Blog Archive

Saturday, May 05, 2018

மதுரையில் ஒரு சித்திரை 1955 4

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 சாயந்திரம் 7 மணி ஆகிவிட்டது, ராகவன் மாமா எங்களை வீட்டில் விடும்
போது. பாட்டிக்குக் கொஞ்சம் கவலைதான்.
 தாத்தாவுக்குப் பசி தாங்காது.
சித்தப்பா  அலுவலகத்திலிருந்து வந்திருப்பார். அவருக்கு வாய்க்கு ருசியாக
ஒன்றும் வீட்டில் இல்லை.

மாமாவின் கனத்த குரல் கேட்டது வாசல் விளக்கு எரிந்தது. அழிக்கதவைத் திறந்த சித்தப்பா
என்னம்மா  இவ்வளவு இருட்டில் மழையில்
வருகிறாய், டேய் நீதான் அழைத்து வந்தாயா. அப்ப சரி.
உள்ள வாங்கோ என்றார்.

முரளி வெளியே விரைந்து வந்தான். அவனால் என்னைவிட்டு நிறைய
 நேரம் இருக்க முடியாது.
அம்மா வேற இல்லை.
 //தாத்தா ,சித்தப்பாவோட சஹஸ்ர நாமம் சொன்னேன்.//
 என்னால் நம்ப முடியவில்லை. எனக்கே கஷ்டம் இவன் எப்படி சொல்வான் என்று தாத்தாவைப் பார்த்தேன்.
 எங்களோடு சமத்தா உட்கார்ந்து  எல்லாம் கேட்டுக் கொண்டான்
உன்னைவிட புத்திசாலி அவன் ஆண்டா என்று சிறு புன்னகை பூத்தார்.

பாட்டியும் சித்தப்பாவும் வாங்கிய பொருட்களை
உள்ளே உக்கிராண உள்ளில் வைத்தார்கள்.
இன்னோரு வாணலியா என்னம்மா,இரும்புக் கடையே வைக்கலாமே
நம் அகத்தில் என்றார்.
இது லக்ஷ்மிக்குடா. டெல்லியில் இது போலக் கிடைக்கலையாம் என்றார் பாட்டி.
அத்தை லக்ஷ்மி இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை தெற்கு விஜயம் செய்வார்.
அருமையான மனுஷி..அவர் வீட்டுக்காரர் சுந்தரராஜன் அத்திம்பேர் போல
நல்ல மனிதரைப் பார்க்க முடியாது.
எங்கள் அனைவரிடமும் அவ்வளவு அன்பாக இருப்பார்,
பார்ப்பதற்கு  கொஞ்சம் ரங்காராவ் மாதிரி இருப்பார். அதனாலயே எனக்குப்
பிடிக்கும். எப்போதும் பஞ்ச கச்சமும் ,வெள்ளை ஜிப்பாவும் தான் அவர் உடை.

இதோ இப்பா, பாட்டி சமையலறையில் நுழைந்தாச்சு. குமுட்டி அடுப்பு மூட்டி, வாணலியை
வைத்து  தேங்காய் எண்ணெய் விட்டு, வெண்டைக்காய்களைத் திருத்த ஆரம்பித்தார்.
சித்தப்பாவுக்குத் திருமணமாகி இருந்தது.
சித்தி பிறந்தகம் போயிருந்தார். இல்லாவிட்டால் சித்தியுடன் இன்னும் சந்தோஷமாகக்
காலம் செல்லும். விறகடுப்பில் ரசம் கொதிக்க ஆரம்பித்தது.
ராத்திரி தாத்தாவுக்கு அரிசி நொய்க் கஞ்சிதான். சீரகம் தாளித்து மோர் விட்டு
மணத்தக்காளி வறுத்து தொட்டுக் கொள்ள வைப்பார் பாட்டி.
ராகவன் மாமா கிளம்பினார். இருடா சாப்பிட்டுட்டுப் போ
என்ற பாட்டி அவருக்கும் இலை போட்டார்.

கைகால்களை அலம்பிக் கொண்டு அவரும் வந்தார்.
பாட்டி சின்ன சின்ன வேலைகளை என்னை செய்ய வைப்பார்.

சாப்பாடு ஆனதும் மாமா கிளம்பினார். பத்ரமாப் போடா. இரண்டு நாள்
 கழித்து வரேன்னு சொல்லு// என்றபடி பாட்டி சாப்பிட உட்கார்ந்தார்.

சித்தப்பா தாத்தாவுக்கு படுக்கை விரித்துப் போட்டார்.
தாத்தா எங்கள் இருவரையும் அருகில் அழைத்து  சிறு கதைகளாகச் சொன்னார்.
பாதியில் நான் தூங்கியாச்சு.
 தாத்தா கட்டில் அருகில் எங்களுக்கும் பெரிய ஜமக்காளாம் விரிக்கப்பட்டு,நான்,பாட்டி,முரளி படுத்துக் கொண்டோம்.
எங்கள் இருவருக்கும் நல்ல கனத்த போர்வையைப் போர்த்திவிட்டு. கொசுவலையும் கட்டினார் சித்தப்பா.
வயலை அடுத்து இருப்பதால் கொசு தொந்தரவு உண்டு.
 அப்பா,சித்தப்பா இருவரும் பெற்ற குழந்தைகள் விஷயத்தில்
ஒரே மாதிரி  இருப்பதை நினைத்தபடி நினைத்தபடி தூங்கி விட்டேன்.....
அடுத்த நாள் பைக்காரா தபால் ஆபீசுக்குப் போய் அப்பாவுடன் பேசலாம்...தந்தி வழியே
வயல்வெளிகள் என் நினைவில் 
என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
Add caption
வைகை இன்று.

17 comments:

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா முகப்பு படம் ரொம்ப அழகா இருக்கும்மா..இதோ பதிவு பார்த்துவிட்டு வரேன்

கீதா

Geetha Sambasivam said...

இப்போப் போன மாசம் போனப்போ இதை விடச் சுத்தமாகக் காட்சி அளீத்தது வைகை! ஆக்கிரமிப்புகள் நீக்கப் பட்டு இருந்தன!
வெண்டைக்காய்க் கறீ கூட நினைவில் இருக்கே! மிக அழ்காக நேரில் பார்ப்பது போல் இருக்கு!

KILLERGEE Devakottai said...

நினைவுகள் சங்கீதம் புகைப்பங்கள் ஸூப்பர் அம்மா.

ஸ்ரீராம். said...

பதினைந்து வயதில் நடந்த விஷயங்களை இப்போதும் நுணுக்கமாகச் சொல்லும் உங்க திறமைக்கு வணக்கங்கள்!

ஸ்ரீராம். said...

குமுட்டி அடுப்பில், விறகடுப்பிலும் சமையல் ... ஆஹா... சீரகம் தாளித்து, மோர் விட்டு அரிசி மோர்க்கஞ்சி தொட்டுக்கொள்ள மணத்தக்காளி வத்தல்.. ஆஹாஹா..

ஸ்ரீராம். said...

கனத்த போர்வையால் போர்த்திக்கொள்வதா? இப்போதிந்த வெயிலோடு அதைப் படிக்கும்போது வேர்க்கிறது!!!!!

வல்லிசிம்ஹன் said...

நிதானமாக வாருங்கள். பதிவு எங்கேயும் போகாது கீதா மா.

வல்லிசிம்ஹன் said...

நானும் எதிர் சேவையின் போது பார்த்தேன் சுத்தமாக இருந்தது கீதா.

அன்று இருந்த பசி அப்படி. பாட்டி கை ருசியும் அப்படி.
நாங்கள் கால் வருடத்து லீவிலும், க்றிஸ்மஸ் லீவு போதும் மதுரை வருவோம். நினைவில் வைத்துக் கொள்ள சுலபம். அதான் வெண்டைக்காயை மறக்கவில்லை.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா நோ சான்ஸ்...மைன்யூட் டிடெய்ல்ஸ் முதல் நினைவு வைத்து எழுதறீங்களெ!!! வாவ்!!

//ராத்திரி தாத்தாவுக்கு அரிசி நொய்க் கஞ்சிதான். சீரகம் தாளித்து மோர் விட்டு
மணத்தக்காளி வறுத்து தொட்டுக் கொள்ள வைப்பார் பாட்டி// ஆஹா என் பாட்டியும் என் தாத்தாவிற்கு இது பல சமயங்களில் செய்து கொடுப்பார். அதற்குப் போட்டியாக நானும் போவேன்...அந்த நெய்யில் பொரித்துக் கொட்டும் ஜீரக வாசனைக்கும் மணத்தக்காளிக்குமாக...

கீதா

கோமதி அரசு said...

அருமையான நினவுகள்.
நேரே பார்ப்பது போல் உள்ளது.

வல்லிசிம்ஹன் said...

நானும் எதிர் சேவையின் போது பார்த்தேன் சுத்தமாக இருந்தது கீதா.

அன்று இருந்த பசி அப்படி. பாட்டி கை ருசியும் அப்படி.
நாங்கள் கால் வருடத்து லீவிலும், க்றிஸ்மஸ் லீவு போதும் மதுரை வருவோம். நினைவில் வைத்துக் கொள்ள சுலபம். அதான் வெண்டைக்காயை மறக்கவில்லை.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம் வரணும் வரணும்.
முதலில் கீதா சாம்பசிவம் குழந்தை ந்னு ஒத்துக் கொண்டு விட்டீர்கள்.
நீங்க, நெ.த எல்லாம் சின்னப் பசங்க சொல்லியாச்சு, கீ ரங்கன்
சின்னப் பொண்ணு சொல்லியாச்சு.
நான் இப்ப பாட்டி ஆகி வருடங்கள் ஆச்சு. ஆனால்
இந்த சித்திரை விழாவுக்குப் போனது என்னுடைய ஏழாவது வயதில்.

காட்ச் மை பாயிண்ட் ஹாஹா.

63 வருடங்களுக்கு முன்னால் மதுரை குளிரத்தான் செய்யும்.
அதுவும் திறந்த வெளிக்கு அடுத்த வீடு என்பதால் குளு குளு என்றிருக்கும்.
பேய்த்தனமா ஓடற லாரி இல்லை. அன்னம் போன்ற டிவிஎஸ் பஸ்கள்
நேரம் தவறாமல் நல்ல சாலையில் செல்லும்.
அதற்குத்தான் இந்தப் போர்வை,கொசுவலை எல்லாம்.

மூன்று பின்னூட்டத்துக்கு சரித்திரமே சொல்லி விட்டேன்.
மன்னிக்கணும்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. அவ்வப்போ நடந்தவைகளைக் கோர்வையாக எழுத நினைத்தேன் மா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. பாட்டிக்குத் தெரியாமல்
தாத்தா ஒரு சின்ன டம்ப்ளரில் கொஞ்சம் கொடுப்பார்.
நல்ல மணம் இல்லையா. மனம் தாத்தா பாட்டிகள் ஒரே போல இருந்திருக்கிறார்கள்.
மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

என் மனத்தை ஈரமாக்கிக் கொள்ளத்தான் தம்பியும் நானும் கழித்த
காலங்களை எழுதுகிறேன்.
நன்றி தேவகோட்டை ஜி.

நெல்லைத் தமிழன் said...

நன்றாக நினைவில் கொண்டுவந்து எழுதறீங்க. அதில் வரும் மனிதர்களில் பலர் இப்போது இல்லாதது உங்கள் எழுத்தோட்டத்தைத் தடை செய்து மனத்தை அதில் ஆழவைக்கும் என்று நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் முரளி. ஒரே ஒரு சித்தி
அவர் குழந்தைகள் இருக்கிறார்கள்.
வேறு யாரும் இல்லை. ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட்
மாதிரி அவர்களைத் தொட்டுக் கொள்கிறேன்.எழுத்தை ஓடவைப்பதே அவர்களின் நினைவுதான்.