Blog Archive

Wednesday, May 09, 2018

மதுரையில் ஒரு சித்திரை தங்கல் 6

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

    அன்று மதியம் தாத்தா காப்பி குடித்துவிட்டு, எங்கள் இருவருக்கும் பிஸ்கட்
,பேரீச்சம்பழம் கொடுத்துவிட்டு,
 நிமிரவும்,
வண்டி ஓட்டி மாயாண்டி, ஐயா கார் கொண்டு வந்துவிட்டேன் என்று பணிவாகச்
சொல்லவும் சரியாக இருந்தது.

இதோ வரேன் என்று ,சட்டை போட்டுக் கொண்டு, உத்தரீயத்தையும்
அழகாகப் போட்டுக் கொண்டார்.
பாட்டி தயங்கித் தயங்கி அருகே போனார்.
அக்காவிடம் நான் யாருக்கும் சிபாரிசு செய்யப் போவதில்லை.
என்று பட்டென்று சொன்னார் தாத்தா.
இல்லை, ரங்கத்தின் கடைசிப் பையன் படித்து முடித்து
விட்டான். அவனுக்கும் மதுரையில் வேலை கொடுத்துவிட்டால்
அவன் வழியைப் பார்த்துக் கொள்வான்.
என்று பாட்டி முடித்தார்.

யாராவது மானேஜர் கண்ணில் பட்டால் சொல்கிறேன் . அவர்களுக்கு வாக்குக் கொடுத்துடாதே
என்று கறாராகச் சொல்லிவிட்டு
முரளியை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

ஊரார் வீட்டுப் பிள்ளையை வளர்த்தால் நம் குழந்தைகள் நன்றாக இருக்கும்னு சொல்வார்கள்
என்று முணுமுணுத்தபடி என்னை பின் கட்டுக்கு அழைத்துச் சென்றார்.
உரலை முதலிலேயே அலம்பி வைத்திருந்தேன்.
பாட்டி வந்து குழவியை அல்ம்பி முதலில் ,உளுந்தைக் களைந்து போட்டார்.
அரிசி போடலையான்னு நான் கேட்டதுக்கு,
இதுதான் நன்னா அரை படணும் ஆண்டா. இட்லி மெத்துனு இருக்கணும் இல்லையா
என்று திருக்குறுங்குடி கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

எப்படித் தன் தந்தை வயலில் பாடுபடுவார். பாட்டியும் தன் தங்கைகளும், தங்கள்  அம்மாவுக்கு ,
அந்தப் பாட்டிக்கு  தலைசுத்தல் வருமாம்
உடனே இஞ்சியை அம்மியில் படபடவென்று  தட்டி த் தலையில்  தடவிக் கொள்வார் என்று  செய்து காண்பித்தார்

சமையல் உதவி அப்பளம் இடுவது எல்லாம் சொன்னார்.
மகேந்திர மலையிலிருந்து  எப்படி  அனுமார்  ஸ்ரீலங்காவுக்குத் தாவிச் சென்று சீதையைப் பார்த்தார்,
எப்படி தென் கோடியில் இருக்கும் திருக்குறுங்குடியில் பேசினால் சித்ர குப்தனுக்குக்
கேட்கும்.
   அதனால் எப்பொழுதும் நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும் என்றும்
அறிவுரை சொல்லி முடிக்கவும், உளுந்து அரைபட்டுப்
பந்து போல உருண்டு வரவும் சரியாக இருந்தது.
அந்த உருண்டு வந்த மாவில்  பபிள் வரதான்னு பாருன்னு அன்று சொன்னதை நான் இன்னும்
மறக்கவில்லை.

தாத்தாவும் முரளியும் வரும்போது  சாயந்திரம் ஆகி இருந்தது.
முரளி கையில் பெரிய பிஸ்கட் டப்பா.
அவன் கண்களில் அதீதப் பிரகாசம் தான் பார்த்து வந்த
அதிசயங்களை என்னிடம் விவரித்தான்.
அது பெரிய பங்களாவாம். எல்லா இடமும் வெள்ளை வேளேர்னு இருந்ததாம்.
வீட்டுக்கு முன்னால் ஒரு குட்டிக் குளமாம்.
அதில் தங்க வர்ண மீன் களாம்.

தாத்தாவோட அக்கா  செக்கச் செவேல்னு எப்பவும் சிரித்தபடி இருந்தாராம்.

தாத்தாவுக்குத் தன் பேரனின் சமர்த்துப் பேச்சைக் கேட்டு
ஒரே மகிழ்ச்சி. ஜயாவும், நாராயணனும் நன்றாக வளர்க்கிறார்கள்.
சொன்ன இடத்தில் அசையாமல் உட்கார்ந்து இருந்தான்.

அடுத்த இரண்டு நாட்கள் சீக்கிரம் சென்று விட்டன.
 நானும் பாட்டியும் மீண்டும் டவுனுக்குப் போய் வந்தோம்.
வெள்ளி  சாயந்திரம் வந்த அப்பாவிடம் சொல்ல நிறைய விஷயங்கள்
இருந்தன.  பாட்டி,நார்த்தங்காய், சுண்டைக்காய்,மணத்தக்காளி  எல்லாம் காகிதத்தில் வைத்து கயிறு கட்டிக்க கொடுத்தார்.
கசப்பு சமாசாரம்டா நாராயணா .  இரண்டணா  கொடுத்துட்டு  வாங்கிக்கோ
 என்று சிரித்தார்.
அடுத்த நாள் எனக்குக் கிடைத்த தாழம்பூவையும், மணி மாலைகள்
பட்டுப் பாவாடை எல்லாம் வைக்க ஒரு பெரிய பையும் கிடைத்தது.

மனசில்லாமல் தாத்தா பாட்டியிடம் விடை பெற்றுக் கொண்டு
,திருமங்கலம் வந்து சேர்ந்தோம்.
சித்தப்பா ஜீப்பில் கொண்டு விடுவதாகச் சொன்னதை அப்பா ஏற்கவில்லை.
வாரம் பூராவும் உழைக்கிறாய். ஓய்வு எடுத்துக்கோ.
லக்ஷ்மி அக்கா வந்த பிறகு பார்க்கலாம்.

இதுகளும் அதற்குள் மதராசுக்குச் சென்று வந்துவிடும் என்றதும் எங்களுக்குப்
பழைய மகிழ்ச்சி தொத்திக் கொண்டது. ஆஹா இன்னோரு பயணம்.
 சுபம். கூடத் தொடர்ந்து
வந்த அனைவருக்கும் நன்றி.
தாத்தா 

19 comments:

ஸ்ரீராம். said...

// உடனே இஞ்சியை அம்மியில் படபடவென்று தட்டி த் தலையில் தடவிக் கொள்வார்//

தலையிலா? நெற்றியிலா?

ஸ்ரீராம். said...

குழந்தைகளுக்கு வேலை கற்றுக்கொடுத்த மாதிரியும் ஆச்சு.. அப்படியே பழைய வரலாறுகள், பொது அறிவுகளைச் சொல்லிக் கொடுத்த மாதிரியும் ஆச்சு..

இனிய அனுபவங்கள் தொடரட்டும்...

Geetha Sambasivam said...

இனிமையான நினைவுகள். தாத்தாவுக்கும் அக்காவுக்கும் உள்ள உறவு புரிந்தது. நல்ல எழுத்துத் திறன். அக்கா யாராக இருக்கும் என்றும் புரிந்து கொண்டேன்.

KILLERGEE Devakottai said...

நினைவுகள் அருமை.
பாட்டி சொன்னதில் எப்பொழுதுமே நல்லதையே, இனிமையாக பேசவேண்டும். என்னைக் கவர்ந்தது.

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்வான நினைவுகள்

கோமதி அரசு said...

கசப்பு, கரிப்பு(உப்பு) மிளகாய் எல்லாம் கையில் கொடுக்க கூடாது என்பார்கள் உறவுகளில் அந்த மாதிரி வரும் என்பார்கள்.

ஆனால் காசு கொடுக்க வேண்டும் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
என் மாமியாரின் அம்மா வலி எடுத்தால் இஞ்சியை அரைத்து தடவிக் கொள்வார்கள்.
ஆச்சி எரியவில்லையா என்று கேட்டால் வலி இருந்தால் எரியாது என்பார்கள்.

பெரியவர்கள் வாழ்ந்து காட்டியே நிறைய சொல்லிகொடுத்து விட்டார்கள்.

பதிவு மிக அருமை.

நெல்லைத் தமிழன் said...

சிபாரிசு - அந்தக்காலப் பெரியவர்களின் பொதுவான மனநிலை உங்கள் தாத்தாவினுடையது. சிபாரிசுக்குப் போவதே 'தரக் குறைவு' என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு. தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

உறவுகள் சிலசமயம் கசந்து போவது
இந்த சிபாரிசுகளினால் தான். அன்பு முரளி.

அதுவும் பெரிய இடங்களில் அன்புடன் பழகும் போது
கைதாழ ,மனம் இறைஞ்ச அப்படி என்ன வேண்டி இருக்கிறது என்பார் தாத்தா.

தாத்தா ,அப்பா எல்லோரும் தானே முன்னுக்கு வந்தவர்கள் தான்.
பெரிய ஸ்தாபனங்களில் ,தனக்கு வேலை கொடுத்த உறவின் பெருமை கெடாமல் நடக்க வேண்டும்.
நடுவில் நம் உயர்வைப் பொறுக்காதவர்கள் செய்யும் சில்விஷமம் தாங்க வேண்டும்.
எங்கள் சிங்கம்

இந்த நிலையைத் தாங்க முடியாமலே வெளியே வந்தார்.

Thulasidharan V Thillaiakathu said...

என்று திருக்குறுங்குடி கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.//

ஆஹா! என் பாட்டியும் இப்படித்தான் எனக்கு நிறையக் கதைகள் சொல்லுவார். உளுந்து மாவில் பபிள் வரணும் யெஸ்...கொட கொட என்று அரைத்து...லைட்டாக இருக்கணும் மாவை எடுத்தால் பஞ்சு போன்று ...இட்லி அடுத்த நாள் துணி போட்டு வார்ப்பார்கள்...ஹையோ என்ன மெத்து மெத்துனு அதுவும் திருக்குறுங்குடி செக்கில் நல்லெண்ணை அத்தனை சுவையாக இருக்கும். இப்போதும் என் கஸின் மாமனார் மாமியார் அங்கிருந்துதான் தில்லிக்கும் பாம்பேக்கும் வாங்கிக் கொண்டு செல்கின்றனர். அவர்களுக்கு இப்போது குடும்ப வீடு இருக்கிறது அதைப் பங்கு போடாமல் அழகாக மெயின்டெய்ன் செய்து இப்போதும் இப்போதைய வசதிகளும் சில செய்து கொண்டு தேசிகர் உற்சவம் (அவர்கள் டர்ஸ்ட்ட்ல் தான் தேசிகர் கோயில்) நடக்கும் போது அத்தனை குடும்பத்தவரும் என் அப்பா உட்பட அங்கு குழுமி ஆல் ஓல்டிஸ் யங்காக வளைய வந்து கொண்டு எஞ்சாய் செய்து உற்சவத்தையும் அழகாக நடத்திக் கொண்டு என்று வருடா வருடம்...நடத்தி வருகிறார்கள். அது போல பெரும்பாலும் நம்பி கோயில் உற்சவத்தின் போதும் அங்கு குழுமுவார்கள்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
பாட்டி சொல்லி அம்மா சொல்லித்தான் தெரியும். சென்னையில் அனைவருக்கும் மாங்காய் ஊறுகாய் போட்டுக் கொடுப்பேன்.

தம்பிகளிடம் பத்துப் பைசா வாங்கிக் கொள்வேன்.
வலி இருக்கும்போது இந்த எரிச்சல் வராது.
எங்க உறவினர், ஒரு திருமணத்தின் போது,
வேலையிலிருந்து தப்பிக்க, நெற்றியில்
ஏதோ பால்ம் போட, அது கன்னா பின்னா என்று எரிய ஆரம்பித்துவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு மிக நன்றி ஜெயக்குமார். வாழ்க வளமுடன்.

Thulasidharan V Thillaiakathu said...

திருக்குறுங்குடி என்றாலே நான் பாட்டி தாத்தா வீட்டுக்குச் செல்வதும் டையர் ஓட்டி விளையாடுவதும் என்று அத்தனை ஜாலி நினைவுகளை உங்கள் அனுபவ விவரணம் கொண்டு வந்தது வல்லிம்மா..

தாத்தாவுக்கும் அக்காவுக்குமான உறவும் புரிந்தது.

எஸ் சிபாரிசு என்று வரும் போது அது பல சமயங்களில் உறவுகள் விரிவதும், தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளுவதும்...ம்ம்

கசப்புப் பொருள் தந்தாலும் பச்சை மிளகாய் போன்றவற்றையும் கையில் தராமல் பாட்டி கீழே வைப்பார். சிறிய அளவில் காசும் வாங்கிக் கொள்வார்.

பல நினைவுகள் வல்லிம்மா...ரசித்தேன்..

கீதா

நெல்லைத் தமிழன் said...

இரண்டாவது படம் நீங்களும் உங்கள் தம்பியுமோ என்று தோன்றியது

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
திருக்குறுங்குடி லக்ஷ்மிப் பாட்டிக்கு
சம்சாரம் பெரிசு. நாள் முழுவதும் வேலை.
நடுவில் மண்டை இடி வந்தால் ,
சாப்பிட மருந்தெல்லாம் கிடையாது.
இஞ்சியை அரைத்துத் தலையில் தடவிக்கொள்வாராம். பாவம் அந்தப் பாட்டி.

மத்தியானம் மிகப் பசியோடு வரும் கணவருக்கு
நல்ல நாக்கு. சற்றேற இருந்தாலும் சன்னியாசம் வாங்கிக் கொள்ளும் கோபம்.

அந்தப் பாட்டியும், அம்மியில் அரைக்கும் போதே நெஞ்சடைப்பு வந்துதான் இறந்தார்.
அதுதான் அன்னாளைய வாழ்க்கை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி,
பாட்டி திருக்குறள் எல்லாம் படித்தவர் இல்லை. ஆனால் எப்பொழுதும்
வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுப்பார்.
நிறைய புத்திமதி சொல்வார். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா.S maa. உண்மைதான்
சிறு வயதிலிருந்தே சேர்ந்தே வளர்ந்தாலும்

தாத்தா அந்த விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இருப்பார்.
முழம் போட்டுப் பேசு. ஈஷாதே என்பதெல்லாம் தாத்தாவின் பாஷை.

பாட்டிக்கு அங்கே என்ன கல்யாணமோ,காது குத்தலோ நடந்தாலும் பத்து நாள் முன்னாடியே அழைப்பு வந்துவிடும். அப்பளத்துக்கு மாவு, இடிக்க,,பந்தக்கால் நடுவதற்கு
என்று வண்டியும் வரும்.

பாட்டி திரும்பி வரும்போது பட்டுப் புடவைகளும் வரும்.
எனக்குக் கூட தைத்த பட்டு சட்டைகள் வந்தது நினைவில் இருக்கிறது.
திருமணத்துக்குப் பிறகு இன்னும் நெருங்கியது.
திருமணத்துக்கு முக்கிய காரணம் முத்தண்ணா பேத்தி என்பதுதான்.

வல்லிசிம்ஹன் said...

மிக உண்மை கீதா ர,
நம் சொல்லுக்கு மிக மதிப்பு உண்டு என்னும் போது தாத்தா மிக ஜாக்கிரதையாக இருப்பார்.
அவர் பயந்தது போலவே பாட்டி சொன்னதால் சேர்த்துக் கொள்ளப்பட்ட
ஒருவர், ஏதோ தப்பில் மாட்டிக் கொண்டார்.
அவ்வளவுதான் தாத்தா கோபம்ம் திருமங்கலம் வரை வந்துவிட்டது.

என் திருக்குறுங்குடி நினைவுகள், வீடும், தாழ்வாரமும்,பின்னால் மரங்களும்,
நம்பியாறும், மட்டுமே. நாங்கள் ஒன்பது பேர் கசின்ஸ். எங்களுக்குள்ளேயே
விளையாடிக் கொள்வோம்.
அத்தை, கண்வலி வரும் வெளியே போகாதே ,என்று மிரட்டி வைப்பார்.
நீங்களாவது நல்ல நினைவுகளை வளர்த்துக் கொண்டிருக்கிறீய்ர்கள்.
இப்போதும் ஆசை தான். அங்கே ஒரு வீட்டில் போய் இருக்க ஆசை.
சொந்த மண்ணின் ஈர்ப்போ.
நன்றி கீதாமா. வாழ்க வளமுடன்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெ.த. , அந்தப் படம் கூகிள் கொடுத்தது. எங்களை யார் வண்ணப்படம் எடுப்பார்கள்.
சித்தப்பாவிடம் காமிரா இருந்தது.
தம்பி ரங்கன் தான் முதலில் காமிரா வாங்கிப் படங்கள் எடுத்துக் கொல்லுவான் ஹாஹா. சாப்பிடும்போது.,தலைவாரும்போது, இப்படிப் பல போஸில்
அம்மாவையும் என்னையும் அலற வைப்பான்.
இப்போ திரும்பின இடமெல்லாம் எல்லாரும் பெரிய பெரிய காமிராக்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவன் தான் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், இப்போதைக்கு நிறுத்தி இருக்கிறேன்.
நல்ல எண்ணங்கள் வரும்போது இன்னும் எழுதலாம் மா.
தவறாமல் கூட வந்ததற்கு மிக நன்றி ராஜா.