியாகத் தந்தை வீட்டுக்குப் ஃபோன் செய்தான்.
மகள்கள் அங்கே வந்திருக்கிறார்களா என்ன விஷயம் என்று கேட்ட போது,
 தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று மறுத்தனர்.

கோபம் தலைக்கேற சாவியை எடுத்து காட்ரேஜ் பீரோவைத் திறந்தான்.
நல்ல சமயம், வீட்டுப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு சென்று விடலாம்
என்ற நினைப்பு.
அவனுக்கு.
சில போலி நகைகளைத் தவிர , வீட்டுப் பத்திரமோ,வழக்கமாகச்
 சந்திரா வைக்கும் உண்டியல் பணமோ ஒன்றும் இல்லை.
சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்ட பாண்ட் சட்டைகள், சில புடவைகள்,
மகள்களின் பட்டுப் பாவாடைகள் மட்டும் இருந்தன.

பணம் தேவை அவனுக்கு. காசி , வளையல்களை விற்றுக் கிடைத்த
பணத்தில் பத்தாயிரம் அவனிடம் கொடுத்திருந்தான்.
மழுங்கின  மூளை வேலை செய்யாத நிலையில் அவன் ஆடிய
சீட்டாட்டம்  தோல்வியில் முடிந்தது.

கைகள் பரபரக்க, வயிற்றில் பசி கிள்ள
அடுத்த கட்டமாகப் பெற்றோர் வீட்டுக்கு விரைந்தான்.
கவனிக்கப் படாத ,ப்ராமரிக்கப் படாத மோட்டர் பைக்கும்
 நடு வழியில் நின்றது.
தள்ளிக் கொண்டே பெற்றோரின் வீட்டுக்கு வந்தான்.
 போர்டிகோ விளக்கு பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தது.
மணியை அழுத்த அப்பா ,வந்து கதவைத் திறந்தார்.
மகனின் கோலம்  அவரை மன அழுத்தத்தில் ஆழ்த்தியது.
என்னப்பா இந்த இரவு வேளையில் என்றபடி ,மனைவியை அழைத்தார்.

உள்ளே சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்த அவன் அம்மாவும் வந்தார்.
சலனம் ஏதும் காட்டாமல் என்ன விஷயம் அப்பா,
சந்திரா,குழந்தைகள் வந்திருக்கிறார்களா என்று அவனுக்குப் பின்னால் பார்த்தார்.

இதென்ன நாடகம். ஒருவரையும் காணோம். வீட்டுப் பத்திரம் உங்களிடம் இருக்கிறதா என்று
கோபத்துடன் கேட்டான்.

எங்களுக்கு இது சாப்பாட்டு நேரம். நீயும் சாப்பிட வருவதானால் வா. கைகால் சுத்தம் செய்து கொண்டு வா
பேசலாம் என்று அவன் தந்தை உள்ளே நகர்ந்தார்.
வேறு வழி இல்லாமல் உள்ளே வந்து அமர்ந்தவனுக்கு சாப்பாடு பரிமாறினார் அம்மா.
அவசர அவசரமாக அள்ளிச் சாப்பிடும் மகனைக் கண்டு
கண்களில் நீர் வந்தது அம்மாவுக்கு.
என்ன ஆச்சு உங்கள் இருவருக்கும்.
எங்கே போனாள் சந்திரா. குழந்தைகள் எங்கே. இரண்டு வாரம் முன்பு பேசினோம்
உன் நடவடிக்கைகள் பற்றிச் சொன்னாள்.

மணமுறிவு  செய்து கொள்ளலாமா என்று யோசனை வருவதாகச் சொன்னாள்.
வீட்டைவிட்டுப் போகும் அளவுக்கு என்ன நடந்தது என்ற அம்மாவை வெறித்துப் பார்த்தான்
சுந்தரம். ஓஹோ அந்த அளவுக்கு யோசனை போய்விட்டதா.
காதல் திருமணம் ,பணம் கேட்டதும் கசந்து விட்டதோ.

ஊரில் அவனவன் எத்தனை சீர் கெட்டு இருக்கிறான்.
நான் குடிக்கிறேனா, வேறு யாரையாவது காதலிக்கிறேனா.

வெறும் சீட்டு............. எனக்கு வாழ்க்கை அலுத்துவிட்டதால்
 பொழுது போக்க ஆடுகிறேன்.
அவள் தான் ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கிறாளே .
ஏதோ கொஞ்சம் அவளிடம் பணம் கேட்டது நிஜம் தான்.
அதற்காக விவாகரத்தா..
நான் சரி சொல்ல மாட்டேன். வீட்டில் சம உரிமை  எனக்கு உண்டு.
என் பாதியைக் காசாகக் கொடுக்கச் சொல்லுங்கள்.
எங்கே வேணுமானாலும் போகட்டும்.
இப்போது நீங்கள் தந்தால் பணம் வாங்கிக் கொள்கிறேன்.
வீட்டுப் பணத்தில் திருப்பிக் கொடுக்கிறேன்.
இன்னும் ஒரு வாரத்தில் வேலைக்குத் திரும்பி விடுவேன்.
 என்று உச்சக் குரலில் பேசும் மகனை வேதனையோடு பார்த்தார்
அப்பா.
இன்று ஒரு நாள் இங்கே தங்கு.
காலையில் இதற்கெல்லாம் தீர்வு காணலாம்.
நாங்கள் பணம் வீட்டில் வைத்துக் கொள்வதில்லை.
உன் இஷ்டம் போல் செய்.வெளியே போக வேண்டுமென்றாலும் சரி எங்களுக்குத்
 தூங்கும் நேரம் வந்துவிட்டது. என்றபடி எழுந்தார்.

வெகு தள்ளாமையோடு எழுந்திருக்கும் பெற்றோரைப் பார்த்து மனதில்
சுருக்கென்று பட்டது.
என் பைக் நின்று விட்டது. அதனால் இன்றிரவு தங்குகிறேன்.
காலையில் பணம் கொடுத்தால் தான் கிளம்ப முடியும் என்று
அங்கேயே அமர்ந்தான். உன் அறையில் படுத்துக் கொள்ளலாம்.
என்றபடி அவர்கள் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டனர் அவன் பெற்றோர்.
சுற்றுமுற்றும் பார்த்தபடி இருந்த சுந்தரத்தை வாட்ச்மென் குரல் எழுப்பியது.
ஐயா,வாசல் கதவைத் தாளிடுகிறேன் என்று சாத்தினான்.
 வேறு வழி இல்லாமல், எழுந்தவன் தன் அறை நோக்கி நடந்தான்.
அடுத்த பதிவில் முடித்து விடுகிறேன் சுபம்.

8 comments:

ஸ்ரீராம். said...

அதிர்ச்சி வைத்தியத்தில் சீட்டாட்டப் பைத்தியம் தீரப் போகிறதா? நல்லகாலம் பிறந்திருந்தால் சரி!

Geetha Sambasivam said...

திக் திக் திக்

நெல்லைத் தமிழன் said...

அதிர்ச்சி வைத்தியம் எவ்வளவுதூரம் பலித்தது? இருந்தாலும் நல்லா இருக்கும் குடும்பத்தை ஏதாவது ஒரு பிரச்சனை (குடி, சீட்டாட்டம் போன்று) படுத்துவது, படிக்க கஷ்டமாத்தான் இருக்கு. எந்தப் பிரச்சனையும் ஒன்றும் தெரியாத குழந்தைகளை அல்லவா பாதிக்கும். பிற்காலத்தில் திருந்தினாலும், போன காலம் போனதுதானே.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா, இந்த அதிரடிச் செயல் சுந்தரத்தை மாற்றியிருக்கக் கூடும்....என்றாலும் இத்தனை வருடங்கள் சந்திராவின் வேதனைக்கும் குழந்தைகளின் மன அழுத்தத்திற்கும் என்ன காம்பன்சேஷன் கொடுக்க முடியும் சொல்லுங்கள்? ஒரு வேளை இனி அவர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம் தான் ஆனால் தொலைந்த கணங்கள் தொலைந்ததுதான். வாழ்க்கை என்பதே நேர்மையான சந்தோஷத்திற்குத்தான். சந்திராவின் மனதில் இந்தத்தழும்புகள் ஆறுமோ? ஆறினால் நல்லதே...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அதை சொல்லுங்கள் நெ.த.
அந்தக் குழந்தைகளின் மன வளர்ச்சி பாதிக்கப் படத்தான் செய்தது.
அதுவும் சரியான டீனேஜ் பருவத்தில் தாய் சிரமப்படுவதை எந்தக்
குழந்தை தாங்கிக் கொள்ளும்.
அவர்களது வருங்கால வாழ்க்கை பாதிக்கப் படத்தான் செய்தது.
இன்னோரு ஆண் உறவை வெகுத்தயக்கமாகவே நெருங்கினார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா.
ஒரே ஒரு வெறி , மனிதனை எப்படி ஆட்டி வைத்தது என்பதற்கு அவன் ஒரு சிறு சாட்சி.
எல்லோருக்கும் பொதுவாக நல்ல படியாக முடிக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி கீதா,

பத்து வருடங்களாக அவளும் இடைவிடாத திகிலில்
இருந்துவிட்டாள்.

சுந்தரம் திருந்தி வாழ்க்கை முன்னேறும் என்றே
நம்பினாள்.

இந்த ஐம்பது வயதில், அலுவலகம் ஒன்றுதான் அவளுக்கு அடைக்கலம் கொடுத்தது.
தான் பெற்ற பெண்களின் முன்னேற்றத்துக்குப் பங்கம் வரக் கூடாது.
நொடிக்கு நொடி என்ன நடக்குமோ என்று பயப்படுவது எத்தனை சிரமம்.
பார்க்கலாம்.
நான் கரு என்று ஒன்று குறிப்பிட்டிருந்தேன். அது பெற்றவர்களை,அவர்கள் வார்த்தைகளை
மதித்த காலம்.
இப்போது அப்படி இல்லை. இயல்பிலேயே துடிப்பான இளைஞனாக வளர்ந்த சுந்தரத்துக்கு
வாழ்வில் தன் சுகமே பெரிதானது.
கசப்பில்லாமல் முடிக்கிறேன்.Thank you raja,.

வல்லிசிம்ஹன் said...

அதிர்ச்சி நிறையக் காத்திருக்கிறது அவனுக்கு. பித்தம் தெளிந்ததா பார்க்கலாம் ஸ்ரீராம்.