Blog Archive

Saturday, April 14, 2018

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 1962

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
புது வருடப் பிறப்பு  1962
++++++++++++++++++++++++++++++++

 முதல் நாளிலிருந்தே பாட்டி, துரத்திக் கொண்டே இருந்தார்.  வேப்பம்பூ
கொண்டு வரச் சொல்லி.
பாட்டிக்கு சர்க்கரை வியாதி இருந்ததால்,
உட்கார்ந்து கொண்டே எல்லாரையும்  வேலை வாங்குவார்.
அப்பாவிடம் மிக அன்பு.
மருமகளிடமும் தனிப் பாசம். 
வீட்டின் வாயில் கதவைத் திறந்தால் தபால்  அலுவலகம். சாயந்திர வேளைகளில் 
அங்கே போகலாம்.
அதுவும் தம்பிகளுக்கு உண்டான சுதந்திரம் எனக்குக் கிடையாது.

வேப்பம்பூ பக்கத்து வீட்டில் இருக்கும். நான் கொஞ்சம் உயரம் என்பதால்
என்னை அனுப்புவார்.
தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கத் தம்பி துணைக்கு வந்து நிற்பான்.

ஜெயா, நாளைக்கு வேணும்கற காய்கறிகளை,
ஆபீஸ் பியூனிடம் சொல்லி வாங்கி வரச் சொல்லு.
அவியல், வடை, திருக்கண்ணமுது, , பருப்பு சாம்பார் ,பொரித்த அப்பளம்
போதும் இல்லையா என்று அம்மாவிடம் கேட்பார்.
மறு பேச்சு கிடையாது.

அடுத்த நாள் எல்லோருக்கும் லீவு நாள் என்றாலும் 
சீக்கிரம் எழுந்துவிட வேண்டும். அந்தக் காலத்துப் பெரிய வீடு. கூடம். மேலே
ஜன்னல்கள் .கூடத்தின் இரு பக்கங்களிலும் அறைகள்.
ஒன்று பூஜை அறை. ஒன்று படுக்கைகள் சுற்றி வைக்கப் படும். காத்ரேஜ், மர பீரோ, நிலைக் கண்ணாடி எல்லாம் அங்கே தான்.. எங்கள் புத்தகங்கள், வானொலியும் 
அங்கேதான் இருக்கும்.
மூவரும் அங்கேயே படித்துப் படுத்து எழுந்திருப்போம். பாட்டிக்குக் கூடத்தில் கட்டில்.
 மறு ஓரத்தில்  அம்மா அப்பா படுத்துக் கொள்வார்கள்.
காலை எழுந்ததும் பால் கொண்டு வருபவர் பின் கதவைத்தட்ட, அம்மா பாலை வாங்கிக் காய்ச்சுவார்.
நானும் பல் தேய்த்துவிட்டு, வென்னீர் அடுப்பை ஏற்றும் முயற்சியில்
கண்ணில் புகை,வாயில் இருமல் என்று ஒரு டிராமா போட்டு 
வென்னீர்த்தவலையை ஏற்றி வைத்துக் கிணற்றுத்தண்ணீர்
இறைத்து நிரப்ப வேண்டும். 
லேசாகச் சுட்டதும் அம்மா,அப்பா குளித்து விடுவார்கள்.
அம்மாவுக்குத் துணையாக அப்பா சமையல் அறையில் தேங்காய் உடைத்து,
வெற்றிலை பழங்கள் எல்லாம் அடுக்கிவைத்து இறைவன் 
படங்களுக்குப் பூவைத்து ,என்னை அழைப்பார்.
குளித்துவிட்டுக் கோலம் போடச் சொல்வார்.

 ஏம்மா, புதுசு பாவாடை எல்லாம் வாங்கவில்லை 
என்று கேட்டால் இப்பதானே பிறந்த நாளைக்கு எல்லாம் வாங்கித்து.
அது ரெண்டையும் பார். மறு பேச்சுப் பேசாமல் தீபாவளித் துணியைத்தானே
போட்டுக் கொண்டிருக்கு என்று கண்டிப்பார்.
 பாட்டிக்கு வென்னீர் ரெடியான்னு பாரு. 
பொறுமையா வெய்யில்ல உட்கார்ந்திருக்கார் பாரு
என்றதும் நான் பாட்டியை அணுகுவேன்.
கிணற்றங்கரை அருகே நீளமாக பெஞ்ச் போட்டிருக்கும்.  மேலே கொய்யா மரம்
, முருங்கை மரங்களின் நிழல் கீழே விழ பாட்டித் தன் கைகால்களுக்குத் தேங்காய் எண்ணெய்த் தடவிக் கொண்டிருப்பார்.
 என்னப் பார்த்ததும் நீ குளிச்சுட்டுக் கோலம் போடு.
நானும் குளிக்கப் போய் வந்து கோலம் போட, அம்மா விளக்கு ஏற்றுவார்.
என் அடுத்த வேலை வடைக்கு அரைப்பது. 
தம்பிகள் இருவரும் அப்பாவோடு சஹஸ்ர நாமம் சொல்ல பாட்டி ஹரே ராம சொல்லிக் கொண்டிருப்பார்.

ஒரு கரி அடுப்பு, ஒரு விறகடுப்பு, ஒரு ஸ்டவ் எல்லாவற்றிலும்
 சமையல் மும்முரம் காட்டத் துவங்கும்.
பசி வயிற்றைக் கிள்ள நான் சுற்றி வருவதைப் பார்த்து
அம்மா நேற்று சிறுமலைப் பழம் வந்தது பார் அதைச் சாப்பிடு.
 என்று சொல்லி வடை போட்டு எடுப்பார்.
எல்லாம்  பூர்த்தியாக ஒரு மணி ஆகிவிடும்.
வெங்கலப் பானையோடு சாதம், வடை, திருக்கண்ணமுது,,உறைந்த தயிர்,பசும்பால் எல்லாம்
கடவுள் வைப்பார் அம்மா.
அப்பாவும் முறைப்படி, கற்பூரம் காட்டி,நிவேதனம் செய்ய, முதல் இரண்டு வடைகள் பாட்டிக்குப்
போகும்.
பசி தாங்க வேண்டுமே.
 இலை போடும் வேலை என்னுடையது.
அப்பாவும் அம்மாவும் பரிமாறிவிட்டுச் சாப்பிட உட்காருவார்கள்.

சாயந்திரம் பெருமாள் கோவிலுக்குப் போய் வந்ததும்
 இன்னோரு புத்தாண்டு ஆரம்பிக்கும். வாழ்க வளமுடன்.

10 comments:

Geetha Sambasivam said...

புத்தாண்டு வாழ்த்துகள். கிட்டத்தட்ட இப்படித் தான் எங்க வீட்டிலும். ஆனால் காலை பத்து மணிக்குள் எல்லாம் முடியணும். அப்பா அதற்கு மேல் பசி தாங்க மாட்டார்! :))) அதனால் காலை ஐந்து மணிக்கே எல்லாம் ஆரம்பிச்சுடும். :)

ஸ்ரீராம். said...

சிறு வயதிலேயே பொறுப்பாக எல்லா வேலையும் செய்திருக்கிறீர்கள் அம்மா. இனிய புத்தாண்டு நினைவுகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் சகோதரியாரே

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதாமா.
அம்மாவுக்கு பாட்டிக்குச் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் கீதா.
சரஸ்வதி பூஜை அன்றும் இப்படித்தான் தாமதமாகும்.
அம்மா கொஞ்சம் மெதுவாகத்தான் செய்வார்.
அப்போது அனீமியா பிரச்சினை இருந்தது பாவம்.

அப்பா குளிப்பதற்கு முன்னால் கஞ்சி எடுத்துக் கொள்வார்.
எப்படியோ சுவையான சாப்பாடு கிடைத்துவிடும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். அப்போது 13 வயது முடிந்து விட்டது. சின்ன வயசெல்லாம் இல்லைமா
அம்மவுக்கு இது கூட செய்யவில்லைன்னால் எப்படி. வாழ்க வளமுடன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார் வாழ்க வளமுடன் மா.

வெங்கட் நாகராஜ் said...

இனிய நினைவுகள்....

நெய்வேலி விட்டில் இப்படி விறகு அடுப்பில் வெந்நீர் போடுவது என் வேலை! இப்படிச் சின்னச் சின்னதாய் நிறைய வேலைகள்....

புத்தாண்டு வாழ்த்துகள்மா...

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு வெங்கட், சிறிய வயதில்
சுறுசுறுப்பு கொடுப்பதே இந்த வேலைகள் தான்.
பிற்காலத்தில் எந்த சமையலறை சங்கடத்தையும் சமாளிக்க
நமக்கு சுலபமாகும்.நன்றி மா

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: இனிய நினைவுகள். புத்தாண்டு நினைவுகள் இல்லையா? எங்கள் வீட்டிலும் இப்போதும் விறகு அடுப்பில்தான் சமையல். சுடு தண்ணீர் வைப்பது எல்லாம். கேஸ் அடுப்பு இருந்தாலும் அதில் டீ போடுவது, தோசை சுடுவது, ஆப்பம் இவை மட்டுமே. கேரளத்து வாழ்க்கை அல்லவா தோட்டம் எல்லாம் இருப்பதால் விறகு எல்லாம் கிடைத்துவிடும். சமையலறை இரண்டு அடுத்தடுத்து. ஒன்று விறகு அடுப்புகள்....மற்றொன்றில் கேஸ் அடுப்பு...தொடர்கிறோம் அம்மா..இன்றுவிஷு எங்கள் வீட்டில். விஷு கனி கண்டு விருந்து சாப்பாடு.

கீதா: வல்லிம்மா நான் வளரும் பருவத்திலும் இப்படித்தான் அப்பாவின் அம்மா வீட்டில் கரி அடுப்பு, விறகு அடுப்பில் தான் சமையல். அம்மாவின் அம்மா வீட்டில் விறகு அடுப்பு இருந்தாலும் மண்ணெண்னை ஸ்டவ், அப்புறம் கேஸ்..விறகு அடுப்பை சாணமிட்டு மெழுகுவது எல்லாம் செய்ததுண்டு. கிச்சன் துடைத்து கோலம் போட்டு என்று...நீங்கள் எவ்வளவு உதவியாக இருந்திருக்கிறீர்கள்....நிறைய கற்க இருக்கிறது...தொடர்கிறோம் வல்லிம்மா

Geetha Sambasivam said...

அப்பா வீட்டில் விறகு அடுப்பு இருந்தது. ஆனால் நான் சமைக்கத் தொடங்கியதும் குமுட்டி அடுப்புத் தான். விறகு அடுப்பில் சமைக்கும்போது எங்காவது துணியில் பிடிச்சுக்கும் என இந்த ஏற்பாடு. ஆனால் மற்ற உறவினர்கள் வீட்டில் எல்லாம் விறகு அடுப்புத் தான். கல்யாணம் ஆகிவந்து மாமியார் வீட்டில் விறகு அடுப்பு. தினம் இருவேளை அடுப்பு மெழுகுவேன். கொட்டிலில் பசுமாடுகள் இருந்ததால் பசுஞ் சாணம் போட்டு மெழுகிக் கோலம் போட வேண்டும். இப்போவும் ஊர்ப்பக்கம் போனால் குலதெய்வம் கோயிலில் எங்களுக்காகப் பால் காய்ச்சுவது, கஞ்சி போடுவது எனச் செய்து கொள்வேன். குழந்தைகள் வந்தால் இன்டக்‌ஷன் ஸ்டவை எடுத்துப் போவோம்.